உயிர் நீர்

வானம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஓளிர்ந்து கொண்டிருந்தது. சூரியன் எங்கு நோக்கினும் தென்படவில்லை. சில நாட்களாகவே கிழக்கிலிருந்து மேற்கு வரையிலான எந்தப் பாதையிலும் சூரியன் காணக் கிடைக்கவில்லை. மேகமற்ற வறண்ட வானில் சூரியனே தென்படாதது மக்களுக்கு பெரும் அச்சமூட்டியது. மாலைக்கும் இரவுக்கும் இடையேயான வெளிச்சம் மட்டும் மங்காமலேயிருந்தது.
பகல் இன்னமும் முடியவில்லை என பறவைகள் கூட்டுக்குத் திரும்பாமல் தனது இரையைத் தேடிக் கொண்டிருக்க, இரவு கவிழத் துவங்கி விட்டதென ஓநாய்களும், சிறுத்தைகளும், தனக்கான வேட்டையைத் தேடி நிலமெங்கும் அலைந்து கொண்டிருந்தன. அந்தக் காட்சி தேர்ந்த வேடனுக்கும் மிகுந்த அச்சமூட்டுபவையாக இருந்தது.
சூரியன் இல்லை. நிலவு இல்லை. மேகங்கள் இல்லை. நட்சத்திரங்கள் இல்லை. ஆதலால் வானம் என்ற ஒன்றும் இல்லாமலே இருந்த காட்சி மக்களுக்கு மரணத்துக்கு பிறகான தனது ஊழ்வினை போல காட்சியளித்தது. கேள்விகளின் பாரம் தாங்காமல் மக்கள் அனைவரும் திரண்டு சென்று வியாச முனிவரிடம் முறையிட்டனர்.
தர்மத்தினை நிலை நிறுத்தும் பொருட்டு, இந்த உலகம் இதுவரை காணாத ஒரு பெரும் போர் நடக்க இருக்கிறது என்று சொன்னார். எதன் பொருட்டு என்று மீண்டும் ஒரு முறை கேட்டனர் அந்த வார்த்தையின் கனம் அறியாத அம்மக்கள் . வனம் புகுந்து திரும்பி வந்தால் மீண்டும் அவர்களுக்கான இராஜ்ஜியத்தை அளிப்பதாக சொன்ன துரியோதனன், இப்போது அதனை பாண்டவர்களுக்கு அளிக்க மறுப்பதால் இந்தப் போர் என்றார் வியாசர்.
வாக்கைக் காப்பாற்றாமல் போவனதற்காகவா இயற்கையை அழித்து இத்தனை பெரிய போர் என்று அந்த எளிய மக்கள் திகைத்து நின்றனர். தர்மத்தை அழிப்பதற்கான முதல் அம்பு அல்லவா வாக்குத் தவறுதல் என்றார் மாமுனி. குவியும் படைகளுக்காக உங்கள் பயிர்களையும், கால்நடைகளையும் அப்படியே விட்டு விட்டு நீங்கள் சென்று காட்டினுள் புகுந்து கொள்ளுங்கள். இன்னும் சில நாட்களில் பாரதப் போர் என்றார்.

தொலைவினில் இருக்கும் துவரகாவில் ஆண்கள் யாருமற்று தெருக்கள் எல்லாம் வெறிச்சோடிக் கொண்டிருந்தது. போருக்கு ஆயுத்தமாகிக் கொண்டிருக்கிறான் கண்ணன் என்றனர் துவராகவின் மாளிகைக் காவலர்கள். இன்று அவனை சந்தித்தே தீர வேண்டும் என்னும் பதைப்புடன் வருணன் வெளியில் காத்துக் கொண்டிருக்க, பாலின் பெரும் சுகந்தம் ஏதும் காற்றினில் இல்லாமல், கோகுலாபுரி தனது அடையாளத்தை முற்றிலுமாக இழந்திருந்தது.
வெளியே வந்த கண்ணன் முதலில் கண்டது வருணனைதான். அவைக்குள்ளே அழைத்து அவன் வந்திருப்பதின் காரணம் கேட்க, பஞ்ச பூதங்களின் சகல இயக்கங்களையும் நிறுத்தி வைக்க இந்திரனுக்கு உத்தரவிட்டிருப்பதன் பொருள் என்னவென்று அறிந்து கொள்ளலாமா? என்றான்.
நீ மழைக்காமல் இருக்க வேண்டிய காரணம் எதுவென்று மட்டும் சொல்கிறேன் கேள் என்றான் கண்ணன்.
ஏனென்று வருணன் கேட்க, போரிட உலர் நிலம் வேண்டாமா? என்று புன்சிரிப்புடன் பதிலளித்தான்.
இது வரை இப்படி நடந்ததில்லையே கண்ணா? மழை இல்லாமல் ஆறுகளுக்கு எப்படி நீர் வரும்?
போரின் குருதி பெரும் புனலாய் மாறி பொங்கி வரும். கவலை விடு வருணா!
காடுகளுக்கு, மலைகளுக்கு?
போரிடும் வீரம் சொரிந்த படை வீரர்களின் வியர்வைத் துளிகள் அக்குறையை போக்கி விடுமே!
வீடுகளில் பசித்து அழும் குழந்தைகளுக்கு உணவு சமைக்க, சமையல் பாத்திரங்களை நிரப்பவேனும் மழை நீர் வேண்டாமா கண்ணா?
தனது தகப்பனை, சகோதரனை, ஆருயிர் கணவனை இழந்து பெண்கள் ஆறாய் வடிக்கும் கண்ணீர் இருக்கும் வரை இனி ஒரு யுகத்துக்கு அந்த கவலை வேண்டாம் உமக்கு என்றான்.
திகைத்து நின்றான் வருணன். தருமத்தின் இறுதிப் போரில் எனக்கான இடமே இல்லையா கண்ணா என்றான்.
போர் என்பதே அதர்மம்தானே! அதர்மம் தழைக்கும் எந்த இடத்திலும் உனக்கான தேவை இல்லை வருணா. இந்த யுகத்தின் நோக்கம் தர்மம். நோக்கமில்லாமல் வாழ்வதற்கு மனித இனம் அனுமதிக்கப் படவில்லை இன்னும். மேலும் சொல்கிறேன் கேள்!
வருணா! பொய்க்காமல் நீ பொழியும் மழையால் ஆறாக, குளமாக பெருகி அதில் வரும் நீரால் உயிர் வளர்க்கும் இந்த இனம் தர்மத்தின் பாதையிலிருந்து விலக விலக, நீ மழைப்பதை குறைத்துக் கொண்டே வருவாயாக.
ஒடிச் செல்லும் நீரை அள்ளிக் பெருகும் கைகள், அதர்மம் தலை தூக்கும் காலங்களில் தேங்கிக் கிடக்கும் நீரை பூமியிலிருந்து உறிஞ்சிக் குடிக்கும் காலம் வரும். சமவெளிகளை விட்டு பயிரிட மேடுகளையும், மலைகளையும் தேடி மனிதர்கள் ஓடுவர். தண்ணீருக்காக பூமியின் பாறைப் பிளவுகளை குனிந்து நோட்டமிட்டுக் கொண்டு, தம் வாழ்நாளை கழிப்பதே இனி மனிதர்களுக்கு விதிக்கப் பட்டிருக்கிறது.
தனது சிந்தனையில், செயலில், தர்மத்தின் நிழலை ஒரு முறையேனும் அனுமதித்திராத எந்த மனிதனுக்கும் இனி பூமி நீர் கொடுக்காதிருக்கட்டும். அவனது செயலின் பலனை எல்லாம் அவனுக்கு கிடைக்கும் ஊற்று நீரே தீர்மானிக்கட்டும்.
தகுதியில்லாத மனிதன் அடையும் புகழ் எப்படி ஒரு புகையைப் போல நிலைக்காமலிருக்குமோ அப்படியே தர்மமில்லாத மனிதனுக்கு கிடைக்கும் நீரும் ஆகட்டும்.
வருணா! இனி, யுகம் யுகமாக, உனது கடமை தவறாமல் பூமியெல்லாம் நீ பொழிந்து வந்த நீர் வெறும் மழை நீர் அல்ல. இனி அது அவர்கள் வாழ்வின் உயிர் நீர்!!
மெய் சிலிர்த்துப் போன வருணன், பின்னகர்ந்து பவ்யமாக “சர்வம் கிருஷ்ணார்ப்பணம்” என்றான்.
போருக்கு ஆயுத்தமாக பார்த்தனின் சங்கொலி அப்போது அண்ட வெளியெங்கும் ஒலித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *