உள்ளாட்சி தேர்தல்

உள்ளாட்சி தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டது. நான் எதிர்பார்த்தது போலவே மிகப் பெரும்பான்மையான இடங்களில் ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மாநில அரசை மிகவும் சார்ந்திருக்கக் கூடிய உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அதே கட்சியை சார்ந்தவர்கள் பதவிக்கு வருவது ஒரு விதத்தில் பல சங்கடங்களைத் தவிர்க்கும்.

எதிர் கட்சியை சேர்ந்தவர்கள் தலைமைப் பொறுப்பில் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளையும் சமமாக பாவிக்கக் கூடிய மனப் பக்குவம் அல்லது மன விசாலம் (விலாசம் அல்ல) அநேகமாக பல அரசியல் தலைவர்களுக்கு இல்லை. ஒரு வேளை அப்படி அரசியல்வாதிகளிலாவது மிகச் சிலர் இருக்கக் கூடும். அதிகார வட்டத்தில் ஒருவரும் இருக்கப் போவதில்லை. இராஜாவை விட இராஜ விசுவாசம் கொண்டவர்கள் அவர்கள்.

என்னை மிகவும் கவர்ந்த நிகழ்வுகள் பல தேர்தல் எண்ணிக்கையின் போதுதான் நடந்தது. முதலில் வாக்கு எண்ணிக்கையின் போது அலை அலையாக திரண்டு வந்த மக்கள் கூட்டம் என்னை வியப்புக்குள்ளாக்கியது. அதுவும், மிக அதிகளவு பெண்கள் கிராமங்களில் இருந்து வந்திருந்ததும், எதிர் எதிர் அணியை சேர்ந்தவர்களாயினும், ஒரே ஊராயிற்றே என்று ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தது வித்யாசமான காட்சியாகும். அரசியல் வாதிகள் என்றாலும், ஆண்கள் ஆண்களே! பெண்களுக்கு ஈடாகுமா?

அதிலும் சில பெண்கள் அவர்தம் போட்டி வேட்பாளருடனேயே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது கழக அரசியலுக்கு நிச்சயம் புதிது.

மறுநாள் அதிகாலையில், நான் டென்னிஸ் விளையாட போய்க் கொண்டிருக்கும் போது புதிய பஞ்சாயத்து தலைவியாக தேர்ந்தெடுக்கப் பட்டு இருந்த ஒரு பெண்மணியை மாலையிட்டு பெரிய ஆண்கள் கூட்டம் ஒன்று அழைத்து சென்று கொண்டிருந்தது. விடிய விடிய வாக்கு எண்ணிக்கையில் இருந்து விட்டு சோர்வாக சென்று கொண்டிருந்தனர். முதல் பார்வையில் எனக்கு அந்த பெண்மணி கம்பீரமாக மாலையுடன் நடுவில் நடந்து வர, அத்துணை ஆண்களும் சில அடிகள் பின் தொடர அந்த காட்சிப் படிமம் என்னை ஒரு கணம் பெருமிதப் படுத்தியது. நிச்சயம் அந்தப் பெண்மணி வீட்டில் முடங்கியிருக்க, அந்த வீட்டு ஆண் தானே பிரசிடண்டாக ஊரில் வலம் வர மாட்டார் என்றும் தோன்றியது.

அதிகாரங்களை பஞ்சாயத்துகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் மூலமாகவும் பரவலாக்குவதும், அதில் பெண்கள் அதிகளவில் பங்கு பெறுவதும், அதிலும், சாதியின் பேரால், ஆணாதிக்கத்தின் பேரால், ஒடுக்கப்பட்டு இருந்த பெண்கள் பலர் தலைமைப் பதவிக்கு வருவது ஜனநாயகத்தின் பெரும் வெற்றி. முன்பு போல், எல்லாப் பெண்களும் தேர்தலுக்கு பின் வீட்டுனுள்ளே முடங்கி விடுவதில்லை. நீட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டு விட்டு வழக்கம் போல் தன் வீட்டு வேலைகளைப் பார்த்தால் போதும் என்றில்லாமல், பல பெண்கள் தனியாக, துணிச்சலாக செயல் படுகின்றனர். குறிப்பாக, அவர்களுக்கும் அவர்தம் மக்கள் தேவை என்னவென்று மிகத் துல்லியமாக தெரிகிறது.

நமது புரியாத பல சட்ட திட்டங்களின் பெயரால், அராசணைகள், முன் உதாரணம், டெண்டர், அதிகார வரம்பு என்று பல குறுக்கு கோடுகளை போட்டு நமது அதிகார மட்டம் அவர்கள் முன் தடையிடாமல், அவர்களின் எண்ண ஓட்டத்திற்கு ஈடு கொடுப்பார்களேயானால், நிச்சயம் இந்த பெண்கள் எல்லோருமே நிர்வாகத்தில் சாதனை புரிவார்கள் என்று நம்புகிறேன்.

இந்திரன் மாறினாலும் இந்திராணி மாறுவதில்லை என்று கலைஞர் அடிக்கடி குறிப்பிடுவார். அடிமட்டம் வரை தேர்தல்கள் நடைபெற்று முடிந்து புதிய மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். அவர்கள் தனது சொந்தங்களிடையே பல வாக்குறுதிகளை கொடுத்து அவற்றையெல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்ற ஆர்வத்துடன் புதிய பதவிகளை ஏற்றுக் கொள்ள இருக்கிறார்கள். நமது அரசு அதிகாரிகள் அவர்களுக்கு உற்சாகத்துடன் வழிகாட்ட வேண்டும்.

இந்திரன் மாறிவிட்டான். இந்திராணிகள் தம்மை மாற்றிக் கொள்ளவேண்டும்.

 வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *