காவியக் கவிஞர் வாலி

காவியக் கவிஞன்

இசைஞானி இளையராஜாவின், திருவாசகம் பாடல்களின் இசை வடிவத்தின் வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்தேன்.
விழாவில், வைகோ ஆற்றிய உரை, எனது வாழ்நாளில் நான் கேட்டு வியந்த ஒரு அற்புத மேடைப் பேச்சுகளில் ஒன்று! மேடையில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாயைப் பிளந்து (நிஜமாகவே வாய் பிளந்து) கேட்டு இரசித்தார்!
விழா நிறைவில், இளையராஜாவை சந்தித்து, ஒரு பட்டுத் துண்டு அணிவித்தேன். மிகுந்த உற்சாகமான மனநிலையில் இருந்த அவர், என்னைப் பார்த்து, கருணா! நாளைக்குக் காலையில் வீட்டுக்கு வந்திடுங்க! என்று சொல்லிச் சென்றார்.
மறுநாள் காலை, அவரது வீட்டுக்கு பூங்கொத்துடன் சென்றேன். என்னை வரவேற்பரையில் அமர வைத்து விட்டு, இளையராஜா வீட்டினுள் சென்று விட்டார். அங்கு என்னைத் தவிர வேறு யாருமில்லை!
அப்போது, ராஜா! என்றழைத்தபடி, கவிஞர் வாலி உள்ளே வந்தார். நான் எழுந்து நின்று அவரை வணங்கினேன். அவர் ஒரு பெரிய இருக்கையில் சாய்ந்து அமர, நான் நின்று கொண்டே இருந்தேன். அப்போது, இளையராஜா அங்கு வந்து, என்னை வாலியிடம் இன்னார் தம்பி என்று அறிமுகப் படுத்தி வைத்தார். வாலி, ஓ! அதுதானா! என்னைப் பார்த்தவுடன் எழுந்து நின்றவர், பிறகு உட்காரவேயில்லை! இவரோட அண்ணனும் அப்படித்தான்! மூன்று முறை உட்கார சொன்னால்தான், பிறகு சீட் நுனியிலேனும் உட்காருவார்! என்றார்.
பிறகு, இளையராஜாவிடம், ராஜா! இந்த பண்பாடெல்லாம் பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுத்து வருவதில்லை! அதெல்லாம் வழி வழியாக குடும்பத்திலிருந்து வர வேண்டும். வயதில் பெரியவர்களுக்கு மதிப்பு தரும் குடும்பம் தான் பல்கலைக் கழகம் என்றார்.
அப்போது, உள்ளேயிருந்து, கார்த்திக், யுவன், பவதாரணி என்று ஒவ்வொருவராக அங்கே வந்து, யாரும் சொல்லாமல், அவர்களாகவே, வாலியின் கால்களைத் தொட்டு வணங்கினார்கள். இளையராஜாவின் முகத்தில் ஒரே பெருமிதம்! அப்போது, இளையராஜாவின் வீட்டில் பெரிய யாகம் ஒன்று நடந்து கொண்டிருந்தது.
சிறிது நேரத்தில் இளையராஜா குடும்பத்தினர் அனைவரும் உள்ளே அழைக்கப் பட, நானும், வாலியும் மட்டும் தனியே அமர்ந்திருந்தோம். நான் மெல்ல அவரிடம், எழுத்தாளர் சுஜாதா உங்களைப் பற்றி என்னிடம் ரொம்ப சிலாகித்து சொல்லியிருக்கார் சார் என்றேன். யாரு! ரங்கராஜனா? அவன் என்னோட பத்திரிக்கையில்தான் முதன் முதலில் எழுதினான். அந்த வகையில் பார்த்தா, நான்தான் அவனை எழுத்தாளனா அறிமுகப் படுத்தினேன் என்று சிரித்தார். நான் வியந்து போய், சார்! நீங்க பத்திரிக்கையெல்லாம் நடத்தினீர்களா? என்றேன். யோவ்! அது கையெழுத்துப் பத்திரிக்கையா! ஆனா, நாங்க அதை கல்கி, விகடன் ரேஞ்சுக்கு நினைச்சுப்போம் என்று மீண்டும் ஒரு சிரிப்பு!
கொஞ்சம் நேரம், அங்கே சுஜாதாவைப் பற்றி பேசினோம். அப்பவே, அவன் தமிழை யார் மாதிரியும் இல்லாமல் புது மாதிரியா எழுதுவான். பாதி வாக்கியத்தில் நிறுத்தி விடுவான். மீதி எங்கேடா என்றால், அது இல்லாமலேயே படிக்கிறங்களுக்குப் புரியும்யா என்று போய்விடுவான். என்னால் அந்த இலக்கண மீறலைப் பொறுக்க முடியாமல், மீதியை அவன் பாணியில் எழுதி முடிப்பேன் என்றார். ஒரு மணிநேரம் அவருடன் தனியாக அமர்ந்து கொண்டு, சினிமா பாடல்களைப் பற்றி பேசாமல், தமிழ் இலக்கியத்தைப் பற்றி பேசினோம். அந்த வாரம் வந்திருந்த புது கதைகள், கட்டுரைகள், கவிதைகள் வரை எல்லாவற்றையும் பற்றி அறிந்திருந்தார். சிலவற்றை படித்தும் இருந்தார்.
யாகமெல்லாம் முடிந்து, உள்ளேயிருந்து ஒரு ஐயர்கள் பட்டாளமே வெளியே வந்தது. இளையராஜா உடன் வரவில்லை. அந்தக் குழுவில் இருந்த ஒரு சீனியர் ஐயர் ஒருவர் வாலியைப் பார்த்து, அட! நீங்களா! ஏண்ணா! உள்ளே வந்துருக்கலாமே என்றார். வாலியும், நான் இவ்வளவு தள்ளி இருக்கும் போதே, புகை போட்டு என்னை அழ வச்சுட்டீங்க! அங்க வந்து உட்கார்ந்திருந்தால், பாசமலர் சிவாஜி மாதிரி கதற வேண்டியிருந்திருக்குமேய்யா? என்று சிரித்தார்.
அத்துடன், அந்த சீனியர் சென்றிருக்கலாம். வாலியிடம், நான் உங்கள் பாட்டெல்லாம் அதிகம் கேட்டதில்லைண்ணா! எனக்கெல்லாம் கண்ணதாசன்தான் ஆதர்சம்! என்ன மாதிரி கவிஞன் அவன்!நான் ஆணையிட்டால் பாட்டை அவர் எழுதியிருக்கலைன்னா, எம்ஜிஆர் சிஎம் இல்லை! என்ன சொல்றீங்க? என்று வாலியிடம் கேட்டார். வாலி பொதுவாக சிரித்து வைத்தார்.
அதே போல, தொட்டால் பூ மலரும் பாட்டு இல்லைன்னா, சரோஜா தேவி ஸ்டார் இல்லை! தெரியுமோ இல்லையோ என்றார்! மறுபடியும் ஒரு சிரிப்பு!
அப்புறமும், சீனியர் விடவில்லை! நான் நாகபட்டணத்தில பொறந்தவண்ணா! கடல் மேல் பிறக்க வைத்தான்! எங்களை கண்ணீரில் மிதக்க வைத்தான்! என்று படகோட்டியில் மீனவர்களோட வாழ்க்கையை ஒத்தைப் பாட்டில எழுதியிருப்பான் பாருங்க கண்ணதாசன். அதனாலதாண்ணா அவன் கவியரசன் என்றார்.
வாலி, சிரிப்பை நிறுத்திக் கொண்டு, சீனியரை அருகே அழைத்தார். பக்கத்தில் வந்த சீனியரிடம், யோவ்! பிராமணா! இத்தனை நேரம் நீர் சொன்ன பாட்டுங்க எல்லாம் நான் எழுதியது!
அதையெல்லாம், கண்ணதாசன் எழுதியிருந்தா, எம்ஜிஆர் பி.எம் ஆகியிருப்பார். சரோஜாதேவி ஹாலிவுட்ல நடிச்சிருப்பாங்க! போதுமா! இப்ப திருப்தியா உமக்கு? என்றார்.
சீனியர் வெலவெலத்துப் போய் விட்டார். என்ன சொல்வது என்று தெரியாமல், நான் உத்தரவு வாங்கிக்கிறேண்ணா! என்று சென்று விட்டார்.
அருகில் இருந்த எனக்கு வியர்த்துக் கொட்டி விட்டது. நல்ல வேளையாக, எங்கள் பேச்சு இலக்கியத்தைச் சுற்றியே அமைந்து விட்டது. ஒரு வேளை, திரைப் பாடல்கள் பற்றி பேச்சு வந்திருந்தால், அந்த சீனியர் உளறிய அத்தனையும் நான் உளறிக் கொட்டியிருப்பேன். அந்தக் கணம் வரை, நானும் கூட, சாகாவரம் பெற்ற அந்த அற்புதப் பாடல்களை எல்லாம் கண்ணதாசன்தான் எழுதினார் என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.
19 ஜூலை 2013
கவிஞர் வாலி மறைவையொட்டி எழுதியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *