யெல்லா..

யெல்லா..

யெல்லா பிரக்டா சுப்பாராவ், இவரது நண்பர்களுக்கும், இனிமேல் நமக்கும் இவர் பெயர் யெல்லா. இவரது பரிசோதனைக் கூடத்தில் இருந்துதான், டாக்டர் ஃபேபருக்கு தேவையான மருந்துகள் தயாரித்து அனுப்பப்படும். யெல்லா முதலில் மருத்துவராக இருந்து பின் தன் சுய முயற்சியினால் மருந்துகள் தயாரிக்கும் ஒரு ஆராய்ச்சித் துறையில் தன்னிகரற்று விளங்கினார்.

1923ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து கிளம்பி பாஸ்டன் துறைமுகத்தில் வந்து இறங்கிய யெல்லா முதலில் அந்த கடும் குளிருக்கு தயாராக இருக்கவில்லை. மருத்துவத்தில் மேல் படிப்பு பயில ஹார்வார்டில் உள்ள ஒரு கல்லூரியில் உதவித் தொகையுடன் கூடிய சேர்க்கை அனுமதி பெற்றிருந்தார். இருந்தும் கூட அவருக்கு தான் பயின்ற மருத்துவத் துறையில் ஏதும் வேலை கிடைக்கவில்லை.அவர், அமெரிக்காவில் மருத்துவம் செய்யத் தேவையான அனுமதியினை பெற்று இருக்க வில்லை. அந்த கடும் பனியில் ஒரு மருத்துவமனையில் இரவு நேர காவலராக வேலை பார்த்தார். பின், அங்கேயே, கதவை திறப்பவராக, அறைகளை சுத்தம் செய்பவராக, பின் கழிவறைகளை சுத்தம் செய்யும் வேலை கூட பார்த்து தன் வாழ்க்கையை அமெரிக்காவில் துவங்கினார்.

அவருடைய மருத்துவ அறிவு அவரை கைவிடவில்லை. தனது நண்பர்களின் மூலம் மெல்ல அதே மருத்துவமனையில் உள்ள மருந்தாய்வகத்தில் ஒரு பகுதி நேர ஆராய்ச்சியாளராக பணியில் சேர்ந்தார். அங்கே அவருக்கு உயிரணுக்களில் உள்ள மூலக்கூற்றினை சுத்தப்படுத்தி அதில் உள்ள பிற வேதியியல் பொருட்களை கண்டறிவது முதல் வேலையாக கிடைத்தது. யெல்லா சுப்பாராவ் ஒரு அபூர்வ திறமை வாய்ந்த ஒரு பிறவி ஆராய்ச்சியாளர். அவரது மிகக் கட்டுப்பாட்டான ஆராய்ச்சி முறையின் விளைவாக வெகு சீக்கிரமே ஏடிபி (ATP) என்னும் ஒரு மூலக்கூற்றினை கண்டுபிடித்தார். இந்த மூலக் கூறுதான் அணுக்களுக்குள் உள்ள சக்தியாகும். பிறகு கிரியாடின் (creatine) என்கிற மற்றொரு மூலக் கூற்றினையும் கண்டுபிடித்தார். இது, அணுக்களுக்கு தேவையான சக்தியை எடுத்து செல்லும் வாகனமாகும்.

மேலே சொன்ன இரண்டு சாதனையில் , ஒரு கண்டுபிடிப்பிற்கே, சுப்பாராவிற்கு, ஹார்வார்டு பல்கலையில் பேராசிரியர் பணி கிடைத்திருக்க வேண்டும். ஆனால், சுப்பாராவ் ஒரு இந்தியர். அதுவும் ஒற்றை அறை வீட்டில் வாழ்ந்து, உடைந்த ஆங்கிலம் பேசிக்கொண்டு, சைவ சாப்பாட்டில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு அப்பாவி. 1940ஆம் ஆண்டு அவருக்கு ஹார்வார்டில் வேலை மீண்டும் மறுக்கப்பட்டது. அப்போது அவருக்கு இருந்த ஒரே நண்பர் டாக்டர் ஃபேபர்தான்.

அவருக்கு, நியூயார்க்கில் உள்ள லெட்ரேல் என்னும் ஒரு தனியார் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அவர் அங்கே தனக்கு பரிச்சயமான அதே வேலையை தொடங்கினார். அந்த சமயத்தில்தான், லில்லி என்னும் ஒரு மருந்து நிறுவனம் கெட்டிப்படுத்தப்பட்ட பி12 (vitamin B12) எனப்படும் புரதச் சத்தை, இரத்த சோகை நோய்க்கு மருந்தாக தயாரித்து ஏராளமான லாபம் ஈட்டியது. இதனால் சுப்பாராவ், ஃபோலிக் ஆசிட் குறைவால் உருவாகும் வேறுவகை இரத்த சோகைக்கு மருந்து தாயாரிக்கும் ஆராய்ச்சியின் பக்கம் தன் கவனத்தை செலுத்தினார்.

1946ஆம் ஆண்டு தனது பல தோற்றுப்போன முயற்சிக்கு பின் பன்றியின் ஈரலில் இருந்து எடுக்கப் பட்ட ஒரு வகையான இரசாயனத்தில் இருந்து சின்தஸைஸ் ஃபோலிக் ஆசிடை கண்டுபிடித்தார். அப்போது அவருக்கு உதவி புரிந்தவர் ஹாரியட் என்னும் ஒரு இளம் விஞ்ஞானி. இருவரும் சேர்ந்து இதே வகையிலான பலவித கலப்பு இரசாயனங்களை கண்டுபிடிக்கும் போது உருவான ஒரு புதிய செயற்கை மூலக் கூற்று வடிவம் சற்றேறக்குறைய இயற்கையான இரத்த அணு மூலக்கூறு போலவே நடித்துக் காட்டத் தொடங்கியது. ஆம்! அசலைப் போலவே நகலும் தன்னை வடிமைத்துக் கொண்டது. இந்த நகல்தான் டாக்டர் ஃபேபர் கற்பனை செய்து கொண்டிருந்த எதிர் ஃபோலிக் ஆசிட் போன்ற வினையாற்றும் வேதிப் பொருள் (antagonists) என்பது நிச்சயம் ஒரு மிகப் பெரிய தற்செயல் ஆகும்.

யெல்லா சுப்பாராவின் இந்த ஆண்டி வைட்டமின் டாக்டர் ஃபேபர் கற்பனையில் உருவம் வடித்து காத்திருந்த காதலி ஆகும். டாக்டர் ஃபேபர், சுப்பாராவிடம், அவரின் இந்த கண்டுபிடிப்பான எதிர் ஃபோலேட் ஆண்டி வைட்டமின் மருந்தை, இரத்த புற்று நோயாளிக்கு கொடுத்து பரிசோதனை செய்ய அனுமதி கேட்டார். மிகுந்த மகிழ்ச்சியுடன் நண்பரின் கோரிக்கையினை சுப்பாராவ் ஏற்றுக் கொண்டார். 1947ஆம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள சுப்பாராவின் ஆய்வகத்தில் இருந்து முதல் ஆண்டி ஃபோலேட் மருந்து பாஸ்டனில் உள்ள டாக்டர் ஃபேபரின் மருத்துவமனைக்கு சென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *