வணக்கம் பிரதமர் அவர்களே

image

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நான் கடுமையான காங்கிரஸ் எதிர்ப்பு மனநிலையுடன் இருந்தேன். நான் சந்தித்த பல்வேறுத் தரப்பு மக்களும் கூட அதே மனநிலையில் இருந்ததையும் கண்டேன். காங்கிரஸ் கட்சி இந்தப் பொதுத் தேர்தலில் பெரிய தோல்வியை சந்திக்கும் என்பதை கணிக்க ராக்கெட் சயன்ஸ் அறிவு தேவையில்லை. ஒரு சின்ன கடிகாரத்துக்கான மூளை இருந்தால் போதும்.

இன்று காலை செய்தித்தாள்களில், நமது பிரதமர் டாக்டர்.மன்மோகன் சிங் அவர்கள் தனது அலுவலக ஊழியர்களிடம் இருந்து விடைபெற்றுச் செல்லும் புகைப் படத்தைக் கண்டவுடன், எனது மனதில் ஒரு சஞ்சலம் தோன்றியது. இந்தியா இதுவரைக் கண்ட தலைச் சிறந்த பிரதமர்களில் இவர் ஒருவர் என்பதில் எனக்கு வேறு கருத்து இல்லை. அதிலும் பத்தாண்டுகளுக்கும் மேலாக பிரதமராக இருந்தவர்களின் பட்டியலில் இவரே தலைச் சிறந்தப் பிரதமர்.

கடந்த பத்தாண்டுகளில், நமது நாடு கடும் அலையில் சிக்கியக் கப்பலைப் போல தள்ளாடினாலும், ஒவ்வொருக் கணமும் அது சிறிய தூரமேனும் முன்னேறியே சென்றுள்ளது. அமெரிக்க, ஐரோப்பியப் பொருளாதாரம் சரிந்த போதெல்லாம், அதை சார்ந்து நிற்கும் இந்தியப் பொருளாதாரம் ஓரளவேனும் தாக்குப் பிடித்ததற்கு இவரும் ஒரு முக்கியக் காரணம். இன்னமும் சிறப்பாக, துணிச்சலாக செயல் பட்டிருந்து, இந்த நிலமையை நமக்கு சாதமாக்கிக் கொண்டு ஒரு பெரிய பொருளாதாரப் பாய்ச்சல் நிகழ்த்தியிருக்கலாம். ஆனால், அப்படி ஒரு துணிச்சலான முடிவினை எடுக்காததற்கு, நாம் இவரை மட்டும் குற்றம் சாட்டிப் பயனில்லை.

பிரதமர் மன்மோகன் சிங் ஒரு பேசா மடந்தை! மவுன சாமியார்! என்று நாம் அவரை தனிப்பட்ட முறையில் பலமுறை கிண்டல் செய்து இருக்கிறோம். ஆனால், அவரது கருத்துக்களில் அவர் மிக உறுதியாகவே நின்றிருக்கிறார். தன்னைத் தனிப்பட்ட முறையில் யாரேனும் தாக்கிப் பேசினால் கூட, பொது வெளியில் பதிலுக்கு பேச மாட்டாரேயொழிய, அப்படித் தாக்கிப் பேசியவரை நேரடியாக தொலைபேசியில் அழைத்து விளக்கம் கேட்பாராம். அத்வானி, ஜஸ்வந்த் சிங் முதல் முலயாம் சிங் யாதவ், மம்தா பானர்ஜி வரை அத்தனைப் பேரும் இந்தக் காலக் கட்டங்களில் அவரிடம் பகிரங்க மன்னிப்புக் கோரியதை நம்மால் காண முடியும்.

இதில், இந்த நல்ல மனிதரை பொதுவெளியில் பகிரங்கமாகக் காயப் படுத்தி விட்டு, சற்றும் சலனமின்றி கடந்து சென்றவர்கள், அமைச்சரவையின் முடிவு, ஒரு முட்டாள்தனமான முடிவு என்று பிரதமரை விமர்சித்த ராகுல் காந்தியும், செயல்படாத டம்மி பிரதமர் என சட்டமன்றத்திலேயே தனது நாட்டுப் பிரதமரைக் குறிப்பிட்ட ஜெயலலிதாவும்தான்.

கடந்த பத்தாண்டுகளில்தான் நான் அதிகமான வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்திருக்கிறேன். அங்கே வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம், புதிய மனிதர்களிடம் நானே வலியச் சென்று பேசுவது எனது வழக்கம். அப்படியான பேச்சுகளின் போதெல்லாம், அவர்கள் அத்தனைப் பேரும் உங்கள் பிரதமர் ஒரு ஜெண்டில்மேன் என சொல்லும்போது மிகவும் பெருமையாக இருக்கும். உலக நாடுகளில் மிகவும் மதிக்கப் படும் ஒரு தலைவராகத்தான் இந்த பத்தாண்டுகளாக அவர் இருந்து வந்திருக்கிறார்.

அரசின் செயல்திறன் இன்மைக்கு பிரதமர் பொறுப்பாக மாட்டாரா? என்றால், நிச்சயம் அவரே பொறுப்பு. கடந்த ஐந்தாண்டு காங்கிரஸ் ஆட்சியின் துணிச்சலற்ற செயல்பாட்டுக்கும், கனிம வளங்களின் கொள்ளைக்கும், பெரும் ஊழல்களுக்கும் அமைச்சரவையின் தலைவர் என்ற முறையில் அவர் பொறுப்பெடுத்துக் கொண்டே ஆகவேண்டும்.

ஆனால், உண்மை நிலை என்னவென்று நம் அனைவருக்கும் தெரியும். மன்மோகன் சிங், தொடர்ந்து மன்மோகன் சிங்காகவே இருந்ததால்தான் அவரால் பிரதமராக நீடிக்க முடிந்தது. உண்மையில் அதிகாரமிக்க பிரதமராக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முற்பட்டிருப்பேராயானால், அங்கே அவருக்கு இடமிருந்திருக்காது.

உலகின் வல்லமை பொருந்திய ஒரு நாட்டின் பிரதமர், தனக்கு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி நடந்த மூன்றாம் நாள், தனது அறையையே பிரதமர் அலுவலகமாக மாற்றிக் கொண்டு கோப்புகளைப் பார்த்ததும், அதே நாட்டில் ஒரு மாநில முதல்வர் எப்போதுமே கொடநாட்டு ஓய்வு இல்லத்திலிருந்து கொண்டு தனது அரசை நடத்துவதையும் ஒரே நேரத்தில் காணக் கிடைத்த நாம் கொடுத்து வைத்தவர்கள்தாம்.

எப்படியாகினும், ஆட்சி மாற்றம் உறுதி என்ற நிலை இப்போது. புதிதாக ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு இருப்பவர்கள் தங்கள் பிரச்சாரம், தேர்தல் அறிக்கை, கொள்கைளில் பயன்படுத்திய வார்த்தைகளை கவனித்தேன். வலிமையான பாரதம், உறுதியான முடிவுகள், முன்னேற்றப் பாதை என்றெல்லாம் இருந்ததைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், புதிய பிரதமருக்கு இதையெல்லாம் விட மிக முக்கியமான சவால் காத்திருக்கிறது.

அது, இப்போதைய பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங் அவர்கள் தனது பதவியின் போது கட்டிக் காத்த கண்ணியத்தின் நூறில் ஒரு பகுதியேனும் கொண்டிருப்பது. அது உண்மையிலேயே மிகப் பெரிய சவால்தான்.

சென்று வாருங்கள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களே!

நாட்டின் மிக உயரியப் பதவியில் இருக்கும் போது நீங்கள் காட்டிய பணிவுக்கும், பண்பிற்கும் எனது சல்யூட்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *