கருப்பு கருணா

karuppu-karuna

கருணாவை போய் பார்த்தேன்.

குளிர்ப்பெட்டியில் படுக்க வைக்கப்பட்டிருந்தார். வழக்கமாக அவரது அருகில் இருக்கும் செங்கொடி இம்முறை அவரது மேலே போர்த்தப்பட்டிருந்தது. அதே களையான முகம். வாயில் வைக்கப்பட்டிருந்த வெற்றிலை மட்டுமே அந்நியமாக இருந்தது. சிறிது நேரம் உற்றுப் பார்த்தேன். போன கூட்டத்துக்கு நீங்க வரலையே! ஊரில் இல்லையா கருணா என கேட்டுவிடுவார் போலிருந்தது. சட்டென விலகி வந்து விட்டேன்.

நான் பள்ளியில் படித்த காலத்தில் பவா செல்லதுரையும், கருணாவும் தான் எனது ஆதர்சங்கள். எங்க சீனியர்கள் எல்லாம் பாயும் புலி ரஜினி மன்றம், காக்கிச் சட்டை கமல் மன்றம் என பிரிந்து மாய்ந்து கொண்டிருந்த வேலையில், இவர்கள் இருவரும் தத்தமது தோள்களில் ஜோல்னா பை. கைகளில் புத்தகங்களுடன் சைக்கிளில் வலம் வருவார்கள்.

எனக்கு வாசிப்பு முகிழ்ந்து கைகூடி வந்தக் காலம்! நான் படிக்கத் தவற விட்டக் கதைகளை, புத்தகங்களை நாடி இவர்களிடம் செல்வேன்.

கருணாவை நான் நெருக்கமாகப் பார்த்தது, எனது அண்ணன் கு.பிச்சாண்டி முதன் முறையாகத் தேர்தலில் நின்ற 1989 ம் ஆண்டில்தான்! அப்போது எங்கள் ரைஸ்மில் வளாகம் முழுவதும் பவா, கருணாவிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது. ஒரு புறம் பெரிய பேனர்கள் வரையப்பட்டுக் கொண்டிருக்க, இன்னொருபுறம் இரவெல்லாம் வீதி நாடகங்களுக்கான ஒத்திகைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்.

நடுஇரவில் சென்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பேன். எங்கள் நகரச் செயலாளர் அண்ணன் டி.என். பாபு அவர்களுக்குப் பெரிய கேனில் டீ வாங்கிக் கொண்டு வந்து தருவார். ஏறக்குறைய 40 நாட்கள் இரவெல்லாம் ஒரு கிராமம் விடாமல் சென்று வீதி நாடகங்களை தேர்தல் பிரச்சாரத்துக்கு நடத்திய கருணாவை நான் பார்த்திருக்கிறேன்.

பிறகு, பல டீக்கடை விவாதங்களில் சந்தித்திருக்கிறேன்.

புத்தாண்டு கலை, இரவுகளில் விடிய விடிய உடன் இருந்திருக்கிறேன்.

த.மு.எ.ச கூட்டங்களை பின் வரிசையில் அமர்ந்து கேட்டிருக்கிறேன். பிறகு முன்வரிசைக்கு அழைத்து வரப்பட்டு அமர வைக்கப் பட்டிருக்கிறேன். ஏதோ ஒரு நாளில், இதே பவா, கருணாவால் மேடைக்கும் அழைக்கப்பட்டு பேச வைக்கப் பட்டிருக்கிறேன். நிறைவாக, திருவண்ணாமலையில் நடந்த தமுஎச மாநில மாநாட்டுக்கு வரவேற்புக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு சிறப்பானதொரு மாநாடு நடைபெற பணியாற்றி இருக்கிறேன்.

கருணாவை வேறெங்கெல்லாம் பார்த்துள்ளேன் என நினைத்துப் பார்க்கிறேன்!

கார்மேல் பள்ளி மரத்தடி கூட்டம், டேனிஷ் மிஷன் பள்ளி மேடை, சாரோன் சர்ச் வாசல் என பல இடங்கள் இருந்தாலும், சட்டென எனக்கு நினைவுக்கு வருவது அண்ணா சிலை அடியிலும், பெரியார் சிலை அடியிலும் நடைபெறும் போராட்டக் களங்கள்தான்..

நான் அந்த வழியே கடந்து செல்லும் போதெல்லாம், செங்கொடி, பேனர்களுடன் கருணா ஆவேசமாக முழங்கிக் கொண்டிருந்த அந்தக் காட்சி மட்டுமே எனது நினைவில் படிமமாக படிந்துள்ளதை இப்போது உணர்கிறேன்.

திருவண்ணாமலை நகரில் இலக்கியத் தளத்துக்கு பவா செல்லதுரை என்றால், போராட்டக் களத்துக்குக் கருப்பு கருணாதான்.

எத்தனை எத்தனை போராட்டங்கள்!

அண்ணாமலையார் கோவிலை தொல்லியியல் துறையிடம் இருந்து மீட்டெடுத்தப் போராட்டம்.

பவழக் குன்று மலையை நித்தியானந்தாவிடம் இருந்து காப்பாற்றிய போராட்டம்.,

பாபர் மசூதி இடிப்பை எதிர்த்து, ஆடு, கோழி பலி தடைச் சட்டத்தை எதிர்த்து, கலைஞர் கைதை எதிர்த்து, சமூகநீதி பறிப்பை எதிர்த்து என தார் சாலைகளில் நான் பார்த்த கருணாதான் இனிமேல் எனக்கு நிரந்தர நினைவுச் சித்திரம் என இப்போது தோன்றுகிறது.

இதெல்லாம் எங்கள் ஊரில் அனைவருக்கும் தெரிந்ததுதான். யாருக்கும் தெரியாத ஒரு விஷயம், நான் எஸ்கேபி கருணாவாக ஆனது இந்தக் கருப்பு கருணாவால்தான் என்பது.

அப்போதெல்லாம் நான் பவா வீட்டுக்குச் செல்லும் போது, இரண்டு கருணா வந்து போவதால், எந்தக் கருணா வந்து போனார் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல, அனைவருக்கும் குழப்பம் வரும். எனவே, ஜீனியர் கருணாவான எனக்கு அந்த வீட்டில் எஸ்கேபி கருணா என பெயரிடப் பட்டது.

பின்னாளில் ஃபேஸ்புக் வந்தவுடன், இந்தக் கருணா “கருப்பு கருணா” ஆனார். அப்போது நான் அடப்பாவி மனுஷா! நீங்க கருப்பா இருப்பது இப்போதுதான் தெரிய வந்தததா? அப்பவே இந்தப் பேரை வச்சுட்டு இருந்திருந்தால், நான் வெறும் கருணாவாவே இருந்திருப்பேனே என வேடிக்கையாக கேட்டேன். அவரது அந்த பளீர் அடையாளச் சிரிப்புடன், நீங்க எப்பவுமே வெறும் கருணாவா இருக்கக் கூடாதுன்னுதான் இப்படி ஆனது என்றார்.

கருணாவிடம் எனக்கு மிகப் பிடித்த தனித்தன்மை ஒன்று உண்டு. அது தனக்குப் பிறகான தொடர்ச்சியை முனைந்து உருவாக்கும் தலைமைப் பண்பு அது. தமுஎசவின் அரசியல், கலை, இலக்கியச் செயல்பாடுகளில் ஒரு பெரிய இளைஞர் கூட்டத்தையே உருவாக்கிச் சென்றுள்ளார்.

தமுஎச நிகழ்ச்சிகளுக்கு அழைப்பை தருவதற்காக என்னிடம் பலமுறை வெவ்வேறு புதியவர்கள் வருவார்கள். அவர்கள் வந்து போன பிறகு, என்னை போனில் அழைத்து என்ன கருணா! இன்விடேஷன் வந்துருச்சா? அந்த சிகப்பு டி ஷர்ட் பையனை கவனிச்சீங்களா? புதுப் பையன்.. துடிப்பா இருக்கான். முறையாக வளர்த்து விட்டால் நம்மையே மிஞ்சிடுவான் என சந்தோஷமா சிரித்தபடி சொல்வார். அந்த உற்சாகம் அதைக் கேட்கும் எனக்கும் தொற்றிக் கொள்ளும்.

அந்தக் கருணா,இப்போது தனது குடும்பத்துக்கு என்ன செய்து சென்றுள்ளார் என்பது தெரியவில்லை. அவரது மகனைப் பார்த்துள்ளேன். இளஞ்சிரிப்போடு எப்போதும் துடிப்பாக ஓடியாடி வலம் வரும் இளைஞன். கருணாவின் மனைவி எனது பள்ளித் தோழி. துணிச்சலான பெண். அந்தக் குடும்பத்தை இதுநாள் வரையில் தனித்துத் தாங்கிய தூண்.

தனது இளமைக்காலம் தொட்டு இறக்கும்வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காகவும், அதன் கலை, இலக்கியப் பிரிவான த.மு.எ.சவுக்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்த பல போராளிகளின் பட்டியலில் கருணாவின் பெயர் இன்று இணைந்துள்ளது.

எந்தவிதப் பிரதிபலனும் எதிர்பாராமல் தனக்காகப் போராடிய இந்த மனிதனை நமது திருவண்ணாமலை நகரம் மறந்து விடக் கூடாதே என எனக்குப் பதைப்பாக உள்ளது.

மற்றபடி, பலகோடி சாமானிய மனிதர்கள் வாழும் இந்த நாட்டில், சாமானியர்களுக்கான ஒரு பெருவாழ்வை வாழ்ந்து விட்டுச் சென்றுள்ளார் நண்பர் கருணா.

இனி, அவரது குடும்பத்தின் ஏற்றங்களுக்கான பொறுப்பு, பவா, ஷைலஜா போன்ற அவரது பால்ய நண்பர்களுடையது., அவருடன் காலத்தைக் கழித்த அவரது இயக்கத் தோழர்களுடையது., அவர் உருவாக்கிய த.மு.எ.ச இளைஞர்களுடையது., அவர் பாடுபட்டு வளர்த்தெடுத்த அவருடைய கட்சியுடையது., அவர் ஓடோடி சென்று உதவிய மனிதர்களுடையது., அவர் அரணாக நின்று பாதுகாத்த இந்த நகரத்துடையது., உங்களுடையது., என்னுடையது.

இன்று மாலை நான் சென்று பார்த்தபோது, கருணாவின் தலைமாட்டில் சின்ன விளக்கு கூட இல்லை. எல்லாவிதமான சடங்குகளையும் முழுமையாக மறுதலித்து கருணாவின் வாழ்க்கைக்கு அர்த்தம் கூட்டியிருக்கிறார் அவரது மனைவி. உடல் அடக்கம் கூட இல்லையாம்! முழுமையாக அவரது உடலை அரசு மருத்துவக் கல்லுரிக்கு தானம் அளிக்கின்றனர் அவரது குடும்பத்தினர்.

தான் பேசிய பேச்சுகளுக்கும், வாழ்ந்த வாழ்க்கைக்கும் எவ்வித இடைவெளியும் இன்றி எத்தனைப் பேரால் இங்கே வாழ்ந்து விட முடியும்? நண்பர் கருணாவுக்கு இதைச் சாத்தியப் படுத்தியுள்ளது அவரது குடும்பம்.

போய் வாருங்கள் கருணா., உங்கள் மரபின் தொடர்ச்சியாக ஒரு குரலாவது இங்கே எந்நாளும் கேட்டுக் கொண்டே இருக்கும்.

-எஸ்கேபி. கருணா