எதிர் பிம்பம்

மறுபடியும் ஏசையனோட இந்த ஸ்பெஷல் காஃபியை குடிக்க முடியுமான்னு ஒரு தடவை நெனைச்சுப் பார்த்தேன்! என்றபடி காஃபியை கையில் வாங்கிக் கொண்டான். எனது கெஸ்ட் ஹவுஸ் சமையல்காரர் ஏசையன் புன்னகைத்தபடி அங்கிருந்து விலகிச் சென்றார்.
எப்போ இந்த மாதிரி தோணுச்சு?
ரெண்டாவது நாள் சாயந்திரம். மொத நாள் முழுக்க பயத்துலே அடிவயிறு பிடிச்சுருச்சு. எங்க யாருக்கும் பசியே எடுக்கலே! எப்படியாவது வெளியே போயிடணும். யாராவது எதிலாவது வந்து அழைச்சுட்டுப் போயிடுவாங்கன்னு ஜன்னலோரம் வெளியே பார்த்துட்டே பொழுது போயிடுச்சு.

ம்.
ரெண்டாவது நாள் காலையில் இருந்து பசி மயக்கம் ஆரம்பிச்சுடுச்சு. வீட்டிலே சுத்தமா குடிக்க தண்ணி இல்லை. ஸ்டோர் முழுக்க தண்ணி போயிட்டதாலே, எல்லாம் தண்ணிக்குள்ளே இருக்கு.
அப்படியும், நான் அரிசி டிரம்லே கையை விட்டு, அரிசி எடுத்து சாப்டேன் அங்கிள். இட்லிக்கு ஊறவச்ச அரிசி மாதிரி செம்மயா இருந்துச்சு என்றான் நண்பனின் மகன்.
ம்.. அப்புறம்..
சுத்தமா கரெண்ட் இல்லை. இன்வெர்ட்டர் தண்ணியிலே போயிடுச்சு. லேண்ட் லைன், மொபைல் போன் எதுவும் வேலை செய்யலை. வீடு முழுக்க இடுப்புக்கு மேலே தண்ணி. வெளியே எட்டிப்பார்த்தா, திடீர்னு வீட்டை ஒரு பெரிய கடலுக்கு நடுவுலே கொண்டு போய் வச்சுட்டது போல எங்க பாத்தாலும் தண்ணி. நிறைய நாய், மாடு எல்லாம் மெதந்துட்டு போவுது! ஒரு ஆளோட பொணம் தண்ணிலே போனத அவ பாத்தாளாம்!
உங்க ஃப்ளாட்லே மத்தவங்க எல்லாம் என்னனாங்க? நீங்க மட்டும் எப்படி மாட்டுனீங்க என்றேன்.

தெரியலடா! ராத்திரி சீக்கிரம் தூங்கிட்டோம். காலையிலே பாம்பே ஃப்ளைட் பிடிக்கணும். ஹெட் ஆஃபீஸ் மீட்டிங் ஒண்ணு! என்னோட ப்ரஸெண்டேஷன் இருந்துச்சு. பக்கத்து ஃப்ளாட்லே யு.எஸ் போய் ஒரு வாரமாச்சு. அது பூட்டியே இருந்துச்சு. வெளியே இருந்து பாத்தவங்களுக்கு எங்க ஃப்ளோர்லயே யாரும் இல்லைன்னு தோணியிருக்கும்.
வெளியே சத்தம் கூடவா கேக்கலே!
வீடு முழுக்க சவுண்ட் ப்ரூஃப் விண்டோஸ்டா. ஒரு சத்தமும் கேக்காம அமைதியா இருக்கணும்னு நிறைய செலவு பண்ணி போட்டிருந்தேன்.
அடப்பாவி..
ராத்திரி ஒரு மணியிருக்கும்! ஒரே தண்ணி வாசனை.
தண்ணி வாசனையா!
ஆமாடா! நிறைய தண்ணி இருக்கிற இடத்துக்குப் போன ஒரு வாசனை அடிக்குமே! பாசி, சேறு, இலை எல்லாம் கலந்தாப்லே!
நான் கவனிச்சதில்லே.

லைட்டைப் போட்டுப் பார்த்தா, எங்க கட்டில தொட்டுட்டு கீழே முழுக்க தண்ணி. கட்டிலே ரெண்டு அடி உயரம். அவ்ளோ தண்ணி எப்படி வந்துச்சுன்னு தூக்கத்துலே ஒண்ணும் புரியலே! அவளா, அசந்து தூங்கிட்டு இருக்கா. இவன் இன்னொரு ரூம்லே தூங்கிட்டு இருந்தான்.
ம். அப்புறம்?
எங்க ஃப்ளாட்டுக்குதான் வந்திருக்கியே? தெருவிலே இருந்து அபார்ட்மெண்டே எட்டடி உயரம். அப்புறம் கீழே பூரா ஸ்டில்ட் கார் பார்க்கிங். அப்புறம் ஃபர்ஸ்ட் ஃப்ளோர். அதுக்கும் மேலே, செகண்ட் ஃப்ளோரிலே என் ஃப்ளாட்! அதுவரைக்கும் எப்படி தண்ணி வந்திருக்கும் யோசிச்சுட்டு..
நீ நம்பவே மாட்டே!. இது கனவுன்னு திரும்ப படுத்துட்டேன்.
அடப்பாவி!
ஆமாம்டா! மறுபடியும் மேல வாட்டர் டாங்க் உடைஞ்சு தண்ணி வந்திருக்குமோன்னு ஒரு சிந்தனை. அதுவும், தூக்கத்திலேயேதான் வந்துச்சு!

ம்.
இவன் ஞாபகம் வந்ததால, பதறிட்டு மறுபடியும் எழுந்து உட்காந்து லைட் போட்டுப் பார்த்தேன். மேலே சீலிங் எல்லாம் சுத்தமா இருக்கு. கீழே குனிஞ்சு பார்த்தா, என் கட்டில தொட்டுட்டு தண்ணி ஏறிட்டே இருக்கு. அப்போ, இவளும் எழுந்து பாத்துட்டு என்னாச்சுன்னு கத்துறா!
இவன்?
இவனைப் பாக்கதான் நான் கட்டில்லே இருந்து இறங்கி ஓடினேன். வீடு முழுக்க என் முட்டிக்கால் தண்ணி. இவன் ரூம் கதவைத் திறந்தா, தண்ணி வெள்ளம் மாதிரி உள்ளே ஓடுது! இவனோடது பங்கர் பெட்ங்கிறதாலே, மேலே ஏறிப் படுத்து தூங்கிட்டு இருந்தான். இவனை எழுப்பி கூட்டிட்டு வரதுக்குள்ளே, அவ முட்டாத்தனமா ஒரு ஜன்னலை திறந்துட்டா!
என்னாச்சு!

டேய்! சும்மாயிருடா.. பெரிய மனுஷா. அப்போ, நீ சும்மா பென்சிலை வச்சி சுவத்துலே கிறுக்கிட்டுதானே இருந்தே? என்றாள் அவன் அம்மா.
கிறுக்கலே! வாட்டர் லெவலை சுவத்துலே மார்க் பண்ணிட்டு இருந்தேன். அப்போதானே, வாட்டர் அதிகமாகுதா? குறையுதான்னு தெரியும்! சர்வைவல் சீரியல்லே இப்டிதானே பண்ணுவாங்க! நீங்க டிஸ்கவரி சானல் பாப்பீங்களா அங்கிள்?
நீ சொல்லு என்றேன் நண்பனிடம்.
ஜன்னலுக்கு வெளியே எட்டிப்பார்த்தா, இருட்டுலே எங்க பார்த்தாலும் தண்ணிதான் தெரிஞ்சது. அதுவரை எரிஞ்சுட்டு இருந்த எமர்ஜென்ஸி லைட் அப்போ ஆஃப் ஆயிடுச்சு. என் மொபைல் ஃபோனில் இருக்கும் டார்ச்சை போட்டுட்டு, வெளியே வந்து மெயின் டோரை திறந்தேன். அங்கிருந்தும் தண்ணி உள்ளே கொட்டுது!

இவங்க கைகளைப் பிடிச்சு அழைச்சிட்டு மெல்ல படியேறி மொட்டை மாடிக்கு போனேன். அங்கே ஒரே சீரா மழை பெஞ்சிட்டு இருந்தது. வாட்டர் டாங்க் அடியில் யாரோ அழைக்கும் சத்தம் கேட்டது. நாங்களும் நனைஞ்சிட்டே அங்கே ஓடினோம். அங்க பார்த்தா, கீழ் வீட்டுக்காரங்க உட்கார்ந்துட்டு இருக்காங்க!
என்னைப் பார்த்தவுடன், சார்! நீங்க யாரும் ஊரில் இல்லைன்னுதானே நினைச்சுட்டு இருக்கோம்! வீட்டிலயா இருந்தீங்கங்கிறார்.
அப்படி இருக்கு அபார்ட்மெண்ட் பொழப்பு! என்றேன்.
என் பக்கத்து வீட்டுக்காரர் ஃபாரீன் போயிருப்பதை நாங்கன்னு அவர் நினைச்சிருக்கார்.

நீங்க எப்ப மேல வந்தீங்க?
இப்போதான் ஒரு மணி நேரம் இருக்கும். சாரி சார்! உங்களை கூப்பிடாம போயிட்டோம்.
பரவாயில்லை. என்னாச்சு? மறுபடியும் சுனாமியா என்றேன்.
இல்லை சார்! ஏதோ ஏரியை தொறந்துட்டாங்களாம்! அதுக்கு இவ்ளோ தண்ணியா? நம்பவே முடியலை என்றார்.
ஃபயர் சர்வீஸை கூப்பிட்டீங்களா?
என்னோட மொபைல் இன்னும் வேலை செய்யுது சார். ஃபயர் சர்வீஸ கூப்பிட்டா, ரிங் போயிட்டே இருக்கு. போலீஸ் கண்ட்ரோல், கார்ப்பரேஷன் எதுவும் வேலை செய்யலை. மெட்ராஸ்லே எவனைக் கூப்பிட்டாலும், என் வீட்டிலும் தண்ணிதாங்கிறான். விடிஞ்சப்புறம்தான் நிலமை தெரியும் என்றார்.

என்னாலே எதுவுமே யோசிக்க முடியலே. அப்படியே அசந்து போய் உட்காந்துட்டேன். கொஞ்ச நேரத்துலே இவன் என் மேலே படுத்து தூங்கிட்டான். மழையும் கொஞ்ச நேரத்துலே நின்னுருச்சு. விடிகாலை எழுந்து வாட்டர் டாங்க் கீழேயிருந்து வெளியே வந்து பார்த்தா.. ….
அவனோட முகம் அப்படியே ஃப்ரீஸ் ஆகி நின்றிருந்தது. இப்போ இந்தக் கதை வேணாம்னு அவனை அப்படியே விட்டுட்டேன். கையிலிருந்த காஃபியை குடிச்சுட்டு அவனே மறுபடியும் ஆரம்பிச்சான்.
எங்க அபார்ட்மெண்டை சுத்தி, எங்க பார்த்தாலும் தண்ணி. எங்க ப்ளாக்லே இருந்த அஞ்சு பில்டிங்கும் செகண்ட் ஃப்ளோர் வரை தண்ணி இருந்துச்சு. நம்பவே முடியாத காட்சி அது.
ஷாக்கிங்காதான் இருக்கு.

இவன் கீழே போய், இவனோட பொம்மை ரேடியோவை எடுத்துட்டு வந்தான். அதிலேதான், எல்லா விஷயமும் தெரிஞ்சிட்டோம். எங்க ஏரியா மொத்தமும் தண்ணிக்குள்ளே போயிருச்சு. இத்தனைக்கும் அடையாறு ஆத்துலிருந்து அஞ்சு கிலோ மீட்டர் தூரத்துலே நாங்க இருக்கோம். எப்படி, இவ்ளோ தூரம் தண்ணி உள்ளே வந்துச்சுனே புரியலே! பக்கத்துலேயே இருந்தவங்க நிலமை என்னாச்சோன்னும் திகைப்பாவும் இருந்துச்சு!
அவங்க நிலமையெல்லாம் ரொம்ப மோசம்.
அப்புறம் பாத்தா, எல்லா மொட்டைமாடிங்க மேலேயும் ஜனங்க நின்னுட்டு கையாட்டிட்டு இருக்காங்க அங்கிள். அப்படியே, அச்சு அசல் டே ஆஃப்டர் டுமாரோ க்ளைமாக்ஸ் சீன். சான்ஸே இல்லே. ஹெலிகாப்டர் ஷாட் எடுத்திருந்தா சூப்பரா இருந்திருக்கும்.

டேய்! சும்மா இருடா. இவன் ஒருத்தன்…
அன்னைக்கு பகல் பூரா ஒருத்தரும் வரலே! வரவும் முடியாது. அவ்ளோ தண்ணி. இவதான் கீழ எங்க ஃப்ளாட்டுலே போய் ஃப்ரிடிஜ்லே இருந்த தண்ணி பாட்டில், சாக்கலேட் எல்லாம் எடுத்துட்டு வந்தா! பக்கத்து பில்டிங்கில் இருக்கிறவங்ககூட கத்தி, கத்தி தொண்டை வலி எடுத்துக்குச்சு. வேலை செய்த இருந்த ஒரே மொபைல் ஃபோனும் சார்ஜ் போயிடுச்சு.
ஆனா, என் ரேடியோ மட்டும் சூப்பரா வேலை செஞ்சுச்சு! டாடி! அதை சொல்ல மாட்டாரே!

ஆமாம்டா. அது ஒண்ணை வச்சுதான் எல்லாம் தெரிஞ்சுட்டோம்.
அன்னைக்கு ராத்திரி முழுக்க மறுபடியும் மழை. நரகம்னா என்னன்னு அன்னைக்குதான் தெரிஞ்சுட்டோம். செம பசி வேற! இவன் பயங்கரமா அழ ஆரம்பிச்சுட்டான்.
பாவம்டா! சின்ன பையந்தானே!
அங்கிள்! இவருக்கும் பசி தாங்கலேதான். சுருண்டு, சுருண்டு படுத்துட்டு இருந்தார்.
காலையிலே தண்ணி கொறைஞ்சு இருந்துச்சு! ஆனா, அப்பவும் ஃபர்ஸ்ட் ஃப்ளோர் வரைக்கும் தண்ணி இருந்துச்சு.
என்னதான் பண்ணீங்க?
என் அபார்ட்மெண்ட்டுக்கு பின்னாலே ஒரு குப்பம் இருக்கும்! தெரியும்தானே?

நான் பார்த்ததில்லேயே!
நீ முன் பக்கம்தானே வருவே! அந்த குப்பம் யார் கண்ணுலேயும் தெரிய கூடாதுன்னுதான் ஆர்கிடெக்ட்ஸ் டிஸைனே பண்ணியிருக்காங்க! எங்க எல்லா அசோஸியேஷன் மீட்டிங்கிலும் அந்த குப்பத்தை காலி பண்ணனும்ங்கிறதுதான் எப்பவும் மொத அஜண்டாவா இருக்கும். அவ்ளோ பிரச்சனை அதனால!
அந்த குப்பம் என்னாச்சு!
செகண்ட் ஃப்ளோரிலயே தண்ணி புகுந்துருச்சுன்னா! அது என்னாகும்! மொத்த குப்பமும் முழுகிருச்சு. அந்த குப்பத்திலே இருந்து ஒரு பொம்பள எங்க அபார்ட்மெண்ட் வாசலில் கடை போட்டு ஏதாச்சு இந்தப் பசங்களுக்கு வித்துட்டு இருக்கும்.
ஆமா அங்கிள்! அவங்க பேரு பார்வதிக்கா. வெளியே பூமர், நாகப்பழம், தேன் மிட்டாய் எல்லாம் விப்பாங்க. ஸ்கூல் போகும்போதே வாங்கிட்டு போவோம். காசில்லைன்னா கூட கேட்டா எங்களுக்குக் கொடுக்கும். நல்ல அக்கா.

அந்தப் பொம்பளதான் ஒரு லாரி டயர்லே பலகையை கட்டி அது மேலே உட்காந்துட்டு வந்துட்டு இருந்துச்சு. அந்த டயரை ஒரு பையன் தள்ளிட்டே நீந்தி வந்தான். அவனை எங்க ஏரியா ரவுடின்னு நினைச்சுட்டு இருந்தேன். பாத்தா, அந்தம்மாவோட பையனாம்.
உங்ககிட்ட வந்தாங்களா?
ஆமாம்டா! எங்க அபார்ட்மெண்ட் உள்ளே வந்து மேலே மொட்ட மாடிக்கு ஏறி வந்தாங்க. கையிலே ஒரு கோணிப்பை. அதுலே, ஸ்டவ், கெரசின், அரிசி எல்லாம் எடுத்துட்டு வந்து…..
கொஞ்ச நேரம் மறுபடியும் அமைதி.

சொன்னா, நம்ப மாட்டே! ஒரு வார்த்தை யார்கிட்டயும் பேசலை. அதுவா, ஒரு மாடி படிகட்டுலே, ஸ்டவ கொளுத்தி, பாத்திரத்துலே அரிசியைப் போட்டு, தக்காளி சாதம் போல ஒண்ணை செஞ்சு, கீழே போய் தட்டுங்களை எடுத்துட்டு வந்து ஒரு தட்டுலே வச்சு எங்ககிட்ட கொடுத்துச்சு!
அந்த சுட சோத்தை கையிலே எடுத்து ஒரு வாய் வச்சவுடனே, என் கண்ணு கலங்கிருச்சு! சொந்த வீட்டிலேயே இருந்தும் முப்பது மணி நேரம் கழிச்சு மொத வாய் சோறு கிடைச்சது.
அது பாட்டுக்கும், அடுத்த உலை வச்சு சமைச்சு, அந்தப் பையன்கிட்ட கொடுக்க, அவன் நீந்திட்டே போய் பக்கத்து மொட்ட மாடியிலே இருக்கவங்களுக்குக் கொடுத்தான். அப்படியே எங்க அபார்ட்மெண்ட் பில்டிங் அஞ்சுக்கும் சமைச்சு கொடுத்துட்டே இருந்துச்சு.

எல்லாருக்கும், பாதி வயிறுதான் ரொம்பிச்சுன்னாலும், அந்த சாப்பாட்டை தெய்வமே கொடுத்து அனுப்பிச்சது போல இருந்துச்சுண்ணா என்றாள் அவன் மனைவி.
அதுக்குள்ளே, அந்தம்மாவோட பையன், எங்க ஃப்ளாட்டுக்குப் போய் இருந்த மொத்த தண்ணி, சேத்தையும் வாரி சுத்தம் பண்ணி எங்க எல்லோரையும் கீழ அழைச்சுட்டுப் போய் உட்கார வச்சான். யாரும் யாரோடயும் ஒரு வார்த்தை பேசலை. ஏதோ பெரிய ஆக்ஸிடெண்ட்லே மாட்டியிருந்த எங்களை காப்பாத்தி ரோட்டோரம் உக்கார வச்சது போல இருந்துச்சு எனக்கு.
கிச்சன்லே இருந்த கேஸ் அடுப்பை எடுத்து வந்து அவனே சுத்தம் பண்ணி, சிலிண்டரை தலைகீழா கவித்துப் போட்டு என்னன்னவோ பண்ணி, கேஸ் அடுப்பை எரிய வச்சுட்டான். ப்ளம்பிங், வயரிங் எல்லாம் தெரியும் போலிருக்கு. பேட்டரியை எடுத்து வெளியே வச்சு, அதிலேயிருந்து ஒரு லூப் எடுத்து ஒரு எல்.ஈ.டி விளக்கையும் எரிய விட்டுட்டு ரெண்டு பேரும் போயிட்டாங்க.

அன்னைக்கு மதியமா, அவன் மட்டும் எங்கிருந்தோ தோசை மாவு வாங்கிட்டு வந்து தந்தான். தோசை ஊத்தி, தக்காளி ஊறுகாய் வச்சுத் தந்தப்புறந்தான் இவன் கொஞ்சமாவது சாப்பிட்டான்.
பக்கத்து பில்டிங்லே ஒரு ஐஏஎஸ் ஆஃபிஸர்! அவர்கிட்டதான் இந்தக் குப்பத்தை காலி பண்ண சொல்லி மொத்தப் பேரும் ப்ரஷர் கொடுத்துட்டே இருப்பாங்க. அந்த வீட்டிலும் ஒரு சின்ன பையன் இருக்கான். அவனுக்கும் இவனே தோசை எடுத்துட்டுப்போய் கொடுத்துட்டு வந்தான்.
இப்படியே, தண்ணி, பாலு, காஃபி பொடின்னு கேட்டதையெல்லாம் எங்கிருந்தோ கொண்டுட்டு வந்து தந்துட்டே இருந்தாங்க! மூணாம் நாள் சாயங்காலம் போல தண்ணியும் வடிஞ்சு ரோடுக்குப் போயிடுச்சு.
பெரிய கண்டத்திலே இருந்து தப்பிச்சிருக்கீங்கடா என்றேன்.
இன்னும் கேளு! சாயங்காலம் அவங்களை கார் பார்க்கிங்லே உக்கார வச்சு மொத்தப் பேரும் பேசிட்டு இருந்தோம்.

ம்..
உனக்கு ஒண்ணு தெரியுமா? எங்க யாருக்கும் அவங்களை தெரியலை. பக்கத்துக் குப்பத்துலே இருக்காங்கங்கிற அளவுக்குத்தான் தெரியும். ஆனா, அவங்களுக்கு எங்க அத்தனைப் பேரையும் நல்லா தெரிஞ்சிருக்கு.
அட!
ஆமாம்டா! எங்க பேர் தெரியாததால, அவங்களே எங்க எல்லோருக்கும் ஒரு பேர் வச்சிருக்காங்க. அந்த மேட்டரே அன்னைக்கு அந்தம்மா சொல்லிதான் எங்களுக்குத் தெரியும்.
இண்ட்ரஸ்டிங்!
செகரட்டரி பேரு, கண்ணாடிக்கார். அவரோட பொண்டாட்டிக்கு வைர மூக்குத்தி. ஐஏஎஸ்காரருக்கு பெரிய ஆஃபிஸர். அவரோட வீட்டம்மாவுக்கு சுடிதார் அம்மா. அவங்க வட இந்தியாங்கிறதாலே எப்பவும் சுடிதார்தான் போடுவாங்க. இதே போல, ஓவ்வொருத்தருக்கும் ஒரு பேரு. மொத்த குப்பமும் சேர்ந்து வச்சிருக்கு.

அப்பா பேரு கருப்பு கார் சார்! இவரு ப்ளாக் பி.எம்.டபிள்யூ கார் வச்சிருக்காரு இல்லே! அதனாலே.. சூப்பர் பேரு இல்லே. அப்பா, நீ கார் கலரை மாத்தினா, உன் பேரும் மாறிடும்.
டேய்! நீ கொஞ்சம் பேசாம இருக்க மாட்டியாடா..
அண்ணா! இப்பவும், நாங்க உங்க கெஸ்ட் ஹவுஸுக்கு வந்தது போல, எங்க அபார்ட்மெண்ட்லே இருக்கவங்க எல்லாரும் ஒவ்வொரு இடத்துக்கு சேஃபா போயிட்டாங்க. ஆனா, பாவம்! அந்த குப்பத்து ஜனங்க மட்டும் போறதுக்கு இடமில்லாம, இப்போ அங்கியே சுத்தி வந்துட்டு இருப்பாங்க. அத நினைக்கும் போதெல்லாம் மனசு விட்டுப் போவுதுண்ணா..

ஆமாம்டா! திரும்ப போய், அவங்களுக்கு ஏதாச்சும் செய்யணும்.
அப்பா! ஆல்ரெடி, எங்க செட்லே நாங்க பாய்ஸ் எல்லாம் சேர்ந்து டிஸைட் பண்ணியாச்சு.
நீங்க என்னடா டிஸைட் பண்ணீங்க? என்றேன்.
இனிமே, தீபாவளிக்கு ராக்கெட் விடும்போது, அவங்க குப்பத்தைப் பாத்து விடக்கூடாதுன்னு.
அவர்களை என்னோட கெஸ்ட் ஹவுஸில் விட்டு விட்டு, வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போது மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது.