பேரம்

அந்தப் புகழ் பெற்ற வழக்கறிஞர் அலுவலகத்தில், அட்வகேட் வெங்கடேஸ்வரனைப் பார்க்க, அவரது அறை முன் எப்படியும் பத்து பேருக்கும் மேலாக காத்துக் கொண்டிருந்தனர். அதே அலுவலகத்தில் பங்குதாரர்களாக இருக்கும் இன்னும் பிற வழக்கறிஞர்களின் அறைகளுக்கு முன்னர் வெறும் காலி நாற்காலிகள் மட்டும். இத்தனைக்கும், வெங்கடேஸ்வரன் ஐம்பது வயதை கடந்து விட்டிருப்பினும், அங்கு இருப்பதில் அவர்தான் ஜூனியர்! ஆனால், அந்த அலுவலகத்தின் உயிர் நாடி!

பரபரப்பான அந்த நேரத்தில் அங்கு தோளில் ஒரு மடிக்கணினிப் பையுடன் ஒரு இளைஞன் அங்கு வந்து சேர்ந்தான். அவனைக் கண்டவுடன், வெங்கடேஸ்வரனின் தனி உதவியாளர் உள்ளே சென்று, அனுமதி கேட்டு வெளியில் வந்து, உடனே அவனை உள்ளே செல்ல சொன்னார். வெங்கடேஸ்வரனும் அவனுக்காகவே காத்திருந்தது போல, எழுந்து நின்று ஆர்வத்துடன் அவனை வரவேற்க, அவனோ கண்டுபிடுச்சாச்சு! என்றபடி, அமைதியாக ஒரு காகிதத்தை பையிலிருந்து எடுத்து அவரிடம் தந்தான்.

வெங்கடேஸ்வரன், அந்தக் கவரைப் பிரிக்கத் துவங்க, அந்தப் பெண் தற்போது தங்கியிருக்கும் இடத்தின் விலாசம் இது! என்று பெருமையுடன் சொன்னான். இவ்வளவு சீக்கிரம் எப்படி கண்டு பிடிச்சே? என்று இவர் கேட்க, அதெல்லாம் தொழில் இரகசியம் சார்! என்னைப் போன்ற ஒரு பெரிய டிடெக்ட்டிவிற்கு இதெல்லாம் சும்மா ஜுஜுபி மேட்டர்! வேணும்னா சொல்லுங்க! இன்னும் ஒரு வாரம் ஃபாலோ செய்தால், அவளுடைய மொத்த அந்தரங்க விஷயங்களையும் கொண்டு வந்துடலாம் என்றான். வெங்கடேஸ்வரன் அதெல்லாம் வேண்டாம்பா! என்றார் மிக அவசரமாக.

அன்று, வெங்கடேஸ்வரன், தன்னுடைய வேலைகளை வெகு சீக்கிரமாகவே முடித்துக் கொண்டு அலுவலகத்தில் இருந்து கிளம்பினார். தனது டிரைவரை கண்களினாலேயே, விலகச் சொல்லி விட்டு, அவரே தனியாக காரை ஓட்டத் துவங்கினார். பாரி முனை அலுவலகத்தில் இருந்து, தனது காரை வழக்கமாக வீட்டுக்குச் செல்லும் தி.நகருக்கு செலுத்தாமல், நேராக அண்ணா நகருக்கு ஓட்டிச் சென்றார். கையிலிருக்கும் விலாசத்தை ஒரு முறை பார்த்துக் கொண்டு, சாந்தி காலனியில் 12 ஆவது தெருவினை சென்றடைந்தார். அந்தத் தெருவை இரு முறை காரை ஓட்டிய படி கடந்து சென்று, அவரின் தேடலான அந்தப் புது வெள்ளை நிற அபார்ட்மெண்டையும் கண்டு பிடித்தார்.

பெரும்பாலும், நிறைய பேர் இன்னமும் குடி வந்திராத அந்த அபார்ட்மெண்ட்டின் லிஃடில் ஏறி நான்காவது மாடிப் பொத்தானை அழுத்த, அவர் தேடி வந்த 16A கதவு, நேராக தென்பட்டது. அவருடைய திறமையையும், அதிகாரத்தையும் எண்ணி, பெருமிதப் புன்னகையோடு, அழைப்பு மணியை அழுத்தினார். கதவைத் திறந்தது சாட்சாத் கல்பனாதான்.

வெளிர் மஞ்சளுக்கும், பச்சைக்கும் நடுவேயான நிறத்தில் சேலையும், கரும் பச்சை நிறத்தில் ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள். அவள் கையில்லாத ஜாக்கெட் அணிவதை வெங்கடேஸ்வரன் அப்போதுதான் பார்க்கிறார். குளித்து லேசாக அள்ளி வாரப் பட்டிருந்த ஈரத் தலை, ஸ்டிக்கர் பொட்டு என அப்போதுதான் பிளந்த இளநீரின் வழுக்கைப் போல ஃப்ரெஷ் ஆக நின்று கொண்டிருந்தாள். அவரை அங்கே அவள் நிச்சயம் எதிர்பார்த்திருக்க வில்லை.

இங்கேதான் இருக்கிறாயா? எனக் கேட்டபடி அவர் உள்ளே நுழைந்து சாவதானமாக அங்கிருந்த ஒரு புது மெத்தை நாற்காலியில் அமர்ந்து கொண்டார். அவள் என்ன சொல்வது என்று தெரியாமல், மெல்ல தலையாட்டி விட்டு, சுவற்றோரமாக சாய்ந்து நின்று கொண்டாள். பக்கத்து அறையொன்றிலிருந்து வந்த வெளிச்சம் அவள் மீது பட, அவளின் நிழல் பக்கவாட்டுச் சுவற்றில் பட்டு, ஒரு அப்ஸரஸின் சில் அவுட் ஓவியம் போல தோற்றமளித்தது.

என்னுடைய கேள்வி ஒன்றுக்கான பதில் உன்னிடம் இருக்கிறது என்பதையாவது நீ நினைவில் வைத்திருக்கிறாயா? என்று கேட்டார். அவள் மெல்ல தலையசைத்தாள். நான் உன்னை நன்றாக பார்த்துக் கொள்வேன் என்பதில் உனக்கு நம்பிக்கை இருக்கிறதல்லவா? என்றார். அதற்கும் ஒரு தலையசைப்பு. பிறகு என்ன? என்னுடன் வர சம்மதம் சொல்ல வேண்டியதுதானே? எதற்காக என்னிடமிருந்து ஓடி, ஒளிய வேண்டும் என்றார் சற்றுக் கடுமையாக.

முதன் முறையாக அவள் வாயைத் திறந்து பேசினாள். உங்கள் கண்களைப் பார்த்து எதுவும் சொல்ல பயமாக இருக்கிறது!

எதற்காக பயப்பட வேண்டும்? உனக்காக நான் தரும் ஆஃபர் போதவில்லையா? இல்லை! இதற்கு மேலும் வேண்டும் என்று உன் அம்மா எதிர்பார்க்கிறாளா? உன் அம்மாதானே அவள்? அல்லது சித்தியா? என்றார்.

கல்பனா, பதில் பேசாமல் மீண்டும் அமைதியாக நின்றிருந்தாள்.

என்னதான் வேண்டும் உனக்கு? அதையாவது சொல்லி விடு! நான் சும்மாவேனும் மனதில் ஆசையை வளர்த்துக் கொள்ளாமல் இருந்திருப்பேனே? ஏமாற்றங்களையெல்லாம் தாங்கிக் கொள்ளக் கூடிய வயது இல்லை எனக்கு, என்று உனக்குத் தெரியும்தானே?

நான், பெரிய சிட்டியில் வாழ ஆசைப் பட்டுதான், ஆந்திராவிலிருக்கும் எனது கிராமத்திலிருந்து சென்னைக்கே வந்தேன். நீங்கள் மீண்டும் கிராமத்திற்கே அழைக்கிறீர்களே? என்றுதான் யோசிக்கிறேன்.

வெங்கடேஸ்வரனுக்கு சிரிப்பு வந்து விட்டது. என்னது? நீலாங்கரை கிராமமா? அங்கே வீடு கட்டி வசிக்க எத்தனைப் பெரிய பணக்காரர்கள் ஆசைப்படுகிறார்கள் தெரியுமா? ஒரு ஏக்கரில் அத்தனை பெரிய பங்களா கட்டி வைத்துக் கொண்டு உன்னை வா! வா! என்று அழைக்கிறேன். அதைப் போய் நீ கிராமம் என்கிறாயே?

மீண்டும் மவுனமாக இருந்தாள்.

சரி! உனக்கென ஒரு காரை கொடுத்து விடுகிறேன். வாரத்திற்கு சில முறை, ஏன் தினமும் கூட நீ சிட்டிக்குள் சென்று சினிமா, ஷாப்பிங் என்று சென்று வா! ஏன் என்று ஒரு வார்த்தை உன்னைக் கேட்க மாட்டேன். இது போதுமா? என்றார்.

இல்லை! என்று அவள் இழுக்க, வெங்கடேஸ்வரன் எழுந்து கொண்டார். அவரின் அருகே சென்று, அவள் முகத்தினைக் கையால் திருப்பி, வேறு யாரேனும் என்னுடன் போட்டியில் இருக்கானா? என்று கேட்டார். இந்த நேரடித் தாக்குதலை எதிர் கொள்ள முடியாமல், நிலை குலைந்து போனாள் கல்பனா.

சொல்லு! வேறு யாரேனும் என்னை விட நல்ல ஆஃபர் தந்திருக்கிறார்களா? என்றார். வெங்கடேஸ்வரன் ஒரு நவீன உலகின் அனைத்து சாகசங்களையும் கற்றுத் தேர்ந்த ஒரு வெற்றிகரமான மனிதர். தகுந்த விலை கொடுத்தால், எதையுமே விலை பேசி வாங்கி விட முடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர். அவரை மீறி, அவருக்குப் பிடித்தமான ஒரு பொருள் கை நழுவிப் போகிறது என்பதை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

சார்! அப்படியெல்லாம் எதுவும் இல்லை. என்னோட மத்த தேவைகளையும் பார்த்துதான் நான் எதையும் யோசிக்க முடியும். நீங்க எனக்குத் தருவதாக சொல்லியிருப்பதைக் கேட்டால், வேறு எந்தப் பெண்ணாக இருந்தாலும் இந்நேரத்திற்கு உங்களுடன் வந்திருப்பாள். சந்தேகமில்லை! நானும் கூட இப்போதே உங்களுடன் வருவதற்குதான் ஆசைப்படுகிறேன்.

பிறகு என்ன? இப்போதே வா! போகலாம்!

அதற்கில்லை! ஒரே ஒரு பிரச்சனைதான்! ராதிகா அங்கிருக்கும் போது நான் எப்படி அங்கு வரமுடியும் என்று கொஞ்சமேனும் யோசித்துப் பார்த்தீர்களா? அது ஒன்றுதான் இப்போது எனக்குப் பிரச்சனை! அவள் அங்கு இல்லை என்று சொல்லுங்கள்! நான் இப்போதே உங்களுடன் உங்கள் வீட்டுக்கு வந்து விடுகிறேன்.

வெங்கடேஸ்வரன் மவுனமாகி விட்டார். இந்தக் கோணத்தை அவர் யோசித்திருக்க வில்லை! தான் விரும்பியதை உடனே அடைய நினைக்கும் பரபரப்பு, இந்த முக்கிய விஷயத்தை அவரால் யோசிக்க இயலாமல் செய்து விட்டிருந்தது. தலையைக் குனிந்த படி சற்று நேரம் மவுனமாக அமர்ந்திருந்தார். பிறகு, எழுந்து கல்பனாவின் அருகில் சென்றவர், நீ சொல்வது சரிதான்! ராதிகாவை அனுப்பி விடுகிறேன் என்றார்.

எப்போது?

இன்று இரவே! இன்று இரவே அவளை அனுப்பி விடுகிறேன்!

அப்படியென்றால், நாளைக் காலையிலேயே நீங்கள் வந்து என்னை அழைத்துச் செல்லலாம்!இப்போது, கல்பனாவின் முகத்தில் பரவசம் கூடி, புன்னகையொன்று பெரிதாக தங்கியிருந்தது.

வெங்கடேஸ்வரன் வேறெதுவும் சொல்லவில்லை! அவரின் குறிக்கோளை அடைவதற்கான தடை எதுவென்று இப்போது அவருக்குத் துல்லியமாக அடையாளம் காட்டப்பட்டு விட்டது. கதவுக்கருகில் சென்றவர், திரும்பி கல்பனாவைப் பார்த்து, நாளைக்குத் தயாராக இரு! வருகிறேன்! எனச் சொல்லி விட்டு வெளியேறினார்.

வீட்டுக்குச் செல்லும் வழியில் வெங்கடேஸ்வரன் இதையே யோசித்தபடி சென்றார். எதையும் சுற்றி வளைத்துச் செய்வது அவருக்குப் பிடிக்காத ஒன்று. மற்றவர்களின் உணர்வுகளைப் பற்றிக் கவலைப் படாமல், எப்போதுமே நேரடியாக தனது விருப்பத்தை எதிரில் இருப்பவர்களுக்குச் சொல்லி விடுவது அவரின் வழக்கம். இப்போதும், அப்படித்தான் செய்ய வேண்டும் எனத் தீர்மானித்துக் கொண்டார்.

அவர் காரின் குயிங்க் என்ற சின்ன ஹாரன் சத்தம் கேட்டவுடனே, அந்த விசாலமான கதவு திறந்து கொண்டது. காரை போர்ட்டிகோவிலேயே நிறுத்தி விட்டு, வீட்டினுள் நுழைந்தார். ஹாலிலேயே சமையல் வாசனை அவருக்கு எட்டி விட்டது. உணவின் ருசி தெரிந்த கலைஞன் அவர். வாசனையை முகர்ந்த உடனே, முகம் சுளித்துக் கொண்டார். சே! வழக்கம் போல உருளைக் கிழங்குப் பொரியலைத் தீய்த்து விட்டாள் எனக் கருவிக் கொண்டே, மாடிக்குச் சென்றார்.

இரவு உடையினை அணிந்து கொண்டு, ஒரு கிரிஸ்டல் குவளையில், சில ஐஸ் துண்டுகளின் மீது கொஞ்சம் ஸ்காட்ச் விஸ்கியை ஊற்றிக் கொண்டார். மெல்ல அருந்தி கொண்டே, எப்படி ஆரம்பிப்பது என ஒரு முறை தனக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டார். மது அவருக்குள் இறங்கி மெல்ல அவரின் தயக்கங்களைத் தளர்த்த, ஒரு முடிவுக்கு வந்ததைப் போல வெளியில் வந்து, தனது மனைவியின் அறைக்குள் சென்றார்.

அங்கே, அவருடைய மனைவி கட்டிலில் அமர்ந்திருக்க, அவருடைய மாமியார் அருகில் அமர்ந்து ஏதோ பக்திப் பாடல்களை மெதுவாகப் பாடிக் கொண்டிருந்தார். இவரைக் கண்டவுடன், மாமியார் சட்டென எழுந்து அறையின் ஓரத்திற்குச் செல்ல, இவர் தனது மனைவியின் அருகில் சென்று, அவருடைய காதருகே விஷயத்தை மெல்லச் சொல்லத் துவங்கினார்.

அவளுக்கு சற்று நேரம் ஒன்றும் விளங்க வில்லை! விஷயம் புரிபட ஆரம்பித்தவுடன், அவள் உடல் திடீரென தூக்கிப் போட, கட்டிலில் இருந்து எழுந்து கொண்டாள். தனது அம்மாவை நோக்கி வேகமாகச் சென்று, அவளைக் கட்டிக் கொண்டு, அம்மா! கல்பனா ஒத்துக் கொண்டாளாம்! இவரே நேரில் போய் அழைத்தவுடன் மறுபடியும் நம்ம வீட்டுக்கு சமைக்க வருவதாக ஒப்புக் கொண்டாளாம்! என்று உற்சாகமாகக் கத்தினாள்.

பிறகு, வெங்கடேஸ்வரனைப் பார்த்து, அப்புறம் என்ன! இன்னும் ஏன் மசமசவென இங்கேயே நின்னுட்டு இருக்கீங்க? நீங்களே கீழேப் போய், அந்த ராதிகாவை சம்பள பாக்கியை செட்டில் பண்ணிட்டு, சமையல் வேலையை விட்டு அனுப்பிடுங்க.

குறிப்பு: ஆங்கிலத்தில் எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை எழுத்தாளர் ஓ ஹென்றி! சமீபத்தில் அவருடைய சில கதைகளை மீள் வாசிப்பு செய்து கொண்டிருக்கும் போது, சில குறிப்பிட்டக் கதைகளை தமிழில் எழுதிப் பார்த்தால் என்ன? என்றுத் தோன்றியது.

இது மொழிபெயர்ப்பல்ல! ஓ ஹென்றியின் ஏதாவது ஒரு கதையின் கருவை மட்டும் எடுத்துக் கொண்டு, அதை என்னுடைய நடையில் தமிழில் எழுதிப் பார்த்துள்ளேன். இது ‘Girl’ என்ற ஓ ஹென்றியின் கதை! பல நீக்கல்கள், சேர்த்தல்கள் இருக்கும்! ஒரு எழுத்துப் பயிற்சிக்காக நான் செய்து வரும் முயற்சி இது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *