வட்டச் செயலாளர்

கோபால்.. உள்ளே இருக்கியா? என்று நகரச் செயலாளர் கத்தும் முன்பே அவர் வந்திருப்பதை அவரோட ஸ்வேகா வண்டி சப்தத்தைக் கொண்டே கோபால் அறிந்து கொண்டார். தெருமுனையில் அந்த வண்டி நுழையும்போது ஏற்கனவே ஆறு பஞ்சர் ஒட்டப்பட்டிருந்த அந்த சைக்கிள் டியூபில் புதுசாக ஆகியிருக்கும் ஏழாவது பஞ்சரை அருகிலிருந்த சிமெண்ட் தண்ணி தொட்டியில் முக்கி கண்டுபிடித்திருந்தார் கோபால். 

தினமும் ஒரு முறையாவது கோபால் சைக்கிள் கடைக்கு வந்து போவது நகர செயலாளரின் வாடிக்கை. காலையில் அவர் டீ குடிக்கப் போகும்போது கடை மூடியிருக்கும். லஷ்மி கடையில் டீ குடித்தபடியே அன்றைய கட்சி வேலைகளை அங்கே வந்து காத்திருக்கும் தனது கட்சித் தொண்டர்களுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்து விட்டு, இன்னொரு டீயையும் குடித்து விட்டு, பக்கத்து பங்க் கடையில் ஒரு சிசர்ஸ் சிகரெட் வாங்கி சட்டைப் பாக்கெட்லே போட்டுக் கொண்டு நேரா கோபால் கடைக்கு வந்து விடுவார். அப்போது கோபால் கடை நிச்சயம் திறந்திருக்கும். 

கோபால் சைக்கிள் கடை என்பது தெரு சாக்கடை மீது மரப்பலகை போட்டு, மேலே கூரை வேய்ந்திருக்கும் ஒரு சின்ன இடம். அந்த இடத்தில் சில சைக்கிள் நிறுத்தப்பட்டிருக்க, ஓரிரு சைக்கிள்கள் பிரிக்கப்பட்டு கூரை மீது ஆணியடித்து மாட்டப்பட்டிருந்த சைக்கிள் டயர்களில் தொங்க விடப்பட்டிருக்கும். அசல் கடை கடைசியில் உள்ள ஒரு சின்ன ரூம்தான். இருள் கவிழ்ந்த பிறகு இந்த சைக்கிள்களை அதனுள் நிறுத்தி மரப்பலகை போட்டு மூடி விட்டு செல்ல மட்டுமே பயன்படும் இடம் அது. 

வண்டியை சைடு ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு கடைக்குள் நுழைந்த நகரச் செயலாளர் ஓரமாக கிடத்தி வைக்கப்பட்டிருந்த மர பெஞ்சை எடுத்துப் போட்டு, கூரையில் சொருகப்பட்டிருந்த அன்றைய தந்தி பேப்பரை எடுத்தபடி உட்கார்ந்தார். பேப்பரை பிரிக்கும் முன் கை பாக்கெட்டில் இருந்த சிகரெட்டை எடுக்க கோபால் தீப்பெட்டியை எடுத்து நகரத்தின் கையில் தந்தார். 

யோவ்! கோபால், நம்மை பொதுக்கூட்டம் போட சொல்லி இருக்காங்கய்யா. பேச்சாளர் சங்கொலி சக்கரபாணி மூணு மாசமா விடாம தேதி கேட்டதிலே இப்பதான் தந்திருக்காப்லே! வர 19 ஆம் தேதி சனிக்கிழமை கூட்டம். இந்த வாட்டி எங்க வச்சுக்கலாம்? என பேச்சைத் தொடங்கினார் நகரச் செயலாளர். 

கோபால் அந்தப் பகுதியின் வட்டச் செயலாளர். இப்போதைய 25 வட்டத்திலேயும் அவர்தான் மூத்த வட்டச் செயலாளர். கிட்டத்தட்ட 30 வருஷமா அதே போஸ்ட்டிங்லே இருக்கார். அவரை ஒரு வார்த்தைக் கேட்காமல் நகரச் செயலாளர் எந்த முடிவையும் எடுக்க மாட்டார். 

பஞ்சரை அப்புறம் பார்க்கலாம்யா! முதல்லே எங்கேன்னு எடம் சொல்லு? காந்தி சிலைக்கிட்ட போட்டுடலாமா? 

எத்தினி கூட்டம் அங்கியே போடுவே நீ? மத்த பக்கத்திலே இருக்கும் டீக்கடை, ஓட்டல்கடைக்காரன்லாம் பொழைக்க வேணாமா? எல்லாம் என்கிட்டே வந்து உன்ன திட்டிட்டுப் போறானுங்க. 

அப்புறம் எங்கன்னு நீயே சொல்லு? 

இந்த முறை கிழக்காலே போடு. ஏன்? இங்கியே கூடதான் போடலாம்! பஜார்லேயேதான் கூட்டம் போடணும்னு சட்டமா என்ன? 

அப்படியில்லதான்! முன்னெல்லாம் கூட்டம் வரும்னு பஜார் பக்கமா பார்த்து போடுவோம். இப்பதான் எங்க வச்சாலும் கூட்டம் வந்துருதே! அதிலும் சங்கொலி பேசறார்னா கிராமத்துலே இருந்தெல்லாம் வந்துடுவாங்க. போன தபா செகண்ட் ஷோ முடியுறவரைக்கும் பேசனான் மனுசன். ஒரு பய அந்த பக்கம், இந்த பக்கம் நகரலையே! சிரிச்சு சிரிச்சு வயிறெல்லாம் இழுத்துகிடுச்சு. 

அப்புறம் என்ன? என் வட்டத்துலேயே போட்டுக்கலாம். 

போடலாம்தான்! ஆனா எப்படியும் ரெண்டாயிரம், மூவாயிரம் ஆயிடுமேய்யா! பேச்சாளருக்கே படி, சம்பளம், ரூமுன்னு ஆயிரம் ஆகிடுது. 

அதான் பஜார்லே வசூல் பண்ணுவியே? 

அது எங்க! ஒரு தடவ தந்தவன் கிட்டே அடுத்த தடவ போவ முடியாது. என்ன முக்கினாலும் ரெண்டாயிரத்தை தாண்ட மாட்டேங்குது. எப்படியும் ஆயிரம் ரூபா கைகாசு போடணும். நீ போடுவியா சொல்லு? 

நான் ஐநூறு தந்துடுறேன். அவ்ளோதான் என் சக்தி. இந்த முறை இங்கியே போட்டுறலாம். 

சிகரெட்டை கடைசி நுனி வரை இழுத்தபடி நகரச் செயலாளர் யோசித்தார். 

சரி! எழுந்து வா.. எடத்தை காட்டு. மேடை 20க்கு 20. எதிர்க்க ஆயிரம் பேராவது கொள்ளணும். அது போக சைக்கிள்ங்க நிறுத்துற இடம்.. 

எல்லாம் இங்கியே இருக்கு. என் தெருவிலேயே போட்டுடலாம். 

ரைட்டு! நான் போய் அச்சாஃபீஸ்லே நோட்டீஸ் அடிக்க கொடுத்துட்டு வந்துடுறேன். தலைமை உன் பேரை போட்டுடட்டுமா? 

அதெல்லாம் வேணாம். நகர செயலாளர் நீ இருக்கப்ப, இதென்ன புது பழக்கம்? உன் பேரையே போட்டுடு. நான் வரவேற்புரை பேசிக்கிறேன்.

அப்ப சரி என்றபடி தனது ஸ்வேகாவில் ஏறி மிதிக்கத் தொடங்கினார் நகரம். நாலு முழு ரவுண்டு ஏறி மிதிச்சாதான் அந்த வண்டி ஸ்டார்ட் ஆகும்னு அந்த ஊருக்கே தெரியும். 

அச்சாபீஸ்லே இருந்து நோட்டீஸ் வரும் முன்னரே சங்கொலி பொதுக்கூட்டம் அங்கே நடக்கப் போகிறது எனும் விஷயம் தெரு முழுக்க பரவி விட்டிருந்தது. ஒவ்வொருத்தரா கோபால் கடைக்கு வந்து பேச்சு கொடுக்க ஆரம்பித்தனர். 

நீ மேடை மேலே இருப்பியாண்ணா என கேட்டான் கடை பையன். 

ஆமாம்டா! பின்னே? 

உனக்குமா சேர் போட்டுருப்பாங்க? 

ஆமாம். நடுவாலே பேச்சாளர். அவருக்கு அந்தப் பக்கம் நகரம், இந்த பக்கம் நான் உட்கார்ந்து இருப்போம். 

நீயும் மைக்லே பேசுவீயாண்ணா? 

இந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைதியாக சைக்கிள் ஸ்போக்ஸ் கம்பிகளை மாட்டிக் கொண்டிருந்தார். 

கோபாலின் வாழ்நாள் கனவே அவரது கட்சி மேடையில் பேசணும். அதுவும் அவங்க தெருவாசிகள், சொந்தக்காரங்க எல்லாம் அதை கேட்கணும். 

சின்ன வயசுலே இருந்தே கோபால் அதே கட்சியில்தான் இருக்கிறார். இந்த நகர செயலாளரின் மூத்த அண்ணன் தான் அப்ப நகர செயலாளர். அவர் கூடவே சுத்தி, தாலுக்காபீஸ் வேலை முதல் முனிசிபாலிட்டி வேலை வரை கத்துகிட்டு சுறுசுறுப்பான இளைஞனாக ஊரில் உலா வந்தார். ஒரு கூட்டம் போடணும்னா போலீஸ் பர்மிசன் வாங்குறது முதல் மேடை, நாற்காலிக்கு சொல்லி அட்வான்ஸ் தரது, மைக் செட் அட்வான்ஸ், அச்சாபீஸ் நோட்டீஸ் என அத்தனையும் அவருக்கு அத்துப்படி. 

அது போக, நகர செயலாளரை பின்னாடி உட்கார வச்சு கோபால்தான் சைக்கிள் ஓட்டிட்டு பஜாருக்கு வசூலுக்குப் போவார். போன கூட்டத்துக்கு எந்த கடையில் டொனேசன் கொடுத்தாங்க! அடுத்த கூட்டத்துக்கு தரேன்னு எந்தக் கடையிலே சொன்னாங்க என எல்லா விஷயமும் கோபாலுக்குதான் நினைவில் இருக்கும். 

கூட்டத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்னே மாட்டு வண்டியிலே மைக் செட் கட்டி பொதுக்கூட்டம் நடக்கப் போகும் விஷயம், இடம், பேச்சாளர் விவரங்களை ஊர் முழுக்க பேச விடுவாங்க. தியேட்டர் ஊழியன் முத்துதான் பேச்சாளர். கணீர் குரலில் சலிக்காம பேசிட்டு வருவார். அவரும் அதே கட்சிக்காரர்தான் என்பதால் காசு வாங்க மாட்டார்.  வெறும் சாப்பாட்டு படி மட்டும்தான்.

கூட்டத்துக்கு ஒரு நாள் முந்திதான் போஸ்டர் ஒட்டப்படும். அதுக்கு முன்னே ஒட்டினால் மாடு தின்னுடும். எந்த கால்வாய், குப்பைத்தொட்டியா இருந்தாலும் தயங்காமல் லாவகமா தாண்டி போஸ்டர் ஒட்டுவதற்கு என சில பசங்க இருந்தாங்க. அவங்களுக்கு கூலியா பரோட்டோ சால்னா கொடுத்தா போறும். சில சமயம் நகர செயலாளர் அவங்களுக்கும் மேடையிலே கூப்பிட்டு துண்டு போட்டு விடுவார். 

கூட்டத்துக்கு முந்தன நாள் இரவு கோபால் சைக்கிள் கடையில்தான் கொடி தோரணம் ஒட்டுவாங்க. பஜார்லே ஹோல்சேல்லே சணல் கயிறை வாங்கிட்டு வந்து நகர செயலாளர் கொடுத்துட்டு போவார். கோபாலும், கூட இந்த பசங்களும்தான் நைட் முழுக்க பசை காய்ச்சி கட்சிக் கொடியை சணலில் ஒட்டி தெரு முழுக்க தோரணம் கட்டுவாங்க. அதை வேடிக்கைப் பார்க்கவே தெருவிலே பசங்க கூடி நிற்பாங்க. 

கொடி தோரணம் கட்டும்போது, கட்சிக்காரர்கள் சூழ நகர செயலாளர் வந்து பார்வையிடுவார். துண்டை எடுத்து தலப்பாகையா கட்டிகிட்டு, டேய்! அந்தப் பக்கம் தோரணம் தொங்குது பார். அதை இழுத்துக் கட்டு. இந்த பக்கம் லைட்டு கம்பத்துலே முடிச்சை இழுத்துப் போடு என்றெல்லாம் அவர் உத்தரவு போடுவதை ஊர் ஜனங்க பார்க்கணும்! அப்பதான் அவருக்கு வேலை செய்த திருப்தி. 

மேடை போடுவது, சமுக்காளம் விரிப்பது, மைக்செட் கட்டுவது, இரும்பு மடக்கு நாற்காளிகளை கட்சி ஆபீஸ்லே இருந்து மாட்டுவண்டியில் ஏத்திட்டு வந்து மேடையில் போடுவது, குடிக்க சோடா முதல் மேடையில் நிர்வாகிகளுக்குப் போட துண்டு வரை எல்லா ஏற்பாடுகளையும் கோபால்தான் பார்ப்பார். 

ஆனால், அவை எல்லாமே நகர செயலாளரே பார்த்ததைப் போக ஒரு தோற்றத்தையும் உருவாக்கி அவரை திருப்தி படுத்தி விடுவதில் கோபால் கில்லாடி. 

கடையை மூடிட்டு ராத்திரி வீட்டுக்குப் போனவுடனே, பின்னாடி கிணத்திலே தண்ணி சேந்தி பத்து,இருபது வாளியை தலையில் உற்றி பகல் சூடு போக குளிச்சிட்டு கூடத்திலே வந்து சப்ளாங்கோல் போட்டு  சாப்பிட உட்கார்ந்தார் கோபால். 

என்னய்யா.. கூட்டத்தை இங்கியே போடலாம்னு சொல்லிட்டியாமே! இப்ப அதுக்கு வேற துட்டு அழணுமா? என்றபடி தட்டை எடுத்து வைத்தார் வட்டச் செயலாளரின் மனைவி. 

ம்… பாஞ்சி வருசம் கழிச்சு கவுன்சிலர் தேர்தல் நடக்கப் போகுதாம்! தலைவர் பேப்பரில் கடிதம் எழுதி இருக்கார். அசெம்ப்ளியிலே ஆளும்கட்சியை விடாம நச்சரிச்சு, கோர்ட்லே கேஸெல்லாம் போட்டு தேர்தலை கொண்டு வரார். கூட்டம், கீட்டம் நடத்தினாதானே இந்த வாட்டி கவுன்சிலர் சீட்டாவது கேக்க முடியும்? 

அதுக்கு? இப்பவே செலவு பண்ண ஆரம்பிப்பியா? சீட் கெடச்சா துட்டு வேணாமா? உனக்கு மேடையிலே நின்னு மைக்லே பேசணும்னு ஆசை. அதுக்காக தண்டம் அழப்போறேன்னு சொல்லு. 

அந்தக் கட்சியிலே செயலாளர்களை விட செயலாளர்களின் மனைவிகள் விவரமானவர்கள். 

பதில் ஏதும் சொல்லாமல் சோற்றை குழம்புடன் சேத்து பிசைந்தபடியே, கற்பனையில் ஆழ்ந்து போனார் வட்டச் செயலாளர். 

இடுப்பில் நாலு முழ கட்சி வேட்டி, மல் துணியிலே தச்சு வச்சிருக்கும் நீளமான ஜிப்பா, தோளில் இருபக்கமும் நீளமாக தொங்கும் துண்டு, அதை ரெண்டு கையாலும் இழுத்தபடி எதிரே இருக்கும் மைக் முன் அலட்சியப் பார்வையுடன் உலக அரசியலை கொண்டு வந்து உள்ளூர் நிலவரத்துடன் முடிச்சு போட்டு பேசும் மேடைப் பேச்சின் மீது வட்டச் செயலாளருக்கு தணியாத ஆசை. 

கற்பனையில் அவரது தலைவரைப் போல ஒரு கருப்புக் கண்ணாடி போட்டு பேசி நேரத்தை ஓட்டுவது அவரது பகல் நேர பொழுது போக்கு. 

கோபாலுக்கு மேடையில் பேச வாய்ப்பு கிடைப்பது ஒன்றும் பெரிய குதிரை கொம்பல்ல! அவர்தான் கூட்டத்தையே இழுத்துப் போட்டு ஏற்பாடு செய்பவர். இருந்தாலும் அவரோட கூச்ச சுபாவம் இதுவரை அவருக்கு அந்த தருணத்தை கிடைக்காமலேயே செய்து விட்டிருந்தது. அதிலும் ஒரு வட்டச் செயலாளருக்கு பேச வாய்ப்பு கொடுத்தால் மற்ற எல்லோரும் கேட்பார்கள். பேச்சாளருக்கு நேரம் தர முடியாது என்பதால் நகர செயலாளர் அந்த விஷயத்தில் ரொம்ப கறாரா இருப்பார். அவர் மைக்கில் முழங்கி உள்ளூர் எதிர்கட்சியினரை பேர் சொல்லி வெளுத்து வாங்க எப்படியும் முக்கா மணி நேரம் தனியா எடுத்து வைக்கணும். 

இந்த வாட்டி நான் தான் வரவேற்புரையே பேசப் போறேன். அதனாலே நீ தெரு பொம்பளைங்க எல்லாரையும் கூட்டிட்டு வந்துரு. வேணா, வீட்லே உப்மா, கிப்மா செஞ்சி வச்சு கூப்டின்னா எல்லாரும் வந்துருங்க. நான் ஆம்பள ஆளுங்களிடம் சொல்லிடறேன். நம்ம தெரு ஜனம் முழுக்க வந்து நான் மேடையிலே பேசறதை பார்த்தாதான் கவுன்சிலர் எலெக்சனுக்கு பிரயோசனபடும். 

அதெல்லாம் நான் சாயந்திரமே சொல்ல ஆரம்பிச்சுட்டேன். நீ மேடையிலே உன் கோண கால் தெரியாம ஒழுங்கா நின்னு பேசு. கடையிலே பேசறாப்லே கெட்ட வார்த்தை போட்டு ஏதும் பேசிடாதே. மத்தவன் பேசறதை எல்லாம் ரசிச்சி கேப்பாளுங்க. நீ பேசிட்டின்னா மட்டும் என்கிட்டே வந்து பஞ்சாயத்து வப்பாளுங்க. 

சரி! சரி! புள்ள எங்க? இன்னுமா வரலை? 

அவனை தான் மன்றத்தை பார்த்துக்க சொல்லி இருக்காராமே நகரம்?  ஒம்போது மணிக்கு எல்லாம் எடுத்து வச்சி பூட்டிட்டுதான் வீட்டுக்கே வரான். உன்ன மாதிரியே ஊர்லே இருக்கும் எல்லா பேப்பரையும் படிச்சுட்டு அரசியல் பேசிட்டே திரிஞ்சுட்டு இருந்தா எப்படி? 

அதெல்லாம் போவ போவ பாத்துக்கலாம் என்றபடி கைக்கழுவ எழுந்தார். தன் மகனை நினைச்சு உள்ளுக்குள்ளே கோபாலுக்கு பெருமிதம் தான். ஞாயிறு பேப்பர்களில் அவன் பேரில் வாசகர் கடிதம் வராம இருக்காது. ஒவ்வொரு செய்தி தாள்களிலும் வரும் கட்டுரைகள், செய்திகளில் இருந்து புதுசு புதுசா பாயிண்டை கண்டு பிடிச்சு வாசகர் கடிதம் எழுதி போடுவதில் மன்னன் அவன். விஷயம் சுவாரஸ்யமா இருப்பதால் எப்படியும் இவன் கடிதம் அச்சிலே வந்துடும். கோபாலுக்குப் பிறகு அந்த ஏரியாவுக்கு அவன் தான் என்பது கட்சியிலே எல்லோருக்கும் தெரிந்து இருந்தது. 

நாட்கள் விறுவிறுவென சென்றன! சங்கொலி சக்கரபாணி பேசப் போகிறார் என்பது நகரத்தை தாண்டி சுத்து வட்டார கிராமங்களுக்கும் செய்தி பரவி இருந்தது. இந்த முறை வழக்கத்தை விட கூடுதலா 100 போஸ்டர்களை அடித்து எல்லா டவுன் பஸ் பின்னாடியும் ஒட்டி விட்டார் கோபால். முதன் முதலா ஒரு கட்சிப் பொதுக்கூட்டம் நடக்கப் போவதை தியேட்டர்லே இண்டெர்வெல் ஸ்லைடாக போட்டான் கோபால் மகன். பரபரப்பு கூடி விட்டது.

பொதுக்கூட்ட நாள் அன்று மதியமே பேச்சாளர் வந்து விடுவதாக கடிதம் போட்டிருந்தார். பெரம்பலூர்லே இருந்து விழுப்புரம் வழியா திண்டிவனத்தில் வந்து இறங்கி, அங்கிருந்து பஸ் மாறி ஊருக்கு வந்து விடுவதாக எழுதி இருந்தார். வழக்கமா அவர் இளைப்பாறும் திண்டிவனம் நகர கட்சி ஆஃபீஸ் போன் நம்பரையும் எழுதி அங்கே டிரங்க் கால் போட்டு விவரம் கேட்டுக்கச் சொல்லி இருந்தார். 

சங்கொலியை பஸ் ஸ்டேண்டில் இருந்து அழைத்து வர நகர செயலாளரே போவதாக சொல்லி, கோபாலை அங்கேயே இருந்து கூட்ட ஏற்பாடுகளை பார்த்துக்க சொல்லி இருந்தார். கோபாலுக்கோ மனசு கேக்கலை. நகரம் கூட தன் மகனையும் அனுப்பி வைத்தார். 

மதிய பஸ்லே பேச்சாளர் வரவில்லை. அடுத்து நாலு மணிக்குதான் பேருந்து . கோபால் மகனை பேருந்து நிலையத்திலேயே உட்கார வைத்து விட்டு நகர செயலாளர் வீட்டுக்கு சாப்பிட போய்விட்டார். நான்கு மணி பஸ்லேயும் சங்கொலியை காணோம்.  

நகர செயலாளர் லேசான பதட்டத்துடன் டிராங்க் கால் போட போஸ்ட் ஆஃபீஸுக்கு சென்றார். கூட்டம் ஏற்கனவே கூடத் தொடங்கி இருந்தது. பாதுகாப்புக்கு வந்திருந்த எஸ்.ஐ, மற்றும் சில காவலர்களுக்கு டிஃபன் ஏற்பாடு பண்ண கோபால் போயிருந்தார். 

டிரங்க் காலும் கிடைக்கவில்லை. அன்று முழுக்க அடித்த வெயிலுக்கு இதமாக மாலையில் பெரும் மழை பெய்யப் போகும் அறிகுறிகள் அத்தனையும் தெரியத் தொடங்கின. தொலைவிலிருந்து இடி சத்தம் கேட்டது. 

ஆறு மணி பஸ்லேயும் யாரும் வரக்காணோம்! மழை அடித்து வெளுக்கத் தொடங்கியது. கூட்டம் எல்லாம் சிதறி அருகிலிருக்கும் கடைகள், வீடுகளுக்குள் ஒதுங்கினர். சரியாக முக்கால் மணி நேரம் கொட்டிவிட்டு மழை ஓய்ந்தது. மழை நின்ற பிறகு வீசிய அந்த ஈரக்காற்று அன்றைய புழுக்கத்துக்கு இதமாக இருக்க, கூட்டம் நடக்க இருந்த தெருவே அலம்பி விட்டாற்போல சுத்தமாக இருந்தது. 

ஆங்காங்கே ஒதுங்கியிருந்த மக்கள் எல்லாம் மேடைக்கு எதிரே கூட, கோபால் தெருவில் வசிக்கும் பெண்கள், ஆண்கள் எல்லோரும் வெளியே வந்து நிற்க அந்த இடமே கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. 

ஏழு மணி பஸ்சில்தான் சங்கொலி சாரங்கபாணி வந்து இறங்கினார். விழுப்புரத்தில் மதியமே மழை பெய்ததில் சாலையில் மரம் விழுந்து விட்டதால், செஞ்சி பஸ் பிடித்து அங்கிருந்து வந்து சேர்ந்திருக்கிறார். வந்தவர் நேராக லாட்ஜுக்கு போய் குளித்து விட்டு வேறு உடை அணிந்த பிறகுதான் மேடையேறுவேன் என கண்டிப்பாக சொல்லிவிட்டு அதன்படியே எல்லாம் முடித்துக் கொண்டு அவர் மேடைக்கு வரும்போது மணி 8:30. 

கூட்டம் தொடங்கியது. வரவேற்புரையினை இந்த பகுதியின் வட்டச் செயலாளர் அண்ணன் கோபால் பேசுவார் என யாரோ அறிவித்து கோபாலை அழைத்த அந்தக் கணத்தில், எதிரே கூடியிருந்த பெருந்திரளானக் கூட்டத்தைக் கண்டு உற்சாகம் அடைந்திருந்த சங்கொலியார் சட்டென எழுந்து மைக் அருகில் வந்து, வரவேற்புரை எல்லாம் எதுவும் வேணாம். ஏற்கனவே ஜனங்க மணிக்கணக்கா காத்திருக்காங்க. நேரா நானே பேசிடுறேன் என்று அங்கிருப்பவர்களுக்கு கேட்கும்படி மைக்கில் சொல்ல, கோபாலை யாரோ பின்பக்கமிருந்து ஜிப்பாவை பிடித்து இழுத்து நாற்காலியில் உட்கார வைத்தார்கள். 

எதிரே நிமிர்ந்து பார்க்காமலேயே, சைக்கிள் கடை வாசலில் சாய்ந்து நின்று கொண்டிருந்த கோபாலின் மனைவி முறைத்துப் பார்ப்பதை தலைகுனிந்திருந்த கோபாலால் உணர முடிந்தது. அந்த பார்வையின் சூட்டில் கோபாலின் உள்ளங்கை வியர்த்தது. 

நான்கு ஆண்டுகள் கழித்து அதே இடத்தில் அதே பேச்சாளர் பேசும் பொதுக்கூட்டம். 

இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் உள்ளாட்சித் தேர்தல் நடந்து எதிர்கட்சி தமிழ்நாடு எங்கும் அமோக வெற்றியைப் பெற்றிருந்தது. அந்த ஊர் நகராட்சியையும் பெரும்பான்மையுடன் பிடித்திருந்தது எதிர்கட்சிதான்! அந்த வெற்றி விழா கொண்டாட்டக் கூட்டம்தான் இது. 

சங்கொலி சக்கரபாணி இந்த முறை சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்தார். லாட்ஜுக்கு போய் குளித்து மொட மொடவென கஞ்சி போட்ட ஜிப்பாவை அணிந்து, லேசாக ஜவ்வாது பூசிக் கொண்ட பிறகே மேடையேறினார்.  

மேடைக்கு நேரெதிரே முச்சந்தில் ஒரு பெரியார் சிலை. அதன் எதிரே ஒரு பெரிய சர்ச்., அதையொட்டி ஒரு கங்கையம்மன் கோவில். சங்கொலியாருக்கு அந்த இடம் பரிச்சயமாகத் தோன்றியது.

பக்கத்தில் அமர்ந்திருந்த நகரச் செயலாளரிடம் குனிந்து, இந்த இடத்தில் நான் ஏற்கனவே கூட்டம் பேசி இருக்கேனா? 

ஆமாண்ணே! பின்னே! அன்னிக்கு கூட பெரிய மழை அடிச்சு ஊத்துச்சே! அப்புறமும் கூட்டம் ஒரு இஞ்சு கூட கலையலே! நீங்களும் ரெண்டு மணி நேரம் பேசினீங்க! பேச்சுன்னா அப்படியொரு பேச்சு அது. அதனாலேதான் இந்த வார்டு எல்லாம் நாம ஜெயிச்சிருக்கோம். 

ஓஹோ! அதானே! பார்த்த இடமா இருக்கேன்னு தோணுச்சு. 

இதே இடம்தாண்ணே! இந்த வட்டச் செயலாளர் கோபால்தான் கூட்ட ஏற்பாடு, வரவேற்புரை எல்லாம்! உங்க பேச்சோட பயங்கரமான ரசிகன். அருமையான கட்சிக்காரன். பாவம்! கொஞ்ச நாள்லேயே போய் சேர்ந்துட்டார். நெஞ்சு வலி.  நாமளும் விடலையே! அந்த கோபால் மகனைதான் கவுன்சிலருக்கு நிறுத்தி ஜெயிச்சிருக்கோம்! இந்த வாட்டி கூட்டமெல்லாம் அவன் ஏற்பாடுதான்.

இதோ! நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த காவிரிக்கரை புயல், நகைச்சுவை அரசன், சங்கொலி சக்கரபாணி சிறப்புரை ஆற்றுவார்.. 

மெல்ல எழுந்த சங்கொலி முதலில் தனது ஜிப்பாவை முன்புறம் நீவி விட்டுக் கொண்டார். பிறகு மைக் அருகே சென்று, இரு கைகளாலும் தனது தோளில் இருந்த துண்டை இழுத்து சமன் படுத்திக் கொண்டார். மேடையை ஒரு முறை திரும்பிப் பார்த்தார்., கூட்டத்தை இன்னுமொரு உற்றுப் பார்த்தபடி தனது உரையை தொடங்கினார்.

அன்பார்ந்த தமிழ்ச்சொந்தங்களே! 

நீண்ட நாட்களுக்குப் பிறகு வெற்றிக்களிப்புடன் உங்களைச் சந்திப்பதில் பெரும் உவகை அடைகிறேன்.  சென்ற முறை நான் இதே இடத்தில் பேச வந்திருந்த போது, இங்கே இதே மேடையில் வரவேற்புரை எனும் பெயரில் நமது கொள்கை முழக்கங்களை எதிரிகளின் நெஞ்சில் தைக்கும் அம்புகளாக செலுத்திய எனது அன்புத் தம்பி கோபால் நினைவுதான் இன்னமும் என் நெஞ்சை வாட்டுகிறது… 

4 thoughts on “வட்டச் செயலாளர்

  1. அன்புக்குரிய அண்ணன் கோபாலை போல தான் நமது திமுக கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் இருக்கிறார்கள். அன்புக்குரிய அண்ணன் கோபால் அவர்களுக்கு அன்று வாய்ப்பு கொடுத்திருந்தால் அவரை இழந்திருக்க மாட்டார்கள். அவரை இழந்தாலும் அவருடைய அன்பு மகன் அந்தப் பணியை தொடர்வதில் மகிழ்ச்சி….🖤❤️

  2. என்றென்றும் எளிய தொண்டன் எப்போதாவது இவ்வாறு தான் நினைவில்.

  3. அந்த கூட்டத்துக்கே போய்ட்டு வந்த மாதிரி ஒரு எழுத்து நடை… அண்ணனோடது.. அருமை அண்ணா🙏🙏🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *