எனது இளம் வயது நினைவுகளின் அடுக்குகளில் நிறைய மரங்களும் பதிந்திருக்கிறது.
எனது நான்காம் வகுப்பின் போது பள்ளிக் கல்விச் சுற்றுலாவாக அடையாறு ஆலமரம், அஷ்ட லட்சுமி கோவில், மெரினா கடற்கரை மற்றும் மகாபலிபுரம் போன்ற இடங்களுக்கு அழைத்து சென்றனர். அவற்றில் எனக்கு இன்னமும் நினைவில் இருப்பது அடையாறு ஆலமரத்தைப் பார்த்ததுதான்!
வேருக்கும், விழுதுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் தெரியாமல், அந்த பரந்த நிலம் முழுதும் தனது எல்லாக் கைகளையும் ஊன்றிப் படர்ந்து நின்ற அந்த விருட்சத்தின் கீழே மல்லாந்து படுத்துக் கொண்டு அந்த அடர்ந்த மரத்தினூடே ஆகாயத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். எங்கள் வகுப்பு மாணவர்கள் எல்லோரும் ஒவ்வொரு விழுதினைக் கட்டிப் பிடித்துக் கொண்டு சிரித்ததும், பின் தரை தொடாமல் இருந்த சில விழுதுகளைப் பிடித்து ஊஞ்சல் ஆடியதும் இப்போதும் நினைவில் நிற்கிறது.
அதே பள்ளி பருவத்தில், ஒரு நாள் நான் சாப்பிட்ட ஒரு சப்போட்டா பழத்தின் விதைகளை எனது வீட்டின் ஒரு ஓரத்தில் நட்டு வைத்தேன். சில நாட்கள் கழித்து பூமியிலிருந்து மெல்ல எட்டிப் பார்த்த அந்த துளிர் தந்த சந்தோஷம், இன்னமும் எனது வாழ்நாளின் ஒரு அற்புத கணம். அந்த செடிக்கு தினமும் தண்ணீர் ஊற்றுவேன். என்னோடு கூடவே அதுவும் வளர்ந்து ஒரு மரமானது. சின்ன சின்னதாய் பூ பூக்கும். காயாவதற்கு முன் குரங்குகள் உதிர்த்து விடும் அல்லது மென்றுத் தின்றுவிடும்.
ஏதோ ஒரு நாள், தினந்தோறும் வரும் குரங்குகளிடமிருந்து, எனக்கென அந்த மரம் பொத்திப் பாதுகாத்து வைத்திருந்த சில சப்போட்டா பழங்கள் நான் சாப்பிடக் கிடைத்தது. உற்சாகமாக அதைக் கழுவி விட்டு சாப்பிட துவங்கும் போது, டேய், முதல் பழம்டா! சாமிகிட்ட வைத்து கும்பிட்டுவிட்டு அப்புறம் சாப்பிடு என்ற எனது அம்மாவின் குரல் இன்னமும் அப்படியே நினைவில் இருக்கிறது.
எனது பள்ளி நாட்களில், நானும், என் நண்பர்களும் எங்கள் ஆசிரியர்களிடம் அடி வாங்கிக் கொண்டு வெளியே துரத்தப்படும் போதெல்லாம் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தது டேனிஷ் மிஷன் பள்ளியின் பெரிய மைதானத்தின் நடுவே தனித்திருந்த மிகப் பெரிய தூங்குமூஞ்சி மரம்தான்.
அதே காலக் கட்டத்தில், எங்கள் பஸ் கம்பனியின் நுழைவாயிலில் ஒரு சின்ன வேப்பமரம் முளைக்க ஆரம்பித்ததைக் கண்டேன். தினமும் பள்ளி முடிந்தவுடன் அதற்கு சில பக்கெட் தண்ணீர் ஊற்றிவிட்டு பின் வீட்டுக்கு செல்வது என் வழக்கம். நான் டீ குடித்தால் கூட, பாதி டீயை ஆற வைத்து பின் அந்த மரத்துக்கு ஊற்றி விடுவேன்.
அந்த மரம் பெரிதாக வளர ஆரம்பித்த பின் பல தொந்தரவுகள் அதனால் ஏற்பட்டன. தொலைபேசி வேலை செய்யவில்லை என்று புகார் செய்தால், வரும் ஊழியர்கள், முதலில் அந்த மரத்தை வெட்டுங்கள் சார் என்பார்கள். மின்சாரம் வரவில்லை என்றாலும் இதையே சொல்வார்கள். எனக்குப் பிடித்த மரம் என்பதாலும், மாலை வேளைகளில் அதன் கீழே நாற்காலி போட்டு என் தந்தை உட்காருவார் என்பதாலும், எல்லாக் கண்டங்களில் இருந்தும் அந்த மரம் தப்பிப் பிழைத்தது.
இப்போது நான் வசிக்கும் எங்கள் நிலத்தில் இருக்கும் மரங்கள் எல்லாமே வெறுமனே நிலத்தில் மட்டுமல்லாமல் எனது நினைவுகளிலும் ஊன்றி நிற்க வைக்கப்பட்டுள்ள மரங்களேயாகும்.
நிலத்தில் நடுவே இருக்கும் ஒரு பெரிய கிணற்றின் ஒரத்தில் இரண்டு பெரிய மாமரங்கள் உண்டு. ஒரு மரத்தின் மாங்காய் மிகுந்த புளிப்புத் தன்மை வாய்ந்த சின்ன வகை காய்கள். மற்றொன்று ஒட்டு மாங்காய் எனப்படும், மிகுந்த சுவை மிக்க பெரியவகைக் காய்கள் காய்த்து குலுங்கும் மரம். அதன் கீழே எனது தந்தை ஓய்வெடுப்பதற்காக கட்டப்பட்ட ஒரு சிமெண்ட் திண்ணை உண்டு.
எனது நண்பர்கள் எல்லோருமே ஏதாவது ஒரு சமயம் அங்கே வந்து கேழ்வரகு கூழும், தொட்டுக் கொள்ள காய்ந்த மிளகாய் அரைத்து பூசப்பட்ட அந்த மாங்காயும் சாப்பிடாமல் இருந்ததில்லை! இத்தனை வருடங்கள் கடந்தும், இன்னமும் அந்த ஒரு அனுபவம் மட்டும் எங்கள் எல்லோருக்கும் ஒவ்வொரு கோடை காலத்திலும் கிடைக்கிறது.
பின், நிலத்தின் தென் கிழக்கில் ஒரு வரிசையாக நடப்பட்டு இருக்கும் நிறைய புங்கை மரங்கள்! அதற்கு கீழே இன்னுமொரு திண்ணை! அது என் அம்மாவிற்கானது.. அங்கு உட்கார்ந்துதான், வேலையாட்களுக்கு கூலியாக நெல்லும், மல்லாக் கொட்டையும் அளந்து போடுவார்கள். அவைகள் மூட்டை, மூட்டையாக அடுக்கப்பட்டு இருக்கும் அந்தக் காட்சியும், அதன் வாசனைகளும் இனி அடுத்த தலைமுறைகள் பார்க்கவே முடியாத காட்சி என்பது ஒரு தனி சோகம்.
ஒவ்வொரு முறை உழவு ஓட்டும் போதும், அந்த புங்கை மரங்கள் அனைத்தும் துகிலுரிக்கப் பட்டு, அதன் தழைகளை சேற்றில் போட்டு உழுவார்கள். சில மாதங்கள் அந்த மரங்கள் எல்லாம் மொட்டையாக நிற்கும். பின் வழக்கம் போல பச்சை பசேலென்று வளர்ந்து விடும்.
தற்சமயம், நிலத்தில் உழவு ஓட்டுகிறார்கள். தழைகளை வெட்ட வேண்டாம் என்று சொல்லி விட்டேன். இப்போது சில செம்போத்து பறவைகளும், ஒரு ஜோடி மரங்கொத்தியும் அந்த மரங்களில் கூடு கட்டி வசித்து வருவதை நான் அறிவேன்.
சமீபத்தில், அதில் ஒரு புங்கை மரத்தில், அந்த மரத்தைச் சுற்றி அமையுமாறு ஒரு பெரிய பறவை கூண்டினை நண்பர்கள் உதவியுடன் அமைத்தோம். கூண்டினுள் இருக்கும் பல வித பறவைகளும், ஒரு மரத்தில் வாழ்வதைப் போன்ற உணர்வைப் பெறும் என்று எங்களுக்கு ஒரு நம்பிக்கை! என்ன இருந்தாலும், அந்தப் பறவைகளுக்கு பரந்த ஆகாயம் மறுக்கப் படுகிறதுதானே!
மேலும் எங்கள் நிலத்தில் இருக்கும் ஒரு அரச மரத்தைப் பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும். இந்த பகுதியிலேயே மிக பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கும் இந்த அரச மரத்தடியில் தான் எனது அப்பா, பெரியம்மா மற்றும் அம்மா அடக்கம் செய்யப் பட்டு, அவர்களின் நினைவாக ஒரு சமாதியும் அமைக்கப் பட்டிருக்கிறது. உடன் ஒரு வேப்ப மரமும் உண்டு. இரண்டு மரங்களின் வேர்களும் இப்போது ஒன்றாகி அரச மரம் வேப்ப மரத்தின் குணத்துடனும், வேம்பு அரச மரத்தைப் போன்று உயரமாகவும் வளர்ந்து வருகிறது.
கடுமையான உழைப்பையும், வேளாண்மையையும் நேசித்து வளர்ந்த ஒரு மரபின் தொடர்ச்சிதான் நான் என்பதை ஒவ்வொரு கணமும் எனக்கு நினைவு படுத்தும் வேர்கள் அவை.
பின்னாளில், எங்கள் குடும்ப அறக்கட்டளையின் மூலம் ஒரு பொறியியல் கல்லூரியை துவங்கும் வாய்ப்பு கிடைத்த போது அதற்கென வாங்கப்பட்ட நிலம் ஒரு பெரிய பொட்டல் காடு. நான் முதன் முதலில் சென்று அந்த நிலத்தை பார்த்த போது, என்ன கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரே ஒரு மரம் கூட இல்லாமல், இப்படியொரு பொட்டலாக இருக்கிறதே? என்று பலர் கவலைப்பட்டுக் கொண்டிருந்தனர்.
எனது கண்கள் மட்டும் மின்னின! பல மரங்களை நட்டு வளர்க்க ஒரு பெரிய வாய்ப்பாகத்தான் நான் அதைக் கருதினேன். முதல் வேலையாக கல்லூரியின் மாஸ்டர் ப்ளான் முடிவு செய்யப் பட்டது. பின், அதையொட்டி, நூற்றுக் கணக்கான மரங்களை தேடி, தேடி சென்று வாங்கி வந்து நட்டோம். இப்போது எங்கள் கல்லூரியில் வளர்ந்து நிற்கும் நூற்றுக்கணக்கான மரங்கள், இந்த இடத்தையே ஒரு பசுமைச் சோலையாக மாற்றியமைத்து இருக்கிறது.
எனக்கேற்றபடியே எனக்கு அமைந்த கல்லூரியின் தோட்ட மேலாளர் பரிதியும் மரங்களின் மிகக் பெரிய காதலன். கல்லூரியில் கட்டிடங்கள் கட்ட, பாதை அமைக்க, தண்ணீர் தேட, மழை நீர் வடிகால் அமைக்க என எதற்கேனும் எந்த மரத்தையேனும் வெட்ட நேரிட்டால், அந்த மரத்தினை பரிதி மிகுந்த உழைப்போடு உயிருடன் அங்கிருந்த அகற்றி, வேறு இடத்தில் நட்டு காப்பாற்றி விடுவதில் கெட்டிக்காரன்.
எனது நினைவுகளின் பாதையில் இன்னும் எத்தனையோ மரங்கள் உண்டு.
இரமணாஸ்ரமத்தில் இப்போதும் மாலைப் பொழுதுகளில் தனது வாசத்தைப் பரப்பிக் கொண்டிருக்கும் லிங்கப் பூ மரம்.
சென்னையில் எங்கள் வீட்டையொட்டி, தெருவெங்கும் நிறைத்து நின்று கொண்டிருக்கும் ஒரு சரக் கொன்றை மரம்.
நான் படித்தக் கல்லூரியின் கேண்டீனை ஒட்டி பிரம்மாண்டமாய் வளர்ந்து நின்று, எங்களின் சந்தோஷப் போழுதுகளையெல்லாம் எங்களோடு பகிர்ந்து கொண்ட அந்த அத்தி மரம்.
அமெரிக்காவில், ஆர்லாண்டோ மாநிலத்தில் இருக்கும் டிஸ்னி பொழுது போக்கு பூங்கா ஒன்றில் அமைக்கப் பட்டிருந்த அந்த பிரம்மாண்ட செயற்கை மரம். (அதைப் போன்ற உண்மையான மரங்கள் ஆப்ரிக்க காட்டில் இருக்கிறது. ஒரே ஒரு மரத்தின் கீழே ஒரு முழு கிராமமும் அமைந்திருக்குமாம்!)
சமீபத்தில், நண்பர் பவா செல்லதுரை என்னை அழைத்து சென்று காட்டிய நமது ஊர் சமுத்திர ஏரிக் கரையோரம் இருக்கும் அந்த மிக பிரம்மாண்டமான ஆலமரம் என இன்னும் எத்தனையோ மரங்கள் உண்டு.
அந்த நீண்ட பட்டியலில், இது வரை நான் பார்த்தேயிராத ஒரு மரமும் உண்டு!
எனக்கு பவா செல்லதுரை சொன்ன ஒரு சுவாரஸ்யமான கதையின் மூலக் காரணமாகவும் அந்த ஒற்றை மரமே இருந்தது.
காயத்ரி கேம்யூஸ் என்ற எங்கள் நண்பர், ஸ்பெயின் நாட்டில் இருந்து வந்து எங்கள் ஊரில் வசித்து வரும் ஒரு பெண்மணி. சிறந்த ஓவியரும் கூட. அவர் சமுத்திர ஏரிக்கரையோரம் ஒரு சிறிய இடம் ஒன்றினை வாங்கி, அதில் குடிசை ஒன்றினை அமைத்து வாழ்ந்து வருகிறார்.
சம்பவம் அவர் வீட்டுக்கு அருகில் இருக்கும் விவசாய நிலத்தில் நடக்கிறது. எங்கள் ஊர் வழக்கப்படி, அந்த விவசாய நிலமும் ப்ளாட் போடப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அதற்காக அங்கே இருக்கும் ஒரே ஒரு பெரிய வேப்ப மரத்தை வெட்டத் துவங்குகிறார்கள்.
தினமும், அந்த மரத்தைக் கடந்து சென்று வரும் காயத்ரியால் இதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. திடீரென யாரும் எதிர்பாராமல் ஒரு காரியத்தை செய்கிறார். அந்த மரத்தின் அருகே சென்று, அதனைக் கட்டிப் பிடித்து அப்படியே அந்த நிலத்தில் உட்கார்ந்து கொள்கிறார். அனைவருக்கும் அதிர்ச்சி.
தனது பட்டா நிலத்தில் இருக்கும் தனக்குச் சொந்தமான மரத்தை வெட்டக் கூடாது என்று சொல்ல இந்த பெண் யார் என நிலத்தின் முதலாளி கொந்தளிக்கிறார். மெல்ல அங்கு ஒரு பதட்டம் எழுகிறது.
காயத்ரி எதற்கும் அசைந்து கொடுக்க வில்லை. தனது குழந்தைகளில் ஒன்றினை கட்டிக் கொள்வதைப் போல அப்படியே அமர்ந்திருக்கிறார். ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் அல்ல! அப்படியே சில நாட்கள்….
அந்த நிலத்தின் முதலாளி பின்பு என்ன நினைத்தாரோ தெரியவில்லை! எங்கோ வெளிநாட்டிலிருந்து வந்து, நம் ஊரில் வசிக்கும் ஒரு பெண் இந்த மரத்தின் மீது இத்தனை ப்ரியத்தை வைத்திருந்தால், நாம் மட்டும் ஏன், வெறும் பணத்துக்காக அதை வெட்டியெறிய வேண்டும் என்றுகூட நினைத்திருக்கலாம்!
அந்த மரம் வெட்டப் படுவது நிறுத்தப் பட்டது.
ஒரு தாயின் எல்லையில்லாப் பேரன்பு தன் மீது படர்ந்திருந்ததற்கு சாட்சியாக இன்னமும் அந்த மரம் உயிருடன் நின்று கொண்டிருக்கிறது.
எத்தனை மரங்கள்!
நமது உடலுக்கும் காற்றுக்கும் தொடர்பு இருக்கும்வரை உயிர் இருப்பதைப் போல, மரத்துக்கும் மண்ணிற்கும் தொடர்பு இருக்கும் வரை அவைகளுக்கு உயிரும், உணர்வும் உண்டு. நான் பழகிய எந்த மரத்தின் அருகேயும் மீண்டும் செல்ல நேரிட்டால், என்னை அந்த மரங்கள் அடையாளம் கண்டு கொள்ளும் என நான் நம்புகிறேன்.
ஆல மரம், அரச மரம், அத்தி மரம், சப்போட்டா, வேம்பு, புங்க மரம் என எத்தனையோ மரங்களின் நினைவுகளை எனது வாழ்வின் பல்வேறு கட்டத்தில் கடந்து வந்திருந்தாலும், இந்தக் கட்டுரையை எழுத என்னைத் தூண்டியது ஒரு புளிய மரமே!
சென்ற வாரத்தில் ஒரு நாள் சென்னைக்கு பயணம் செய்து கொண்டிருந்த போது, எங்கள் கல்லூரிக்கு அருகில் இருக்கும் சோமாசிபாடி கிராமத்தில் அனைத்து வாகனங்களும் நிறுத்தப் பட்டன. எனது கார்தான் முதலில் நின்றிருந்த வாகனம்.
தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக கிருஷ்ணகிரி முதல் திண்டிவனம் வரையிலான 180 கிமீ நீள சாலையில் ஒரு புறம் முழுதுமாக ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப் பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் ஒரு மரத்தை வெட்டி சாய்க்கும் நிகழ்வுக்காகத்தான் இந்த வாகன போக்குவரத்துகளை நிறுத்தியிருந்தனர்.
ஒரு ஐம்பது வயதுடைய பெரிய புளியமரம் ஒன்றினை வெட்டி எதிர்பக்கம் சாய்க்கும் ஒரு செயலை முழுதுமாக நேரில் பார்க்க நேரிட்டது எனக்கு. துணைக்கு ஒரு ஹிட்டாச்சி இயந்திரம் ஒன்றினை வைத்துக் கொண்டு , ஒரே ஒரு மின் அறுப்பான், அந்தப் பெரிய மரத்தின் அடிப்பாகத்தை அறுத்துக் கொண்டிருந்தது.
கையறு நிலையில் அந்தப் பெரிய மரத்தின் மேல் கிளையினை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். எனோ அந்தக் கணம், என் மனம் காயத்ரியை நினைத்துப் பார்த்தது. எனது இயலாமை எனக்கு வெட்கமளித்தது.
எத்தனையோ பறவைகளின் வீடுகளைத் தாங்கிக் கொண்டிருந்த அந்தப் பெரிய மரம் மெல்ல சாயத் துவங்கியது. அடுத்து வெட்டப் பட வரிசையில் காத்திருக்கும் இன்னொரு மரம் தன் நெஞ்சம் பதைபதைத்து அந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தது.
இப்போது பெருத்த சத்தத்துடன் அந்த மரம் முழுவதுமாக முறிந்து விழுந்தது. அந்தக் காட்சியை சுற்றிலும் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த கிராம மக்கள் எல்லோரும் சத்தமாக கை தட்டி ஆர்ப்பரித்தனர்.
அந்த விருட்சத்திற்கு, தனது ஐம்பது ஆண்டு கால இருப்பை இழந்த துக்கத்தை விட, அந்த கைத்தட்டல் சத்தம் அதிக வலியைக் கொடுத்திருக்கும்.