இந்த நாட்டின் அத்தனை சீர்கேடுகளுக்கும் தாமதமாக கிடைக்கும் நீதிதான் காரணம் என்பது எனது நம்பிக்கை.
ஆனால் இந்த கோகுல்ராஜ் கொலை வழக்கில் நீதி கிடைத்து அது உறுதி செய்யப்பட முழுமையாக 8 ஆண்டுகள் ஆனாலும் இந்த வழக்கில் எனக்கு அந்தக் குறை இல்லை.
நீதிமன்றம் எப்படி செயல்பட வேண்டும், நீதிபதிகள் எப்படி சாய்வுத் தன்மை இன்றி உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த வழக்கை இனி நாம் கொள்ளலாம்.
கொலை செய்யப்பட்ட இளைஞன் பண பலமோ, சாதி பலமோ இல்லாத ஒருவன். கொலையாளிகளோ சொந்தமாக சாதிக் கட்சியே நடத்தும் செல்வாக்கு கொண்டவர்கள்.
சாதித் திமிரில் நடந்த கொலை இது. அந்தக் கணத்துக்கு முன் வரை கொலையாளிகளுக்கு இவர்கள் யார் என்றே தெரியாது. வட இந்தியாவில் பொறுக்கிகள் பொது இடத்தில் செய்யும் moral policing போல இவர்கள் செய்யப் போய்தான் அந்தக் காதல் ஜோடியில் பெண் தங்களது சாதி என்பதைக் கண்டறிந்தனர். காதலன் ஒடுக்கப்பட்டப் பிரிவு என்பதை அறிந்தவுடன் அவர்களது ரத்த அணுக்களில் இருந்த அத்தனை செல்களும் கொழுப்பாக மாறி சிந்தனையை மழுங்கடித்து ஒரு கொடூர கொலையை நிகழ்த்தி உள்ளனர்.
ஒரு 22 வயசு பையனை கழுத்தை வெட்டித் துண்டாக்கிய அந்தக் கணத்தை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அதைச் செய்தவர்கள் தனது சாதிப் பெருமையை தாங்கள்தான் காப்பாற்றினோம் எனும் பெருமிதத்துடன் காவல்நிலையம் செல்லவில்லை. மாறாக, அந்தக் கோழைகள் உடலையும், தலையையும் கொண்டு போய் பல கி.மீ தொலைவில் உள்ள ரயில்வே டிராக்கில் போட்டு ரயில் வந்து மோதும்வரை இருந்து பார்த்து விட்டு சென்றுள்ளனர்.
இப்போது பொதுப் பார்வையில் அது தற்கொலை. காவல்துறைக்கு ஐயம் வந்தாலும் தடயமும், சாட்சியமும் கிடைக்காதே எனும் திமிர்.
அப்போதுதான் தமிழ்நாட்டின் கூட்டு மனசாட்சி கொதித்தெழுந்ததைப் பார்த்தோம்.
இது ஆணவக் கொலைதான் என்று அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், ஊடகங்கள் என அத்தனைப் பேர்களும் நடத்திய போராட்டங்களினால்தான் இந்தக் கொலை வழக்கு கவனம் பெற்றது.
பெரும்பான்மைச் சாதிய சக்திகள் இந்த வழக்கு விசாரணையில் செய்த குறுக்கீடுகள், தந்த அழுத்தங்களால் கீழமை நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தடுமாறியது. இந்த வழக்கில் குற்றவாளிகள் தப்பிவிடுவார்கள் என்பது சட்டம் அறிந்த யாவருக்கும் அப்போது தெரிந்திருந்தது.
அதை உணர்ந்த நீதிமன்றம் தனது பிடியை இறுக்கத் தொடங்கியது. ஒரு புகார் மனுவின் பேரில் அதுவரையில் உள்ளூர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கை, மதுரை வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது சென்னை உயர்நீதிமன்றம்.
இதற்கிடையே நடந்த விசாரணை அதிகாரி டி.எஸ்.பி.விஷ்ணுப்ரியாவின் தற்கொலை காவல்துறைக்கும் பெரும் அழுத்தத்தை தந்த காரணத்தால் வழக்கு மேலும் துல்லியமாக விசாரிக்கப்பட்டது.
அரசு தரப்பில் வாதாட நீதிமன்றமே நியமித்த மூத்த வழக்கறிஞர் மோகன் அறிவியியல் பூர்வமாக ஆதாரங்களைத் திரட்டி குற்றத்தை எந்தவித ஐயமும் இன்றி நிரூபித்தார்.
ரயில் மோதி தலை துண்டாவதற்கும், அரிவாளால் வெட்டப்பட்டு துண்டாவதற்குமான வேறுபாட்டை அறிவியியலின் அத்தனை சாத்தியங்களைக் கொண்டும் அரசு தரப்பு நிலைநாட்டியது.
கொலையாளிகள் உள்ளே வந்த சிசி டிவி பதிவு, அவர்கள் அந்த நேரத்தில் பேசிய செல்போன் ஆதாரங்கள் என அத்தனைப் புள்ளிகளும் ஒரே இடத்தில் சேர்ந்தன.
வழக்கு தீர்ப்பானது. முக்கிய சாட்சியான அவன் காதலியே பிறழ்சாட்சி ஆன போதும்,
குற்றம் தெளிவாக நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது.
இத்துடன் இது முடியவில்லை.
வழக்கின் முடிவு எதிர்மறையாக போகும் என எதிர்பார்த்திராத எதிர்தரப்பின் ‘பெரும் சக்திகள்’ ஒன்று சேர்ந்தன. குற்றவாளி அவர்கள் சாதியில் செல்வாக்கு பெற்ற இளைஞன். எப்போதும் நெற்றியில் விபூதி, குங்குமத்துடன் தனது சாதியையும் தலையிலேயே தூக்கித் திரிந்த தலைவன். எனவே அவனை மட்டுமாவது இந்த வழக்கில் இருந்து விடுவிக்க பெரிய திட்டம் தீட்டப்பட்டது. நித்தமும் தொலைகாட்சியில் பேட்டிகளை தரும் அளவிலான பெரும் சக்திகள் அதற்கான முயற்சிகளை எடுத்தனர்.
ஆனால், எதற்கும் அசராத சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர்கள் சம்பவ இடத்துக்கு தாங்களே நேரில் வந்து வழக்கின் உண்மைத் தன்மையை உறுதி செய்து இன்று கொலையாளிகளுக்கு வாழ்நாள் முழுவதுமான ஆயுள் தண்டனையை உறுதி செய்துள்ளனர்.
எத்தனை கோடி பணத்தாலும், அதிகாரத்தாலும், அரசியல் செல்வாக்காலும் கூட வளைத்து விட முடியாத நமது நீதிமன்றத்தை எண்ணி நாம் பெருமை கொள்ளலாம்.
நீதிமன்றங்கள் மட்டுந்தான் எளிய மக்களின் நம்பிக்கை.
அதுதான் நமது அசோகச் சக்கரத்தின் அச்சாணி.
கோகுல்ராஜ் கழுத்தை நோக்கி அரிவாள் வந்த அந்தக் கணத்துக்கும், இறுதித் தீர்ப்பு வந்த இந்தக் கணத்துக்குமான கால இடைவெளியில் தடம் புரளாமல் சென்றதுதான் தர்மத்தின் பாதை.
வாய்மையே வென்றது.