விஸ்வரூபம் – பெற்றதும் இழந்ததும்

கடந்த சில வாரங்களாக எனது நினைவுகளை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்த விஸ்வரூபம் திரைப்படத்தின் பிரச்சனைகளைப் பற்றி நான் எந்த கருத்தையும் எழுத்தில் பதிவு செய்யக் கூடாது என்று மிகவும் பொறுமை காத்தேன். குறிப்பாக ஃபேஸ் புக்கில்.

அங்கேதான், அந்தத் திரைப்படத்திற்கோ, கமலுக்கோ அல்லது பொதுவான கருத்து சுதந்திரத்திற்கோ கூட ஆதரவாய் ஏதேனும் ஒரு கருத்தை தெரிவித்தாலோ, அல்லது வேறொருவரின் கருத்தினை பகிர்ந்து கொண்டாலோ கூட, எழுந்த எதிர்வினைகள் எனக்கு அதிர்ச்சியூட்டியது. நான் மிதவாதிகள் (Moderate) என்று எண்ணியிருந்த (தமிழ் மொழிபெயர்ப்பு சரிதானே?) எனது நண்பர்கள் சிலர் கூட, இத்தனை பொஸஸிவ் ஆக வெளிப்பட்டது எனக்கு ஆச்சர்யம் அளித்தது.

எல்லாக் களேபரமும் முடிந்து அடங்கிய பின், எனது அவதானிப்புகளை மொத்தமாக ஒரு கட்டுரையாக எழுதிப் பார்க்கலாம் என்றிருந்தேன். அதிலும் கூட, நீதிமன்றத் தீர்ப்பினையொட்டித்தான் நான் எழுத வேண்டியிருக்கும் என்று கணித்திருந்தேன். இப்படி, ஒரு பஞ்சாயத்து தீர்ப்பையொட்டி எழுதுவேன் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை.

இத்தனை நாட்களுக்கு பின் இந்தத் திரைப்படம் தொடர்பான சர்ச்சைகளை மீண்டும் ஒரு முறை பேசிப் பயனில்லை என்பதால், ஒரு புது மாதிரியாக இந்த விஸ்வரூபம் திரைப்படத்தால் பல்வேறு தரப்பினர்கள் பெற்றதும், இழந்ததும் என்ன என்பதைப் பற்றி எழுதிப் பார்க்கிறேன்.
ஒரு தொழில் முனைப்பாளன், என்ற முறையில், இந்த லாப, நட்டக் கணக்கினை எனது பார்வையில், எனது கவனத்துக்குள் வந்த விஷயங்களை வைத்து எழுதுகிறேன்.

ஜனவரி 13ஆம் தேதி வெளியாக வேண்டிய இந்தத் திரைப்படம், இன்று (பிப்ரவரி 7) வெளியாகிறது. முதலில் தமிழகத்தில் மட்டும் 410 திரையரங்குகளில் வெளியிட உத்தேசித்திருந்த இந்தப் படத்தை 600 திரையரங்குகளில் வெளியிடுவது, இந்த கணக்கின் முடிவை உத்தேசமாக சொல்லிவிடுகிறது.

இந்த விவர அறிக்கையின் முக்கிய அம்சங்களாக, கமலஹாசன், சென்சார் போர்ட், 24 அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர்கள், நீதிமன்றம், அரசு, ஊடகம், ரசிகர்கள், என பலர் இருக்கின்றனர்.

எனவே, முதலில், விஸ்வரூபம் திரைப்படம்:

சில வாரங்களுக்கு முன் விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படம் தமிழகத்தில் வெளியாகி (அதுவும் பஞ்சாயத்துக்குட்பட்டு) நூறு கோடியை வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. அதற்கு பின் வெளியாகும் விஸ்வரூபம் படத்திற்கு அந்த துப்பாக்கியின் வசூல் சாதனை பெரும் சவாலாக இருந்தது. பொதுவாகவே, தமிழகத்தில் ரஜினிக்கு பின் கமல் என்ற நிலை மாறி,( வியாபாரத்தில்! நடிப்பில் அல்ல) விஜய், அஜீத் என்று பட்டியல் மாற்றப்பட்டு இருக்கிறது. ஆனால், கமலுக்கு மொத்த இந்தியாவிலும் வியாபாரம் இருக்கிறது என்பதால், இந்தப் படத்தை 95 கோடி செலவு செய்து தயாரித்திருந்தார்.

இந்தப் படத்தின் விலை மிகவும் அதிகம் என்பதாலும், இப்போதைய சூழ்நிலையில் கமல்ஹாசனுக்கு அத்தனை வியாபாரம் இல்லையென்பதாலும், திரைப்பட வியாபாரிகள் இந்தப் படத்தை வாங்கத் தயங்கினார்கள். எனவே, கமல் வேறு வழியின்றி, DTH போன்ற புதிய வழிகளை முயற்சி செய்து பார்த்து, அதுவும் எடுபடாமல் போக, தானே திரையரங்குகளில் சொந்தமாக திரையிட திட்டமிட்டிருந்தார்.

அப்போது கிளம்பிய இந்த தடை பூதங்களால், இந்தப் படத்துக்கு கிடைத்த விளம்பரம், இந்தத் திரைப்படத்தை இந்திய அளவில் பெரிய சினிமாவாக மாற்றி விட்டது. நாடு முழுக்க உள்ள பல்வேறு செய்தி ஊடகங்களால், இடைவிடாது இந்தப் படத்தைப் பற்றி பேசப்பட்ட நேர்மறை மற்றும் எதிர்மறை விளம்பரங்களின் மதிப்பு சற்றேறக்குறைய ரூபாய் 250 கோடி மதிப்புள்ளது என்றொரு ஆய்வினைக் கண்டேன்.

ஆக, கருத்து சுதந்திரத்துக்கு எதிரான ஒரு செயலாக இந்த மாநில அரசின் தடை உத்தரவு, இஸ்லாமிய குழுத் தலைவர்களின் எதிர்ப்பு, நீதிமன்ற வழக்குகள் ஆகியவை தோற்றமளித்தாலும், முடிவில் விஸ்வரூபம் திரைப்படத்துக்கு அது மிகப் பெரிய அளவினில் விளம்பரத்தின் மூலம், ஆதாயம் தேடிக் கொடுத்துள்ளது என்பதே உண்மை.

அடுத்து,
இந்தப் படத்தின் கதாநாயகன் கமல்ஹாசன்:

ஒரு பகல் பொழுதினில், கமலஹாசன் தனது வீட்டினில் இருந்து அனைத்து ஊடகங்களுக்கும் கொடுத்தப் பேட்டி, சில மணித்துளிகளில் ஒட்டுமொத்த தமிழகத்தின் மனநிலையையே பெரும் பாதிப்புள்ளாக்கியது. இதுகாறும், கமலஹாசனை எதிர்த்தவர்களும் கூட சற்றே ஸ்தம்பித்துப் போனார்கள்.

காரில் பயணித்துக் கொண்டிருந்த நான் இந்த செய்திக் கோர்வைகளை ஐபேடில் படித்தபோது ஏற்படாத உணர்வு, பின்னர் கமலஹாசனின் பேட்டியை தொலைகாட்சியில் பார்த்தபோது ஏற்பட்டது. அவர் சிரித்துக் கொண்டே சொன்ன வார்த்தைகள் எல்லாம் ஒரு தீராத துக்கமாக மாறி என்னை அமைதியிழக்கச் செய்தது. 30 ஆண்டு காலமாக எனது ஆதர்ச நாயகனான கமல், தனது உணர்வுகளைச் சொல்லி அறச்சீற்றம் கொண்ட விதம், தமிழகத்தின் மனசாட்சியையே அசைத்துப் பார்த்துவிட்டது. அன்று இரவு முழுவதும் நான் தூங்கவில்லை. எனது நண்பர்கள் பலரும் கூட அன்று உறக்கம் இழந்தாகச் சொன்னார்கள்.

நடந்து கொண்டிருந்தது ஏதோ ஒரு சினிமாவுக்கு ஏற்படும் வழமையான இடையூறுகள் என்ற அளவில் இருந்து, கமலஹாசன் என்னும் அபாரமான கலைஞனை முழுவதும் இழந்து விடலாம் என்னும் நிலைக்கு அந்தப் பேட்டி மாற்றி விட்டது. அதுவரை, தனக்கு பாதகமாக இருந்த வெவ்வேறு நிலைகளையும், தனக்குச் சாதகமாக மாற்றிய கமலின் அந்தப் பேட்டியில் அவரிடம் காணப்பட்ட உள்ளார்ந்த சோகமும், அவர் உபயோகப்படுத்திய நேர்மறை வார்த்தைகளும், பேட்டியின் போது அணிந்து கொண்டிருந்த உடை முதல் முகத்தில் தேக்கி வைத்திருந்த சிரிப்பு வரை எல்லா அம்சங்களும் கமலஹாசன் எத்தனைப் பெரிய புத்திசாலி என்பதை நிரூபித்தது.

தமிழகத்தில் தனது படத்தைத் திரையிட முடியாது என்றாகிவிட்ட பின்பு, இந்தியா முழுக்க தனது படத்தை வெளியிட்டுக் காட்டி, பின் பல்வேறு செய்தி ஊடகங்களின் மூலம் நாடு முழுக்க தனது நிலையினை தெளிவு படுத்தி கமல்ஹாசன் தன்னந்தனியாக செய்து காட்டிய போராட்டம் ஒரு அசாத்தியமான சாதனை!

பிற்பாடு, ஒரு சமாதான ஏற்பாட்டின்படி, சில காட்சிகளை அவரே முன்வந்து நீக்கியிராமல், தனக்கான நீதியினைத் தேடி கடைசி வரை போராடியிருப்பாரேயானால், இங்கிருக்கும் பலரும் சமூக, அரசியல் அழுத்தங்கள் தாளாமல் திண்டாடியிருக்கக் கூடும். அப்படியான ஒரு வழியில் கமலஹாசனுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டிருந்தாலும், இந்திய அளவில் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்திருப்பார்.

இந்த போராட்ட மிரட்டல்கள், தடைகள், வழக்குகள், பின் திரையரங்கங்களின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, திரையரங்க உரிமையாளர்களின் மீது ஏவப்பட்ட மிரட்டல்கள் என கமலஹாசன் மீது ஏவப்பட்ட பல்வேறு அம்புகளால், அவர் மிகுந்த காயப்பட்ட போதிலும், இறுதியில், தன்னுடைய ஆளுமையினால் அதிலிருந்து மீண்டதோடு, தான் சமீபகாலமாக இழந்திருந்த தனது சூப்பர் ஸ்டார் மதிப்பினையும் மீண்டும் கைப்பற்றி விட்டார்.

24 அமைப்புகளைச் சார்ந்த கூட்டமைப்பின் தலைவர்கள்:

இவர்கள் ஊடகங்களின் மூலம் தங்கள் தரப்பு நியாயங்களாக எடுத்து வைத்த விஷயங்களைப் பற்றி இங்கே ஆராயப் போவதில்லை. அந்த விஷயங்களில் எனக்கு அதிக பரிச்சயம் கிடையாது என்பதாலும், இறுதியில் கமலஹாசனே சிலவற்றை முன்வந்து ஏற்றுக் கொண்ட காரணத்தினாலும் இவர்களின் குற்றச்சாட்டுக்குள் போகப் போவதில்லை.

ஆனால், இந்த விவாதங்களின் போது என்னை மிகவும் நெருடியது, இவர்கள் அவ்வப்போது குறிப்பிட்ட “ஒட்டு மொத்த இஸ்லாமிய மக்களின் சார்பாக” என்னும் வாசகம்தான். இது பற்றி, எனது இஸ்லாமிய நண்பர்களிடமும் பேசிப் பார்த்தேன். நம் எல்லோரையும் போலவே அவர்களும் மூன்று பிரிவாகத்தான் இருக்கிறார்கள். முதல் பிரிவு, கமலை எதிர்ப்பவர்கள், இரண்டாவது பிரிவு நடுநிலையாக சமாதானம் கோருபவர்கள், பின்பு மூன்றாவது பிரிவாக தீவிர கமல் ஆதரவாளர்கள். இதில் எங்கே இருக்கிறது இந்த 24 அமைப்புத் தலைவர்களும் உரிமை கோரும் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்தின் ஆதரவு?

மேலும், இந்த விவாதங்களின் தொடர்ச்சியாக நடைபெற்றக் கூட்டத்தில் எனக்குப் பிடித்த பேச்சாளரான ஒரு இஸ்லாமியத் தலைவர் பேசிய தரம் தாழ்ந்தப் பேச்சுகள் என்னை அதிர்ச்சிக்குள்ளாகியது. அவரது சகத் தோழர்களும் கூட அந்தப் பேச்சுகளுக்காக வெட்கித் தலைகுனிந்திருப்பார்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

இறுதியாக, எங்கிருந்தோ வந்த உத்தரவின் பேரில், தாங்கள் பல்வேறு விவாதங்களில் வலியுறுத்திச் சொன்ன கருத்துகளை எல்லாம் ஒருவாறு சமாதானம் செய்து கொண்டு பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தார்கள். இதன் மூலம் இவர்கள் இழந்தது, தங்களின் சொந்த சமூகத்தில் இருக்கும் நடுநிலையாளர்களின் ஆதரவு மற்றும் பெரும்பான்மைச் சமூகத்தில் இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருக்கும் நடுநிலையாளர்களின் ஆதரவு.

பெற்றது, பல்வேறு செய்தி ஊடகங்களின் மூலம் இந்தத் தலைவர்களுக்குக் கிடைத்த அளவில்லாத விளம்பரம்.

சென்சார் போர்ட்:

இந்திய அரசின் தன்னாட்சிப் பெற்ற இந்த நிறுவனம் வழங்கிய சான்றிதழே ஒரு மோசடிச் சான்றிதழ் என்றும், இவர்களின் உறுப்பினர்களை விலைக்கு வாங்கி முறைகேடாகப் பெறப்பட்டது என்றும் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல், ஒரு திறந்த நீதிமன்றத்தில் குற்றம் சாட்டிய பின்னும் தீவிர எதிர்வினை ஆற்ற வழியின்றி இருக்கும் இவர்களை என்னச் சொல்ல? இவர்கள், பேசாமல் எஸ்.ஜே.சூரியாவின் அடுத்தப் படத்துக்கு சான்றிதழ் வழங்கும் வேலையை பார்க்கலாம்!

இந்தப் பிரச்சனையின் ஒட்டு மொத்த இழப்பு இவர்களுக்குத்தான்!
பின்னே! போனது மரியாதையாயிற்றே?

சுழன்று, சுழன்று பணியாற்றிய ஊடகங்கள்:

சும்மாவே பரபரப்பைத் தேடியலையும் ஊடகங்களுக்கு, இது கருத்துச் சுதந்திரம் சார்ந்த பிரச்சனை என்பதால் கூடுதல் உற்சாகம் தொற்றிக் கொண்டது. தினமும் இரவு ப்ரைம் டைமில் இது தொடர்பான பல விவாதங்களை நடத்தி, அதன்மூலம் பல பேச்சாளர்களை புகழ்பெறச் செய்தது தொலைகாட்சி ஊடகங்கள். சிலக் குறிப்பிட்ட புதிய காட்சி ஊடகங்கள், இந்த விவாதங்களின் மூலம் தானும் புகழ் பெற்றன என்பதை மறுப்பதற்கில்லை.

எனக்கு ஒரே ஒரு வருத்தம். ஒரு இஸ்லாமியராக இருப்பினும், கருத்துச் சுதந்திரமே பெரிது என குரல் கொடுத்த கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கு வந்த கடும் மிரட்டல்களை எதிர்த்து இவர்கள் ஒரு ஒட்டு மொத்தக் கண்டனக் குரல் எழுப்பியிருக்கலாம். இத்தனைக்கும் மனுஷ்யபுத்திரன் ஒரு பத்திரிக்கை ஆசிரியரும் கூட!

எப்படியிருப்பினும், கருத்து உருவாக்குதல், வெவ்வேறு அறிஞர்களை பேட்டி காணும் அனுபவம், களப்பணி என பலவகையில் பயனடைந்தவர்கள் இந்தியா முழுவதும் உள்ள செய்தி, காட்சி ஊடகங்களே!

மாநில அரசு:

திரும்பத் திரும்ப எல்லா நிகழ்வுகளுக்கும், ஒருவரையே குற்றம் சாட்டுவது மிகுந்த அலுப்பூட்டும் வேலை. கமலின் அந்த உணர்ச்சி மிகுந்த பேட்டி நாடெங்கிலும் ஏற்படுத்திய பல கேள்விகளை எதிர்கொள்ள தமிழக முதல்வரே களம் காண வேண்டியிருந்தது. இவரும் தனது முழுத் திறமையுடன், நன்றாகவே அவரின் பேட்டியினைக் கையாண்டார் என்றாலும் கூட, அந்த புள்ளி விவரக் கணக்கு அதற்கு திருஷ்டியாகப் போய் விட்டது.

மாநிலமெங்கும் படம் திரையிடப்பட உள்ள 500 திரையரங்குகளுக்கு சுழற்சி முறையில் பாதுகாப்பு வழங்க வேண்டுமெனில், அதற்கு 58640 காவல் துறையினர் வேண்டும் என்று அவர் பேட்டியளித்ததை பக்கத்து மாநில முதல்வர்கள் பார்த்து பெருத்த அதிர்ச்சியடைந்திருக்கக் கூடும். ஏனெனில்,அந்தக் கணத்தில், அந்த மாநிலங்களில் எல்லாம் ஒரு காவல் துறையினர் கூட பாதுகாப்பளிக்காமல், அனைத்துத் திரையரங்குகளிலும் விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடப்பட்டு ஓடிக்கொண்டிருந்தது.

அதிலும் குறிப்பாக, நம் மாநிலத்தை விட இஸ்லாமிய மக்கள் விகிதம் அதிகம் இருக்கும் கேரளத்தில், தமிழிலேயே வெளியிடப்பட்டு, மாநிலமெங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் கேரளத்தில், முஸ்லீம் லீக் ஆதரவில்தான் அந்த மாநில அரசு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!

வெறும் 500 திரையரங்களின் பாதுகாப்புக்கே ஆயிரக்கணக்கில் காவல்துறையினர் தேவையென்றால், நமது மாநிலத்தில் இருக்கும் பல கோடி பெண்கள், சிறுபான்மையின மக்கள், வியாபார கேந்திரங்கள், வங்கிகள், மத வழிபாட்டு இடங்கள், எல்லாவற்றுக்கும் மேலாக அரசுக்கு மிகப் பிரியமான டாஸ்மாக் கடைகள், இவையத்தனைக்கும் எத்தனை இலட்சம் காவல்துறையினர் தேவையோ! நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது.

இந்தப் பேட்டியில், கமலஹாசனுக்கு ஒரு செய்தி இருந்தது. அது, கமலஹாசனுக்கு வயது 58 ஆகி விட்டது எனவும், அதனால் சொந்தக் காசில் ஏகப்பட்ட பொருள் முதலீட்டில் அவர் படம் எடுத்தால், அதன் லாப,நட்டங்களுக்கு அவரே பொறுப்பு என்றும், தமிழக முதல்வர் அவர்களே அறிவுறுத்தினார்.

அப்பாடா! ஒரு கமல் ரசிகனாக, இதைத்தான் நானும் அவரிடம் சொல்ல விரும்பினேன். இந்த அறிவுரையை கமல் தனது கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழக முதல்வர் இந்த பிரச்சனையில் இழந்தது என்ன என்று நான் எண்ணிக் கொண்டிருக்கும் இந்தக் கணத்தில், தாம் பெற்றது இன்னென்ன என்று அவர் ஒரு முடிவுக்கு வந்திருப்பார்! அத்தனை தன்னம்பிக்கை கொண்டவர் அவர்!

சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை மக்கள்:

யாராவது மைக்கில் எங்காவது பார்த்துக் கொண்டு ஆவேசமாகப் பேசினாலே, தன்னைப் பார்த்துதான் பேசுகிறார் போலும் என்று நம்பி மரியாதைக்காக மணிக்கணக்கில் உட்கார்ந்து கேட்கும் அப்பாவி இவர்கள். இவர்கள் ஒரு போதும், தங்களுக்கானத் தலைவர்களை நியமித்தது கிடையாது. தலைவர்கள்தான், இவர்களைத் தங்களின் விசுவாசத் தொண்டர்களாக நியமித்து விடுகிறார்கள்.

பாபர் மசூதியை இடித்து அங்கே இராமர் கோவில் கட்ட முற்பட்ட வேளையில், நாடு முழுக்க மதக் கலவரம் மூண்டு பல ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது கூட இங்கு தமிழகத்தில், ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்து கொண்டு, அமைதியாக திரையரங்களில் ஒற்றுமையாக சினிமா பார்த்தக் கொண்டிருந்த பெருமை நம் மாநில மக்களுக்குண்டு!

அந்த காலக்கட்டத்தில் வெட்டி மாய்ந்து கொண்டிருந்த மாநிலங்களில் எல்லாம் அமைதியாக இந்தத் திரைப்படம் ஓடிக் கொண்டிருக்க, அமைதிக்கும், மதநல்லிணத்திற்குப் பெயர் பெற்ற பெருமைமிகு மாநிலமான தமிழகத்தில் இந்தப் படம் தடைசெய்யப்பட்டிருந்தது ஒரு பெரும் முரண்நகை!

எப்படியாகினும், இவையெல்லாம் தங்களுக்கிடையே இருக்கும் சகோதரத்துவத்தை பாதிக்க இடம் கொடாமல், அமைதியாக இப்பொழுதும் தங்களின் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கும், ஞானிகளான இவர்களுக்கு, உண்மையில் இந்தப் பிரச்சனையால் எந்த லாபமுமில்லை! நட்டமுமில்லை!

திரைப்பட அரசியல்:

இப்படியாக இந்த ஒற்றைத் திரைப்படம், சிலருக்கு லாபத்தையும், பலருக்கு நட்டத்தினையும் அளித்திருந்தாலும், தமிழக அரசியல் களத்தினில் ஒரு புது பிரிவினையைத் துவக்கியிருக்கிறது.இதுவரை இங்கு மக்கள் அளிக்கும் வாக்குகளை, இது திமுக வாக்கு, அது அதிமுக வாக்கு என்று கட்சியளவிலேதான் பிரிக்கப்பட்டு வியூகம் அமைக்கப்பட்டு வந்தது.

இனி, முஸ்லீம் வாக்குகள், இந்து வாக்குகள் என்று மதங்களின் பேரால் பிரித்து அதையும் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளும்,ஒரு தந்திரமான வேலையினை இந்தத் திரைப்பட பிரச்சனையின் மூலம் சில நுண்மதி அரசியல்வாதிகள் முயன்று பார்க்கின்றனர்.

பெரியார் பூமி என்று பெருமை பேசிக் கொண்டிருக்கும் நம் நடுநிலைவாதிகள் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *