பாரம்பரிய நெல் திருவிழா 2015

பாரம்பரிய நெல் திருவிழா 2015
இரண்டு நாள் தேசிய மாநாடு
ஆதிரங்கம், திருவாரூர் மாவட்டம்.
“ஐயாயிரம் கோடி கடன் வாங்கி அதைத் திருப்பிக் கட்டாதவன் யாரும் இதுவரை தற்கொலை பண்ணிக்கிட்டதா தெரியலைங்க. ஆனா, ஐயாயிரம் ரூபாய் கடனுக்கு எத்தனையோ விவசாயிங்க மருந்து குடிச்சு சாவதை தினமும் நாம பார்க்குறோம். இந்த நாட்டிலேயே மானம் மரியாதையுள்ள ரோஷக்காரன்னு ஒருத்தன் இருக்கான்னா, அவன் இந்த நாட்டோட விவசாயிதான்.”
– தேசிய நெல் திருவிழா அரங்கில் ஒரு விவசாயியின் பேச்சு.
எனது நண்பர் ஆர்.ஆர்.சீனுவாசன் (பூவுலகின் நண்பர்கள்) வாட்ஸ்ஸப்பில் ஒரு அழைப்பிதழை அனுப்பியிருந்தார். ஒரு மாதிரி கண்களை இடுக்கி அதைப் படித்துப் பார்த்ததில், அது ஒரு தேசிய அளவிலான நெல் திருவிழாவிற்கான இரண்டு நாள் மாநாட்டு அழைப்பிதழ். திருவாரூர் மாவட்டம் ஆதிரங்கம் என்ற சிறிய கிராமத்தில் ‘கிரியேட் இயற்கை வேளாண் பயிற்சி மற்றும் ஆராய்சி மையம்’ என்ற விவசாயிகளின் அமைப்பு ஒன்று ஒவ்வொரு ஆண்டும் அதை நடத்தி வருகிறது. நேரம் இருந்தால் அவசியம் செல்ல வேண்டும் என மனதுக்குள் ஒரு குறிப்பை ஏற்றிக் கொண்டேன்.
மிகச் சரியாக ஒரு நாள் இடைவெளி எனக்குக் கிடைக்க, சென்னையில் இருந்த ஆர்.ஆர்.சீனுவாசனை அழைத்து, நெல் திருவிழாவிற்குப் போகலாமா? எனக் கேட்டு வைத்தேன். அவர் உடனே புறப்பட்டு திருவண்ணாமலை வந்து சேர, அவருடன் நானும் எனது பண்ணை மேலாளர் மணிகண்டனும் புறப்பட்டு ஒரு வெள்ளியன்று இரவு மன்னார்குடி சென்றடைந்தோம்.
மறுநாள் காலை, அங்கிருந்து வேதாரண்யம் செல்லும் வழியில் ஒரு சின்ன திருப்பத்தில் உள் அமைந்திருந்தது இன்று இந்தியாவின் மிக முக்கியமான பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையமாக உருவெடுத்திருக்கும் ஆதிரங்கம் என்ற சின்ன கிராமம். உள்ளே நுழையும் சாலையிலேயே வாழைக் குருத்துகளிலான வரவேற்பு பதாகை. வழியெங்கும் டிராக்டர்களும், வேன்களும் நின்றிருக்க ஏராளமான பச்சைத் துண்டு விவசாயிகள் உற்சாகமாக மாநாட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
ஆராய்ச்சி மையம், பாதுகாப்பு மையம் என்றவுடன் அரசாங்கமோ, பல்கலைக் கழகமோ அமைத்திருக்கும் அரசு நிதி சார்ந்து இயங்கும் நிலையங்கள் என எண்ண வேண்டாம். இந்த கிரியேட் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையம், ‘நெல்’ ஜெயராமன் என்ற ஒரு தனி விவசாயியின் முயற்சியால் துவக்கப் பட்டு, டெல்டா மாவட்டங்களின் பல நூறு விவசாயிகள் ஒன்றிணைந்து நடத்தி வரும் விவசாயிகளின் இயக்கம்.

கார்பரேட் கம்பனிகள் நடத்தும் பயிற்சி அரங்கங்களைப் போல ராணுவ ஒழுங்குடன் அந்த மாநாடு வடிவமைக்கப் பட்டிருப்பதைக் கண்டு வியந்து போனேன். உள்ளே நுழைந்தவுடன் இருநூறு ரூபாய் தந்து பதிவு செய்து கொள்ள வேண்டும். அதில், இரண்டு நாள் காலை, மதிய உணவுடன் பதிவு செய்த நபர் ஒன்றுக்கு இரண்டு கிலோ பாரம்பரிய நெல் கொண்ட பை ஒன்றினையும் பரிசாக அளிக்கின்றனர். ‘கிச்சிலி சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருடன் சம்பா, காட்டுயாணம்’ போன்ற தமிழகத்தின் பல ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் வாய்ந்த நெல் விதைகளில் ஏதேனும் ஒன்றினை நாம் தேர்வு செய்து பெற்றுக் கொள்ளலாம்.
வெய்ட்! பரிசு என்றா சொன்னேன். அது ஒரு நிபந்தனையுடன் கூடிய பரிசு. இரண்டு கிலோ பாரம்பரிய நெல் பையினைப் பரிசாக வாங்கிச் செல்பவர்கள், அதை தங்கள் நிலத்தில் விதைத்து, விதைநெல் பெருக்கி, அடுத்த ஆண்டு இங்கே திரும்ப வந்து நாலு கிலோ நெல்லாக அதை திருப்பி அளிக்க வேண்டும். ஹாஹாஹா.., நம்ம ஊர் மக்கள் யாருங்க திரும்ப வந்துக் கொடுக்கப் போகிறார்கள் என்று நண்பரிடம் கேலியாகச் சொன்னேன். அந்தப் பக்கம் பாருங்கள் என்றார் நண்பர்.

அங்கு ஒரு பெரிய வரிசையில் விவசாயிகள் பைகளுடனும், மூட்டைகளுடன் நின்று கொண்டிருந்தனர். சென்ற ஆண்டு இப்படி விதை நெல் வாங்கிச் சென்று, அந்த விதை நெல்லைப் பெருக்கி இந்த ஆண்டு திரும்ப அளிக்க நிற்பவர்களின் வரிசையாம் அது! சென்ற ஆண்டு விதை நெல் பெற்றுச் சென்ற சுமார் மூவாயிரம் விவசாயிகளில் 65 சதவீதம் பேர், மீண்டும் வந்து அதை மக்களுக்கு (மையத்துக்கு) மீண்டும் அளிக்கின்றனராம். அதுவும், வாக்களித்தபடி நாலு கிலோ மட்டும் அல்ல! மூட்டை மூட்டையாக கொண்டு வந்து மையத்துக்கு இலவசமாகக் கொடுக்கின்றனர்.
தொலைந்து போன நமது பாரம்பரிய நெல் வகைகளை, எந்த ஒரு நிறுவனத்தின் உதவியுமின்றி விவசாயிகளே மீட்டெடுத்து, அவைகளைப் பற்பல மடங்குகள் பெருக்கும் அந்த உத்தியில், நமது எளிய மனிதர்களின் நேர்மையைக் கண்டு நெகிழ்ந்து போனேன்.

பரந்த நெல் வயலுக்கு நடுவில், மிக எளிமையானப் பந்தலால் அமைக்கப்பட்டிருந்த அந்த அரங்கு விவசாயிகளால் நிறைந்திருந்தது. பந்தலுக்கு வெளியேயும் ஏராளமான விவசாயிகள் அமர்ந்திருந்தனர். உணவு அரங்கில் காலை உணவு நிறைவடைந்திருந்தது. என்ன கொடுத்தார்கள்? என்று அருகிலிருந்த பச்சைத்துண்டிடம் கேட்டேன். வேறென்ன? கம்மங்கூழு, மோர் மிளகாய், நீராகாரம்தான் என்றார். அடடா! தவற விட்டுட்டேனே என காலையில் நான் சாப்பிட்டு இன்னமும் எனது வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாது நின்று கொண்டிருக்கும் அந்த நெய் ரோஸ்ட்டை சபித்துக் கொண்டேன்.
அந்த மாநாட்டில் கணிசமான அளவிலான பெண்கள் கலந்து கொண்டது எனக்கு மிகுந்த வியப்பளித்தது. அதிலும் பெரும்பாலோனோர் தனியாகவும், குழந்தைகளுடனும் வந்திருந்தனர். ஆண் துணையின்றி, தன்னந்தனியாக விவசாயம் செய்யும் பெண்கள் இருப்பதை நான் அறிவேன். ஆனால், அவர்களில் இத்தனைப் பேர் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டிருப்பார்கள் என்பதை நான் எதிர் பார்த்திருக்கவில்லை. தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்காளம் என பல மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் வந்திருந்தது கவனிக்க வைத்தது.

மாநாட்டு துவக்க விழாவில் தலைமையேற்க தமிழக அரசின் திட்டக் குழுத் துணைத் தலைவர் சாந்தா ஷீலா நாயர் ஐஏஎஸ் வந்திருந்தார். சுவாரஸ்யமான அவரது தலைமையுரையில்,
“நான் என்னுடைய ஆட்சிப் பணியின் ஆரம்பகாலக் கட்டத்தில் திண்டுகல்லில் துணை கலெக்டராக இருந்த போது, அரசு சார்பில் பசுமைப் புரட்சியின் ஒரு அங்கமாக ஊர் ஊராகச் சென்று ஒவ்வொரு வயலிலும் யூரியாவைத் தூவினோம். பயிர்களுக்குப் பூச்சி மருந்துகளை அடித்தோம். விவசாயிகளுக்கு நவீன வேளாண்மையை எப்படி செய்வது என்று பயிற்சி அளித்தோம். இதோ! இப்போது என்னுடைய பணி ஓய்வின் வாசலில் நிற்கும் போது, அதே விவசாயிகளிடம் சென்று பூச்சி மருந்துகளின் தீமைகளை எடுத்துச் சொல்கிறோம். உரம், யூரியா எல்லாம் எப்படி செலவு பிடிக்கும் விஷயம் என்பதையும். பாரம்பரிய இயற்கை வேளாண்மையின் நன்மைகள் குறித்தும் எடுத்துச் சொல்கிறோம். ஆக, அரசாங்கத்தின் சார்பில் நாங்கள் சொல்வதை எப்போதும் நீங்கள் நம்பாதீர்கள்” என்றபோது அரங்கமே சிரிப்பால் நிரம்பியது. இறுதியாக அவர் “எப்போதும், எதற்காகவும் நமது பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்காதீர்கள். அதுவே நமது சொத்து” என்றபோது அரங்கம் கைத்தட்டி வரவேற்றது.

கேரள மாநிலத்தின் ஒரு தன்னார்வக் குழு சார்பில் ஶ்ரீதரன் என்பவர் பேசிய பேச்சும் மிக முக்கியமானது. இருபது ஆண்டுகளுக்கு முன்னதாக நாங்கள் நமது பாரம்பரிய நெல் விதைகளை தேடிச் சென்ற போது வெறும் மூன்று வகை நெல் விதைகள் மட்டுமே கிடைத்தன. ஆனால், இன்றோ தமிழகத்தில் மட்டும் 151 நெல் வகைகளையும், கேரளத்தில் 161 வகைகளையும், கர்நாடகத்தில் 95 வகைகளையும் மீட்டெடுத்து உள்ளோம் என்றபோது அரங்கம் அதிர்ந்தது.
தொடர்ந்த ரசாயனப் பூச்சிக் கொல்லிகள், உரங்களால் உருவாக்கப் பட்ட காய்கறிகள், நெல்வகைகளை உண்டதால், கேரளாவில் மட்டும் ஒரு ஆண்டுக்கு ஐம்பதனாயிரம் பேர் கேன்சர் நோயால் பாதிக்கப் படுவதாக அவர் சொன்ன போது, மொத்த அரங்கமும் அமைதியாக அதை கவனித்தது. (சின்ன மாநிலமான கேரளத்திலேயே இத்தனை பெரிய எண்ணிக்கை என்றால், நமது தமிழகத்தின் கதி! என எண்ணிக் கொண்டேன்.)
மேலும், கேரள அரசிடம் இயற்கை வேளாண்மையின் நலன்கள் குறித்து பல்வேறு ஆதாரங்களுடன் எடுத்துச் சொல்லி 2008 ஆம் ஆண்டு மாநில இயற்கை வேளாண் திட்டம் மற்றும் செயல்படுத்துதல் பாலிஸியை வடிமைத்து அதை சட்டப்பூர்வமாக்கியுள்ளோம். அந்த சட்டத்தின்படி, வரும் 2016 ஆண்டு முதல் கேரள மாநிலம் முழுவதும் இயற்கை வேளாண்மை மட்டுமே என தீர்மானித்து இருக்கிறோம். எப்படியும் 2020ஆம் ஆண்டுக்குள் அந்த லட்சியத்தை நாங்கள் அடைந்து விடுவோம் என்ற போது, நமது விவசாயிகள் எழுந்து நின்று கைத்தட்டியதை தமிழக திட்டக்குழுத் துணைத் தலைவரும், மாவட்ட ஆட்சியரும் கவனித்துக் கொண்டிருந்தனர்.
ஶ்ரீதரன் குறிப்பிட்ட இன்னொரு முக்கியமான விஷயம், கேரள மாநிலத்தின் மொத்த உணவுத் தேவையில் அறுபது சதவீதம் தமிழகத்தையே சார்ந்து இருக்கிறது. எனவே, என்னதான் எங்கள் மாநிலத்தில் நாங்கள் ரசயான உரம்,மருந்து வகைகளைத் தவிர்த்தாலும், தமிழகத்தில் அவற்றை பயன்படுத்தும் வரையில், எங்களுக்கு பாதிப்பு இருந்து கொண்டுதான் இருக்கும். எனவேதான், எங்களைப் போன்றோர் தமிழகத்தைக் களமாகக் கொண்டு இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பிற்காக பாடுபடுகிறோம் என்றார். நிறைய புதியத் தகவல்கள் கொண்ட உரை அவருடையது.
மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் ‘நெல்’ ஜெயராமன் ஒரு முக்கிய கோரிக்கையை வைத்தார். இவர் இயற்கை வேளாண் முறையில் நமது பாரம்பரிய நெல்லை விதைத்து, நாட்டிலேயே அதிக அளவு மகசூலை எடுத்ததற்காக ஜனாதிபதி பரிசு பெற்றவர். தம் வாழ்நாள் முழுக்க நமது பாரம்பரிய நெல் வகைகளைத் தேடித் தேடி கொண்டு வந்து பாதுகாப்பதினால், அவர் பெயரிலேயே ‘நெல்’ ஒட்டிக் கொண்டது.
இவரது முக்கிய கோரிக்கை, தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்காக, இயற்கை வேளாண்மை முறையில் உற்பத்தி செய்யப்படும் சிறுதானியங்கள், பயிர் வகைகளை அரசு கொள்முதல் செய்தால், இன்னமும் பல ஆயிரம் விவசாயிகள் இயற்கை வேளாண்மைக்கு மாறுவார்கள் என்பதே. இதை அவர் சொல்லும் போது எழுந்து பலத்த ஆமோதிப்புகளைக் கண்டு, திருமதி. சாந்த ஷீலா நாயர் ஐ.ஏ.எஸ் தனது உரையில், முதல்வரிடம் சொல்லி நிச்சயம் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.

முதல் அமர்வு ‘பூச்சியும் நமது நண்பர்களே’ என்ற தலைப்பில் மிகவும் முக்கியமான அமர்வாக அமைந்தது.
தமிழ்நாடு வேளாண் பல்கலையின் பேராசிரியரான ‘பூச்சி’ செல்வம் சிறப்புரையாற்றினார். பூச்சிகளைப் பற்றி இதுவரையிலும் நாம் அறிந்திராத தகவல்கள் அவரதுப் பேச்சில் கொட்டிக் கொண்டே இருந்தது. முடிந்த வரை அள்ளித் தொகுத்துள்ளேன். அதில் முக்கிய சில அம்சங்கள் இவை.
1.நமது பாரம்பரிய பயிர் ரகங்களைப் பூச்சிகள் அவ்வளவாகத் தாக்குவதில்லை. காரணம், அதன் இலைகள் நமது கைகளையே அறுப்பது போல சுனைப் பிடித்தாற்போல இருக்கும். அதை தின்ன வரும் பூச்சிகளின் வாய்களையும் அது அறுத்து விடுகிறது. எனவே, அவைகள் பூச்சிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கிறது.
2.பூச்சிகளில் பயிருக்கு நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகள் என இரு வகைகள் உண்டு. 25-40 சதவீதம் தீமை செய்யும் பூச்சிகள் என்றால் 60-75 சதவீதம் பூச்சிகள் பயிர்களுக்கு நன்மை செய்யக் கூடியவை. அதாவது, இந்த வகைப் பூச்சிகளின் முக்கிய உணவே, தீமை செய்யும் பூச்சிகள்தாம். நாம் வயலுக்கு அடிக்கும் கடுமையான ரசாயன வகைப் பூச்சிக் கொல்லிகள் இந்த பெரும்பான்மையான நன்மை தரும் பூச்சிகளையும் சேர்த்தே அழித்து விடுகிறது.
3.உலகின் முதல் பூச்சிக் கொல்லி முதல் உலகப் போரில் கொசுவிற்கு எதிராக ஜெர்மானியர்களால் கண்டு பிடிக்கப் பட்டு இன்றளவும் பயன்படுத்தப்படும் டி.டி.ட்டி (D.D.T). அதன் பிறகு 250 வகையான கொசு மருந்துகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. இருந்தும் கொசு இன்றளவும் எங்கும் நீக்கமற நிறைந்துதான் இருக்கின்றன.
4.ரசாயன பூச்சிக் கொல்லிகளுக்கு, பூச்சி மருந்து என்று பெயர் வைத்தவனே பெரிய அயோக்கியன். மருந்து என்று பெயரில் இருந்தால்தான் நாம் அதை ஏமாந்து வாங்குவோம் என்ற ஏமாற்று யுத்தி அது. பூச்சி மருந்தை யார் குடித்தாலும் மரணம் நிச்சயம் என்ற நிலையில், அந்த விஷத்தை எப்படி நாம் மருந்து என அழைக்கலாம்?
5.இப்போது ஐந்தாம் தலைமுறை பூச்சிக் கொல்லிகள் நமது இந்திய சந்தைக்கு வந்துள்ளன. இவைகள் நரம்பு நஞ்சுப் பூச்சிக் கொல்லி வகை ஆகும். இதன் முக்கிய செயலே பூச்சிகளின் நரம்பு மண்டலத்தைத் தாக்கி அதைப் பைத்தியமாக ஆக்குவதுதான். நமது இயற்கைச் சங்கிலியின் மிக முக்கிய அங்கமான தேனிக்களை இது தாக்குவதால், அவைகள் பைத்தியமாகி இயற்கையாக நடக்க வேண்டிய மகரந்த சேர்க்கையே முறையாக நடைபெறாமல் போய் விடுகிறது. எனவே, இந்த வகை மருந்துகள் மனித குலத்துக்கு மட்டுமல்லாமல், மொத்த பூமிக்கும் பயங்கர அபாயத்தை ஏற்படுத்தக் கூடியவை. ஆனால், நமது அரசு அவைகளை நம் விவசாயிகளுக்கு விற்பதற்காக சந்தைப்படுத்த அனுமதித்து உள்ளது.
நமது இயற்கை வேளாண் முறையில் எப்படி பூச்சிகளை நாம் கொல்லாமல் விரட்டுகிறோம் என்பதையும், நல்ல பூச்சிகளை எப்படி நம் வயலில் பெருகச் செய்ய வேண்டும் என்பதையும் மிக அழகாக, பொறுமையாகப் பாடம் எடுத்தார் பேராசிரியர் ‘பூச்சி’ செல்வம்.
மதிய உணவிற்காகக் கலையாமல் மாநாடு தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்க, இன்னொரு புறம் உணவுக் கூடத்தில் மதிய உணவு பரிமாறத் தொடங்கினர். ஒரு பெரிய தட்டில் மாப்பிள்ளை சம்பா அரிசியில் சாம்பார் சாதம், கைக்குத்தல் அரிசியில் தயிர் சாதம், வெல்லப் பொங்கல், மோர் மிளகாய் என நாவிற்கும், வயிற்றுக்கும் இணக்கமான உணவு தரப் பட்டது.

இரண்டாம் அமர்வு கால் நடைகள் குறித்து. தமிழகக் கால்நடைகளின் மிகப் பெரிய அச்சுறுத்தலான கோமாரி நோயினை எப்படி மூலிகை மருந்துகள் கொண்டு குணப் படுத்துவது என்பதை டாக்டர் எம்.புண்ணியமூர்த்தி விளக்கமாக எடுத்துக் கூறினார். அவர் பணியாற்றி வரும் தமிழக கால்நடை ஆராய்ச்சி மருத்துவமனையில் இதற்கான ஒரு மூலிகை மருந்தினை கண்டு பிடித்துள்ளதாகவும், பஞ்சாப் விவசாயிகள் அதைப் பயன்படுத்தி நல்ல பலன் கண்டதினால், நமது பாரம்பரிய மருத்துவத்தைப் பாராட்டி விருது அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
துவக்க நாளின் நிறைவு அமர்வாக, ‘நஞ்சில்லா உணவு’ என்ற தலைப்பில் நமது உணவுகளில் கலந்திருக்கும் பல்வேறு ரசாயனப் பொருட்கள் குறித்தும், அவைகள் நமக்கு கொண்டு வந்து சேர்க்கும் மிகக் கொடிய நோய்கள் குறித்தும் விரிவாக பலர் பேசினர். நாம் உண்ணும் உணவில் இருக்கும் நஞ்சுகளைக் குறித்து அறியும் போது நிஜமாகவே திகிலில் வயிறு இறுகப் பிடித்துக் கொண்டது. நமது டூத் பேஸ்ட்டில் நிக்கோட்டின் இருக்கிறதாம்! வாய் கேன்சரை தவிர்க்க புகையிலை, சிகரெட்டை நிறுத்தினால் மட்டும் போதாது. பல் துலக்குவதையும் நிறுத்த வேண்டும் போலிருக்கு.

அடுத்த நாள் நிறைவு நாள். இன்னும் பல சுவாரஸ்யமான அமர்வுகளை மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் அமைத்திருந்தார்கள். அதையும் இருந்து காண வேண்டும் என எவ்வளவோ விரும்பினாலும், அடுத்த நாள் எனக்கிருந்த மிக முக்கிய வேலைகள் காரணமாக, அங்கிருந்து வெளியே வர மனமின்றி புறப்பட்டேன்.
வாசலில் ஒரு ரூபாய்க்கு சுடச்சுட சுக்குமல்லி காஃபி கொடுத்தார்கள். எனது பாக்கட் முழுக்கத் துழாவிப் பார்த்தேன். எல்லாம் நூறு ரூபாய், ஐநூறு ரூபாய் நோட்டுகளே! ஒரே ஒரு ஒற்றை ரூபாய் நாணயம் இன்றி, அங்கே நான் திகைத்துப் போய் நின்றிந்த அந்தக் கணம் எனக்கு நீண்ட நாட்கள் நினைவில் இருக்கும். அருகிலிருந்த யாரோ தந்து உதவினார்கள்.

ஏற்றிக் கட்டிய வேட்டியும், முண்டா பனியன்களும், தோளில் துண்டுகளும் அணிந்து நடந்து வந்த பல நூறு விவசாயிகளுடன் நடுவே, லெவி ஜீன்ஸும், ரேபன் கூலர்ஸும் அணிந்து அவர்களுடன் நடந்து வர வெட்கமாகவே இருந்தது. அடுத்த வருடம் மீண்டும் மாநாட்டுக்கு வர வேண்டும். இம்முறை போல வெறுமனே பார்வையாளனாக இல்லாமல், நம் தேசத்தின் ஆன்மாக்களான விவசாயிகளுள் ஒருவனாக வருவேன்.
பின்னே! கை நீட்டி இரண்டு கிலோ விதை நெல்லை (மாப்பிள்ளை சம்பா) பரிசாக வாங்கியிருக்கேனே! அதை எங்கள் வயலில் விதைத்து, பெருக்கி ஒன்றுக்கு பல மடங்காக அவர்களிடம் திருப்பித் தர வேண்டாமா?
நானும் மானம், ரோஷமுள்ள ஒரு விவசாயியின் மகன்தானே!
-எஸ்கேபி. கருணா.
(27.6.2015 சனி அன்று தமிழ் ஹிந்துவில் வெளிவந்தக் கட்டுரையின் முழு வடிவம்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *