நுனிக் கரும்பின் ருசி

நாற்பது வயது வரை எந்த முட்டாள்தனமும் செய்யாமல் ஒழுங்காகத்தான் இருந்து வந்தேன். பிறகுதான், புத்தித் தடுமாறி எழுத ஆரம்பித்தேன். வாசிப்புக்கு சாதாரண மனநிலை போதுமானது. எழுதுவதற்கு கொஞ்சம் அசாதாரண மனநிலை தேவைப்படும் என்பதைக் கூட எழுதத் துவங்கிய பிறகுதான் முழுவதுமாக உணர்ந்தேன்.

இணையத்தில் எழுதப் படுகின்ற தமிழ் கட்டுரைகள், கதைகள் பற்றி மிகத் தாமதமாகவே தெரிந்து கொண்டேன். பிறகு, தமிழ் வலைத் திரட்டி ஒன்றினை கண்டு பிடித்து, அதன் மூலமாக இணையத்தில் மிகச் சுதந்திரமாக எழுதிக் கொண்டிருந்த பலரை படிக்க ஆரம்பித்தேன். சினிமா விமர்சனம் முதல் கணிணியில் தமிழ் மென்பொருட்கள் வரை பல்வேறு விதமான செய்திகள் என்னை வந்தடைந்து, எப்போதுமே என்னை ஆச்சரியத்திலேயே வைத்திருந்த காலம் அது.

அதே காலகட்டத்தில், ஜெயமோகன் போன்றவர்கள், தனக்கான வலைதளங்களைத் துவங்கி, முழுக்க அந்த வலைதளத்திலேயே தங்களின் கதைகளையும்,கட்டுரைகளையும் எழுதத் துவங்கினர். மெல்ல, மெல்ல இணையத்தில் எழுதுவதன் பல்வேறு சாத்தியங்கள் எனக்கு பிடிபடத் துவங்கியது.

என்னைப் போன்ற எண்பதுகளில் வாசிக்கத் துவங்கியவர்களுக்கு எழுத்து என்பது ஏறக்குறைய கல்வெட்டில் அடிக்கப் பட்டது போன்ற சாஸ்வதமான ஒன்று. ஒரு எழுத்தாளர் தனது மிகச் சிறந்த கதைக்கான எதிர்வினையை, அச்சில் வெளிவந்த சில மாதங்களுக்குப் பின்பு பெறத் துவங்கி, பல வருடங்கள் வரை தொடர்ந்து பெற்றுக் கொண்டே இருப்பார். ஏதேனும் ஒரு கதையைப் படித்து வியந்துபோய், அந்த எழுத்தாளரைப் பாராட்டி ஒரு கடிதம் போட்டீர்களேயானால், பல சமயங்களில் அந்த எழுத்தாளரே உங்களைத் தேடி வந்து பேசி விட்டுச் சென்ற வசந்த காலம் அது.

இணையம் வந்த பிறகு, எழுத்தாளருக்கும் வாசகனுக்குமான இடைவெளி ஏறக்குறைய இல்லாமலேயே போயிற்று! எழுத்திற்கான எதிர் வினை அடுத்த நொடியே வந்து விழத் துவங்க, எழுதுவது என்பது ஒரு போதை வஸ்துவாகி விட்டது. தனது எழுத்து ஏதேனும் ஒரு இடத்தில் அச்சில் பிரசுரமானால்தான் எழுத்தாளன் என்ற நிலை மாறி, தனக்குத் தானே பிரசுரம் செய்யத் தொடங்கியக் காலம்தான் நம் தமிழ் எழுத்துச் சூழலில் உண்மையாகப் புரட்சி ஏற்பட்டக் காலம்.

மெல்ல, மெல்ல எனக்கும், இந்தச் சுதந்திரம் பிடித்துப் போகத் துவங்கியது. நாம் நினைப்பதை எழுதலாம். நமது வலை தளத்திலேயே பிரசுரித்து விடலாம். எப்போது வேண்டுமானாலும் பொருட் பிழை, சொற் பிழைத் திருத்திக் கொள்ளலாம். பிடித்தால் வைத்துக் கொள்ளலாம். பிடிக்க வில்லையென்றால் நீக்கி விடலாம். எல்லாவற்றையும் விட முக்கியமானது, நாம் எழுதியதை பிரசுரிக்கக் கேட்டு யாரையும் கெஞ்ச வேண்டாம். (படிக்கச் சொல்லித்தான் அவ்வப்போது கெஞ்ச வேண்டும்!). இணையத்தின் இந்தச் சுதந்திரம் இன்னமும் என்னை ஈர்த்து வைத்துக் கொண்டிருக்கிறது.

10.10.10 என்ற வசீகரமானத் தேதியொன்றில் எனக்கான வலைதளத்தைத் துவக்கினேன். எனது நண்பர் பிரபுராஜ், உடன் அமர்ந்து தொழில் நுட்ப உதவிகள் செய்து தர, நண்பர் எழுத்தாளர், பவா செல்லதுரை என்னைக் குறிப்பிட எப்போதும் பயன்படுத்தும் எஸ்கேபி கருணா என்ற பெயரையே, எனது இணையப் பெயராகப் பதிந்து கொண்டேன். அறிமுகப் பத்தி ஒன்று எழுதி விட்டு, உற்சாகமாக வீடு திரும்பிய பின்பு, தொடர்ந்து என்ன எழுதலாம் என்று சிந்திக்கத் துவங்கினேன். அப்படியே ஆறு மாதம் சென்று விட்டது.

ஒரு நாள், நண்பர் ஷைலஜா மொழி பெயர்த்த நடிகர் மம்முட்டியின் வாழ்வனுபவங்களைப் பற்றிய புத்தகம் படித்துக் கொண்டிருக்கும் போது, எனது முதல் கட்டுரைக்கான பொறி எனக்குக் கிடைத்தது. நிழல் மரியாதை என்று அதை ஒரு கட்டுரையாக்கி பவா (செல்லதுரை) விடம் அனுப்பி வைத்தேன். படித்துப் பார்த்து உடனே அதை வலைதளத்தில் வெளியிடச் சொன்னார்.
மிகுந்த தயக்கத்துடனும், கூச்சத்துடனும் வெளியிட்டேன்.

அந்தக் கட்டுரைக்கு எனக்கு கிடைத்த பாராட்டுகள் உண்மையிலேயே, ஒரு மாதத்திற்கு என்னை கால் தரையில் படாமல் மிதக்க வைத்தது. நண்பர்கள் ஷாஜி, எஸ்.ராமகிருஷ்ணன், நா.முத்துகுமார், உயிரெழுத்து ஆசிரியர் சுதிர் செந்தில், முருகேச பாண்டியன் என பல நண்பர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள். குறிப்பாக, எனது பிரியத்திற்குரிய கார்ட்டூனிஸ்ட் மதன், அதைப் பாராட்டி பின்னூட்டம் இட்டு, தொலைபேசியிலும் சிலாகித்துச் சொன்னார். எல்லாவற்றுக்கும் மேலாக, நண்பர் ஜெயமோகன் அந்தக் கட்டுரையைக் குறிப்பிட்டு, அவரது வலை தளத்தில் பகிர்ந்த பின்பு, முதல் கட்டுரையிலேயே, ஒரு வெளிச்சக் கீற்று என் மீது கவிழ்ந்தது.

சில நேரங்களில் தொடந்தும், சில நேரங்களில் தோன்றும் போதும் என அவ்வப்போது பல கட்டுரைகளை எழுதி வந்தேன். சில கட்டுரைகள் எனக்கே பிடித்துப் போனதும் உண்டு. எழுதத் தொடங்கிய முழு சந்தோஷத்தையும் அடையும் விதமாக, எனது ஆதர்ச எழுத்தாளரான அ.முத்துலிங்கம் என்னுடைய சில கட்டுரைகளைப் பாராட்டி எனக்கு மின்னஞ்சல் எழுதினார். பல இரவுகள் மீண்டும், மீண்டும் அதைப் படித்துக் கொண்டே இருந்தேன்.

சரி! போதும்! கட்டுரைக்கான (நீண்ட) முன்னோட்டம் கொடுத்தாயிற்று. விஷயத்திற்கு வருகிறேன்.

சில மாதங்களுக்கு முன், ஒரு கட்டுரையை நகைச்சுவையாக எழுதத் துவங்கி, அதில் சரி விகிதமாக புனைவும் கலந்து போய், ஒரு வேளை இது சிறுகதையோ என்று நானே கருதத் துவங்கும் வகையில் ஒன்றினை எழுதி முடித்தேன். வழக்கம் போல், கருத்துக்காக பவாவிடம் அனுப்பி வைத்து விட்டு, அதை மறந்தும் போனேன். ஒரு நாள், பவா என்னை அழைத்து, அதை வலைதளத்தில் போட்டி விடாதீர்கள்! ஆனந்த விகடனுக்கு அனுப்பி வைத்துள்ளேன்! என்று சொன்னார். எனக்கு வியர்த்துப் போய் விட்டது. பவாவின் மீது கடும் கோபம் கூட வந்தது.

என்ன பவா? எப்படி செய்து விட்டீர்களே? என்று கேட்டதற்கு, அதில் ஒரு நல்ல சிறுகதை இருக்கு கருணா! விகடனில் தேர்வானால் சரி! இல்லையென்றால் என்ன நட்டம்? வழக்கம் போல உங்கள் வலைதளத்தில் போட்டு விடுங்கள். இதற்கு ஏன் பதட்டம் என்று சொல்லிச் சென்று விட்டார்.

நான் அச்சப்பட்டது போலவே, இப்போது அந்தக் கதையும் ஆனந்த விகடனால் தேர்வு செய்யப்பட்டு இன்று பிரசுரமாகி விட்டது.

ஒரு இருபது வருடங்களுக்கு முன்பு இது நிகழ்ந்திருந்தால், இதுதான் எனது வாழ்வின் உச்சபட்ச சாதனை என்று சொல்லியிருப்பேன். இடைப்பட்ட இந்தக் காலத்தில், பல்வேறு தளங்களில் தடம் பதிக்க காலம் எனக்கு பல வாய்ப்புகளைக் கொடுத்துள்ளது. இருப்பினும் கூட, ஒரு தமிழ் இலக்கிய வாசகனாக, ஒரு கத்துக் குட்டி எழுத்தாளனாக, நான் எழுதிய முதல் கதையொன்று, மதிப்பு மிகுந்த பத்திரிக்கையான ஆனந்த விகடனில் பிரசுரம் ஆவது எனக்கு பெரும் மகிழ்ச்சியினையும், மெல்லிய கர்வத்தையும் அளிக்கிறது.

விகடனில் வெளி வரப் போகிறது எனறு முன்னரேத் தெரிந்திருந்தால், இன்னமும் மெனக்கெட்டு அழகாக எழுதியிருக்கலாமே என்று மனசு கிடந்துத் தவிக்கிறது. இப்படித்தான், மற்ற எழுத்தாளர்களுக்கும் தோன்றுமா எனத் தெரியவில்லை.

இது ஒரு நுனிக் கரும்பின் ருசி! அடிக் கரும்பைப் போல, அப்படி ஒன்றும் பெரிய சுவை இருக்காது!ஆனால், ஒரு நுனிக் கரும்பிலிருந்தும் கூட, இன்னொரு அடிக் கரும்பு வரும் தானே. நானும் கூட, எத்தனையோ அடிக் கரும்புகளின் நீட்சிதானே! இந்த சந்தோஷத் தருணத்தில்,நான் நன்றியுடன் நினைத்துப் பார்க்க பலர் இருக்கின்றனர்.

முதலில் எனது வாழ்நாளில் என்றும் எனக்கு ஆதர்சமாக இருக்கும் எழுத்தாளர் சுஜாதா.

போண்டா, வடை கட்டிக் கொடுக்கும் தாள்களைக் கூட கீழே போடாமல், அதில் அச்சிடப் பட்டிருந்தவற்றை முழுவதுமாக வாசிக்கும் பழக்கம் இயல்பாகவே என்னிடம் இருந்தது. ஆனால், எதையெல்லாம் வாசிக்க வேண்டும் என்று என்னை (போன்ற பல வாசகர்களையும்) நெறிப் படுத்தி, எனது கரம் பிடித்து தமிழ் இலக்கியத்தினுள் அழைத்து சென்றது சுஜாதாதான்.

அவர் சுட்டிக் காட்டிய பின்புதான் ஆத்மாநாம் படித்தேன். கி.ராவின் கள்ளிக்காட்டு எழுத்துகளையும், சுந்தரராமசாமியின் புளியமரத்தின் கதையையும், ஜி.நாகரஜனையும், அசோகமித்திரனையும் தெரிந்து கொண்டேன். இப்படி, வண்ண தாசன், வண்ண நிலவன், முதல் ஆதவன் தீட்சண்யா, நா. முத்துகுமார் வரை அவர் சொல்லித்தான் படித்தேன். தமிழின் மிகச் சிறுகதைகளில் ஒன்று ஜெயமோகன் எழுதிய மாடன் மோட்சம் என்பது அவர் பாராட்டி எழுதியப் பிறகுதான் எனக்குத் தெரிய வந்தது.

எனது நண்பர்களுக்கு மட்டுமாக எழுதிக் கொண்டிருந்த என்னை, ‘சுஜாதாவின் ஆட்டோகிராஃப்’ என்றொரு அவரைப் பற்றியக் கட்டுரைதான், பரந்து பட்ட அவரின் வாசகர்களுக்கிடையே கொண்டு சேர்த்தது. தனது தனித்துவமான தமிழ் நடையினையும், தான் வாசித்து மகிழ்ந்த உலக இலக்கியங்களையும், அவரது வாசகர்களின் ஆன்மாவில் சேர்த்து விட்டு சென்றிருக்கிறார் சுஜாதா. இன்று அவர் இருந்திருந்தால், அவரிடம் சென்று சொல்லியிருப்பேன்!

சார்! உங்களிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய ஒரு வாசகன், இன்று ஆனந்த விகடனில் சிறுகதை எழுதியுள்ளான் என்று!

அடுத்து, எனது நண்பர்கள் பவா செல்லதுரையும், ஷைலஜாவும். நான் என்ன எழுதினாலும், இந்தத் தம்பதிகள் முதலில் படித்துப் பார்த்து கருத்து சொன்ன பிறகுதான், வெளியிடுவது என்ற ஒரு வழக்கம் இயல்பாகவே அமைந்து விட்டது. அதுவும், ஷைலஜா மிகவும் கறாராக தமது மதிப்பீடுகளை சொல்லி விடுவது, எனக்கு எல்லா விதத்திலும் உதவியாகவே இருக்கிறது.

என்னை எழுதத் தூண்டுவது, எழுதியதைப் படித்து மனம் திறந்து பாராட்டுவது, சிரமம் பாராமல் சில முக்கிய கட்டுரைகளுக்கு ஒற்றுப் பிழை முதல் எல்லாவற்றையும் சரி பார்ப்பது, இன்னமும் என்னை பல நண்பர்களிடையே கொண்டு சேர்த்துக் கொண்டிருப்பது, நான் எழுத இன்னும் பல அனுபவங்கள் என்னிடம் உண்டு என்று, திரும்பத் திரும்ப என்னிடம் சொல்லி, என்னை நம்ப வைப்பது என பல்வேறு வடிவங்களில் எனது நண்பர் பவா செல்லதுரையின் தாக்கம் என் மீது முழுவதுமாக வியாபித்துள்ளது! இது குறித்து, எப்போதுமே எனக்கு ஒரு பெருமிதம் உண்டு.

சமீபகாலங்களில், சமூக வலைதளங்களில் எனக்குப் பல புதிய நண்பர்கள் கிடைத்துள்ளனர். என்னிலும் நிறைய வயது குறைந்த இந்த இளைஞர்களின் உற்சாகம் அவ்வப்போது என்னையும் பற்றிக் கொள்வது உண்டு. சிறிய வயதினில், குடும்பப் பொறுப்புகளை முழுவதுமாக ஏற்றுக் கொண்டு, தங்களையும் வாசிப்புத் தளங்களில் நிலை நிறுத்திக் கொண்டிருக்கும் இவர்களும் கூட, நான் சமீபத்தில் நிறைய எழுதுவதற்கு ஒரு முக்கிய காரணம். அத்தகைய இளம் நண்பர்களுக்கும் எனது நன்றி.

ஒரு முறை நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் என்னிடம், கருணா! உங்களுக்கு எழுதுவது என்பது இயல்பாக வருகிறது என்று சொன்னார். உண்மைதான்! பல ஆண்டு கால தொடர்ந்த வாசிப்பே எனக்கு அந்தத் தகுதியை தந்துள்ளதாக நம்புகிறேன். எதையேனும் எழுதலாம் என்று எனது மேக் ப்ரோ மடிக் கணிணி முன் அமர்ந்து, தட்டச்சு செய்யத் துவங்கினால், எனது உலவி (Browser) தொடர்ந்து நான் எழுத எண்ணும் வார்த்தைகளை, முதல் எழுத்திலேயே கண்டு கொண்டு வருகிறது. கணிணிக்கும் எனக்குமான உளவியல் புரிதல் எனக்கு வியப்பாக இருக்கிறது. இது எத்தகைய கட்டுரைகளையும் அதிகபட்சம் இரண்டு, மூன்று மணி நேரத்தில் எழுதி முடிக்க எனக்கு உதவுகிறது.

இதில், இன்னொரு அபாயமும் இருப்பதை நான் உணர்கிறேன்.

எழுத்தாளரும், நண்பருமான திரு. நாஞ்சில் நாடன் ஒரு முறை எங்கோ இப்படி எழுதியுள்ளார்.

‘பத்து லட்சம் வார்த்தைகள் கொண்ட எனது தமிழ் மொழியில், வக்காளி வெறும் நூற்றைம்பது வார்த்தைகள் தெரிந்தவனெல்லாம் எழுத்தாளன் என்று எழுத வந்து விட்டார்கள்”

இது என்னை(யும்)க் குறிப்பிடுவதாகவே நான் எடுத்துக் கொள்கிறேன். எழுதுவதற்கு தொடர்ந்து வெகு சில வார்த்தைகளையே நான் பயன் படுத்துவதை எனது கணிணியின் உலவியும் அவ்வப்போது எனக்குச் சுட்டிக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறது.

பலர் நம்மை கவனிக்கத் தொடங்கியுள்ளார்கள். இனியேனும், பழந்தமிழ் இலக்கியங்களை, இன்னமும் நிறையப் படித்து, நல்ல பல தமிழ் வார்த்தைகளைப் பரிச்சயப் படுத்திக் கொண்டு, எனது உரைநடையினை இன்னமும் செறிவாக்கிக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணமும், பொறுப்பும் வரத் தொடங்கியுள்ளது. முயற்சி செய்கிறேன்.

நான் எழுதியதையெல்லாம் படித்து, என்னை அவ்வப்போது பாராட்டி, தொடர்ந்து எழுத உந்துதலாக இருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

இறுதியாக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

இனி நேரிலோ, மின்னஞ்சலிலோ, அல்லது ஏதேனும் விழாவினிலோ என்னைக் குறிப்பிட்டு பேசும்போது, அடை மொழியாக ‘எழுத்தாளர்’ எஸ்கேபி கருணா எனக் குறிப்பிட்டு அழைக்காதீர்கள். அது எனக்கு மிகுந்த சங்கடத்தைக் கொடுக்கும்.

பிரபல எழுத்தாளர் எஸ்கேபி கருணா என்றே அழையுங்கள்!

எனது முதல் சிறுகதை 15.8.2013 சுதந்திர தினத்தன்று
ஆனந்த விகடனில் வெளி வந்த,
(தலை கால் புரியா) சந்தோஷத்தில்,
எழுதியது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *