அட்சயப் பாத்திரம்

அது 1981 அல்லது 82ஆம் வருடமாக இருக்கலாம்!

ஒரு நாள் காலை எனது நைனா (தந்தை) என்னை அவருடன் எங்கள் நிலத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஆறு, ஏழு இளைஞர்கள் லுங்கி, பனியனுடன் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தனர். ஏதோ கிணறு வெட்ட வந்த ஆட்கள் போலும் என எண்ணிக் கொண்டேன். ஏனென்றால், கிணறு வெட்டுவது என்பது, எனது நைனாவின் பொழுது போக்காக இருந்தது. எந்த நேரமும், எங்களின் ஏதாவது ஒரு இடத்தில், ஏதேனும் ஒரு கிணறு தோண்டப்பட்டுக் கொண்டே இருக்கும்.

காரை விட்டு இறங்கியவுடன், அவர்கள் அனைவரும் எழுந்து வந்து, நைனாவிடம் வணக்கம் சொல்லி விட்டு பேச ஆரம்பித்த பின்புதான் எனக்கு அந்த வித்தியாசம் தெரிந்தது. அவர்கள் பேசியது தமிழ்தான். ஆனால் தமிழல்ல! என் வாழ்க்கையில் முதன் முறையாக இலங்கைத் தமிழை கேட்டேன்.இலங்கையிலிருந்து அந்தக் காலகட்டத்தில் ஏராளமான அகதிகள் வந்து கொண்டிருந்தனர். தினத்தந்திப் பேப்பரில் ஐந்தாம் பக்கத்தில் தோணிகளில் வந்து மண்டபம் முகாமில் அவர்கள் இறங்குவதை படத்துடன் கூடிய செய்திகளைப் போட்டுக் கொண்டே இருப்பார்கள். இப்போது போல இலங்கை என்றல்லாமல் சிலோன் என்று எழுதுவார்கள் என்றே நினைக்கிறேன்! அதே போன்று, போராளிகள் என்ற வார்த்தைப் பிரயோகமும் அப்போது இருந்ததாக நினைவில்லை.

அப்படி அகதிகளாக வருபவர்களை வருவாய்த் துறை அதிகாரிகள், கலெக்டர்கள் ஏன், சில நேரங்களில் அமைச்சர்கள் கூட நேரில் சென்று வரவேற்று, உபசரித்து மாநிலமெங்கும் அமைக்கப்பட்டிருந்த அகதிகள் முகாம்களுக்கு அனுப்பி வைப்பார்கள். சந்தேகமேயில்லாமல் முதல்வர் எம்.ஜி.ஆர் இதில் தனி கவனம் எடுத்து வந்தார். தவறி ஏதேனும் ஒரு தொய்வு வந்து விட்டால், மறுநாள் முரசொலியில் கலைஞர் ஆளும் அரசின் அலட்சிய போக்கை கண்டித்து ஒரு விளாசு விளாசுவார். அதற்கு அடுத்த நாள் முதல் மீண்டும் அமைச்சரின் வரவேற்புத் துவங்கும்!

எனது நைனா, வந்திருந்த இளைஞர்களைப் பார்த்து என்னப்பா! இந்த இடம் போதுமா? உங்களுக்கு வசதியாக இருக்குமா? என்று கேட்டார்.

அய்யோ! முதலாளி! இது ஏராளம்! மாமரம், கிணறு, பம்புசெட்டு, நெல் வயல்! இதுக்கு மேல என்ன வேணும். இது சொர்க்கமில்லையா? அப்படியே எங்கட நாட்டைப் போல என்றனர்.

தனது வேட்டியின் இடுப்பு மடிப்பிலிருந்து, ஒரு பத்து ரூபாய் நோட்டுக் கட்டை எடுத்துக் கொடுத்தவர், அப்புறமா லாரியில் கொஞ்சம் சாமானெல்லாம் அனுப்பி வைக்கிறேன். இது கைச்செலவுக்கு என்றார்.

அதில் ஒரு இளைஞன், அதை வாங்கிக் கொண்டு, நீங்கள் ஒண்ணும் சிரமப்பட வேணாம் முதலாளி! என்ன முடியுமோ அதை செய்யுங்க போதும். எங்களுக்கு எல்லாம் பழக்கம்தான் என்றான்.

சரி! சரி! என்று கிளம்பியவர், காரில் வரும்போது எங்கள் டிரைவரிடம் டேய்! இவனுங்க பொழைக்க வந்தவங்க இல்லை! சிலோன்ல சண்டைக்காரனுங்க! அங்க போலீஸ் தேடுதுன்னு இங்க வந்திருக்கானுங்க. அவங்களிடம் உங்க வேலையை காட்டாதீங்க என்றவுடன்தான் நான்
புரிந்து கொண்டேன்! நான் பார்த்தது புகலிடம் தேடி வந்த அகதிகளையல்ல! இலங்கையின் விடுதலைப் போராளிகளை என்று!

அன்று மாலையே எங்கள் லாரி ஒன்றில், மூங்கில் கம்புகள், கயிறுகள், கீற்று ஓலைகள், கிழிந்த தார்பாய்கள், சமையல் பாத்திரங்கள், மூட்டைகளில் அரிசி மற்றும் மளிகை சாமான்களுடன் மீண்டும் நிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டேன். அவர்களே, லாரியில் ஏறி எல்லா சாமான்களையும் இறக்கி வைத்தார்கள். காலையில் பார்த்த இடத்திற்கும், இப்போது பார்ப்பதுக்கும் பெரிய வித்தியாசம் இருந்தது. சில மண்வெட்டிகள், ஒரு கொடுவாள் கத்தி, ஒரு கடப்பாறையை வைத்து, வெட்டவெளியில் ஒரு பெரிய வேலி, கற்களை கொண்டு அடுப்பு, வேலிக்காத்தான் முட்களைக் கொண்டு குளியலறை என்று என்னென்னவோ செய்திருந்தார்கள்.

கீற்றுச் சாமான்களைக் கண்டவுடன் உற்சாகத்தில் பாடத் துவங்கி விட்டனர். வெட்டவெளியில் தங்குவதற்கு தயாராக இருந்தவர்களுக்கு, இப்போது ஒரு குடிசையே கிடைக்கப் போவதால்,சந்தோஷத்தில் பாடுவதாக என்னிடம் சொன்ன அதே அண்ணன், அவர்கள் வெட்டியதில் கிடைத்த ஒரு நீண்ட கழியில் எனக்கு விளையாட கனமான ஒரு கோட்டிப்புள் செய்து கொடுத்தான்.

தொடர்ந்து, நான் அங்கு அடிக்கடி சென்று அவர்களைப் பார்த்ததாக நினைவில்லை! ஆனால், ஒரு முறை அவர்களில் ஒரு அண்ணன் என்னை டவுனில் பார்த்த போது, உன் நைனாவிடம் சொல்லி ஒரு லோடு மணல் அடித்து தர முடியுமா என்று கேட்டான். ஏதற்கு ஒரு லோடு மணல் என்று நைனா கேட்டால் நான் என்ன சொல்ல என்று அவனிடம் கேட்டதற்கு , கபடி விளையாட மைதானம் அமைக்கப் போவதாக சொல்லச் சொன்னான்.

அதை நைனாவிடம் நான் சொன்ன போது, போடா! பயிர் விளையற இடத்தில போய் மணலை போடுவாங்களா? அவனுங்களுக்குதான் அறிவில்லை என்றால், நீயும் வந்து கேட்கிறாயே என்று திட்டினார்.

அவர்கள் வசித்து வந்த எங்கள் நிலத்துக்கும், டவுனில் இருந்த எங்கள் பஸ் கம்பெனிக்கும் 4 கிலோ மீட்டர் தூரம் இருக்கும். தினமும் மாலையில் அவர்கள் அங்கே வந்து விடுவார்கள். எப்போதுமே நடந்தேதான் வருவார்கள். சைக்கிள் வாங்கித் தரட்டுமா? என்று நைனா கேட்டால் கூட, வேணாம் முதலாளி! நடக்கிறது உடலுக்கு பயிற்சிதானே என்பார்கள். அவர்கள் ஊரில், தினமும் 40 கிமீ ஆவது நடக்க வேண்டியிருக்கும் என்பார்கள்.

நைனா, அவர்களை எந்த வேலையையும் செய்ய அனுமதிக்க மாட்டார். அவர்களோ, பஸ் கம்பெனியில் இத்தனை பேர், இவ்வளவு வேலை செய்கிறார்கள்! எங்களை மட்டும் ஏதும் வேலை செய்ய விட மாட்டேன் என்கிறீர்களே என்று உண்மையாகவே கோபித்துக் கொள்வார்கள். மாலை முதல் இரவு வரை அலுக்காமல் எத்தனை டீ வாங்கித் தந்தாலும் குடித்துக் கொண்டே இருப்பார்கள்.

அன்று, நைனா, தப்பு செய்து மாட்டிக் கொண்ட ஒரு டிரைவரையோ, கண்டக்டரையோ போட்டு சாத்திக் கொண்டிருந்தார். இதற்காகவே, எப்போதும் ஃபேன்பெல்ட் ஒன்று வெட்டப்பட்டு, அவரின் கையினருகில் மாட்டப்பட்டிருக்கும். அடித்து முடித்து திரும்பி வந்து உட்கார்ந்தவரிடம், ஒருவன், முதலாளி, நீங்கள் எங்கள் ஊருக்கு வந்தால் உங்களை வைத்து என்னென்னவோ சாதித்துக் கொள்ளலாம் போலிருக்கே என்றான்.

எங்கள் அரசுக் கலைக் கல்லூரியின் மைதானத்தில் இருந்த உடற்பயிற்சி மையத்தில்தான் இவர்களும் பயிற்சி செய்து வந்தார்கள். ஏதோ காரணத்தால், உள்ளூர் ஆட்களுக்கும், இவர்களுக்கும் சண்டை வந்து விட உள்ளூர் ஆட்கள் ஒரு பத்து பேருக்கு மேல் அடிபட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தனர்.

இவர்கள் மீது போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுத்து, ஜெயில்ல போட வேண்டும் என்று திரண்டு வந்த உள்ளூர் மக்களிடம், என்னெவென்று வழக்கு போடுவது? இவன் வேற நாட்டுக்காரன். நம்ம கிட்ட தஞ்சம் கேட்டு வந்திருக்கான். கண்டிச்சு விடுவதை விட்டு விட்டு, நாமே ஜெயில்ல போட்டா, நாளைக்கு சிலோன்காரன் யாராவது நம்ம ஊரை மதிப்பானா? போங்கப்பா! நான் பார்த்துக்கிறேன் என்று அனைவரையும் அனுப்பி வைத்தார்.

உடனே, மறுநாள் காலையில் எங்கள் நிலத்தில் ஒரு லோடு மணல் கொட்டப்பட்டது. ஆசாரி பட்டறையில் செய்யச் சொல்லி, பல அளவுகளில் கர்லாக் கட்டைகள் செய்து வரப்பட்டது. எனது நைனாவே அவரது இளம் வயதில், ஒரு உடற்பயிற்சிப் பிரியர் என்பதால் அவருக்கே, என்னெவெல்லாம் தேவை என்று தெரிந்திருந்தது. எங்கள் பஸ் ஷெட்டிலேயே Parallel Bar, Ring Bar போன்றவைகள் செய்யப்பட்டு அங்கே நடப்பட்டது. ஒரே நாளில்,அந்த ஒரு ஏழு,எட்டு பேருக்காக மட்டும், திருவண்ணாமலையின் மிகச் சிறந்த உடற்பயிற்சிக் கூடம் அங்கே நிறுவப்பட்டது.

மாலை வேளைகளின், பஸ் கம்பெனி வாசலின் வேப்ப மரத்தடியில் ஒர் நாற்காலியில் எனது நைனா உட்கார்ந்திருக்க, சுற்றிலும் லுங்கி, சட்டையுடன் இவர்கள் தரையில் உட்கார்ந்து கொண்டு சிலோனில் நடப்பதையெல்லாம் பேசிக் கொண்டிருப்பார்கள். மெக்கானிக் உதவியாள் ஒரு பத்து முறையேனும் டீயும், நிறைய பீடிக் கட்டுகளும் வாங்கி வந்து கொடுத்துக் கொண்டேயிருப்பான். அடிபட்ட உள்ளூர் இளைஞர்களும், அவர்களைச் சார்ந்தவர்களும் இந்தக் காட்சியைப் பார்த்து பொருமிக் கொண்டே தெருவில் கடந்து செல்வதை நான் பல முறை பார்த்திருக்கிறேன்.

பஸ் நிலையத்தைக் கடந்துதான் கணக்குப் பாடத்திற்கான டியூஷனுக்கு நான் போக வேண்டும். அப்படி, நான் பஸ் நிலையத்தை கடக்கும் போதெல்லாம், இவர்களில் ஒரு அண்ணன் அங்கே அமர்ந்து கொண்டிருப்பதை எப்போதுமே பார்ப்பேன். ஏண்ணே! இங்கேயிருக்கீங்க? எனக் கேட்டால், சும்மா! வேடிக்கை பார்க்கிறேன். நீ போ தம்பி என்று அனுப்பி வைத்து விடுவார்கள்.

ஒரு நாள், அவர்களின் ஒருவன் எங்கள் பஸ் ஷெட்டிற்கு வந்து, அவர்களைத் தேடி, யாராவது வந்தால் அப்படி யாரும் இங்கே இல்லையென்று சொல்லுமாறு கேட்டுக் கொண்டான். அப்போது, எங்கள் கணக்குப் பிள்ளை உங்களைத் தேடி யார் வரப் போகிறார்கள்? என்று கேட்டதற்கு, அது தெரியவில்லை என்று குழப்பமாக ஒரு பதிலைச் சொல்லிப் போனான்.

வழக்கமாக அவர்களுக்கு எங்களின் மாடர்ன் ரைஸ்மில்லில் இருந்துதான் அரிசி அனுப்பி வைக்கப்படும். இட்லி, தோசை சாப்பிடும் பழக்கமெல்லாம் அவர்களுக்கில்லை! மூன்று வேளையும் அரிசிச் சோறுதான். எனவே மூட்டை, மூட்டையாக அரிசியை அனுப்பி வைப்பார்கள். அப்படி அனுப்பி வைக்கப்பட்ட அரிசி மூட்டைகளை ஒரு முறை அவர்கள் திருப்பி அனுப்பி விட்டார்கள்.

ஏண்டா? திருப்பிக் கொண்டு வந்து விட்டே? என்று டிரைவரிடம் எனது நைனா கேட்கும் போது, ரொம்ப கொழுப்பு ஏறி போச்சுப்பா அவனுங்களுக்கு! அரிசியில் புழு மேயுது! நாத்தம் அடிக்குதுன்னு ரொம்ப குத்தம் சொல்றானுங்க! போங்கடான்னு திருப்பி கொண்டு வந்துட்டேன் என்றான்.

இதைக் கேட்ட எனது நைனாவுக்கும் கோபம் தலைக்கு ஏறி விட்டது. அவரின் வசவுகளை ஆரம்பித்தார். (எனது நைனாவின் கோபமும், கோபத்தில் அவரின் வசவுகளும் வெகுப் பிரபலம்!) நன்றி மறந்த நாய்கள்! தானம் கொடுத்த மாட்டை பல்லை பிடிச்சு பார்க்கிறான்களா? என்று சத்தம் போட்டு விட்டு வீட்டுக்கு போய்விட்டார். யாரையோ அழைத்து, முதலில் அவனுங்களை நம்ம இடத்திலிருந்து காலி பண்ணிக் கொண்டு போகச் சொல்லு. காலையில் அங்கே வரும்போது, அவனுங்க ஒருத்தனும் இருக்கக் கூடாது என்று சத்தமிட்டார்.

இந்த ஒரு வருடத்தில், அவர்களுக்கு எங்கள் கம்பனியில் பணிபுரிந்த சிலர் நண்பர்களாகவும், பலர் எதிரிகளாகவும் மாறியிருந்தனர். நண்பர்களாவதற்கு காரணம் அனுதாபம். எதிரிகளாவதற்கு காரணம் பொறாமை. பிழைக்க வந்து விட்டு, எங்கள் முதலாளி கூடவே சரிக்கு சமமா உட்கார்ந்து பீடி பிடிக்கிறானுங்களே என்ற ஒரு பேச்சு எப்போதுமே அங்கே இருந்தது. போட்டு கொடுத்த டிரைவர் எதிரிகளில் ஒருவன் போல!

மறுநாள் காலை அவர்கள் வெளியேறி விட்டார்கள். போட்ட சாமான் போட்டது போலவே இருந்ததாக, அங்கே சென்று பார்த்தவர்கள் சொன்னார்கள். அவர்களின் சொந்தத் துணிகளைக் கூட எடுத்து செல்லாமல், எங்கள் வீட்டுக்கு வந்து எனது அம்மாவிடம், நாங்கள் போய் வருகிறோம் என்று சொல்லி விட்டு, போய் விட்டார்கள். நாங்கள் யாரும் அவர்களை தடுத்து நிறுத்த முடியாமல், திகைத்து நின்று விட்டோம். எனக்கு அழுகையை அடக்க முடியவில்லை.

அன்று இரவு, நைனா சாப்பிட்டு விட்டு வீட்டின் வெளியே நாற்காலியில் அமர்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கும் போது, ரைஸ்மில் பணியாள் பெண்மணி ஒருவர் அவரைப் பார்க்க வந்தார். என்ன விஷயம் என்று நைனா கேட்ட போதுதான், அந்த சதித் திட்டம் வெளியே வந்தது. வழக்கமாக, நைனா அனுப்பி வைக்க சொல்லும் உயர்ரக அரிசியை இந்த டிரைவரும், ரைஸ்மில் பணியாள் ஒருவனும் ஒரு மளிகைக் கடையில் விற்று காசை பங்கிட்டுக் கொண்டு, ரைஸ்மில்லில் கடைசியாக மீதமிருக்கும் குருணை அரிசியை அவர்களுக்கு அனுப்பி வைத்திருந்திருக்கிறார்கள். அது பொதுவாக பன்றிகளின் உணவுக்காக வாங்கிச் செல்லப்படுவது. அந்த விற்பனைக் காசுகூட, ரைஸ்மில்லில் பெருக்கி வாரும் வேலையாட்களுக்கு பங்கிடப்படும்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த டிரைவரும், உதவிய சதிகாரனும் கட்டித் தூக்கி வரப்பட்டனர். இரவு 10 மணிக்கு நான் மேல்சட்டை கூட போடாமல், வீட்டிலிருந்து ஷெட்டுக்கு ஓடிப் போய் அந்தக் காட்சியை பார்த்தேன். அந்த இருவரும் ஒரு அறையின் மூலையில் உட்கார வைக்கப்பட்டிருந்தனர். நல்ல உதை விழுந்திருந்ததின் எல்லா அடையாளங்களும் தெரிந்தது. ஏனோ! எனக்கு அதைப் பார்க்க சந்தோஷமாகவே இருந்தது.

மூச்சு வாங்க வந்து நாற்காலியில் உட்கார்ந்தவர், ஒரு சிகெரெட்டை பற்ற வைத்துக் கொண்டு, டேய்! உடனே போய் அந்தப் பசங்க எங்க இருந்தாலும் கூட்டிட்டு வாங்கடா! என்று அங்கிருந்தவர்களிடம் சொன்னார். உடனே, பல வாகனங்களில், நிறையப் பேர் அந்த இளைஞர்களைத் தேடிவரக் கிளம்பினார்கள்.

அடுத்த நாள் மதியம் வரை எந்தத் தகவலும் இல்லை. எனது நைனா முந்திய நாள் இரவு வந்தவர், மீண்டும் வீட்டுக்குப் போகவில்லை. நாற்காலியில் உட்கார்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டு வழக்கமாக அவர்கள் வரும் சாலையை பார்த்தபடியே இருந்தார். எங்கள் யாருக்கும், அவரிடம் சென்று ஏதேனும் சாப்பிடுகிறீர்களா? எனக் கேட்கவும் பயம்.

ஏம்பா! அவனுங்க கிடைக்கலைன்னா, முதலாளி சாப்பிடவே மாட்டாரா என்ன? யாராவது போய் அவரை வீட்டுக்கு கூட்டிட்டு போங்கப்பா! என்றார் கணக்குப் பிள்ளை. ஏன்! அதை நீ போய் சொல்லேன் என்று யாரோ சொன்னதுக்கு, அவனைத் திரும்பி முறைத்துப் பார்த்ததும் இ.எ.நி.இ. (இன்னமும் எனக்கு நினைவில் இருக்கிறது!).

அன்று மாலை, டியூட்டி முடிந்து வீட்டுக்குத் திரும்பிப் போய்க் கொண்டிருந்த ஒரு அரசு பஸ் டிரைவர், எங்கள் பஸ் ஷெட்டில் கூட்டமாக இருப்பதை பார்த்து உள்ளே வந்து, ஏம்ப்பா! ஏன் வெளியே உட்கார்ந்துகிட்டிருக்கே? என்று நைனாவிடம் கேட்டபோது, (பத்து வயது வேலைக்கார சிறுவன் முதல் என்பது வயது பெரியவர் வரை எனது நைனாவை அப்பா என்றுதான் அழைப்பார்கள்) உடனிருந்த யாரோ அவரிடம் விஷயத்தை சொல்லியுள்ளார்கள்.

அட! அந்தப் பசங்களா? என் வண்டியிலதானே வந்தார்கள். டிக்கெட் காசுகூட அவனுங்ககிட்ட இல்லாம, நான்தான் கொடுத்து ஊத்தங்கரையில் இறக்கி விட்டேன் என்று சொல்ல சில வாகனங்கள் ஊத்தங்கரையை நோக்கி விரைந்தது.. அன்று இரவுக்குள், அவர்கள் அனைவரும் மீண்டும் திருவண்ணாமலைக்கு அழைத்து வரப்பட்டு, அவர்களின் வழக்கமான வசிப்பிடத்திலேயே தங்க வைக்கப் பட்டார்கள்.

முந்தின நாள் சாப்பாட்டுக்குப் பின், அடுத்த நாள்தான் நைனா மீண்டும் சாப்பிட்டார். மறுநாள் காலை அவருடன் நானும் நிலத்துக்குச் சென்றேன். காரை விட்டு கீழே இறங்கும் போதே, அவர்கள் அனைவரும் தலைகுனிந்தபடி நின்றிருந்தனர். மேல் சட்டையின்றி, வெறும் லுங்கியுடன் அவர்கள் அப்போது நின்றிருந்த காட்சியும் எனக்கு இ.நி.இ.

இறங்கியவுடன், நைனா அவர்களைக் கேட்ட முதல் கேள்வி! ஏண்டா! கம்மனாட்டிகளா! ஏதாச்சாம் குறையிருந்தா என்கிட்ட சொல்ல மாட்டீங்களா? தினமும் என்னை பார்க்க வருவீங்க இல்ல! அப்பவெல்லாம் வாயில என்னடா வச்சிருந்தீங்க? என்றார். இல்லை! முதலாளி! நாங்க எதுவும் வேணும்னு கேட்கறதுக்கு முன்னமே எல்லாம் கொண்டு வந்து தருவீங்க! அச்சிய பாத்திரம் (அட்சய பாத்திரம்) மாதிரி! உங்ககிட்ட போய் அரிசி சரியில்லைன்னு எப்படி சொல்ல? என்றான் ஒருவன்.

அது ஒரு ஞாயிற்றுக் கிழமை! ஒரு பெரிய குற்ற உணர்விலிருந்து வெளிவந்த சந்தோஷத்திலிருந்தார் எனது நைனா. அம்மா, காலை உணவாக எல்லோருக்கும் பெரிய அண்டாவில் இட்லியும், கோழி குழம்பும் எடுத்து வந்திருந்தார்.இரவு சாப்பாட்டுக்கு ஒரு ஆட்டுக் கிடா வாங்கி வந்து, அவர்களிடம் கொடுக்கும்படி சந்தோஷத்துடன் நைனா ஒரு டிரைவரிடம் சொன்னார்.

அன்று இரவு, அவர்களுக்கென நைனா அனுப்பி வைத்த ஒரு பெரிய சாராய கேனை (அப்போது சாராயக் கடையொன்று ஷெட்டிற்கு அருகிலேயே இருந்தது), அவர்கள் திருப்பி அனுப்பி விட்டனர். அவர்கள் யாரும் நம்ம நாட்டில் குடிக்க மாட்டார்களாம் எனச் சொல்லி, சாராயக் கேனை மீண்டும் நைனாவிடமே கொண்டு வந்த டிரைவருக்கும் விழுந்தது ஒரு அடி! ஏண்டா! என்கிட்ட கொண்டு வர? எடுத்துட்டு போய் வேறெங்கயாவது கொடு என்றார். (நைனாவும் குடிக்க மாட்டார்).

ஒரு நாள் நடு இரவில் அவர்களின் வசிப்பிடத்திற்கு (எங்கள் நிலம்) வெளியே இருந்த நெடுஞ்சாலையில் பேருந்து விபத்து ஒன்று நடந்து விட்டது. பெரிய விபத்து அது. அங்கேயே ஒரு சிலர் இறந்து விட, எஞ்சிய பலரும் விபத்தில் அடிபட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். சத்தம் கேட்டு வெளியில் வந்த இவர்கள், அந்தப் பேருந்தில் எக்குத்தப்பாக மாட்டிக் கொண்டு குற்றுயிராக இருந்தவர்களை, மீட்டு எடுத்து அவ்வழியே வந்த ஒரு மாட்டு வண்டியில் போட்டனர்.

அந்த ஒற்றை மாட்டு வண்டி வேகமாக போகவில்லையென்று, மாட்டை அவிழ்த்து விட்டு, அவர்களில் சிலரே, அந்த வண்டியை வேகமாக இழுத்துக் கொண்டு வந்து எங்கள் பஸ் கம்பெனி எதிரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இப்படி ஒரு முறை அல்ல, பல முறை வண்டியில் காயம் பட்டவர்களை ஏற்றி வந்து மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர்.

மறுநாள் காலை, இந்த விஷயம் தெரிந்த போது, ஊரே வியந்து போனது. பேருத்தில் இறந்து போனவர்கள், அடிபட்டு இவர்களால் காப்பாற்றப்பட்டவர்கள் எல்லோரும் உள்ளூர்காரர்கள் என்பதால், இவர்களின் உதவி வெகுவாக பாராட்டப்பட்டது. இதன் காரணமாக, இவர்களின் மீது கொஞ்சம் பேருக்கு இருந்த கோபமும் தணிந்து, எல்லோரும் நட்புறவாட ஆரம்பித்தனர்.

சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது, தூங்குவது தவிர இவர்கள் செய்த ஒரே காரியம் எங்கள் வீட்டுக்கு எதிரில் இருந்த திரையரங்கினில் சினிமா பார்ப்பது. அதில் ஒரு சுவாரசியமான விஷயம் என்னெவென்றால், இவர்கள் அனைவரும் சிவாஜி படம் மட்டுமே பார்ப்பார்கள். அதுவும், பார்த்த படத்தையே, கணக்கில்லாமல் மீண்டும், மீண்டும் பார்த்துத் தீர்ப்பார்கள்.

ஒரு முறை, ஏதோ ஒரு பண்டிகை தினத்தின்போது , அவர்களில் ஒரு அண்ணன் என்னை தனியே அழைத்து, தனது லுங்கியில் பதுக்கி வைத்திருந்த கைத்துப்பாக்கியை காண்பித்தான். கட்டைப் பிடியுடன் மூன்று பாகங்களாக இருந்த அந்தத் துப்பாக்கியை, சில நிமிடங்களில் இணைத்துக் காட்டினான். அந்தத் துப்பாக்கியில் ஒரு முறை சுடச் சொல்லி நான் கேட்ட போது, குண்டுகள் ஏதும் தமக்கு இன்னமும் கிட்டவில்லை என்றான்.

அவர்கள் தங்கியிருந்த காலக்கட்டத்தில், எப்போதுமே அவர்கள் யாரையேனும் எதிர்பார்த்துக் காத்திருந்தது போலவே இப்போது தோன்றுகிறது எனக்கு. பஸ் நிலையத்தில் காவலிருப்பது, அடிக்கடி ஒரே இடத்துக்கு போகாமல் இருப்பது, கூடுமானவரை புதிய மனிதர்கள் யாரிடமும் பழகாமல் இருப்பது என மிகுந்த கவனத்துடனேதான் இருந்திருக்கிறார்கள்.

அவர்கள் எப்படி, யார் மூலமாக எனது நைனாவைத் தேடி வந்து உதவி கேட்டார்கள் என்பதை இறுதி வரை நைனா எங்களிடம் சொல்லியதேயில்லை. ஆனால், இவர்கள் யார்? என்பதும், எந்தக் குழுவை சார்ந்தவர்கள் என்பதும் எங்களுக்கு ஒரு நாள் தெரிய வந்தது.

அந்த ஒரு வாரமாகவே, சுத்தமாக உடையணிந்து, எங்கோ புறப்படத் தாயாராக இருப்பது போலவே இருந்தார்கள். ஒரு நாள் அதிகாலை, அவர்களில் ஒருவன், வீட்டுக்கு வந்து எனது நைனாவை எழுப்பி எங்கள் நிலத்துக்கு அழைத்துச் சென்றான். பிறகு, நைனாவும் அங்கிருந்தபடியே, அவர்களுக்கான மதிய சாப்பாட்டை வீட்டிலிருந்து செய்து கொண்டுவரச் சொன்னார்.

அவர் அன்று மாலை, வீட்டுக்குத் திரும்பி வந்த பிறகுதான் அம்மாவிடம் விஷயத்தை சொன்னார். அவர்களின் தலைவர் சிறி.சபாரத்தினம் முந்திய நாள் மாலை வந்து அவர்களுடன் தங்கியிருந்தது அப்படித்தான் எங்களுக்கு தெரிய வந்தது. இத்தனை நாட்கள், அவர்களின் பையன்களை தங்க வைத்து பராமரித்ததற்கு, எனது நைனாவுக்கு நேரில் வந்து நன்றி சொல்ல வந்தாராம்.

அந்த வார இறுதியில் அவர்கள் தனித்தனியாக புறப்பட்டுச் செல்ல, ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் எங்களின் நிலத்தினில் வசித்து வந்த அந்த இளைஞர்களின் இருப்பு ஒரு முடிவுக்கு வந்து, அந்த இடமே வெறுமையானது.. அதன் பின், நீண்ட நாட்களுக்கு அவர்கள் உடற்பயிற்சி செய்த சின்ன கர்லாக் கட்டை ஒன்றினை நான் பத்திரமாக வைத்திருந்தேன்.

நைனா இறந்த பல வருடங்கள் கழித்து (1996 அல்லது 1997) ஒரு கார்த்திகை தீப நாளின் மாலைப் பொழுதில், எங்கள் பஸ் ஷெட்டில் தீபம் ஏற்றப்படுவதற்காக காத்திருந்தேன். தீபம் ஏற்றப்படும் அந்த நொடிக்காக ஊரே காத்திருந்தது. பல வெளியூர் பயணிகளும், எங்கள் ஷெட் உள்ளே வந்து, மலை உச்சியையே பார்த்துக் கொண்டிருந்தனர். ஷெட் உள்ளேயிருந்து, மலை உச்சி நன்றாக தெரியும் என்பதால், அன்று மட்டும் கோயிலுக்கு வரும் வெளியூர் பயணிகளையும் உள்ளே அனுமதிப்பது நைனாவின் வழக்கம். அந்த வழக்கம் இன்றுவரை தொடர்கிறது.

பரபரப்பான அந்த நேரத்தில், அந்தக் கூட்டத்தில் வழுக்கைத் தலையுடன், தாடி வைத்திருந்த ஒரு மெலிந்த மனிதர் என்னை அழைத்து, நீங்கள் கருணா தம்பிதானே என்று கேட்டார்! ஆமாம்! நீங்கள் யாரென்று கேட்டதற்கு, என்னையெல்லாம் உங்களுக்கு நினைவில் இருக்காது தம்பி! அப்போல்லாம் நீங்கள் ரொம்ப சின்னப் புள்ளை என்றார்.

பெரிய முதலாளி எங்கே போயிருக்கிறார்? என ஆவலுடன் அவர் கேட்டவுடன், நைனா இறந்து போய் பல வருடங்கள் ஆகி விட்டதென்றேன். சிறிது நேரம் மவுனமாக இருந்த பின், என்ன மாதிரி மனுஷன் அவர்? அச்சிய பாத்திரம் போல! என்றார்.

ஒரு மின்னல் வெட்டில் எனக்கு நினைவுக்கு வந்து விட்டது அவர் யார் என்று!

-எஸ்கேபி. கருணா

இந்தக் கட்டுரைத் தொடர்பாக சில குறிப்புகள்:

1986ஆம் ஆண்டு சிறீ.சபாரத்தினம் விடுதலைப்புலிகளின் அப்போதைய முக்கியத் தலைவர் கர்னல்.கிட்டுவால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

அந்த ஒரே ஆண்டில் மடும் ஏறத்தாழ 400 டெலோ அமைப்பின் தமிழ் போராளிகள் விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

சிறீ.சபாரத்தினம், பத்பனாபா, பாலக்குமார் போன்ற பல்வேறு தமிழீழ விடுதலைக் குழுக்களின் தீரமிக்கத் தலைவர்கள் ஒவ்வொருவராகக் கொல்லப்பட்டு போராட்டக்களத்தில் இருந்து நீக்கப்பட்டப் பிறகு எஞ்சியிருந்தது இவர்களின் துவக்கக்கால நண்பர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *