மதுரை வீரன்

ஒரு பெரிய சாலை விபத்து நேரும் அந்தக் கணத்தில் நீங்கள் அருகில் இருக்க நேரிட்டால் என்ன செய்வீர்கள்? செய்வதறியாது திகைத்து அப்படியே உறைந்து நிற்பீர்கள்! அல்லது, பெரும் பதட்டம் அடைந்து, அங்கும் இங்கும் ஓடுவீர்கள்! அல்லது உடனே சுதாரித்துக் கொண்டு, காயமடைந்தவர்களுக்கு உதவச் செல்வீர்கள்!
ஒரு வேளை, அந்தக் கணத்தில் நான் அங்கிருக்க நேரிட்டால் என்ன செய்வேன் என எண்ணிப் பார்க்கிறேன். சற்றும் பதட்டப் படாமல், உடைந்த கண்ணாடித் துண்டுகளைத் தாண்டிச் சென்று, வண்டியின் ஓட்டுநர் இருக்கையின் அருகினில் சென்று பார்ப்பேன்! ஓட்டுநர் இருக்கையில் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பின்பு, விபத்து நடந்த நேரத்தைக் கணக்கிட்டு, எத்தனை தூரத்தில் ஓட்டுநர் ஓடிச் சென்று பதுங்கியிருப்பார் என்று ஒரு மனக் கணக்கை போட்டு வைப்பேன்.
பேருந்தாக இருப்பின், தவழ்ந்து சென்றேனும் வண்டியினுள்ளே போய், நடத்துநரின் பணப்பை எங்கேனும் விழுந்துள்ளதா என்று சோதனை செய்து கொள்வேன்.
உயிர் சேதம், பொருட் சேதம் போன்றவைகளைக் கணக்கிலிடும் முன்பு, வாகனத்தின் சேதத்தைக் கணக்கிலிட்டு, இன்னும் எத்தனை நாட்களில் வாகனத்தை மீண்டும் சாலையில் ஓடச் செய்ய முடியும் என்று அனுமானிப்பேன். மிகச் சிறிய வயதிலிருந்து லாரி, பஸ், கார், டிரைவர், கண்டக்டர், விபத்து, காயம் எனப் பார்த்துப் பழகிப் போனதில், விபத்து என்பது எனக்கு ஒரு வாகனத்தின் ரிப்பேருக்கு முன்பிற்கும், பின்பிற்கும் இடைப்பட்டக் காலத்தில் நடக்கும் ஒரு சம்பவம்!
உயிரிழப்புகளின் வலிகளையும், வேதனைகளையும் முழுமையாக உணர்ந்திராத சிறிய வயது எனக்கு! டிவி, இண்டர் நெட் போன்றவைகள் இல்லாத, நாட்கள் மிக மெதுவாக நகரும் காலக் கட்டம் அது! விபத்துகள் ஏற்படுத்தும் பரபரப்பை எல்லோரும் ஏதோவொரு வகையில் விரும்பினோம் என்றே எண்ணுகிறேன். சொல்லப் போனால், எங்கள் நிறுவனத்தின் வாகனம் ஏதேனும் விபத்தில் சிக்கினால், உடனே அங்கே சென்று, வாகனத்தின் மீட்பு பணி முதல் காவல் நிலையங்களின் சம்பிரதாயங்களை முடிப்பது வரையிலான காரியங்களை உன்னிப்பாக கவனிப்பது எனது ஆகச் சிறந்த பொழுது போக்குகளில் ஒன்று.
அன்றைய தினம், நைனா தொலைபேசியை எடுத்துப் பேசியபோது, நான் அருகில்தான் இருந்தேன். பள்ளி நாட்களின் ஒரு மதிய வேளை அது! உணவருந்தி விட்டு, வீட்டிலிருந்து பள்ளிக்கு திரும்பி செல்லும் போது அந்த போன்கால் வந்தது. நிதானமாக நைனா பேசி முடித்து விட்டு, என்னைப் பார்த்து மணி எங்கேடா? என்றார். மணி என்னுடைய தாய் மாமா. நைனாவுக்கு, அவசர காலங்களில், போர் முனைக்குச் செல்லும் படைத் தளபதி.
உடன் சென்று அழைத்து வந்தேன். டேய் மணி! டூர் பஸ் ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சாம்! மேலூருன்னு, மதுரைக்குப் பக்கத்தில ஒரு ஊராம்! நீ காரை எடுத்துட்டுப் போய் பார்த்துட்டு வா! என்றார். டோ பார் (Tow Bar) எல்லாம் எடுத்துட்டு போகணுமா? என்ற கேள்விக்கு, வண்டிக்கு ஒண்ணுமில்லையாம்! குறுக்கில வந்த ஒரு குடிகாரந்தான் செத்துட்டான் போலிருக்கு! எதுக்கும் எல்லா ஒரிஜினல் பேப்பர்ஸும் எடுத்துக் கொண்டு போ என்றார் நைனா!
ஆக்ஸிடெண்ட் என்ற வார்த்தையை கேட்டவுடன், எனக்கு நெஞ்சமெல்லாம் பரவசம் வந்து நிறைத்தது. கால்கள் தரையிலிருந்து மிதக்க ஆரம்பித்தது. வேகமாக வீட்டுக்குள் சென்று, கலர் டிரெஸ் மாற்றிக் கொண்டு மாமாவின் முன்னே வந்து நின்று போலாமா மாமா? என்றேன். நீ எங்கடா போறே? என்ற அம்மாவின் கேள்வி எனது உற்சாகத்தின் முன் காற்றில் கரைந்து போனது. நைனா ஒன்று சொல்லாமல் மவுனமாக இருக்கவே, காரில் உட்காருடா! என்று மாமா சொன்னார். இப்படித்தான் சரியாக முப்பது வருடங்களுக்கு முன்னால் எனது சரித்திரப் புகழ் பெற்ற மேலூர் பயணம் தொடங்கியது.
விபத்து நடந்த தினம் ஒரு சுதந்திர தினத்தின் முந்திய நாள். மதுரைக்கும், மேலூருக்குமான சாலையில் உள்ளடங்கிய ஒரு கிராமத்தில் இருந்த பள்ளியில், சுதந்திர தினத்திற்கான ஒத்திகை நடத்தியிருக்கிறார்கள். அந்த ஒத்திகையை வேடிக்கை பார்த்து விட்டு, பையன்களிடம் இருந்த தேசியக் கொடியைப் பிடுங்கி தனது சட்டையில் குத்திக் கொண்டு, பக்கத்துக் கடையில் புதிதாகக் காய்ச்சிய சாராயத்தை வாங்கி குடித்து விட்டு, தேச பக்தி பாடல்களை பாடியபடி கிராமச் சாலையிலிருந்து நெடுஞ்சாலைக்கு தனது சைக்கிளில் தள்ளாடியபடி வந்து, அந்த சமயத்தில் நெடுஞ்சாலையைக் கடந்து சென்ற எங்கள் பேருந்தின் பின் சக்கரத்தின் தனது தலையை கொடுத்து இறந்து போனார் இந்தக் கதையின் பேசப் படாத கதாநாயகன் (un sung hero) முனுசாமி.
நாங்கள் மேலூர் காவல் நிலையத்திற்கு சென்று அடைந்த போது இருள் கவிழ்ந்து விட்டிருந்தது. விபத்தில் மரணம் ஏற்பட்டிருந்ததால், 304 A பிரிவின் படி எஃப் ஐ ஆர் பதியப்பட்டிருக்கும். எல்லா ஒரிஜினல் ரெக்கார்டும் கொண்டு சென்றால் அதிக பட்சம் இரண்டு மணி நேரமும், இரண்டாயிரம் ரூபாயும் செலவாகும் விஷயம் அது. இரவு ஏழு மணிக்கு சென்றடைந்தோம். அதிக பட்சம் ஒன்பது மணிக்கு புறப்பட்டு விடலாம் என்று திட்டம். ரைட்டரிடம் சென்று அறிமுகப் படுத்திக் கொண்டு, எங்கள் டிரைவர் எங்கே என்று கேட்டோம். அப்போது, குளித்து முடித்து தலையை துவட்டிய படி, காவல் நிலையத்தின் உள்ளிருந்து டிரைவர் வெளியே வந்தார்.
சார்! இந்தாருங்கள்! எல்லா ஒரிஜினல் பேப்பர்ஸும் இருக்கு! ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் ரெடி பண்ணிருங்க! முடிச்சுட்டு நாங்க சீக்கிரம் புறப்படணும் என்றார் மாமா! அதெல்லாம் அரை மணியில செய்திடலாம்! பஸ்ஸை கொண்டு போக டிரைவரை கூட்டி வரலையா? என்று கேட்டார் ரைட்டர்! டிரைவரா? இதோ இருக்காரே! என்றதற்கு, சார்! இது 304 A, இந்த டிரைவரை நீங்கள் கோர்ட் ஜாமீனில்தான் எடுக்கணும். வண்டியை எடுத்துட்டு போக வேற டிரைவரைத்தான் கூட்டி வந்திருக்கணும் நீங்க! என்று பதில் வந்தவுடன் பதட்டமாகி விட்டோம். வட தமிழகத்தில் நடக்கும் போக்குவரத்து விபத்துகளில் டிரைவரை, காவல் நிலையத்திலேயே பிணையில் விடுவது வழக்கம்! அதை நாங்கள் எடுத்து சொல்லிய போது, இதையெல்லாம் மதுரை வீரன் இப்போ வருவாரு! அவரிடம் கேளுங்கள்! என்றார்.
யாருங்க அது? என்றோம்.
ம்…. இந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்!
இன்ஸ்பெக்டருக்காக காவல் நிலையத்தின் வெளியே வந்து காத்துக் கொண்டிருந்தோம். அந்தக் காவல் நிலையம் இருந்த இடம், சப் கோர்ட், தாலுக்கா ஆபீஸ், ரிஜிஸ்டிரார் ஆபீஸ் போன்ற பல்வேறு அலுவலகங்கள் உள்ளடக்கிய பெரிய வளாகமாகும். நகரின் மையப் பகுதியில், பெரும் மரங்களுக்கிடையே, ஆங்காங்கே அமைக்கப் பட்டிருந்த அந்த விக்டோரியா காலத்துக் கட்டிடங்கள் அந்த முன் இரவு நேரத்தில் எனக்கு ஒரு திகிலை கொடுத்தன. இன்ஸ்பெக்டரின் புல்லட், பெருத்த சத்தத்துடன் அந்த வளாகத்தினுள் நுழைந்தது.
வாசலில் தனது புல்லட்டை நிறுத்தி விட்டு, அருகில் நிறுத்தப் பட்டிருந்த காரில் சாய்ந்து நின்று கொண்டிருந்த எங்களை ஓரக் கண்ணால் பார்த்தபடி, இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்தின் உள்ளே சென்றார். நல்ல உயரம், கட்டான உடல், போலீஸ் மீசை (மதுரை வீரன்!) என அத்தனை மிடுக்கும் ஒரு சேர அமைந்திருந்ததால், முதல் பார்வையிலேயே, அவரைப் பற்றிய ஒரு அச்சம் வந்தது. டேய்! காரிலிருந்து இரண்டாயிரம் ரூபாயை எடுத்து சட்டைப் பையில் வச்சுக்கோ! என்றார் மாமா! ஏன் மாமா? 304 A விற்கு ஆயிரம் தானே? என்றேன். அது நம்ம ஊரிலடா! இங்கே நிலைமை எப்படி என்று தெரியவில்லை! எதுக்கும் இரண்டு ஆயிரமா, தனித் தனியாக வச்சுக்கோ! என்றார்.
இன்ஸ்பெக்டர் அறைக்குள் சென்றோம். நீங்கதான் பஸ் ஓனரா? உட்காருங்க!
காலையிலேயே வந்திருக்கலாமே? கோர்ட் வேலையெல்லாம் முடிக்க வசதியா இருந்திருக்குமே? எனக் கேட்டபடி வரவேற்றார். வந்திருக்கலாம்தான்! ஆனா, ஆக்ஸிடெண்ட் மதியம்தானே நடந்தது! என்று எண்ணிக் கொண்டேன்! சொல்லவில்லை!
மாமாதான் ஆரம்பித்தார்! சார்! எங்கள் ஊரில் எல்லாம், 304 A என்றால் கூட டிரைவருக்கு ஸ்டேஷன் பெயில்தான்! எப்படியும் ஒரிஜினல் லைசன்ஸ் இங்கே தானே இருக்கப் போகுது! தவிர, கம்பெனிக்கு ஒரு போன் பண்ணினால் போதும்! முதலாளியே ஆளனுப்பி, கோர்ட்டில் ஃபைன் கட்டி விடுவார் என்றார். எதையோ, எழுதிக் கொண்டே, அசிரத்தையாக கேட்டுக் கொண்டிருந்தவர், இது மதுரை மாவட்டம்னா! இங்கன வேற ரூல்ஸ்! நீங்க போயிட்டு, திங்கட்கிழமை வாங்க! டிரைவரை கூட்டிட்டுப் போலாம்!
அன்றைக்கு வியாழக்கிழமை. மறுநாள் வெள்ளி சுதந்திர தினம். சனி,ஞாயிறு என தொடர்ந்து மூன்று நாட்கள் அரசு விடுமுறை. இன்றைக்கு விட்டால், அடுத்த மூன்று நாட்கள் டிரைவர் ஸ்டேஷனிலேயே இருக்க வேண்டும். வேறு டிரைவர் உடன் இல்லாததால், பஸ்ஸையும் எடுத்துச் செல்ல முடியாது. எங்களுக்குப் பதட்டமாகி விட்டது.
மெல்ல, மாமா என்னுடைய காலை சுரண்ட, நான், என்னுடைய பாக்கெட்டிலிருந்த பணத்தை எடுத்து அவரிடம் கொடுத்தேன். அவரும் அதை வாங்கி, எங்க பக்கமெல்லாம் ஆயிரம்தான் சார்! நான் இரண்டாயிரமா கொடுக்கிறேன்! ஸ்டேஷன் செலவெல்லாம் தனியா பண்ணிடறேன்! கொஞ்சம் பார்த்து அனுப்பி விட்டுறங்க சார்! என்றபடி, அவரிடம் கொடுத்தார். குனிந்து எழுதிக் கொண்டே, நடந்ததை ஓரக் கண்ணால் கவனித்திருப்பார் போல! அதை வாங்கிக் கொண்டு, எழுந்து வந்து, என்னுடைய சட்டைப் பாக்கெட்டிலேயே அதை திரும்ப வைத்து, திங்கட்கிழமை வந்துருங்க! என்றார்.
இருவரும் எழுந்து வெளியே வந்து விட்டோம். இதற்குள்ளாக டிரைவர், சட்டையை மாட்டிக் கொண்டு, விபூதியெல்லாம் வைத்துக் கொண்டு, போலாமா? என்றபடி எங்களுடன் கிளம்பி வந்தார். யோவ்! இருய்யா! நாங்க ஊருக்கு போவதே பிரச்சனையா இருக்கு இங்கே! என்றபடி, ஏட்டைய்யாவிடம் சென்றோம். எங்களை எதிர்ப் பார்த்துக் காத்திருந்தபடி, ஏட்டையா சிரிப்புடன் அமர்ந்திருந்தார்.
அப்புறம்! ஊருக்கு போய் வாரீகளா? இல்லை! இங்கனவே தங்கிடறீங்களா?
என்ன சார்? வேற வழியே இல்லையா?
இருந்துச்சு! இந்த ஆள் வருவதற்கு முன்னாடி நிறைய வழி இருந்துச்சு!
இப்போவெல்லாம், நாங்களே எங்க வீட்டுக்கு காய்கறி, மளிகையெல்லாம் காசு கொடுத்துதான் வாங்குறோம்னா பார்த்துக்கிடுங்க! ரொம்ப வறட்சி சார்! போகும் போது கொஞ்சம் பார்த்துட்டு போங்க! என்றார்.
நாங்கள் எழுந்து வெளியில் வந்து காரின் அருகில் நின்று கொண்டோம். எங்கள் டிரைவர் அதற்குள் உடை மாற்றிக் கொண்டு, லுங்கி பனியனுடன் வெளியில் வந்து விட்டிருந்தார். நடந்ததை சட்டென அவர் புரிந்து கொண்டதைப் போல, எங்களால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. அதுவும், மாமா போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் வேலையை முடிக்காமல் வந்தது இல்லை என்ற ஒரு தனிப் பெரும் சாதனையை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் வேறு!
ஸ்டேஷனில் இருந்து வெளியில் வந்து இன்ஸ்பெக்டர், நேராக எங்களின் அருகே வந்தார். மாமா, தனது கையினால், லேசாக பின்பக்கம் பதுக்கிய சிகரெட்டை பார்த்தபடி, தனது சிகரெட் பாக்கெட்டை எடுத்து ஒரு சிகரெட்டைக் கொளுத்திக் கொண்டு, உள்ளே ஏட்டு கேட்ட அதே கேள்வியினைக் கேட்டார்.
நீங்கதான் சார்! சொல்லணும் என்றார் மாமா.
முடிஞ்சா தங்கிடுங்க! திங்கட்கிழமை முதல் வேலையா உங்கள் வேலையை முடிச்சு அனுப்பிடறேன். இங்கத்திய நடைமுறைன்னு ஒண்ணு இருக்கு பார்த்துக்கிடுங்க! என்றபடி அங்கே நின்றிருந்த ஒருவரை அழைத்து, இவங்கள கூட்டிட்டுப் போய், பாண்டியன் மெஸ் மேல இருக்கிற லாட்ஜ்ல ரூம் போட்டு கொடு! என்று சொல்லி விட்டு தனது புல்லட்டை உதைத்தார்.
வா! போய் உன் நைனாவிடம் விஷயத்தை சொல்லிட்டு, அப்புறம் ஊருக்கு கிளம்பிடலாம்! திங்கட்கிழமை விடியற்காலை புறப்பட்டு வந்தால் போச்சு! மூணு நாள் நமக்கு இங்க என்னடா வேலை? என்றபடி, ஒரு போஸ்ட் ஆஃபீஸுக்கு சென்று ஊருக்கு டிரங்க் கால் போட்டோம். ஆளேயில்லாத அந்த போஸ்ட் ஆஃபீஸில் உடனே டிரங்க் கால் லைன் கிடைத்தது. கூண்டுக்குள் சென்று பேசி விட்டு வெளியில் வந்தார் மாமா.
என்ன மாமா? புறப்படலாமா? என்றேன்.
ம்.. பஸ்ஸையும், டிரைவரையும் அங்கே விட்டுட்டு, இங்க வந்து என்ன புடுங்க போறீங்கன்னு கேட்கிறார்டா உன் நைனா? நமக்கு இங்கதான் சுதந்திர தினம்! என்றார். மூன்று நாள் நான் டியூஷன் போக வேண்டாம் என்ற ஒரு பெரும் மகிழ்ச்சி அந்தக் கணம் என்னை வந்து அடைந்ததில், நான் உற்சாகமாகி விட்டேன். சூப்பர் மாமா! எல்லா சினிமாவும் பார்த்துக் கொண்டு, மூணு நாள் ஜாலியா இருக்கலாம் என்றேன். அப்புறம்தான், மேலூர் என்ற ஊரைப் பற்றி எங்களுக்குத் தெரிய வந்தது.
மேலூர் ஒரு பெரிய கிராமம். ஒரு பெரிய கடைத் தெரு. நடுவில் ஒரு பஸ் ஸ்டேண்டு. அதற்கு எதிரில் இருக்கும் டீ கடைகளில் பஸ் ஸ்டாண்டை விட அதிக கூட்டம் எந்நேரமும் டீ குடித்துக் கொண்டே இருப்பார்கள். ஒரே ஒரு டெண்ட் திரையரங்கம். காவல் நிலைய வளாகத்திற்கு நேரெதிரில், பெரிய கட்டிடத்தின் ஒரு பகுதியில் ஒரு இன்ஸுரன்ஸ் அலுவலகம் மற்றும் பாண்டியன் மெஸ். அதன் மேல் தளத்தில் ஒரு லாட்ஜ். அதில்தான் நாங்கள் தங்கினோம். இதெல்லாம்தான் எனக்கு நினைவில் இருக்கிறது.
மறுநாள் காலை எழுந்து டீ குடித்துக் கொண்டிருக்கும் போது, மாமா கேட்டார்.
சரி! உன்னிடம் எவ்வளவு ரூபாய் இருக்கிறது?
கைப் பையை எடுத்து பணத்தை எண்ணிப் பார்த்தேன்.
மூவாயிரம் ரூபாயும், கொஞ்சம் சில்லறையும் இருக்கு மாமா.
என்னிடம் ஆயிரம் ரூபாய் இருக்குடா! நீ என்ன பண்றே! அந்த இன்ஸ்பெக்டருக்கு இரண்டாயிரம், ஸ்டேஷன் செலவுக்கு ஆயிரம் தனியா எடுத்து வச்சுக்க! என் கிட்ட இருக்கிற ஆயிரம் ரூபாயில் நம்மோட தங்கும் செலவு, சாப்பாடு செலவுக்கென ஒரு முந்நூறு! காருக்கு டீஸலுக்கு முந்நூறு! இதை தனியா வச்சுக்க! என்று என்னிடம் ஆறுநூறு ரூபாயைக் கொடுத்தார்.
நாங்கள் ஒரு நாளைக்குக் கூட மாற்றுத் துணி கொண்டு வராததால், அருகில் இருந்த ஒரு கடைக்கு சென்று எனக்கு ஒரு சிங்கப்பூர் டி ஷர்ட், லுங்கியும் அவருக்கு ஒரு சட்டையும், லுங்கியும் வாங்கிக் கொண்டோம். பில் நூற்று எண்பது ரூபாய் வந்தது. ஒரு பெட்டிக் கடையில் ஐந்து பாக்கெட் சிகரெட் வாங்கிக் கொண்டார். முன்று நாட்களாச்சே!
இப்போ மீதி இருநூறு ரூபாய் இருக்கு! அதில் உனக்கு நூறு! எனக்கு நூறு! சரியா? என்றார்.
இப்போது, சந்தோஷத்தில் எனக்கு மயக்கமே வருவது போலாகி விட்டது. அந்தக் காலக்கட்டத்தில் எனது தினச் செலவுக்கென்று எனக்குக் கிடைப்பது ஐந்து ரூபாய். இப்போது வெறும் மூன்று நாட்களுக்கு நூறு ரூபாய். எப்படி செலவு செய்யலாம் என கிடுகிடுவென ஒரு பட்டியலைப் போட்டேன். அதில் மூன்று நாட்களுக்கும் சேர்த்து எனக்கு மிகவும் பிடித்த ஆனியன் ஊத்தாப்பம் மட்டும் பதினைந்து இருந்தது.
அப்போது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சிறுவனான எனக்குக் கூட, மேலூரில் வாழ்க்கை அத்தனை சுலபமாக இருக்க வில்லை. பையில் பணத்தை வைத்துக் கொண்டு மேலூர் முழுக்க சுற்றி, சுற்றி வந்தும் ஒரு இடத்திலும் எனக்கு ஆனியன் ஊத்தாப்பம் கிடைக்க வில்லை. இருந்த ஒரு சில உணவகங்களில் அதிகபட்சம் கிடைத்ததே இட்லியும், சாதா தோசையும்தான். பேருந்து நிலையத்திற்கு எதிரில் இருந்த ஒரு டீக்கடையில் கற்கண்டு பால் என்று எழுதி வைத்திருப்பதைக் கண்டேன். ஒரு ரூபாய்க்கு ஒரு பெரிய கண்ணாடி கோப்பை நிறைய பனங்கற்கண்டு பால் கொடுப்பார்கள். எனது வாழ்க்கையில் முதன் முறையாக குடிப்பதால் எனக்கு மிகவும் பிடித்துப் போய், இருபது ரூபாய்க்கு, இருபது முறை குடித்து வைத்தேன்.
மறு நாள், சுதந்திய தினத்தன்று, காலை காவல் நிலையத்தில் இருந்து ஆள் வந்து எங்களை அழைத்தார்கள். இன்ஸ்பெக்டர் மனசு மாறி விட்டாரோ என்று ஆர்வமாக நாங்கள் ஓடிச் சென்று பார்த்தால், தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு எங்களை அழைத்திருந்தார்கள். காவல் நிலையத்தில் கொடி ஏற்றி விட்டு, இன்ஸ்பெக்டர் தலை உயர்த்தி கம்பீரமாக ஒரு சல்யூட் அடித்து முழு தேசிய கீதத்தையும் அவர் ஒற்றை ஆளாகப் பாடி முடித்தார். ஏட்டைய்யா சாக்லேட் கொடுக்கும் போது, ஹும்! இந்தாள் போய் ஒழிஞ்சாதான் எங்களுக்கு சுதந்திர தினம்! என்றார்.
அன்றைய தினம் ஊர் சுற்றல், பாண்டியன் மெஸ் கறி சோறு என்று சுலபமாகப் பொழுது போயிற்று. மாலை சினிமாவுக்குப் போகலாம் என திரையரங்கைத் தேடிப் போகும் போதுதான் முதல் அதிர்ச்சி காத்திருந்தது. அது ஒரு டெண்ட் திரையரங்கம். ஏதோ ஒரு டப்பிங் படம் ஒடிக் கொண்டிருந்தது. திரையரங்கத்தின் வெளியில் இந்தப் படத்திற்கு நாலு இடைவேளை என்று எழுதியே வைத்திருந்தார்கள். அப்படியே திரும்பி வந்து விட்டோம். இரவு உணவுக்கு பாண்டியன் மெஸ் சென்றபோது இரண்டாம் அதிர்ச்சி தயாராக இருந்தது. விடுமுறை நாட்களில் மெஸ் இரவில் மூடப் பட்டு விடுமாம்.
வேறு எங்கும் நல்ல உணவு கிடைக்காது என்று விரக்தியில் இருக்கும் போது, புல்லட் சப்தம் கேட்டது. வெளியில் சென்று பார்த்தால், எங்களைத் தேடி இன்ஸ்பெக்டர் வந்து கொண்டிருந்தார். உடன் ஒரு நபர் பெரிய கேரியர் ஒன்றினை கொண்டு வந்தார். இன்ஸ்பெக்டர் எங்களைப் பார்த்து, என்ன சாப்பாட்டுக்கு என்ன செய்வதுன்னு பயந்துட்டிங்களா? என்ற படி கேரியரை பிரிக்கச் செய்தார். அதில் சிக்கன், மட்டனுடன் இட்லி, தோசையும் இருந்தது. நேற்று, காவல் நிலையத்தில் இறுக்கமாக ரூல்ஸ் பேசிய இன்ஸ்பெக்டராக அவர் இல்லை. இறுக்கம் தளர்ந்து, சந்தோஷமாக அவரிடம் பேசியபடி சாப்பிட்டோம்.
எங்களின் பேச்சு, எங்கெங்கோ தொடங்கி திரைப் படத்திற்கு வந்து நிற்க, அங்கிருந்து நான் அடுத்தக் கட்டத்திற்கு முன்னெடுத்துச் சென்றேன். எனது திரைப்பட அறிவைப் பார்த்து இன்ஸ்பெக்டர் அசந்து போய் விட்டார். அது எப்படி தம்பி? ஸ்கூல் படிக்கும் போதே இவ்வளவு சினிமா பார்த்து இருக்கிறாய்? என்றார். இவனுக்கு இதெல்லாம் சாதாரணம் சார்! மாட்டுக்கார வேலன் படத்தை நூறு காட்சி பார்த்தற்காக எம்ஜிஆரிடம் கோப்பை வாங்கியவன் இவன் என்றார் மாமா. அட! தம்பி, என்னை மாதிரி வாத்தியார் இரசிகனா? என்ற மதுரை வீரனின் முகம் பூரித்துப் போய் இருந்தது.
அடுத்த இரண்டு நாட்களும் பகல் முழுக்க உறக்கம். இரவில் இன்ஸ்பெக்டரிடம் அரட்டை என நன்றாகவே பொழுது போனது. பகல் பொழுது உலாவில், நமது இன்ஸ்பெக்டரைப் பற்றியான ஒரு வியத்தகு சித்திரம் கிடைத்தது. இவர் இந்த காவல் நிலையத்திற்கு மாற்றலாகி வந்த இந்த ஒரு வருடத்தில், மேலூரில் ஒரு திருட்டு சம்பவம் கூட நடக்க வில்லையாம். அது மட்டுமல்லாமல், நடைபாதைக் கடைகள், பஸ் ஸ்டாண்ட் கடைகளில் கூட யாரும் மாமூல் வாங்குவதில்லை! ஊரே இவருடைய புல்லட் சத்தத்திற்கு கட்டுண்டு இருந்தது. பொது மக்களிடம் மிக நல்ல பெயரும், தனது சொந்த அலுவலகத்தில் மோசமான பெயரையும் பெற்று பிரபலமாக விளங்கிக் கொண்டிருந்தார்.
இதற்கிடையில், நான் ஊருக்குச் சென்று மூன்று நாட்களாக திரும்பி வராத விஷயத்தை
எனது அம்மா, என் அண்ணனிடம் சொல்லி விட, அவர் விசாரித்ததில், மேலூர் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டரின் தயவில் நாங்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பது அவருக்குத் தெரிய வந்திருக்கிறது. அவர் சென்னையின் மிக உயர்ந்த அதிகார மையத்தின் ஏதோ ஒரு காதில் விஷயத்தைப் போட, அங்கிருந்து மதுரை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ஒரு அழுத்தம் தரப்பட்டு விட்டது.
ஞாயிறு மதியம் எங்களுக்கு இந்த விஷயம் சொல்லப் பட்டது. மாலையே, ஏட்டைய்யா மகிழ்ச்சியுடன் எங்கள் அறைக்கு வந்து, விஷயம் தெரியுமா சார்? நாளைக்கு டிஎஸ்பி வாராராம். வெளியூர் முதலாளியை மூணு நாளா இங்கன வச்சுருக்கிறது பத்தி விசாரிக்க வராருன்னு அவரு ஆஃபீஸ்ல இருந்து எனக்குத் தகவல் கிடைச்சிருக்கு! நாளைக்கு டிஎஸ்பி உங்களை விசாரிச்சா, இன்ஸ்பெக்டர் கேட்ட பணத்தை தராததாலதான், உங்க கேஸை இழுத்தடிக்கிறார்னு சரியா சொல்லிடுங்க சார்! என்று ஒரு புது ரூட் ஒன்றினைப் போட்டுக் கொடுத்துச் சென்றார்.
பரபரப்பான மறுநாள் காலைக்காக காத்திருந்தோம். காலை ஒன்பது மணிக்கெல்லாம் முதல் தகவல் அறிக்கையினைப் பெற்றுக் கொண்டு, மதுரைக்கு சென்றால்தான் பகலுக்குள் கோர்ட் ஜாமீன் பெற்றுக் கொண்டு திரும்பி வந்து, இங்கிருந்து புறப்பட முடியும். இன்ஸ்பெக்டரின் அறைக்கு வெளியே, அவர் வந்து அறிக்கையினைத் தருவதற்காக காத்திருந்தோம். பத்து மணியாகியும் அவரைக் காணோம். அவர் மீதான கடுமையான கோபத்தில் மாமா அங்கும் இங்கும் உலாத்திக் கொண்டிருந்தார். பதினொரு மணியாகியும் இன்ஸ்பெக்டர் வரவில்லை. ஆனால், ஏட்டைய்யா சொன்னது போலவே, ஜீப் ஒன்றில் அந்தச் சரக டிஎஸ்பி அங்கு வந்தார்.
வெளியில் நின்றிருந்த எங்களைப் பார்த்தபடி காவல் நிலையத்தின் உள்ளே சென்ற சிறிது நேரத்தில், ஏட்டைய்யா வெளியில் வந்து எங்களை உள்ளே அழைத்தார். இன்ஸ்பெக்டரின் நாற்காலியில் அமர்ந்திருந்த டிஎஸ்பி எங்களை அமரச் சொல்லி, சொல்லுங்க! நீங்கதான் மூணு நாளா இங்கேயே தங்கியிருக்கிங்களா? என்ன நடந்தது? சொல்லுங்க என்று கேட்டார். எங்கள் உள்ளக் குமுறலை நாங்கள் கொட்டத் துவங்கிய அந்த நேரத்தில், புல்லட் சப்தம் கேட்டது. உள்ளே வந்து விரைப்பாக டிஎஸ்பிக்கு சல்யூட் அடித்த இன்ஸ்பெக்டர், எங்களைப் பார்த்து, ஒரு பெரிய புன்னகை செய்தார்.
டிஎஸ்பி, இன்ஸ்பெக்டரிடம் என்னய்யா? ஏன் இவங்களை ரிடெய்ன் பண்ணி வச்சிருக்கே? என்று கேட்க, அதற்கு இன்ஸ்பெக்டர், 304ஏ சார்! கண்டிப்பா ஸ்டேஷன் பெயில் கொடுக்கக் கூடாதுன்னு எஸ்பி ஆஃபீஸ் சர்குலர் இருக்கு! அதனாலதான் கோர்ட் ஜாமீன் கொண்டு வரச் சொல்லிட்டேன் என்று பதிலளித்தார். டிஎஸ்பியிடம் வேறு கேள்வி எதுவும் இருக்க வில்லை.
நாங்கள் அவருக்கு முன்னாலேயே டிஎஸ்பியிடம் என்ன சொல்வது என்று தடுமாறிய வேளையில், இன்ஸ்பெக்டரே எங்களைப் பார்த்து, என்ன அண்ணாச்சி! ஐயாவிடம் என்னைப் பற்றி புகார் ஏதும் சொல்றீயளோ? என்றபடி ஒரு பேப்பரை நீட்டினார். வாங்கிப் பார்த்தால், டிரைவருக்கு ஜாமீன் அளித்து கோர்ட் உத்தரவு அது. காலையில் அவரே மதுரைக்குச் சென்று ஒரு வக்கீலைப் பிடித்து முதல் கேஸாகப் போட்டு, ஜாமீனும் பெற்று திரும்பி வந்திருக்கிறார். அவர் செய்ய வேண்டிய அவசியமே இல்லாத மாபெரும் உதவி அது. மாமா, சட்டென நெகிழ்ந்து போய் விட்டார்.
டிஎஸ்பியிடம், மூன்று நாட்களாக இன்ஸ்பெக்டர் சார்தான் எங்களை விருந்தாளி மாதிரி பார்த்துக் கொண்டார் சார்! எங்களுக்கும் இப்படித்தான் எப்பவாவது ஓய்வு கிடைக்கும் சார்! ரொம்ப சந்தோஷமா உங்க ஊரில் தங்கியிருந்தோம் என்று மாமா சொன்னவுடன், அவருக்கு மேற்கொண்டு விசாரிப்பதற்கு ஏதுமில்லாமல் போய் விட்டது. எங்களை ஒரு மாதிரியாகப் பார்த்தபடியே அவர் கிளம்பிச் சென்று விட்டார்.
நாங்கள் சென்று அறையை காலி செய்து விட்டு வருகிறோம். அதற்குள் எல்லா ஃபார்மாலிட்டீஸும் முடித்து வையுங்கள் என்று ஏட்டைய்யாவிடம் கூறி விட்டு பாண்டியன் மெஸ்ஸுக்கு வந்தோம். மாமாவுக்கு பயங்கர சந்தோஷம். டேய்! அந்த ரூபாயை எடுத்துட்டு வா! முதல்ல இன்ஸ்பெக்டருக்கு கொடுக்கணும் என்றார். வாங்குவாரா மாமா? என்றேன். கொடுத்துப் பார்க்கலாம்டா! போய் எடுத்துட்டு வா! என்றார். நான் வேகமாக மேலே ஓடி சென்று பார்க்கும் போதுதான் எனக்குத் தெரிய வந்தது! நான் தனியாக மறைத்து வைத்திருந்தப் பணத்தைக் காணோம்!
மாமா அதிர்ந்து நின்று விட்டார்! என்னடா சொல்றே! நாம தங்கிய வாடகை, சாப்பிட்ட மெஸ்ஸுக்கு பணம், ஊருக்குப் போக டீஸல் எல்லாத்துக்கும் கொடுக்க பணம் வேணுமேடா! அது எல்லாத்துக்கும் மேல, ஸ்டேஷன் செலவு முக்கியமாச்சே! என்றார். அது இன்லாண்டு லெட்டர், டிரங்க் கால் காலம். இப்போது போல ஏடிஎம் காலமல்ல! எனவே, அது நிஜமாகவே அதிர்ச்சியான விஷயம்.
வெளியில் புல்லட் சப்தம் கேட்டது. கீழிறங்கி வந்தோம். இன்ஸ்பெக்டர் புல்லட்டில் அமர்ந்திருந்தார். பின்னாடியே டிரைவருடன், எங்கள் பஸ் நின்றிருந்தது. இன்ஸ்பெக்டர் எங்களைப் பார்த்து பெரும் சிரிப்புடன் அண்ணாச்சி! உங்க வேலையெல்லாம் முடிச்சாச்சு! நீங்க இப்ப புறப்படலாம் என்றார். மாமா! அவரிடம் ரொம்ப நன்றி சார்! நீங்க ஸ்டேஷனுக்கு போங்க! பின்னாலேயே வருகிறோம் என்றார்.
என்ன ஃபார்மாலிட்டீஸா? என்று சிரித்தபடி, எங்களை அருகில் அழைத்து, நீங்க மறுபடியும் ஸ்டேஷனுக்கு வர வேண்டாம். இப்பதான் உள்ளே இருக்கிறவங்களை கொஞ்சம் கொஞ்சமா அவங்க வாங்கும் சம்பளத்துக்கு வேலை செய்ய வச்சுட்டு இருக்கேன். நீங்க வந்து தனியா எதுவும் அவங்களுக்குக் கொடுக்கத் தேவையில்லை! அப்புறம், உங்க ரூம் வாடகை, மெஸ் பில் எல்லாம் நான் செட்டில் பண்ணிட்டேன்! என்ன இருந்தாலும் நீங்க என்னோட விருந்தாளி இல்லையா? என்று சிரித்தார்.
நாங்கள் இருவரும் அப்படியே உறைந்து போய் நின்றோம்!
மதுரையில் இருந்து வக்கீல் உங்கள் விலாசத்துக்கு பில் அனுப்புவார். அதை மட்டும் நீங்க, அவருக்கே நேரா மணி ஆர்டரில் அனுப்பி வச்சிடுங்க! என்றார்.
நாங்கள் ஏதோ சொல்ல வந்ததை தடுத்து மீண்டும் எங்களை நீங்க புறப்படலாம்! என்றார்.
இந்த முறை சற்று அழுத்தமாக அது ஒலித்தது. என்ன சொல்வதெனத் தெரியாமல் திகைத்தபடி எங்கள் பஸ் பின் தொடர நாங்கள் காரில் கிளம்பினோம். அருகில் புல்லட்டைக் கொண்டு வந்து நிறுத்திய இன்ஸ்பெக்டர், என்னைப் பார்த்து தம்பி! அப்புறமா பார்ப்போம்! என்னையெல்லாம் மறந்துடாதீங்க! என்றபடி சிரித்தார். முப்பது வருடங்களாக எனது நினைவில் தங்கி விட்ட மதுரை வீரனின் சிரிப்பு அது. அவர்தான், முதன் முதலாக ஒரு திரைப் படத்திற்கு வெளியில் நான் பார்த்த நேர்மையான போலீஸ் அதிகாரி!
ஊருக்கு வெளியில் பஸ்ஸை நிறுத்தி, அதிலிருந்த டீஸலை எடுத்து எங்கள் காருக்குப் போட்டுக் கொண்டோம். திருச்சிக்கு அருகில் வரும் போது மதிய உணவு வேளை தாண்டி வெகு நேரம் ஆகி விட்டது. எங்கள் இருவருக்கும் பசி தாங்க முடியவில்லை. மேலும், மாமாவுக்கு அவருடைய சிகரெட் தீர்ந்து போய் ரொம்ப நேரம் ஆகி விட்டிருந்தது. திருச்சி நகருக்குள் வரும் போது, ரொம்ப பசிக்குதுடா! ஏதாவது காசு வச்சிருக்கியா? என்று மாமா என்னைக் கேட்டார்.
என்னிடம் சுத்தமாக இல்லை மாமா! என்று எனது சட்டைப் பையில் கை வைத்தபடி சொன்னேன். உள் பையில் ஏதோ தட்டுப் பட்டது. நான் முதல் நாள் போட்டிருந்த அழுக்குச் சட்டை அது. கை விட்டுப் பார்த்தால், நாங்கள் கொண்டு சென்றிருந்த மூவாயிரத்து அறுநூறு ரூபாய் பத்திரமாக, ஆனால் கசங்கிப் போய் இருந்தது.
– டிசம்பர் 2013 உயிரெழுத்து பத்திரிக்கையில் வெளிவந்த
எனது கட்டுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *