ஜெயமோகன் வந்திருந்தார்..

சென்ற வாரத்தில் இரண்டு நாள் எழுத்தாளர் ஜெயமோகன் திருவண்ணாமலைக்கு வந்து எங்களுடன் தங்கியிருந்தார். எங்கள் பெரிய கோவிலில் நடைபெற்ற திருமணத்தில் தம்பதிகள் இருவருமே அவருடைய வாசகர்கள். அந்த திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்வு அதற்கு முந்தின நாள் எங்கள் கல்லூரியில் உள்ள திறந்த வெளி அரங்கில் நடைபெற்றது. மணமக்கள் வீட்டார் இருவருமே, ஒருவரை ஒருவர் ஏற்கனவே நன்றாக தெரிந்து வைத்திருந்ததாலோ, அல்லது எல்லா ஏற்பாட்டினையும் பொது நண்பர்கள் சிலர் பார்த்துக் கொண்டதால் வந்த சவுகரியத்தினாலோ, அனைவருமே மிக இயல்பாக இருந்தனர்.

கவிஞர் தேவதேவனும் அந்த திருமணத்திற்கு வந்திருந்தார். எனக்கு மிகவும் பிடித்த அவரின் புல்லின் பெருமிதம் கவிதையை அவரிடமே காட்டி சில விளக்கங்களை பெற்றுக் கொண்டேன். நீண்ட நாள் மனதில் தங்கியிருந்த அந்த கவிதைக்கு இன்னும் புதிய வெளிச்சம் கிடைத்தது.

ஜெயமோகனுடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சிறிய அவகாசத்திலும் புது புது தகவல்களாக அவர் சொல்லிக் கொண்டே போனது எனக்கு வியப்பாக இருந்தது. மலையாளிகள் இன்னமும் சாப்பாட்டினில் ஏறத்தாழ முப்பது வகையான கிழங்கு வகைகளை சமைக்கிறார்கள் என்பதுடன், ஒவ்வொரு வகை கிழங்காக அதன் பெயர், வடிவம், சுவை என்று சொல்லிக் கொண்டே போனார். அவரின் நுணுக்கமான அவதானிப்பு எனக்கு மிகுந்த வியப்பளித்தது.

மறுநாள் திருமணம் முடிந்த மதியம் அவருடைய அறைக்கு சென்றேன். அவருடைய நண்பர்கள் பலர் சூழ அங்கு அமர்ந்து ஏதோ விவாதித்துக் கொண்டிருந்தார். நீண்ட நேரம் அப்படி பேசிக் கொண்டிருந்ததாக யாரோ சொன்னார்கள். சற்று முன்னமே சென்றிருக்கலாம் என்று எனக்கு தோன்றியது. விவாதம் அணுமின்சாரத்தை பற்றிய எனது கட்டுரைக்கு எப்படியோ வந்து சேர்ந்தது. ஜெயமோகன் என்னுடைய அந்த கட்டுரையை ஏற்கனவே படித்து இருந்திருக்கிறார்

விவாதத்தில் என்னுடைய கருத்துக்களை இன்னமும் வேகமாக, சற்று ஆவேசமாகவும் சொன்னேன் என்று கருதுகிறேன். அத்தனை பேரில், ஒரே ஒருவர் மட்டும் என்னை ஆதரித்து சில கருத்துக்களை சொல்லிக் கொண்டு வந்தார். சற்று நீண்ட நேரம் நான் பேசி பல கேள்விகளுக்கு பதில் சொல்லி முடித்தவுடன் ஜெயமோகன் பேச ஆரம்பித்தார்.

அவர் அணுஉலைகளை தான் ஏன் ஏற்க இயலாது என்பதைப் பற்றி அவரின் கருத்துக்களை சொல்ல ஆரம்பித்தார். முதலில் அணுமின்சாரத்தைப் பற்றி, பின் உலகின் உள்ள பல அணு உலைகளைப் பற்றி, அதன் பின் இருக்கும் அரசியலைப் பற்றி என ஒரு தேர்ந்த கட்டுரையைப் போல அழகாக வரிசைப் படுத்தி பேச ஆரம்பித்தார். மெல்லிய குரலில் அப்படி ஒரு தீர்க்கமான கருத்துக்களை நான் கேட்டிருந்ததில்லை. விவாதம் என்றாலே எனக்கு குரல் உயர்த்தி பேசுவதுதான்!

அவரின் ஒவ்வொரு கருத்துக்கும் என்னிடம் மாற்றுக் கருத்து இருந்தபோதிலும், அந்த தேர்ந்த பேச்சினில் குறிக்கிட்டு பேச எனக்கு விருப்பம் இல்லை. அந்த அறையே அவரின் பேச்சினில் கட்டுண்டு இருக்கும் போது, அவருக்கும் என்னைப் போலவே அணுமின் உலைகளை ஆதரிக்கும் கருத்து இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று மிகவும் ஆசைப்பட்டேன்.

அந்த இரண்டு நாள் சந்திப்பிலும், ஜெயமோகனின் வாசகர்கள் அவரை எப்படி ஆராதிக்கிறார்கள் என்பதை என்னால் பார்க்க முடிந்தது. எப்போதும் யாராவது அவருடன் பேசியபடியே இருந்தார்கள். ஒரு எழுத்தாளனை அவரது வாசகர்கள் இப்படி கொண்டாடுவது, எனக்குப் பிடித்திருந்தது.

அவரின் புதிய புத்தகமான “அறம்” அந்த விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் பரிசாக அளிக்கப் பட்டது. எனக்கு மிகவும் பிடித்த பல கதைகள் அந்த புத்தகத்தில் இருக்கிறது. அப் புத்தகத்தின் வெளியீட்டு விழாவினில் பேசுமாறு என்னையும் அழைத்திருக்கிறார்கள். யார் அந்த அரிய ஆலோசனையை தந்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஒரு வாசகர் என்ற முறையில் எனக்கு அந்த வாய்ப்பு அளிக்கப் பட்டதாக நண்பர் அரங்கசாமி சொன்னார்.

விரைவில் ஈரோட்டில் நடைபெற உள்ள அந்த நிகழ்ச்சியில், என்ன பேச போகிறேன் என்பதை தெரிந்து கொள்ள எனக்கே மிகவும் ஆர்வமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *