2012 ஆம் ஆண்டின் இறுதி நாள் இன்று.
இந்த 2012ஆம் ஆண்டில் என்னை மிகவும் பாதித்த ஒரு மனிதனைப் பற்றி மிகவும் யோசித்து கொண்டிருக்கிறேன்.
அது, கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்க்கும் போரட்டக் குழுவின் தலைவர் திரு.சுப.உதயகுமார்தான்.
உதயகுமாரும், அவரது மக்களும் எதிர்த்து போராடுவது அரசின் ஏதோ ஒரு திட்டத்தை மட்டுமல்ல.
உதயகுமார் எதிர்த்து நிற்பது,
உலகின் மிக சக்தி வாய்ந்த இந்திய அரசாங்கத்தை!
அது தனது சகல சக்தியையும் பிரயோகித்து பரப்பி விடும் கடும் அவதூறுகளை!
தனது சொந்த மக்கள் மீதே காட்டுமிராண்டித் தனமாக தடியடி நடத்தும் காவல்துறையினரை!
திட்டத்தை ஆதரிக்கும் சக்தி வாய்ந்த செய்தி, ஊடகத் துறை சர்வாதிகாரிகளை!
வெளிநாட்டு வியாபார சக்திகளை!
எல்லாவற்றுக்கும் மேலாக, கடுமையான மின் வெட்டினால் தினமும் அல்லாடி கொண்டிருக்கும் அப்பாவி தமிழ் மக்களின் வசவுகளை!
தலை சுற்றுகிறது!
நான் அறிந்து, மகாத்மா காந்தி கூட இத்தனை அவதூறுகளை, எதிர்ப்புகளை சந்தித்திருக்க மாட்டார். மேன்மை தாங்கிய அப்போதைய ப்ரிட்டிஷ் அரசு, இப்போதைய இந்திய அரசை விட எல்லா விதத்திலும் மேன்மையாகவே நடந்து கொண்டது என்பது வரலாறு.
தான் மனப்பூர்வமாக நம்பும் ஒரு விஷயத்துக்கு, இப்படி தனது உயிரையும் பணயம் வைத்து போராடும் சகோதரர் உதயகுமாரை இங்கிருந்தபடியே கட்டித் தழுவிக் கொள்கிறேன்.
எனது கனவு தேசத்துக்கான வித்து, உதயகுமார் போன்ற சுயநலமற்ற போராளிகளின் வழியேதான் இந்த தேசமெங்கும் தூவப்படும் என்று மனப்பூர்வமாக நம்புகிறேன்.
வாழ்க்கையைப் பற்றிய எனது புரிதலை ஒரு முகமாக்கியது உதயகுமாரின் போராட்ட குணமே!
அந்த வகையில் இந்த வருடத்தின் மிகச் சிறந்த மனிதராக திரு.உதயகுமாரையே எனது மனம் நினைக்கிறது.
அவருக்கும், அவரது குழுவினருக்கும் எனது மனப்பூர்வமான புத்தாண்டு வாழ்த்துகள்!
ஒரு அணுமின் நிலையங்களின் தீவிர ஆதரவாளனாக, (ஆம்! இன்னமும் ஆதரவாளனாகவே) இருக்கும் எனது வாழ்த்தும்,அவரது போராட்டத்துக்கு வலு சேர்க்கும் என்று நம்புகிறேன்.