காதல் கடிதம் எழுதுபவன்
“காதல் கவிதை எழுதுபவர்கள்
கவிதை மட்டுமே எழுதுகிறார்கள்.
அதை வாங்கிச் செல்லும் பாக்கியவான்களே
காதலிக்கிறார்கள்”.
– நா. முத்துக்குமார்.
எந்த ஒரு காதல் கதையிலும் மிக சுவாரஸ்யமான கட்டம் தன் காதலை வெளிப்படுத்தும் இடமாகவே இருக்கும். நான் அறிந்து இந்த விதிக்கு மட்டும் விலக்கே இல்லை.
காதலை சொல்லும் விதம் மானுட சரித்திரத்தில் பல்வேறு பரிணாமங்களைக் கண்டிருக்கிறது.
நமது சங்க இலக்கியம் தலைவனுக்கும் தலைவிக்குமான தூது குறித்து பல்வேறு குறிப்புகளைத் தந்திருக்கிறது. தொல்காப்பியர் அதற்கு இலக்கணமே வகுத்துள்ளார்.
‘தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
பாணன் பாடினி இளையர் விருந்தினர்
கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்..
என இத்தனைப் பேர் காதல் தூதுக்கு பயன்படுவர் என்கிறார் தொல்காப்பியர்.
இந்தப் பட்டியலில் இல்லாத பலர் பின்னாட்களில் தேவைக்கு ஏற்ப உருவாகி வந்து கொண்டே இருந்தனர்.
கிரேக்க இதிகாசங்களில் மூன்றாம் பாலினத்தவருக்கு இந்த தூது வேலைத் தரப்பட்டிருந்தது.
அப்போது காதலைச் சொல்ல வேண்டுமெனில் பரிசு பொருட்களை உடன் அனுப்பி வைத்தே சொல்லும் வழக்கம் இருந்திருக்கிறது. அந்த வழக்கத்தின் நீட்சியாகவே இப்போதும் காதலர் தினம் என்றொரு நாளில் காதலிக்கு நாம் பரிசளிக்கிறோம் போல!
என் இதயத்தையே உனக்குத் தந்து விட்டேனே? இனி இதயம் வடிவில் எதற்காக ஒரு டாலர் செயின்? என்று சொன்னால் இப்போது எந்தக் காதலி ஏற்றுக் கொள்வாள்?
மாமன்னர் ஷாஜாகான் தனது அரண்மனையில் ஒரு கண்காட்சிக்குச் செல்கிறார். அரண்மனைப் பெண்கள் எல்லாம் தத்தம் கைவண்ணத்தில் உருவாக்கிய பொருட்களை ஆண்டுக்கு ஒரு முறை இப்படிக் காட்சிப்படுத்தி விற்பது வழக்கமாம்! தனது பரிவாரங்களுடன் ஒவ்வொரு கடையாக நின்று பார்த்துக் கொண்டு செல்லும் மன்னர், ஓரிடத்தில் அப்படியே உறைந்து போய் நின்று விடுகிறார். அது மும்தாஜ் விரித்திருக்கும் கடை. மன்னர் தனது வாழ்நாளில் கண்டிராத பேரழகியை பார்க்கிறார்.
உங்களில் பலருக்கும் தெரிந்திராத ஒரு தகவல். மும்தாஜ் ஏற்கனவே திருமணமான பெண். அவள் கணவர் அரண்மனையில் ஒரு முக்கிய அதிகாரி. அவர்களுக்கு பெண் குழந்தைகளும் உண்டு. ஆனால், மன்னரின் கண்களுக்கு இப்போது அவள் ஒரு தேவதை.
பொருட்காட்சி நீட்டிக்கப்படுகிறது. மன்னர் ஷாஜாகான் தினமும் வந்து மும்தாஜ் கடையில் பொருட்கள் வாங்கத் தொடங்குகிறார். இறுதியில், மாமன்னர் மும்தாஜையே வாங்கிச் சென்றுவிடுவதை யாரால் தடுக்க முடியும்? உலகின் மாபெரும் காதல் சின்னமான தாஜ்மகால் இப்படித்தான் நமக்குக் கிடைத்தது.
இதைப் படித்தவுடன், சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தில் கமல்ஹாசன் தினமும் துணிக்கடை ஒன்றுக்குச் சென்று ஶ்ரீதேவியிடம் ஒரு கர்சீஃப் வாங்கும் காட்சி நினைவுக்கு வந்தால், நீங்கள் ஒரு நல்ல சினிமா ரசிகர்.
இப்படி எல்லாம் விதவிதமாக ஒருவருக்கொருவர் தெரிவித்துக் கொண்ட காதல் கடைசியில் எழுத்து மூலம் தம் உணர்வுகளைத் தெரிவிக்கும் காதல் கடிதமாக வந்து நின்றது.
காதல் கடிதம்தான் கடந்த இரு நூற்றாண்டுகளாக நிலைபெற்று நின்ற காதலுக்கான ஊடகம்.
காதல் கடிதங்களின் காலம் வந்த பிறகுதான் காதல்கள் ஆவணப்படுத்தப்படுகின்றன. காதலுக்கு முதன் முறையாக சாட்சிகள் கிடைத்தன. கார்ல் மார்க்ஸ் ஜென்னிக்கும், நெப்போலியன் ஜோஸஃபினுக்கும் எழுதிய கடிதங்கள் உலக இலக்கியமாகியது.
ஒருவரைப் பார்த்தவுடன் இன்னொருவருக்குத் தோன்றும் உணர்வுகளை ஒரு தாளில் எழுதி விட்டால் போதும். அது காதல் கடிதமாகி விடுகிறது. மூன்றாம் நபர் அறியாமல் மிகவும் ரகசியமாக ஒருவர் இன்னொருவரிடம் தன் காதலை வெளிப்படுத்த வழி செய்யும் ஒரு அற்புதமாக ஏற்பாடு காதல் கடிதம்.
ஜெயகாந்தன் ஒரு கதையில், ஒரு ஆண் மிக நாகரீகமாவும், கண்ணியத்துடனும் ஒரு பெண்ணிடம் தான் அவள் மீது கொண்டிருக்கும் காதலை வெளிப்படுத்த காதல் கடிதமே சிறந்த வழி. அதை அந்தப் பெண் ஏற்கலாம்! அல்லது மறுக்கலாம். அது அவள் உரிமை. ஆனால், அப்படி ஒரு காதல் கடிதம் எழுதியதற்காக அந்த ஆண் எதற்காகவும் வெட்கப்படத் தேவையில்லை என்பார்.
இன்றைய காதல் இரண்டே வார்த்தைகளில் அடங்கி விடுவதைக் கண்டு வியந்து போகிறேன்.
‘ப்ரபோஸ்’ என்றொரு வார்த்தை! காதல், நேசம், மணம் போன்ற பல படிநிலைகளைக் கொண்ட காதலை இது மிகவும் எளிமைப் படுத்தி விட்டது. காதல் ஒரு முறைதான் நெஞ்சுக்குள் பூக்கும். ஒரு முறை பூத்தால் பிறகு பிறகெப்போதும் அது மொட்டு வைக்காது போன்ற விக்ரமன் பட வசனங்கள் எல்லாம் இனிமேல் தொலைகாட்சியில் பார்த்தால்தான் உண்டு.
‘ப்ரேக் அப்’ என்றொரு இன்னொரு வார்த்தை. பிரிவின் வலி, வேதனை, துயரம் போன்ற இன்னும் சில வார்த்தைகளை அது இல்லாமலேயே ஆக்கி விட்டது. இப்போது காதலிப்பதை விட எளிது காதலை முறித்துக் கொள்வது. கடைசியாக ஒரு கப் காஃபி அல்லது அதற்கும் நேரமில்லையெனில் ஒரு குறுஞ்செய்தி. ஒரு மகத்தான காதல் கதை முடிவுக்கு வந்து விடுகிறது. இதற்கு முன் அவர்கள் சந்தித்தே இல்லை என்பது போல புத்தம் புதிதாக தங்கள் நாட்களை தொடர்கிறார்கள்.
மூன்றாவது வார்த்தையும் ஒன்றுண்டு. அதன் பெயர் ‘லிவிங் டுகெதர்’.
எதற்கு வீண் அச்சங்கள்? இணைந்து வாழ்ந்தே பார்த்து விடுவது. மன ஒற்றுமை முதல் உடல் தேவை வரை சகல அம்சங்களையும் நேரடி அனுபவமாக கண்டு, இருவருக்கும் அது திருப்தியளிக்கும் பட்சத்தில் அந்த உறவை திருமணம் வரையிலும் கொண்டு செல்லலாம். இருவரில் ஒருவருக்கு ஏதேனும் ஓர் அம்சத்தில் அதிருப்தி இருக்கும் பட்சத்தில், இருக்கவே இருக்கிறது அந்த இரண்டாவது வார்த்தை! ‘ப்ரேக் அப்’.
கடிதங்கள் வழக்கொழிந்து, வாழ்த்து அட்டைகள் இல்லாமல் போய் ஃபேஸ்புக், வாட்ஸ்சப் என சோஷியல் மீடியாவின் காலத்தில் இன்னமும் யாராவது காதல் கடிதம் எழுதுகிறார்களா என அறிந்து கொள்ள ஆவல். அப்படி யாரேனும் மெனக்கெட்டு ஒரு காதல் கடிதத்தை எழுதினாலும், அதற்காக கேலி செய்யப்படக்கூடிய வாய்ப்பே இப்போது அதிகம்.
இல்லாமல் போய்விட்டதாலேயே காதல் கடிதங்கள் மதிப்பு அற்றவை என ஆகிவிடாது. நினைத்தபோது எழுத காதல் கடிதம் என்பது வெறும் ஸ்டேட்மெண்ட் அல்ல. காதல் கடிதத்தின் நோக்கம் காதலைச் சொல்வது மட்டுமல்ல. அதைப் பெறுபவருக்கும் அதே உணர்வுகளை வரச் செய்து எப்படியாவது காதலுக்கும் சம்மதம் பெறுவதும் கூட. எப்படியாவது எனது காதலை ஏற்றுக் கொள் என காலில் விழுந்து கெஞ்ச வேண்டும். ஆனால், அப்படி காலில் விழுவது தெரியாத மாதிரியும் சாமர்த்தியமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
காதலர்கள் அனைவரும் காதல் கடிதம் எழுதும் திறன் பெற்றவர்களாக இருப்பதில்லை. எப்படியும் அந்த ஒரு கடிதம்தான் அவன் காதலின் எதிர்காலம் என்ற நிலையில் காதலனுக்குத் தேவை அப்படியொரு காதல் கடிதம் ஆற்றல் மிக்க எழுதும் நண்பன்.
எல்லா நண்பர்கள் குழுவிலும் அப்படியொரு திறமைசாலி இருப்பான். இதெல்லாம் சத்தியமா வாய்ப்பே இல்லை என மற்றவர்கள் நினைக்கும் காதலையும் கைகூட வைத்த அந்த ஒரு கடிதத்தை அவன் எழுதிக் கொண்டே இருப்பான்.
காதலிப்பவர்களுக்கு ஒரு காதல். ஒரு காதலி.
காதல் கடிதம் எழுதுபவனுக்கு ஒரே நேரத்தில் பல காதல்கள். பற்பல காதலிகள்.
எனது நண்பர்கள் குழுவிற்கு நான்தான் அந்தக் ‘காதல் கடிதம் எழுதுபவன்’.
̀ பலரின் காதல் அனுபவங்களை கேட்டறிந்ததின் மூலம் நான் கற்றறிந்த முதல் பாடம் காதலுக்கு கண்ணில்லை. நிஜ வாழ்க்கையில் பொருந்தவே பொருந்தாது என்பது போல தோற்றம் அளிக்கும் ஜோடிகள் கச்சிதமாக பொருந்திக் கொள்வதும், கமல்-ஶ்ரீதேவி போன்ற ஜோடிப் பொருத்தம் என நாம் நினைப்பவர்கள் ஒட்டவே ஒட்டாததும் காதலின் விநோதங்கள்.
சந்தேகமேயின்றி, எந்தக் காதலுக்கும் உடல் கவர்ச்சிதான் முதல் படி. பருவத்தில் பன்றி கூட அழகாக இருக்கும் என்று ஒரு பழமொழி உண்டு. அந்தப் பழமொழி உண்மைதான் என நான் பலமுறை கண்டிருக்கிறேன்.
காதல் கடிதத்தின் அடிப்படை, சுருங்கச் சொல்லி விளக்குதலே! பெரிய நீளமான காதல் கடிதங்கள் எழுதுவதும், அதை மறைத்து வைத்துப் படிப்பதும் ரிஸ்க் என்பதால் எனது ஸ்டைல் ஒற்றைப் பக்கக் கடிதங்கள். ஆங்காங்கே அசரடிக்கும் ஒன் லைனர் எனப்படும் ஒற்றை வாக்கியங்கள்.
அந்தப் பெண்ணுக்குத் தெரியாத அல்லது அவள் உணராத ஒரு விஷயத்தை, நாம கண்டுபிடித்துப் பாராட்டிட்டா போதும். காதல் வொர்க் அவுட் ஆகலைன்னாலும், அந்தக் கடிதமேனும் பல காலத்துக்குப் பாதுகாக்கப்படும். பெண்களிடம் எனக்குப் பிடித்த ஒரு விஷயம் நாம் என்னதான் அநியாயத்துக்கு புகழ்ந்து வர்ணிச்சாலும் அதை அவர்கள் நிஜமென நம்புவதுதான்.
காதல் கடிதம் வேண்டி வருபவர்களை பேச வைத்து அவர்களின் முகபாவனைகளை உற்று கவனித்தாலே போதும். நம் கடிதத்துக்குத் தேவையான ஒன் லைனர் வந்துவிடும்.
சொல்லுடா! அவ எப்படி இருப்பா?
சும்மா கும்முன்னு..
அடச் சீ! அவகிட்ட உனக்குப் பிடிச்ச மாதிரி ஏதாவது இருக்குமே? அதைச் சொல்லு.
அவ கண்ணு மச்சான். சும்மா உருட்டி, உருட்டி பார்ப்பா பாரு….
சட்டுன்னு பிடிச்சிடுவேன்.
‘அடிக்கடி படபடவென இமைக்காதே கண்ணே!
அந்தக் கருவண்டுகள் பறந்து சென்றுவிட்டால்
உனக்குக் கண்கள் தெரியாமல் போய்விடுமே?
இந்த மொக்கை வரிகளை சூப்பர்டா! என பாராட்டி வாங்கிச் செல்வான். பின்னாளில், அந்தப் பெண்ணைக் காண நேரிட்ட போது. ஒல்லியா, வெடவெடன்னு, கண்ணு ரெண்டும் உள்ளடங்கிப் போய் இருந்தாள். எனக்கு நான் எழுதித் தந்த அந்தக் கரு வண்டு கவிதை நினைவுக்கு வரும்.
நான்தான் சொன்னேனே! பருவத்தில்….
ஒருமுறை நான் காதல் கடிதம் எழுதித் தந்த ஒரு காதல் ஜோடி ஊரை விட்டு ஓடி விட, அந்தக் கடிதம் அவள் தந்தையிடம் சிக்கிக் கொள்ள, எனது முத்து முத்தான கையெழுத்து அவர்கள் காதலுக்கு சாட்சியாக போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டது. கையெழுத்து வெரிஃபிகேஷுனுக்காக அவன் நண்பர்களின் நோட்டுப் புத்தகங்கள் ஆசிரியர்கள் மூலம் வகுப்பறையில் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தியாவின் ஸ்காட்லாந்த் யார்ட் ஆன தமிழகக் காவல்துறை எவ்வளவோ முயன்றும் என்னை நெருங்கவே முடியவில்லை. காரணம் நான் இங்கிலிஷ் மீடியம். ஓடிப் போன காதல் ஜோடி தமிழ் மீடியம். இப்படியாக, எனது குடும்பத்தின் ஆங்கில மோகம் என்னை காவல்துறையின் தீவிர தேடுதல் வேட்டையில் இருந்து காப்பாற்றியது.
எங்கள் காலத்துப் பேரழகி ஒருத்திக்கு காதல் கடிதம் எழுதித் தரக் கேட்டு வந்தான் ஒருவன்.
அப்போதெல்லாம் வெள்ளிக்கிழமைகளில் அந்தப் பெண் காந்தி நகரில் இருந்து நடந்து பெரிய கோவிலுக்குச் செல்லும் காட்சியைக் காண சன்னதி தெரு வீடுகளின் திண்ணைகளுக்கு அட்வான்ஸ் புக்கிங் நடக்கும். நண்பர்கள் குழுவில் யாரேனும் ஒருவன் சன்னதி தெருவில் வசிப்பது என்பது கடவுள் நேரடியாக அவனுக்கு அளித்த வரம். எனக்கு அந்தத் தெருவில் மூன்று நண்பர்கள்.
ஒரு லவ் லெட்டர் வேஸ்ட் ஆயிடும்டான்னு பொறுமையாக எடுத்துச் சொன்னேன். அந்தப் பெண் வங்கி அதிகாரியின் மகள். டில்லியில் கிண்டர்கார்டன் படிப்பு. அப்புறம் கோவா, பெங்களூர் என வேற ரேஞ்ச். அவள் உடை, நிறம், பேச்சு, பார்வை எல்லாமே எங்கள் ஊருக்குப் புத்தம் புதுசு.
நம்மாளோட அப்பாவோ சைக்கிள் கடைக்கார். இவன் சுத்த திராவிட நிறம். அப்பவே சோடாபுட்டிக் கண்ணாடி. ஆனா, செமையா படிப்பான். எப்பவும் மொத ரெண்டு ரேங்க்குள்ளேயே இருப்பான்.
அதெல்லாம் தெரியாது. நான் அவகிட்ட லவ்லெட்டர் கொடுத்தே ஆகணும். இல்லைன்னா, சத்தியமா நான் தற்கொலை பண்ணிப்பேன்னு அவன் சொன்னதும் அரண்டு போய் எழுதித்தர ஒப்புக் கொண்டேன். அவளைப் பார்த்தாதாண்டா எழுத மூட் வரும் என நான் உறுதியாக சொல்லியதின் பேரில் கணேஷ் வீட்டுத் திண்ணையில் எனக்கு ஒரு இடம் உறுதி செய்யப் பட்டது.
ஒரு வெள்ளியன்று மாலை பகலுக்கும், இருளுக்குமான இடைப்பொழுதில் தோழிகளுடன் நடந்து வரும் அவள் மட்டும் ஒற்றைச் சூரியனாக ஜொலிக்க, அந்தப் பெண்ணை மிக அருகில் இருந்து பார்த்தேன். நிச்சயம் அவள் காதல் கடிதங்களுக்குத் தகுதியான பெண்தான். அவள் இதற்கு முன்னர் பல காதல் கடிதங்களைப் பெற்றிருப்பாள். இப்போது நான் எழுதப் போகும் இந்தக் கடிதம் எல்லாவற்றிலும் சிறப்பாகவும், புதுமையாகவும் இருக்கவேண்டும் எனத் தோன்றியது.
புதுக்கவிதைகளின் பொற்காலம் அது. அன்று வானம்பாடி கவிதைகள் ஒன்றிரண்டாவது மனப்பாடமாக தெரிந்து வைத்துக் கொள்வது நல்ல மாணவனுக்கு அழகு. எனவே, சிற்பி, புவியரசு முதல் மேத்தா, வைரமுத்து வரை கவிதைகளைக் கலந்து கட்டி கவிதையாக ஒரு கடிதம் எழுதித் தந்தேன்.
அடுத்த வெள்ளியன்று, அவள் நடந்து வருகையில் எதிர் திசையில் இருந்து வேகமாக சைக்கிளில் வந்து அவள் முன் ப்ரேக் அடித்து நிறுத்தி, எல்லோரும் பார்க்க அவள் கையில் இருந்த பூக்கூடையில் அந்தக் கடிதத்தை வைத்தான் அவன்.
அந்த அசட்டுத் துணிச்சலாலோ அல்லது எனது அற்புதமான காதல் கடிதத்தாலோ அல்லது வழக்கமான காதலர்களின் முட்டாள்தனத்தாலோ, அந்தக் காதல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த இரண்டு பக்கக் காதல் கடிதத்தை அவள் எழுத்துக்கூட்டிப் படித்து முடிக்க நான்கு நாட்கள் ஆகியதாம்! டெல்லி காண்வெண்ட். இதில் புரியாத இடங்களை அடிக்கோடிட்டு என்னிடமே சந்தேகம் கேட்டு அனுப்பியும் வைத்தாள்.
முப்பது ஆண்டுகள் கழித்து அண்மையில் அவன் என்னை தொடர்பு கொண்டான். அவன் இப்போது மும்பையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் உயர் அதிகாரி. அவர்கள் மகளை சென்னை மருத்துவக் கல்லூரி ஒன்றில் சேர்க்க வேண்டும் என வந்திருந்தார்கள். நேரடியாக மருத்துவக் கல்லூரிக்கே அவர்களை வரச்சொல்லி அங்கு சென்று சந்தித்தேன்.
அன்றொரு நாள் அந்த மாலை வெளிச்சத்தில் நான் கண்ட தேவதையின் புதிய பிரதியாக அவர்களின் பெண் நின்றிருந்தாள். சுஜாதாவின் ஶ்ரீரங்கத்து தேவதைகள் கதை ஒன்று நினைவுக்கு வந்தது.
தலையில் முடியற்று, அதே திராவிட நிறத்துடன் அவன். வழக்கமான தடித்தக் கண்ணாடிக்கு பதில் அர்மானி கூலிங்க்ளாஸ். காண்டாக்ட் லென்ஸ் அணிந்து கொண்டானாம்!
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதித் தந்த காதல் கடிதத்துக்குச் சொந்தக்காரி அங்கு இல்லவே இல்லை. முன்னொரு காலத்தில் அவளுக்குள்ளே ஒரு தேவதை இருந்ததின் எந்த ஒரு அடையாளமும் அங்கில்லை.
எப்படிப்பா! நீங்க மட்டும் அப்படியே இருக்கீங்க என்று அவள் வியக்க, நான் பதில் ஏதும் சொல்லாமல் ஒரு புன்னகையுடன் நிறுத்திக் கொண்டேன்.
எது பேரழகு என்பதை அந்தந்த வயதும், அந்தந்தச் சூழலுமே முடிவு செய்கிறது. காலம் நிகழ்த்தும் மாயாஜாலத்தை யாராலும் எப்போதும் புதுப்பிக்கவே முடியாது என்பதை முழுமுதலாக உணர்ந்த தருணம் அது.
அட்மிஷன் கிடைத்த உற்சாகத்தில், அங்கிள்! உங்களுடன் ஒரு செல்ஃபி என அந்தப் புதிய தேவதைக் கேட்க நாங்கள் அனைவரும் இணைந்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டேன்.
வீட்டுக்கு வந்தவுடன், வாட்ஸ்சப்பில் அந்தப் படத்தை எனக்கு அனுப்பியிருந்தார்கள்.
நாங்கள் எல்லோரும் கேமிராவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்க, இரு கண்கள் மட்டும் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. அந்தக் கண்களில் இன்னமும் மிச்சம் இருந்தது நான் என்றோ எழுதித் தந்த எனது ‘காதல் கடிதம்’.
– எஸ்கேபி. கருணா.
(இனிய உதயம் இதழில் வெளிவந்த காதலர் தின சிறப்புக் கட்டுரை )
14.2. 2016