பவா எனும் பெருங்கனவுக்காரன்

பவா எனும் பெருங்கனவுக்காரன்

ஒரு நாள் பவா வீட்டுத் தெருமுனையில் பவாவுடன் நின்று பேசிக் கொண்டிருந்த போது ஒரு மூன்றுச் சக்கர வண்டியில் காய்கறிகளை வைத்துக் கொண்டு ஒரு அம்மா விற்றுக் கொண்டு வந்தார்.

கருணா! அந்தக்கா பேரு கஸ்தூரி. காய்கறி விற்கிறாங்களே! அவர்களிடம் எடை மிஷின் இருக்கான்னு பாருங்க என்றார்.

அந்த வண்டி அருகில் கடக்கும்போது பார்த்தேன். இல்லை.

எப்படி பவா?

கேட்கிறவங்களுக்கு அப்படியே கையில் அள்ளித் தருவாங்க. போதும்! என வாங்குறவங்க சொல்லும்வரை அள்ளிப் போட்டுகிட்டே இருப்பாங்க.

என்ன பவா சொல்றீங்க? நம்மாளுங்க போதும்னு சொல்லவே மாட்டாங்களே!

அதான் இந்த அக்காவின் சாதனை. தன்னோட நேர்மையால் தனது வாடிக்கையாளர்களையும் நேர்மையா மாத்தி வச்சிருக்கு என்றார்.

இது நம்பவே முடியாத நிஜம் பவா என்றேன்.

இந்த அக்காவுக்கு நான் ஒரு வீடு கட்டித் தரப் போறேன்.

அசந்து போய் நின்ற எனக்கு, மேலுமொரு அதிர்ச்சியைத் தந்தார்.

தனக்குப் பிரியமானவர்களுக்கு சொந்த வீடு இல்லையெனில், பவா அவர்களை ஊக்கப்படுத்தி வீடு கட்ட வைப்பார். கட்ட இயலாத நண்பர்களுக்கு தானே வீடு கட்டியும் தருவார்.

அவரது நண்பர் கவிஞர் ஃபீனிக்ஸ் ஓர் ஆட்டோ ஓட்டுநர். ரெண்டு பெண்களை வச்சுகிட்டு ஒண்டுக் குடித்தனத்தில் கஷ்டப்படாதேடா என அவரை அழைத்து தனது நிலத்திலேயே அவருக்குச் சொந்தமாக ஒரு மனை கொடுத்து, தானே ஒரு வீடும் கட்டித் தந்துள்ளார். அந்த வீட்டில் வாழ வாய்ப்பில்லாமல் ஃபீனிக்ஸ் அகால மரணமடைந்த போதும், அவரது மனைவி, மகளுக்கு இப்போது பவா கட்டித் தந்த வீடுதான் அடைக்கலம் என்பது அந்த வீட்டைக் கடக்கும் போதெல்லாம் எனக்கு மன நிறைவை தரும்.

வீடு கட்டித் தர பவா தேர்ந்தெடுக்கும் வழிமுறைகளே கதைகளாக்கும் அளவுக்கு சுவாரஸ்யமானவை. தனது சொந்த நிலத்தில் ரோட்டை ஒட்டியவாறு ஒரு மனையை ஒதுக்குவார். அந்த மனையை அவர்கள் பேருக்கே பதிவும் செய்து விடுவார். பிறகு, அவரே உட்கார்ந்து அளவில் கச்சிதமாக ஒரு வீட்டு ப்ளான் வரைவார். ஒரு நூலகத்துக்கான கூடம், ஓரு படுக்கை அறை, ஒரு சமையலறை மற்றும் உணவறை. அதை கருங்கல் கட்டிடமாக வடிமைத்து, தனது நிலத்தின் இன்னொரு பகுதியில் இருந்து பாறைகளை உடைத்து அதற்கான கருங்கற்களைச் சேகரிப்பார். முதலில் கடக்கால்.

பிறகு, அவரிடம் பணம் சேரும்போதெல்லாம் அந்தக் கட்டிடம் வரி வரியாக மெல்ல எழும்பும். திடீரென ஒரு நாள் மேல் தளம் போடும் அளவுக்கு அந்தக் கட்டிடம் வந்து நிற்கும். அந்தக் கட்டத்தில் தனது நண்பர்களை அணுகுவார். ஒருத்தர் சிமெண்ட் மூட்டைகள், ஒருத்தர் கம்பி, ஒருத்தர் கான்கிரீட் செலவு என பகிர்ந்து கொள்ள, ஒரு நாள் கான்கிரீட் தளம் போடப்படும். அந்த நாள் அப்படியாக நல்ல நாள் ஆகி விடும்.

ரெண்டு பேர் வேலை செய்தாலே கோழி அடிச்சு குழம்பு வைக்கும் பவாவுக்கு கான்கிரீட் போட 15 பேர் வரும்போது சொல்லவா வேண்டும்! அன்று மதியம் அனைவருக்கும் கறிச்சோறு கட்டாயம் உண்டு.

கடைசியாக ஃபினிஷிங் ஸ்டேஜ் எனப்படும் கட்டத்தின் நிறைவின் போதுதான் என்னிடம் வருவார். கல்லூரியில் கட்டிடங்கள் கட்டியது போது மீதமிருக்கும் ஸ்விட்ச் பாக்ஸ் முதல் எலக்ட்டிகல் பைப், டைல்ஸ், கிரானைட் கல் வரை எனக்குப் பயன்படாதவைகளைத் தேர்ந்தெடுப்பார். பிறகு அவைகளைக் கொண்டு சென்று தானே இருக்கும் பொருட்களுக்கு ஏற்ப தரை, சுவர்களை வடிவமைத்து வீட்டை நிறைவு செய்வார்.

அப்படி தனக்கு அவ்வப்போது வந்து காரோட்டும் டிரைவர் ரமேஷுக்கு ஒரு வீடு கட்டி முடித்துள்ளார். அதை நேற்று என்னைத் திறந்து வைக்கச் சொன்னார். தோழர் எஸ்.ஏ.பி தலைமையற்க, இயக்குநர் மிஷ்கின், எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன், ஷைலஜா முன்னிலையில் நிறைந்த மனதுடன் அந்த வீட்டைத் திறந்து வைத்தேன்.

அந்த வீடு கட்டப்படும் போதே பல முறைப் பார்த்திருக்கிறேன். இதற்கு முன்பு பவா கட்டித் தந்த ஃபீனிக்ஸ் வீட்டுக்கு பக்கத்து வீடு. கட்டிட வேலையின் போது, காய்கறி வண்டி கஸ்தூரி அக்கா சித்தாளாக வேலை செய்ததை கவனித்தேன்.

வீட்டுத் திறப்பு விழா முடிந்து புறப்படும்போது அந்த வீட்டு பக்கத்து மனையைக் காட்டி, இந்த இடத்தில்தான் கஸ்தூரி அக்காவுக்கு வீடு கட்டப் போறோம் கருணா என்றார். நிச்சயம் கட்டுவார். அப்போது புது வீட்டுக்காரன் ரமேஷ் அந்த வீடு கட்ட பெரியாள் வேலை செய்வான்.

பவா தொடங்கி வைத்திருப்பது ஒரு மானுடப் பேரன்பின் சங்கிலி. நன்றி உணர்வுள்ளோர் அதில் ஒரு கண்ணியையும் அறுந்து போக விட மாட்டார்கள்.

பாவா காண்பதெல்லாம் எப்போதுமே பெருங்கனவுதான். அவரது நம்பிக்கையும், நல்லெண்ணமும் எப்படியோ அந்தக் கனவுகளை நினைவாக்கி விடுகின்றன.

நண்பர் பவாவின் பேச்சில், எழுத்தில், கதை சொல்லலில் எப்போதுமே தவறாமல் தட்டுப்படும் பெயர் என்னுடையது என்பதில் எனக்குப் பெருமை உண்டு.

அண்மையில் படித்த ஒரு கவிதை..
“அவன் தோளில்
ஏற்றிச் சுமந்து செல்லும்
மகளையும் சேர்த்ததுதான்
அவனது உயரம்”.
என்று ஒரு தகப்பனைச் சொல்லும்.

அதைப் போலத்தான் எங்கள் உயரத்துக்கு எங்கள் பவா.

– எஸ்கேபி. கருணா