பெருமாள் முருகன் பெ.முருகனான கதை

ஒரு பனிக் காலத்தின் முன் இரவு.

ஊரே ஓரிடத்தில் கூடி நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதில் ஒரு சிறு கூட்டம், அங்கிருக்கும் ஒரு மனிதனின் கையைப் பிடித்து முறுக்கி, கழுத்தை நெறித்துப் பிடித்திருக்கிறது. நீ எழுதியது தவறு. மன்னிப்புக் கேள்! என்கிறது ஒரு அதிகாரக் குரல். அவனும் சூழ்நிலை அறிந்து, தனது கருத்துக்களுக்கு வருத்தம் தெரிவிக்கிறான். இனி வரும் பிரதிகளில் அவர்கள் ஆட்சேபிக்கும் கருத்துகள் அத்தனையும் நீக்கப்படும் எனவும் உறுதியளிக்கிறான்.

கூட்டம் தன் வெற்றிக்காக ஆர்ப்பரிக்கிறது. இந்த முறை அந்தக் கூட்டம் மேலும் உன்மத்தம் அடைகிறது. சாதிப் பெருமைகள் பாடலாகப் பாடப்படுகின்றன. வெறி கொண்டிருக்கும் அந்தக் கூட்டத்தின் முன்னே நிற்பவர்கள் எல்லாம் தலைவராகின்றனர். உரத்தக் குரலில் முரட்டு நியாயம் பேசுவது எளிதென்பதால் அங்கு எழும் சத்தத்தில், நியாயத்தின் எளியக் குரல் மெலிதாகக் கூட எழவில்லை.

உனது மன்னிப்பு மட்டும் போதாது. அந்தப் புத்தகத்தையே திரும்பப் பெற வேண்டும் என்ற கட்டளை இம்முறைப் பிறப்பிக்கப் படுகிறது. தனது மொத்தக் குடும்பமும் பணயமாக இருப்பதை உணரும் அந்த எழுத்தாளன் தனது இருக்கையில் இருந்து தனியொரு ஆளாக எழுகிறான்.

கொலைக் களத்தில், மரண தண்டனைக்குள்ளான கைதி, அங்கிருந்த தலையை வெட்டும் கில்லட்டின் இயந்திரத்தில் தனது தலையைப் பொருத்திக் கொள்ளும் தருணம் அது. ஆர்வமிகுதியால் மொத்த சப்தங்களும் அடங்கிப் போக, சுதந்திரத் தாயின் தொடர்ந்த அழுகுரல் அங்கிருப்போர் யார் காதுக்கும் கேட்காவண்ணம் ஒலிக்கிறது.

பெண்களின் கற்பை இழிவுபடுத்தி எழுதிய எழுத்தாளனே! உடனே ஊரை விட்டு ஓடிப்போ! என்று அச்சடித்து ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் கண்டு அந்த மன்றத்துக்கு கற்புக்கு அரசியான கண்ணகியும் வந்திருந்தாள். கற்பெனும் நெறியின் தற்காலப் பொருள் காணும் ஆவல் அவளுக்கு. நீதி வழங்கும் இடத்தில் பாண்டியனைத் தேடினாள். அரசே முன்னின்று நடத்தும் பஞ்சாயத்து அது என்பதால், அங்கே வருவாய் ஆட்சியர் ஒருவர் அமர்ந்திருந்தார்.

நின்ற இடத்திலிருந்தே அந்த வருவாய் ஆட்சியரின் மனதைப் படித்தாள். படபடத்துக் கொண்டிருக்கும் அவர் மனது, அந்த எழுத்தாளனை நோக்கி, சீக்கிரம் அந்தக் கூட்டத்தின் காலில் விழுந்து அவர்கள் கோருவதை செய்து விட்டுப் போயேன்! நான் வீட்டுக்குச் செல்ல நேரமாச்சு என அரற்றிக் கொண்டிருந்தது. மறுபக்க நியாயத்தைக் கேளாமலேயே நீதி வழங்கத் துடித்த அந்த நிலை கண்டு கொதித்துப் போனாள் கண்ணகி.

எழுந்து நின்ற அந்த எழுத்தாளன் பேசத் தொடங்குகிறான். பஞ்சாயத்தாரின்
ஆலோசனையை மதித்து, தான் எழுதிய அந்தப் புத்தகத்தை உடனடியாக திரும்பப் பெற்றுக் கொள்வதாக உறுதியளிக்கிறான். அவனின் அந்த மெல்லியக் குரல் கேட்டு மலர்ந்து போகிறது கூட்டத்தின் முன்னிற்கும் தலைவர்களின் முகம்.

பாண்டியன் நெடுஞ்செழியன் முன்னர் நின்று, தனது மற்றொரு சிலம்பை மன்னன் முன் வீசி, ‘தேரா மன்னா செப்புவது உடையேன்’ என்று தான் பேசிய அந்தக் கருத்துச் சுதந்திரம் இந்த நாட்டில் எங்கே போயிற்று? எனத் திகைத்தபடி அங்கிருந்து வெளியேறுகிறாள் கண்ணகி.

நின்ற எழுத்தாளன் மேலும் பேசுகிறான். இந்த ஒரு புத்தகத்தை மட்டுமல்லாமல், இதுவரை தான் எழுதிய அத்தனைப் படைப்புகளையுமே திரும்பப் பெற்றுக் கொள்வதாக கூறுகிறது தோற்றுப் போய் சரணாகதி அடைந்த வீரனின் அந்தக் குரல். நம்ப முடியாத அந்த வெற்றினைக் கண்டு மேலும் ஆர்ப்பரிக்கிறனர் அங்கிருப்போர்.

அதுவரை அங்கே ஒரத்தில் அழுது கொண்டு நின்றிருந்த சுதந்திரத் தாய், திகைத்துப் போய் எழுகிறாள். பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை என மகத்தானக் குழந்தைகளைப் பெற்று வளர்த்த அந்தத் தாய், இனி ஒரு போதும் தமக்கு இங்கே இடம் இருக்கப் போவதில்லை என்பதை உணர்ந்து கண்களைத் துடைத்தபடி வெளியேறுகிறாள்.

தனது கடமை முடிந்து ஆசுவாசமடைந்த வருவாய் ஆட்சியர் தனது தலையை அசைக்க, உடனடியாக ஒரு ஒப்பந்தம் தயாராகி, இருபுறமும் கையொப்பம் இடுகின்றனர். அதே நேரத்தில் கில்லட்டின் இயந்திரத்தின் மேலிருந்து ஒரு பெரிய கத்தி அதி வேகமாக கீழறங்கி அந்த எழுத்தாளனின் தலையை அவன் உடலில் இருந்து துண்டாக வெட்டி எடுக்கிறது. வந்த வேலை முடிந்த பரிபூரணத் திருப்தியில் அங்கிருக்கும் கூட்டம் விலகிச் சென்ற பிறகு, வெறிச்சோடியிருந்த அந்த இடத்தைப் பார்க்கும் வருவாய் ஆட்சியர் திகைத்துப் போய் விடுகிறார்.

எழுத்தாளன் இருந்த அந்த இடத்தில் ஒரே ஒரு தலை மட்டும் தனியே இருந்தது. அங்கே கொலை நடந்தற்கான ஒரு தடயமும் காணப்பட வில்லை. அதன் வாய் ஏதையோ முணுமுணுத்துக் கொண்டிருப்பதைக் கண்டு, அதன் அருகில் சென்று வருவாய் ஆட்சியர் தனது காதை வைத்துக் கேட்கிறார்.

நான் பெருமாள் முருகன் ஆகிய நான், “இனிமேலும் எதையும் எழுதப் போவதில்லை” என்று சொல்லி விட்டுக் கண் மூடுகிறது அந்தத் தலை.

திடுக்கிட்டுப் போன வருவாய் ஆட்சியர், நிமிர்ந்து அவன் உடலைத் தேடுகிறார்.

நடந்த அநியாயங்களுக்கு மவுன சாட்சிகளாய் இருந்த நம் அத்தனைப் பேர் மீதும் எழுத்தாளர் பெருமாள் முருகனின் கொலைப் பழியினை ஏற்றி வைத்து விட்டு, பெ.முருகன் என்ற பெயருடன் தலையின்றி தூரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தது அந்த உடல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *