ப்ராய்லர் கோழிகள்

ஆயிரத்து நூற்று எண்பத்து ஒன்பது மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் இடத்தை இந்த மாணவி பெற்றிருக்கிறார், அடுத்த இடத்துக்கு இந்த மாணவி, அதற்கு அடுத்த இடத்துக்கு வேறொரு பெண் என பல இளம் முகங்களை +2 தேர்வு முடிவுகள் வெளிவந்த நாள் முழுவதும் தொலைக் காட்சியில் காட்டிக் கொண்டே இருந்தார்கள். உடன் முகம் நிறைந்த சிரிப்புடன் அவர்களின் பெற்றோர்கள் அந்த மாணவிகளை கட்டியணைத்தபடி இனிப்பு ஊட்டிக் கொண்டிருந்தனர்.
அந்தக் காட்சிகளில் என் கண்ணுக்குப் புலப்பட்டது, அந்த மாணவ, மாணவிகளின் ஒடுங்கிய கண்களும், மிகத் தளர்ச்சியடைந்த அவர்களின் முகத் தோற்றமுமே! இதே இடத்துக்கு அவர்களுடன் போட்டியிட்ட பல ஆயிரம் பேரை வெற்றி கொண்டு, முதல் இடங்களுக்கு வந்த மகிழ்ச்சியினை பூரணமாக அவர்கள் முகத்தில் காண முடியவில்லை.
மறுநாள் செய்திதாள்களில் ஒவ்வொரு பள்ளியும் தனது முழுப் பக்க விளம்பரங்களில், 1100க்கும் மேலே மதிப்பெண்கள் பெற்றதாக சில நூறு மாணவ, மாணவிகளின் புகைப்படங்களை வெளியிட்டு பெருமைப்பட்டுக் கொண்டது. அந்த வகைப் பள்ளிகள் ஒவ்வொன்றிலும், +2 தேர்வு மட்டும் சராசரியாக இரண்டாயிரம் பேர் எழுதுகிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். அப்படியெனில், 1100க்கும் மேலே மதிப்பெண்கள் பெற்ற அந்த நூறு பேரைத் தவிர மீதியுள்ளோரின் மதிப்பெண்கள் என்ன என்பதை யாரும் சொல்வதில்லை.
அவர்களில் ஒரு சிலரை நான் சந்திக்க நேரிட்டது. எங்களது கல்லூரியில் சேர்க்கைக்காக வந்திருந்த அவர்களின் மதிப்பெண் பட்டியிலைப் பார்த்தால், பெரும்பாலோர் மிகக் குறைந்தப் பட்ச மதிப்பெண்கள் பெற்று நூலிழையில் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இரண்டாண்டு காலமாக இராப் பகலாக உழைத்த களைப்பு, தோல்வி தந்த சலிப்பு எல்லாமுமாக சேர்ந்து அவர்கள் அனைவரும் விரக்தியின் உச்சத்தில் இருந்தனர். மேலும், தாங்கள் ஒருவகையில் ஏமாற்றப்பட்டதாக அவர்கள் ஒவ்வொருவரும் நினைக்கின்றனர்.
இத்தகையோரை ப்ராய்லர் கோழிகள் என்று எனது நண்பர் பவா செல்லதுரை குறிப்பிடுவார். எப்படி சிறிய கோழி குஞ்சுகள் எடை கூடிய பெரிய கோழியாக மிகக் குறுகிய காலத்தினுள் உருவாக்கப் படுகின்றதோ, அப்படி அதே வழி முறையில் நமது பள்ளி மாணவர்களையும், கடைசி இரண்டு வருடத்தில், அசாத்தியமான வேகத்தில், நம்பமுடியாத புத்திசாலியாக உருவாக்கிக் கொண்டு வருகின்றன இந்த வகை நாமக்கல் பள்ளிகள். அதிலிருந்து எனக்கு மேற்கு மாவட்டங்களில் அமைந்துள்ள பள்ளிகளைப் பார்க்கும் போதெல்லாம், அங்கிருக்கும் கோழிப்பண்ணைகள் நினைவுக்கு வருகின்றன.
+2 மதிப்பெண்கள் மட்டுமே, மேற்படிப்புக்கான கல்லூரிகளையும், பாடப்பிரிவுகளையும் தேர்வு செய்துகொள்ள பயன்படுகிறது என்னும்போது, அந்த மதிப்பெண்களின் முக்கியத்துவம் மேலும் மேலும் கூடிக் கொண்டே போகிறது. எப்படியாவது உயிரைக் கொடுத்து இரண்டு வருடம் கஷ்டப் பட்டு படித்து விட்டால் போதும் சார்? பின் வாழ்க்கை முழுதும் சந்தோஷமாக இருக்கலாம்! இங்கே யாரால் சார் 40 லட்சம் ரூபாய் கொடுத்து மெடிக்கல் சீட் வாங்க முடியும்? என்று என்னிடம் அங்கலாய்த்தார் ஒரு பெண்ணைப் பெற்றவர்.
பள்ளி படிப்பு முடித்தவுடன், மேற்கொண்டு தங்கள் பிள்ளைகள் மருத்துவம் படிக்க வேண்டும், பொறியியல் படிக்க வேண்டும் என்று அவர்களின் எட்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகளுக்கு முன்பே முடிவு செய்து கொள்கிறார்கள். இந்த மாணவர்களை பெற்றவர்கள் என்பதைத் தவிர வேறெந்த உரிமையும் அற்ற இவர்கள் தமது ஆசையினை தங்கள் பிள்ளைகள் மேல் சுமத்துகிறார்கள். பெற்றோர்களின் கனவினை பிள்ளைகள் வாழ்ந்து காட்ட நிர்பந்திக்கப் படுகிறார்கள்.
எதிர்காலம் உனக்கு இந்தப் படிப்பில்தான் என்று இலக்கு முடிவு செய்தபின், அதற்குத் தேவையான மதிப்பெண்கள் நிர்ணயிக்கப் படுகிறது. மாணவர்களின் பதினாறு வயதில் தொடங்கும் இந்த மதிப்பெண்ணை நோக்கிய ஓட்டம், மேலும் இரண்டு நீண்ட வருடங்களுக்கு நீடிக்கிறது. அந்த காலக் கட்டத்தில் அம்மாணவர்களை பார்ப்பவர்கள் எல்லோரும் கேட்பதெல்லாம், பப்ளிக் எக்ஸாம் எப்போது? எவ்வளவு மார்க் வாங்குவாய்? என்பதுதான். மகத்தான மனித வாழ்க்கையில் முழு இரண்டு வருடங்களில், இந்த மாணவர்களின் கனவுகள் கூட தேர்வுத் தாள்களால் வெள்ளையடிக்கப் படுகின்றன.
இத்தகைய மதிப்பெண்களுக்காக நடத்தப்படும், விடுதியுடன் கூடிய பள்ளிக் கூடங்களில் நடக்கும் மனித உரிமை மீறல்கள், குறுக்கு வழிகள், மன அழுத்தங்கள் என பல்வேறு குற்ற செயல்களை பல இடங்களில் பேசியாகி விட்டது. ஒவ்வொரு வருடமும், புதுப்புது வடிவங்களில் அந்தத் தவறுகள் கூடிக் கொண்டேதான் போகிறது. இது பெற்றோர்களின் முழு சம்மதத்துடன் நடைபெறும் குழந்தைகளின் மீதான வன்முறை என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.
இத்தனைக்கு பிறகும், இவர்கள் எதிர்பார்க்கும் மதிப்பெண்களைப் பெற்று, மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளில் இடம் பிடிப்போர் எண்ணிக்கை மிகக் குறைந்த சதவீதமே என்பது ஒரு வியப்பான விஷயம். மீதமுள்ளோருக்கு அவர்கள் தேர்வினில் தேர்ச்சி அடைந்ததை தவிர கொண்டாடுவதற்கு ஏதும் இருப்பதில்லை.
இவர்களில் மிகப் பெரும்பாலோர், தத்தமது ஊரில் உள்ள பள்ளிகளில் படிக்கும் போது பத்தாம் வகுப்புத் தேர்வினில் நல்ல மதிப்பெண்கள் பெற்றவர்கள்தாம். மேலும், அதே பள்ளியினில் படித்திருந்தால் இப்போது இருப்பதை விட நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கக் கூடியவர்கள்தாம். இருந்தும்கூட தங்களைப் பெற்றவர்களின் அதீத ஜாக்கிரதை உணர்வு, பேராசை போன்ற காரணங்களால், தங்கள் வாழ்க்கையினை தொலைத்து, இலக்கின்றி நிற்கின்றனர்.
இந்த வகைப் பெற்றோர்கள் பெரும்பாலோர் அரசு ஊழியர்கள், அதிலும் குறிப்பாக பலர் பள்ளி ஆசிரியர்கள் என்பதும் மிகவும் வேதனையான உண்மையாகும். இந்த வகை பள்ளிகளில் பயிலும், பல ஆயிரம் மாணவர்களில், ஆயிரத்து நூறுக்கும் மேலே எடுத்த சில நூறு மாணவர்களைப் பார்த்து தூண்டில் வலையில் சிக்கும் இவர்களும் உண்மையில் பரிதாபத்துக்குரியவர்களே!
இனி வரும் நாட்களில் மேல்நிலை படிப்புக்கு எங்கள் பள்ளியே சிறந்தது என அனைத்து செய்தித்தாள்களிலும், நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வினில் சாதனை படைத்த மாணவ, மாணவியர்களின் புகைப்படங்களுடன் கூடிய முழுப்பக்க விளம்பரங்கள் நிறைந்து இருக்கும். மேலும், இந்த வருடம் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்ட நாளன்றே ஒவ்வொரு பள்ளி வாசலிலும் காத்திருந்த கார்களின் அணிவகுப்பினையும் பத்திரிக்கைகளில் பார்த்தோம்.
மிக நுணுக்கமாக பின்னப்பட்ட இந்த ஆசை வலையின் வலிகள் நிறைந்த கண்ணிகளில் உங்கள் பிள்ளைகளை சிக்க வைப்பதற்கு முன், சற்று சிந்தியுங்கள்! அவர்களுக்கு மதிப்பெண்களைத் தாண்டிய ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *