கலர் மானிட்டர்

அன்னைக்கு சனிக்கிழமை! காலேஜ் லீவு. அப்படின்னா, பசங்க வரவேண்டாம். புரஃபஸர்கள் எல்லாம் அரை நாள் வந்து போவாங்க! மதியத்துக்கு மேல, கேம்பஸே வெறிச்சோடி இருக்கும்.

அப்படியான நாள் ஒன்றில், என்னோட புக்ஸை எல்லாம் ரிடர்ன் பண்ணிட்டு புது புக்ஸ் எடுக்கலாம்னு லைப்ரரிக்கு போனேன். லைப்ரரிக்கு முந்தின பில்டிங் எலக்டிரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் டிபார்ட்மெண்ட். அதுல ஒரு சின்ன அறையில்தான் என்னோட கம்ப்யூட்டர் சையன்ஸ் டிபார்ட்மெண்ட் இருந்துச்சு! புதுசா ஆரம்பிச்ச டிபார்ட்மெண்ட் என்பதால, இன்னும் தனியா கட்டிடம் கட்டலை.

சரியா, என்னோட டிபார்ட்மெண்டை தாண்டும் நேரத்தில், ஏய்! கம் ஹியர்! என்றொரு குரல் மேலிருந்து கேட்டது. நிமிந்து பார்த்தால், ப்ரொஃபஸர் பசவராஜ். எலக்டிரிக்கல் டிபார்ட்மெண்ட் எச்.ஓ.டி! எங்க கம்ப்யூட்டர் சயன்ஸ் டிபார்ட்மெண்ட்டுக்கும் அவர்தான் இன்சார்ஜ்.
சுற்றிலும் வேறு யாரும் இல்லாததால், அவர் என்னைத்தான் அழைத்தார் என்று அனுமானித்துக் கொண்டேன். படியேறி முதல் தளத்துக்கு சென்றால், அங்கே பல புதிய அட்டைப் பெட்டிகள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன.

என்னைப் பார்த்தவுடன், அதில மேல இருக்கும் பெட்டியை தூக்கிக் கொண்டு வந்து உள்ளே அந்த டேபிளில் வை! என்றார்.

தூக்கச் சென்றேன்!

ஜாக்ரதா! பத்திரம்! பீ கேர்ஃபுல்! என்று பல மொழிகளில் பதறினார்.

தூக்கிக் கொண்டு சென்று மேசையின் மீது வைத்தவுடன், பிரிக்கச் சொன்னார். சுற்றியிருந்த பல விதமான டேப்களை அவிழ்த்து, ஒட்டப் பட்டிருந்த பேப்பரை கிழித்து, பெட்டியைத் திறந்தபோது அதில் இருந்தது, புத்தம் புதிய கம்ப்யூட்டர் மானிட்டர். மேலே அழகாக ஆங்கிலத்தில் Olivetti என்று பொறித்திருந்தது. அந்த கம்பெனியின் டைப்ரைட்டர் ஒன்று எங்கள் நிறுவனத்தில் இருந்ததால், அது ஒரு இத்தாலிய நிறுவனம் என்பதை நான் அறிந்திருந்தேன்.

நானும், புரஃபஸரும் சேர்ந்து ஒரு குழந்தையை தொட்டிலில் இருந்து தூக்குவது போல, அதைத் தூக்கி வெளியே வைத்தோம். அதன் ஸ்பரிஸம் கூட மிகவும் மிருதுவாக, குழந்தையைத் தொட்டது போலவே இளஞ்சூடாக இருந்தது. ப்ரஃபஸர் அதை எல்லாப் பக்கமும் தடவிப் பார்த்தார். லேசான தூசி படிந்திருந்ததை துடைக்க துணி ஏதும் தென்படாததால், கால்சட்டையிலிருந்து தனது கைகுட்டையை எடுத்து அதை மிக லேசாகத் துடைத்தார்.

எங்கள் கல்லூரிக்கு வந்த முதல் கலர் மானிட்டர் அது.

என்னை லேசான பெருமிதத்துடன் நிமிர்ந்து பார்த்தவர், நீ எந்த டிபார்ட்மெண்ட்? என்றார்.

உங்க டிபார்ட்மெண்ட்தான் சார்! கம்ப்யூட்டர் சையன்ஸ்!

அப்படியா? வெரிகுட்!

மூன்று வருடங்களாக அவரிடம் படித்தாலும், என்னை அவருக்குத் தெரியவில்லை. அடிக்கடி வந்தால்தானே, என்னை அவருக்கு நினைவிருப்பதற்கு?

இதுதான், புதுசா நாம வாங்கியிருக்கிற கலர் மானிட்டர்! இனிமே, உங்க டிபார்ட்மெண்ட்க்கு கலர் மானிட்டர்தான் என்றார் பெருமையாக.

அப்படியா? அப்படின்னா, இதில ப்ரோகிராமிங் கலரிலேயே பண்ணலாமா சார்?

உடன் முறைத்தார். கலர் மானிட்டர் என்றால் கலரில் தெரியும்! அவ்வளவுதான்! என்றார்.

ப்ரோகிராமிங் எதற்காக கலரில் தெரியவேண்டும்? என்று அவரிடம் கேட்க எனக்குத் துணிவில்லை. அமைதியாக இருந்து விட்டேன்.

அவரும் நான் சொல்ல வந்ததையேதான் அவரும் யோசித்திருப்பார் போலும். அமைதியாக குனிந்து அதையே பார்த்துக் கொண்டிருந்தார்.

இந்த நேரத்தில் இந்த தலைமுறைக்கு எனது காலத்திய கம்ப்யூட்டர் பற்றி சில விவரங்களை சொல்லி வைப்பது உத்தமம் எனத் தோன்றுகிறது. வரிசையாக தோன்றுவதை சொல்கிறேன்.

முதலில், அப்போது ஆபரேட்டிங் சிஸ்டம் என்று எதுவும் கிடையாது.

‘அப்போது’ என்றால் 1988-89ஆம் வருடம்.

ஒவ்வொரு மெஷினுக்கும், தனித்தனியாக டிஸ்க் போட்டு பூட் செய்ய வேண்டும். டிஸ்க் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்று பொதுவாக அதை அழைத்தார்கள்.

இரண்டாவது, நெட் வொர்க்கிங் என்றொரு கான்செப்ட்டே அப்போது எங்களுக்கு அறிமுகமாகவில்லை. ஒவ்வொரு கம்ப்யூட்டரும் ஒவ்வொரு தீவு! எனவே, நோ வைரஸ்! நோ சர்வர்!

மூன்றாவது, பேசிக், ஃபோர்டிரான், கோபால் என்று சில வகை ப்ரோகிராமிங்தான். அதிலும் பரீட்சைக்கு முதல் இரண்டு மட்டும்தான். மீதமெல்லாம் வெறும் தியரி.

மைக்ரோசாஃப்ட் இல்லை! ஆப்பிள் இல்லை! இன்ஃபோஸிஸ் இல்லை! டிசிஎஸ் இல்லை! ஜாவா இல்லை! டாட் நெட் இல்லை! மொத்தத்தில் இண்டெர் நெட்டே இல்லை! வாழ்க்கை அத்தனை எளிமையாகவும், இனிமையாகவும் இருந்தக் காலம் அது.

ப்ரோகிராமிங் என்றால், அதிலும் வெறும் அரித்மெட்டிக் ப்ரோகிராமிங்தான். அஸெண்டிங் ஆர்டர், டிஸெண்டிங் ஆர்டர், சார்ட்டிங், என மிக எளிமையா லாஜிக்கல் கோட்பாடுகள் கொண்டது. சுலபமா எழுதிடலாம்! குறிப்பா, எனக்கு வந்த ஃபோர்டிரான் லேங்குவேஜ் ப்ரோகிராம் பற்றி சின்னதா விளக்கிச் சொல்கிறேன்.

முக்கோணத்தின் பரப்பளவு கண்டு பிடிக்க வேண்டுமானால், நாமே மூன்று கோணத்துக்கும் பெயர் கொடுத்து, ஃபார்முலாவும் கொடுத்தோமானால், அது கணக்கிட்டு பரப்பளவினை சொல்லிவிடும். (எனக்கு பரீட்சைக்கு வந்ததால இது மட்டும் லேசா நினைவில் இருக்கு)

INTEGER A,B,C

READ A,B,C

FORMAT

S = (A+B+C) / 2

AREA = SQRT (S*(S-A)*(S-B)*(S-C)

WRITE AREA

STOP

PRINT

END

இப்படி எழுதினால் போதும்! அஷ்டே! ஏரியா ஆஃப் டிரையாங்கிள் ப்ரோகிராம் ரெடி!

சிம்பிள்!

இதில் ஒரே சிக்கல் என்னெவென்றால், லேபில் வாத்தியார் பக்கத்தில் இருக்கும் போது, அச்சடிச்சது போல தெளிவா வரும் ரிசல்ட், பரீட்சையின் போது ஏதேதோ எரர் என்று காட்டும். ஜட்டியில் வச்சிருக்கும் பிட்டை எடுத்து, பிரிச்சு பார்த்தோமானால், அச்சு அசல் ஏற்கனவே நாம எழுதியிருக்கும் ப்ரோகிராமாத்தான் இருக்கும். ஒரு புள்ளி கூட வித்தியாசம் இருக்காது. இருந்தாலும், பரீட்சையின் போது அவுட்புட் வராது! அதுதான் ஃபோர்டிரான்!

ஃபோர்டிரான் புரிஞ்சுதா? மத்த லேங்குவேஜ் ப்ரோகிராமிங் எல்லாம் அப்புறமா இன்னொரு சமயத்தில பார்க்கலாம். இப்போ, டேபிளில் பிரிச்சு வச்ச கலர் மானிட்டரிடம் போகலாம்.

பிரிச்ச மானிட்டருக்கு, அதிலேயே இருந்த ஒரு வரைபடத்தின் அட்டையைப் பார்த்து, நிதானமா ஒவ்வொரு கேபிளா இணைச்சு, அதைக் கொண்டு போய் ஒரு சிபியூவில் இணைச்சு , சிபியூவில் ஒரு டிஸ்க் போட்டார். உள்ளே சக்கரம் சுத்துவது போல பெரிசா ஒரு சத்தம் வந்து, நின்னுடுச்சு! அப்படின்னா, சிபியூ தயார் என்று அர்த்தம். என்னைப் பார்த்து ஒரு வெற்றிச் சிரிப்பு சிரித்தபடி, ப்ரஃபஸர் எங்கள் புதிய கலர் மானிட்டரோட சுவிட்சைப் போட்டார்.

ஒண்ணுமே நிகழவில்லை!

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். ப்ரஃபஸர் பதறாமல், இன்னுமொரு முறை எல்லா வயர்களையும் சரி பார்த்தார். பிறகு வேறு ஒரு சிபியூ கொண்டு வந்து இணைத்தார். மறுபடியும் சக்கரம் சுத்தும் சத்தம். மறுபடியும் மானிட்டர் சுவிட்ச்! மறுபடியும் வெற்று ஸ்கிரீன்!

அவருக்கு வியர்த்துக் கொட்டத் துவங்கியது. சற்று அசைந்தாலும், என்னை ஏதாவது கேள்வி கேட்டு விடுவாரோ என்ற அச்சத்தில் நான் அப்படியே அசையாமல் கற்சிலை போல நின்று கொண்டிருந்தேன்.

இந்த கலர் மானிட்டர் ஐடியா அவரோடது! பிரின்ஸியிடம் சண்டை போட்டு, பெர்மிஷன் வாங்கி, அவரே கம்பெனியைக் கண்டு பிடிச்சு பேரம் பேசி பதினைந்து மானிட்டர் வாங்கியுள்ளார். அது வேலை செய்யும் அறிகுறிகூட இல்லை என்றவுடன், அவருக்கு உடல் நடுங்கத் துவங்கி விட்டது.

அந்த அறையில் மட்டுமல்ல, அந்த வட்டரத்திலேயே எங்கள் இருவரைத் தவிர வேறு யாருமில்லை. மிக அருகில் குயில் கத்தும் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. ப்ரஃபஸர் தலையைக் குனிந்தபடி நீண்ட நேரம் சிந்தித்துக் கொண்டிருந்தார். இப்போது நான் ஏதாவது கேள்வி கேட்டு விடுவேனோ என்று கூட அவர் அச்சத்தில் இருந்திருக்கலாம்!

எப்படி, அங்கிருந்து தப்பி வெளியே செல்வது என்ற சிந்தித்தபடி, கீழேயிருந்த அட்டைப் பெட்டியில் உதைத்துக் கொண்டிருந்த எனது காலில் ஏதோ தட்டுப் பட்டது. குனிந்து, கீழேயிருந்து எடுத்துப் பார்த்தால், அது பெட்டியின் உள்ளே மீதமிருந்த கலர் மானிட்டருக்கான பவர் கேபிள்.

சார்! இங்கே இன்னொரு வயர் இருக்கு என்றேன்.

வேகமாக அதை என்னிடம் இருந்து வாங்கியவுடன்தான் இதுவரையில், எங்கள் மானிட்டருக்கு பவர் சோர்ஸ் எதுவும் தரப்படவில்லை என்பதை ப்ரஃபஸர் கவனித்தார். எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், அதானே பார்த்தேன்! என்னோட சர்க்யூட் கனெக்ஷன் எப்போதுமே தப்பாயிருக்காதே? என்று சொல்லி, நிலைமையை சமாளித்தபடி அதையும் இணைத்தார். டிபிக்கல் எலக்டிரிகல் இன்ஜினியருக்கே உரிய கெத்து அது!

இப்போது, மானிட்டரின் மையத்தில் ஒரு சின்னப் புள்ளி தெரிந்தது. சற்று நேரம் இருவரும் அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால், நாங்கள் பார்க்கத் தவறிய ஒரு கணத்தில் அந்தப் புள்ளி பெரிதாகி மானிட்டர் முழுக்க வெளிச்சமானது. நீலக் கலர்! அது அப்படியே கரு நீலமாக மாறி, அதிலிருந்து OLIVETTI என்று அந்த கம்பனியின் பெயர் வந்தபோது எங்கள் இருவருக்குமே அப்படி ஒரு சந்தோஷம்.

இந்த வருடம் பொன் விழா காணும், இந்தியாவின் மிகச் சிறந்த பொறியியல் கல்லூரிகளுள் ஒன்றான, எங்கள் கல்லூரி இதுவரை பல ஆயிரம் கம்ப்யூட்டர்களை பார்த்திருக்கும். ஆனால், அதன் முதல் கலர் மானிட்டர், தனது வெளிச்சத்தினை நீலக் கலரில் உமிழும் அந்தக் கணத்தில் நாங்கள் அதன் சரித்திரத்தின் ஒரு அங்கமாகப் பதிவாகிப் போனதை அப்போது இருவருமே அறிந்திருக்கவில்லை.

ரொம்ப மகிழ்ச்சியுடன், என்னைப் பார்த்து நீ எந்த இயர்? என்றார்.

தேர்ட் இயர் ஸ்டுடண்ட் சார்!

சரி! நான் போய் பிரின்ஸியை கூட்டி வரேன். அதுக்குள்ளே, இதில சுவாமிஜியின் பெயரை எழுதி வை! சரியா?

சரி சார்!

வெளியே சென்றவர், நின்று திரும்பி, என்ன எழுதுவே?

சுவாமிஜியோட பெயர் சார்!

அதுதான்? என்னன்னு சொல்லு!

ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ சிவக்குமார சுவாமிகளு சார்!

வெரிகுட்! என்ற படி திருப்தியாக வெளியே சென்றார்.

சுவாமிஜிதான், எங்கள் பொறியியல் கல்லூரியின் நிறுவிய அறக்கட்டளையின் தலைவர். 105 வயதில் இன்னமும் எத்தனையோ ஆயிரம் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கல்வியும், உணவும், உடையும் கொடுத்து பராமரித்து வரும் மாமனிதர். நிஜமான சாமியார்.

நீண்ட நேரம் கழித்து ப்ரஃபஸர் திரும்பி வரும்போது, உடன் பிரின்ஸிபலும், வேறு சில ஆசிரியர்களும் இருந்தனர். எல்லோருக்குமே முதன் முதலாக கலர் மானிட்டரை பார்ப்பதில் பெரும் உற்சாகம். அதிலும் சிலர் அப்போதுதான் முதன் முதலாக கம்ப்யூட்டரையே பார்ப்பவர்கள். சுற்றி, சுற்றி வந்து பார்த்தார்கள். நம் கதாநாயகனும், அவ்வப்போது நீலம், சிகப்பு, மஞ்சள் என தனது நிறத்தை மாற்றி, மாற்றிக் காட்டி வந்தவர்களை உற்சாகப் படுத்தினான்.

பிரின்ஸிபல், மானிட்டர் முன் வந்து குனிந்து பார்த்தார். அந்த பழுப்பு நிற பட்டையில், சிகப்பு நிற ஸ்கெட்ச் பேனாவில் அழகாக, ஆங்கிலத்தில் Sri Sri Sri Sivakumaara Swamigalu என்று கொட்டை எழுத்தில் எழுதி வைத்திருந்ததைப் படித்து விட்டு, மெல்லத் தலையசைத்தபடி வெளியே சென்றார். நானும் பெருமிதத்துடன், எங்கள் எச்.ஓ.டியைப் பார்த்தேன்.

அப்படியே அவர் முகம் அப்படியே கல்லாக உறைந்து போயிருந்தது.

————————————-

அடுத்த திங்கட்கிழமை இரவு நானும், ஶ்ரீகாந்தும் எங்கள் வழக்கமான ஜமுனா பாருக்குச் சென்றோம். அங்கே ஒரு மூலையில் வேணிப் பிரசாத் பியர் குடித்துக் கொண்டிருந்தான். பிரசாத் பெங்களூரு ஐஐஎஸ்ஸில் பி.ஜி படித்துக் கொண்டிருந்த பெங்களூருகாரன். தமிழ், தெலுங்கு, கன்னடம் என கலந்து கட்டிப் பேசுவான்.

என்னுடைய கம்ப்யூட்டர் சயன்ஸ் டிபார்ட்மெண்ட்டில் பகுதி நேர ஆசிரியன். ப்ரோகிராமிங் வகுப்பெடுப்பான். எங்கள் அறைக்கு அருகிலேயே அவனும் தங்கியிருப்பதால், ஆசிரியர் என்பதை விட நண்பன் போலவே பழகுவோம். வாடா!போடா! பழக்கம். எல்லாவற்றையும் விட முக்கியம், எப்போது எங்களைப் பார்த்தாலும் பியர் வாங்கிக் கொடுப்பான்.

நாங்கள் இருவரும் உற்சாகமாக அவனருகே சென்று அந்த டேபிளில் உட்கார முயன்றோம்.

டேய் ஶ்ரீகாந்த்! நீ வேணும்னா இங்க உட்காரு! ….. அவன் மட்டும் என் முன்னாடி உட்கார்ந்தான், நான் மனுஷனாகவே இருக்க மாட்டேன் என்றான் என்னைக் காட்டி!

என்னாச்சுடா? என்று ஶ்ரீகாந்த் என்னைக் கேட்டான். எனக்கு ஒன்றும் புரியவில்லை! நான் என்ன செய்தேன்?

எனக்கு ஒன்றும் தெரியாதுடா! என்றேன்.

……. ஒண்ணும் தெரியாது? போன சனிக்கிழமை என்ன செஞ்சே? என்றான் ப்ரசாத்.

நான் ஒண்ணும் பண்ணலையே? என்றேன்.

நீ லேபுக்கு போகலை?

ஓ! அதுவா? போனேன்! எச்.ஓ.டி கூப்பிட்டார் போனேன்! அதுக்கென்ன இப்போ?

ஶ்ரீகாந்த் இடைபுகுந்தான். எதுவாயிருந்தாலும் உட்கார்ந்து பேசலாம்! என்ன ப்ரசாத்? ஏமி ஆயிந்தி? என்று சமாதானப் படுத்தும் வகையில் தெலுங்கில் கேட்டான்.

டேய்! இவன் சனிக்கிழமை லேபுக்குப் போயிருக்கான். எச்.ஓ.டி இவனை புதுசா வந்திருந்த மானிட்டரில் நம்ம சுவாமிஜி பேர் கலர், கலரா வருவது போல ப்ரோகிராமிங்க் எழுத சொல்லிட்டு, பிரின்ஸியை கூட்டிட்டு வந்து காட்டியிருக்கார். இந்த ராஸ்கல், ப்ரோகிராம் எழுதாம, ஸ்கெட்ச் பேனா எடுத்து மானிட்டரில் சுவாமிஜி பேரை எழுதி வச்சுருக்கான். என் மானமே போச்சு! என்று கத்தினான்.

நான் அதிர்ந்து போய் நின்றேன். எந்த தைரியத்தில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவனை, இவ்வளவு இன்னோவேடிவா ப்ரோகிராமிங் எழுதச் சொல்லி சென்றார் எங்கள் எச்.ஓ.டி? எங்க சிலபஸில் அதிகபட்சமே, ப்ரைம் நம்பர் கண்டுபிடிப்பதுதான். நான் செய்து வைத்த அபத்தச் செயலை விட, என்னோட எச்.ஓ.டி என் மீது வைத்திருந்த அதீத நம்பிக்கையே என்னை வெட்கப் படச் செய்தது.

ஶ்ரீகாந்த் நிலமையை சமாளிக்க வேண்டி, சரி! அதுக்கு நீ ஏன் கத்துறே? உங்க எச்.ஓ.டி ஏன் இவனை ஒண்ணும் சொல்லலை? என்றான்.

ஏன்னா! அவருக்கும் ப்ரோகிராமிங் தெரியாது! என்றான் ப்ரசாத்.

—————

குறிப்பு 1: ப்ரசாத், இப்போது சிலிக்கன் வேலியில் மூன்று மெகா கம்பனிகளுக்கு ஆலோசகராகவும், பல மில்லியன் டாலர்கள் ஸ்டார்ட் அப் ஒன்றுக்கு சிஇஓவாகவும் இருப்பதாக கேள்வி.

குறிப்பு 2: சுவாமிஜி பேரை கம்ப்யூட்டருக்குள்ளே எழுதச் சொன்னதற்கு, ஸ்கெட்ச் பேனாவில் மானிட்டரின் மீது எழுதி நிலைமையைச் சமாளித்த (சொதப்பிய) நான் இரண்டு பெரிய பொறியியல் கல்லூரிகளைத் துவக்கி அதில் ஆயிரம் கம்ப்யூட்டர்களை நிறுவியுள்ளேன்.
(அத்தனையும் ‘கலர் மானிட்டர்’!)

குறிப்பு 3: எங்கள் எச்.ஓ.டி அதற்குப் பிறகு, கம்ப்யூட்டர் ப்ரோகிராமிங்கில் பி.ஜி படித்து பிறகு எலக்ட்ரானிக்ஸில் பிஎச்டி முடித்து இருக்கிறார். பணி ஓய்வு பெற்ற பின்பும், அவருடைய திறன் கருதி, இப்போதும், எங்கள் கல்லூரி நிர்வாகம் அவரை Dean (Planning & Implementaion) ஆக வைத்திருக்கிறது.

குறிப்பு 4: சென்ற டிசம்பர் மாதம் 30ஆம் தேதியன்று, நான் படித்தக் கல்லூரிக்கு சென்றுபோது நாங்கள் இருவரும் சந்தித்தோம். என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை! ஒருவேளை, அவரிடம் இந்தக் கலர் மானிட்டர் கதையை சொல்லியிருந்தால், அவருக்கு நினைவு வந்திருக்குமோ என்னவோ?!!Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *