பறவை மனிதன் பால்பாண்டி

நெல்லை கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தின் அறிவிக்கப்படாத பாதுகாவலனாக தனது வாழ்நாளை அர்ப்பணித்து வாழும் பறவை மனிதன் பால்பாண்டிக்காக, கரோனா கால நிவாரணமாக நன்கொடை கேட்டு டிவிட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் பதிவிட்டிருந்தேன்

எனது அன்பான வேண்டுகோளை ஏற்று பலரும் அவருடைய வங்கிக் கணக்குக்கு நன்கொடை அனுப்பியுள்ளனர். இதுவரை ஏறக்குறைய ஒரு லட்ச ரூபாய் அவருடைய வங்கிக் கணக்கில் வந்துள்ளதாக அறிகிறேன். உங்களுடன் வெறும் இணையப் பரிச்சயம் மட்டுமே கொண்டுள்ள எனது வேண்டுகோளை ஏற்று முகமறியாத நண்பர்கள் இத்தனைப் பேர் நன்கொடை அளித்திருப்பது என்னை நெகிழச் செய்கிறது.

அதிலும் பத்தாயிரம் மட்டுமே மாத ஊதியமாகப் பெறும் இளைஞன் 500 ரூபாய் அனுப்பியதை அறிந்து அதிர்ந்தே போய்விட்டேன். இதற்காக அவன் ஒரு மாத தேநீரை அவன் தியாகம் செய்திருக்கலாம்! அல்லது ஒரு சில வேளை உணவை… அந்த உயர்ந்த உள்ளத்துக்கு ஏற்ற உயர்வு வாழ்விலும் வரும் என்கிறான் ஐயன் வள்ளுவன். அவ்வாறே ஆகுக.

இதுபோன்று முகமறியா மனிதர்களிடம் நன்கொடை கோருவது எனக்குப் புதிய அனுபவம். நண்பர் பவா செல்லதுரை இதில் டாக்டரேட் பட்டம் பெற்றவர். திடீரென போன் பண்ணி, ஒரு 5000 ருபாய் தந்து அனுப்புங்க கருணா என்பார். என்ன விஷயம் பவா என்றால் ஒரு கிராமத்துக்குப் போயிருந்தேன் கருணா. அந்த ஏரி வறண்டு போயிருந்தது. என்னன்னு விசாரிச்சால் ஏரிக்கான நீர்வரத்துக் கால்வாய் முழுசா தூர்ந்து போயிருந்தது. அதான், நண்பர்களோட சேர்ந்து ஜேசிபி ஒண்ணை வச்சு கால்வாயை சுத்தம் பண்ணிட்டு இருக்கேன். ஜேசிபிக்கு டீசல் போடணும். அதான் பணம் தேவைப்படுது என்பார்.

அவருக்கு தொடர்பேயில்லாத ஊர், வேறெங்கோ போகும் கால்வாய்., ஆனாலும் பொதுச்சேவையின் மீது அவருக்கு அப்படியொரு ஆர்வம். சரி! மொத்த எஸ்டிமேட் எவ்வளவு ஆகும் பவா என்பேன்! அது ஆகும் 25000 ரூபாய்., நீங்க 5000 கொடுத்தனுப்புங்க போதும் என்பார். மொத்தமா நானே தந்துடுறேனே என்றாலும் அனுமதிக்க மாட்டார்.

அதற்கு அவர் சொல்லும் காரணம், ஒரு பொதுச் சேவையில் பொதுமக்கள் அனைவரின் பங்களிப்பும் இருக்கணும். அந்த ஊர்காரங்களும் சேர்ந்து செலவு செய்தால்தான் அவர்களுக்கு அதன் அருமை தெரியும். செய்த வேலையை தொடர்ந்து பராமரிப்பார்கள் என்பார். நண்பர் பவா வாழ்நாள் கம்யூனிஸ்ட் என்பதால் யாரிடமும் நன்கொடை கேட்பதில் சற்றும் தயங்க மாட்டார்.

பொதுக்காரியத்துக்காக கையேந்துவது பொறுப்புள்ள மனிதனின் கடமை என்பார்.

எனக்கு இது புதிய அனுபவம். யாரிடமும் கலந்து பேசாமல் ஒரு உந்துதலில் பால்பாண்டிக்கான நன்கொடையை கோரினேன். அந்த அழைப்புக்கு மதிப்பளித்து, ஒருவர் மீதான எனது மதிப்பீட்டை நம்பி நன்கொடை அளித்த உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.

எனது இந்த வேண்டுகோள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதால் கிடைத்த கூடுதல் நன்மைகள்

  1. திருநெல்வேலி டி.சி.பி திரு. அர்ஜுன் சரவணன், பால்பாண்டிக்கான தேவையை நிறைவு செய்யும் அளவுக்கு தனது நண்பர்களிடம் நன்கொடை பெற்றுத் தரப் போவதாக உறுதியளித்தார்.
  2. திருநெல்வேலி மாவட்ட வருவாய்துறை அதிகாரிகள் இந்தக் கரோனா காலம் முடியும்வரை பால்பாண்டி பேணி வரும் பறவைக் குஞ்சுகளுக்கான மீன்களை பெற்றுத் தருவதாக சொல்லியுள்ளனர்.

நண்பர்களே! நாம் இணைந்து பால்பாண்டிக்காக பெற்றுத் தந்த தொகை அவருடைய வாழ்நாள் லட்சியமான பறவைகள் பேணலுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதிலும் இந்த கரோனா பேரிடர் காலத்தில் நாம் செய்த இந்த உதவி அவருக்குப் பேருதவி என்கிறார் பால்பாண்டி.

பால் பாண்டி பேணிவரும் பறவைக் கூண்டிலிருந்து தவறி விழுந்த பெலிக்கன் குஞ்சுகள் நாளை சிறகு விரித்துப் பறந்து வானிலிருந்து பறவைப் பார்வை பார்க்கும் போது, கீழே தெரியும் இவ்வுலகில் பால்பாண்டி எனும் மாமனிதனின் கருணை விரவியிருப்பதை அவைகள் அறியும். அவைகளின் சிறகசைப்பில் இப்போது உங்களின் பங்கும் உள்ளன.

அனைவருக்கும் உள்ளார்ந்த நன்றி.

-எஸ்கேபி. கருணா