தொட்டு விடும் தூரம் தான்…..

தொட்டு விடும் தூரம் தான்…..
மருத்துவ மேதைகளின் ஆராய்ச்சிப் பாதை – ஒரு தொடர்
எத்தனை கேள்விகள் நம்மிடம் பதிலில்லாமல்? அதுவும் பல சமயங்களில் ஒரு கேள்விகூட இல்லாமல் வெறுமையாகவே எத்தனை நிகழ்வுகள்? தேடி சென்று பார்த்துக்கூட கிடைக்காத பதில்கள் எல்லாம் பல சமயம் எதிர்பாராத இடத்திலிருந்து கிடைப்பதுண்டு! அதை வாங்கிக் கொள்ளும் ஆர்வமும், பொறுமையும் இருந்தால் ஏதோ ஒரு சமயத்தில் நம் நினைவில் உள்ள கேள்விகளை எல்லாம் பதில்களால் நிரப்பி விட முடியும் என்றே நம்புகிறேன். அதுவே என்னை தொடர்ந்த வாசிப்பில் செலுத்திச் செல்கிறது.
அப்படி சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் இருந்து என் பல நூறு கேள்விகளுக்கு பதில் கிடைத்தது. படிக்கும் போதே இப்படி ஒரு பரவசத்தை இது வரை மிக சில புத்தகமே கொடுத்து இருக்கிறது. இது ஒரு நான்– பிக்க்ஷன் புத்தகமாக இருந்தாலும், உலகின் மிகச் சிறந்த கிரைம் புத்தகம் கொடுக்கும் வாசிப்பு அனுபவத்தை கொடுக்கிறது. ஒரு அறிவியல் புத்தகத்தை இப்படி ஒரு பரவச நடையில் எழுத முடியும் என்று இது வரை நினைத்ததே இல்லை.
இந்த ஆண்டின் புலிட்சர் விருது பெற்ற சித்தார்த் முகர்ஜி என்னும் புதுமுக எழுத்தாளர், டாக்டர் எழுதிய “தி எம்பரர் ஆப் ஆல் மெலடீஸ்” புத்தகம்தான் அது. இதில் வரும் மெலடீஸ், இசை சார்ந்த வார்த்தை அல்ல. (Not Melodies, it is Maladies).
மருத்துவ உலகுக்கிற்கு இன்னமும் பிடிபடாத புதிராக, மனித குலத்தின் மிகக் கொடூரமான வியாதிகளில் ஒன்றான கேன்ஸர் பற்றிய வாழ்க்கை சரித்திரம். ஆம்! மனிதனால் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியப்பட்ட கேன்ஸரின் வாழ்க்கை சரித்திரம்தான்… ஆனால், அதற்கு கேன்சர் என்ற பெயர் வந்தது என்னவோ சென்ற நூற்றாண்டில்தான்.
இதை எழுதி உலகின் மிகச் சிறந்த விருதான புலிட்ஸர் விருது பெற்ற முகர்ஜியின் உழைப்பிற்கும், ஆராய்ச்சிக்கும் அளவேயில்லை. அதை படித்த நான் வெறுமனே, அதிலிருந்த சில பகுதிகளை மட்டும் என் மொழியில் உங்களுக்கு எழுதிப் பார்க்கிறேன். அதுவும் நான் வியந்த, என்னால் எழுத முடிந்த, ஒரு சில உள்ளடக்கத்தை மட்டும்.. இது ஒரு மொழி பெயர்ப்பல்ல.
வாசித்துக் கொண்டிருக்கும் போதே, அட! இது இப்படியா?, ஓ! அதனால்தான் அப்படியா? என்றோ, அல்லது, தங்கள் வாழ்வையே அர்ப்பணித்த மருத்துவ ஆராய்ச்சியாளர்களை பற்றி படிக்கும் போதோ, உங்கள் கண்கள் பனித்தால்?
அனைத்து பெருமையும் சித்தார்த் முகர்ஜிக்கே சேரும். முழு முதல் அனுபவத்திற்கு மூல புத்தகத்தை நேரடியாக வாங்கிப் படிக்கவும். நான் பகுதி, பகுதியாக அவ்வப்போது எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுகிறேன்.
சில மாதங்களுக்கு முன்பு இதே கேன்ஸர் நோயால் எனது அம்மா இறந்ததும் கூட, இந்த புத்தகத்தின் மீது எனக்கு கூடியுள்ள ஆர்வத்திற்கு காரணமாக இருக்கலாம். இன்று ஆகஸ்ட் 5ஆம் தேதி, என் அம்மாவின் பிறந்த நாள்.
ஒரு மழை நாள் இரவில் கொடைக்கானல் விடுதியொன்றில், பாடம் செய்யப்பட்டு சுவற்றில் பொருத்தப் பட்டிருந்த அந்த வெந்நிறக் கழுகின் கண்கள் என் நினைவில் எப்போதும் உறைந்து நிற்பதைப் போல,
என்றும் பசுமையாக நிறைந்து நிற்கும் என் அம்மாவின் நினைவிற்கு……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *