ஈரோடு டாக்டர் ஜீவா நேற்று முன்தினம் மறைந்து விட்டார். இந்தச் செய்தி அளித்த மனச்சோர்வு கடுமையானது.
ஜெயமோகனின் ‘அறம்’ புத்தக வெளியீட்டுக்கு அவர்தான் தலைமை. ஈரோட்டில் நடைபெற்ற அந்த விழாவில் நான் அந்தத் தொகுப்பில் உள்ள ‘வணங்கான்’ கதையைப் பற்றி பேசினேன். நிறைவுரையாக ஜெயமோகன் பேசிய அற்புதமான உரையைக் கேட்டு கிறங்கிப் போய் வெளியே நின்றிருந்தபோது, எனது தோளைத் தட்டி, நீங்க மிகச் சிறப்பாக பேசினீங்க கருணா. உங்க பேஒச்சில் உண்மை இருந்தது என்றார் டாக்டர் ஜீவா.
தாமதமாகச் சென்றதால் அவரோட தலைமையுரையை நான் கேட்டிருக்கவில்லை. எனவே, பேச ஏதுமின்றி, ரொம்ப நன்றி டாக்டர். இந்த விழாவை கூட வெளியில் நல்ல ஏ.சி ஹாலில் வைத்திருந்திருக்கலாம். நிறைய விஐபிங்க வந்திருந்தாங்க என்றேன்.
உடனே அவர் பதறிப்போய், எதுக்கு? எதுக்கு? பேசப் போறோம். கேட்கப் போறோம். மகாத்மாவோட நினைவுகளோட வீட்டுக்குப் போகணும்.. அவ்வளவுதானே! அதுக்கு ஏன் ஏ.சி ஹால் செலவெல்லாம்? இந்த பள்ளிக்கூட டியூப்லைட், ஃபேனே ஆடம்பரம்தான் என்றார் அந்தப் பரிபூரண காந்தியவாதி.
அந்தக் கணத்திலேயே எனக்கு ஓர் ஆசானாக எனது மனதில் வந்து அமர்ந்து கொண்ட டாக்டர் ஜீவா நேற்றுவரை எனக்கும், நண்பர் பவா செல்லதுரைக்கும் ஒரு ஞானத்தந்தை ஆக இருந்தார் என்பதுதான் உண்மை.
புற்றுநோய் மருத்துவத்தில் மிகச் சிறந்த நிபுணர். ஆனால், தனியார் மருத்துவமனை தொடங்கி லட்சங்களை சம்பாதிக்க வில்லை. மாறாக, தமிழகத்திலேயே முதன்முறையாக கோ ஆப்ரேட்டிவ் முறையில் ஈரோட்டில் மருத்துவமனை தொடங்கினார். நூறு செல்வந்தர்களை அணுகி ஆளுக்கு 2 லட்சம் மட்டும் பெற்று தொடங்கப்பட்ட மருத்துவமனை அது. புற்றுநோய் வாய்ப்பட்ட எளியவர்களுக்கு மிகக்குறைந்த அல்லது இலவசமாக சிகிச்சை அளிக்கத் தொடங்கினார்.
அவரது வாழ்நாள் லட்சியம் ஒன்றே ஒன்றுதான். ஏழை மக்களுக்கு புற்றுநோய்க்கான சிகிச்சை அவர்களிடம் இருக்கும் பணத்தின் அளவுக்கு அல்லாமல், அவர்களுடைய நோய் தீவிரத்தின் அடிப்படையில் தரமான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதுதான்.
அதற்காகத் தொடங்கப்பட்ட ஒரு கூட்டுறவு முறை மருத்துவமனை பலதாக பெருகி வியாபித்து மக்களுக்கு உதவியது.
பாண்டிச்சேரியில் மிகச் சிறப்பான வசதிகளுடன் தொடங்கப்பட்ட ஒரு மருத்துவமனையை என்னையும் Board Member ஆக சேர்ந்து பொறுப்பேற்று நடத்தக் கேட்டு ஒருநாள் டாக்டர் ஜீவாவும், பாண்டி மாஸ் ஹோட்டல் அதிபர் எம்.ஏ.சுப்ரமணியமும் என்னை சந்தித்தனர். அத்தனைப் பெரிய பொறுப்பை ஏற்க நான் மனதளவில் தயாராக இல்லாதக் காரணத்தால் அது நடக்கவில்லை. ஆனால், அப்போதுதான் இப்படிப்பட்ட மேன்மையான மனிதர்களை அறிந்து கொண்டேன்.
காந்தி, பெரியார், அம்பேத்கர் எனும் வரிசையில் ஈரோடு டாக்டர் ஜீவானந்தத்தையும் நான் மாமனிதர் என்பேன்.
முதல் மூவரும் தத்தமது தனிச் சிந்தனையாலும், உழைப்பாலும் மாமனிதர்கள் ஆனவர்கள்.
எங்கள் ஜீவா சார், இறுதிவரை மனிதனாக வாழ்ந்த காரணத்தாலேயே மாமனிதராக ஆனார்.
அவருக்கு எனது புகழ் அஞ்சலிகள்.
-எஸ்கேபி. கருணா