தமிழ்நாட்டில் திராவிட அரசியலின் எதிர்காலம்

உலகப் போர்களுக்குப் பிறகு சாம்ராஜ்யங்கள் சரிந்து பல புதிய நாடுகள் உருவாகின. இனம், மொழி, மதம் என பல அடிப்படைகளில் நாடுகள் பிரிந்தன. போருக்குப் பிறகான வறுமை, வேலைவாய்ப்பின்மை, பசி கொடுமை எனும் சூழலில் உலக மானுடர்கள் எல்லோருக்கும் எல்லாமும் என வர்க்கபேதங்களைச் சமன் படுத்த கம்யூனிஸ சித்தாந்தத்தின் அடிப்படையில் முதல் நாடாக ரஷ்யா உருவானது.

ஏறக்குறைய அதே காலக்கட்டத்தில் ஆங்கிலேயே ஆட்சியின் கீழ் இருந்த பிரிட்டிஷ் இந்தியாவில் தென்கோடி மெட்ராஸ் பிரசிடென்சி எனும் மாகாணத்தில் அரசுப் பணியிடங்கள், பல்கலைக்கழகங்கள், நீதிமன்றங்கள் என அதிகாரத்தின் அத்தனை மட்டங்களிலும் குறிப்பிட்ட ஒரே சாதியினரின் ஆதிக்கத்தால் பல லட்சம் மக்கள் தகுதி இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் அடிமைப்பட்டிருந்தனர். சாதியின் பேரால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப் பட்டிருந்தவர்களுக்கு சம வாய்ப்பு அளித்து சமத்துவம் காண உருவாக்கப்பட்ட புதிய அமைப்புதான் நீதிக்கட்சி.

ஏற்கனவே தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளி என மொழிவழியாகவும், இஸ்லாமியர், கிருத்துவர், பவுத்த, சமணர்கள் என மதவழியாகவும் பிரிந்திருந்தது போக, அவர்களை மேலும் வைசியன், சூத்திரன், பஞ்சமன் என சாதிப் பிரிவுகளாகவும் பிரித்து வைத்து ஆண்டு கொண்டிருந்தது ஆரியம்.

மக்களை ஏழை, பணக்காரன் எனும் வர்க்கபேதம் இன்றி சமன் படுத்த கம்யூனிசம் உருவானதைப் போல, பிறப்பினால் ஏற்றத் தாழ்வு ஏதுமில்லை, யாவரும் இங்கு சமமே! யாவருக்கும் இங்கே சமவாய்ப்பு தேவை எனும் மானுட விடுதலைக்காக உருவானதுதான் திராவிடம்.

இந்த திராவிடத்தை அடிப்படையாக கொண்டுதான் பிரிட்டிஷ் இந்தியாவில் முதல் இட ஒதுக்கீட்டு அரசாணையை (first communal G.O) பெற்றுத் தந்தது நீதிக்கட்சி.

இதுதான் 1920 முதல் 2022 வரை 102 ஆண்டுகளாக தொடர்ந்து இந்த தமிழ்நாட்டை திராவிட அரசியல் கருத்தியலும் கோட்பாடும் ஆதிக்கம் செய்து வருவதின் தொடக்கப் புள்ளி.

அதுவரையில் காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவராக இருந்த ஈ.வெ.ராமசாமி நாயக்கர், காங்கிரஸ் கட்சியிலும், ஆட்சியிலும் பிராமணர்களின் ஆதிக்கம் மிக அதிகமாக உள்ளதாகவும், சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு சுதந்திரத்தின் பலன்கள் சென்று சேரவில்லை என்றும் குற்றம் சாட்டி காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி திராவிடர் கழகம் தொடங்கினார்.

எளிய மக்கள் மீதான சாதிய, சமூக அடக்குமுறை கட்டுமானங்கள் அனைத்துமே அவர்களின் கடவுள் நம்பிக்கையின் மூலமாகதான் நிலை கொண்டுள்ளது என நம்பிய ஈ.வெ.ரா கடவுள் மறுப்பை தனது திராவிடர் கழகத்தின் முக்கியப் பிரச்சாரமாக மேற்கொண்டார்.

தனது 94 வயது வரை அவர் மேற்கொண்ட ஓயாத பிரச்சாரங்களும், பயணங்களும் தமிழ்நாட்டுக்கு தந்த தனித்துவமான கருத்துப் புதையல்களும் தமிழ் இனத்துக்கே விழிப்புணர்வு உண்டாக்கியது.

எனவேதான் தமிழ்மக்கள் அவரை தங்களது ஞானத் தந்தையாக ஏற்று தந்தைப் பெரியார் என அழைக்கத் தொடங்கினர்.

தாழ்த்தப்பட்டச் சமூகத்தினர் நடக்க அனுமதி மறுக்கப்பட்ட வீதிகளில் பெரியார் தனியே நடந்தார். தமிழ்நாட்டில் அனைத்து வீதிகளும் பொது வீதிகள் ஆகின.

ஒடுக்கப்பட்ட மக்கள் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்ட கோவில்களுக்குள் ஆலயப் பிரவேசம் போராட்டம் நடத்தினர். அனைத்துச் சாதியினருக்கும் கோவில் கதவுகள் திறந்தன.

மனிதர்களுக்கு சாதி அடையாளம் ஓர் அவமானம் என பெரியார் சொன்னார். முதலில் தனது பெயருக்குப் பின்னொட்டாக இருந்த சாதிப் பெயரை அவர் துறந்தார். தமிழர்கள் அவரைப் பின்பற்றி அதுவரையில் தங்கள் கவுரவமாகக் கருதி வந்த சாதிப் பெயர் பின்னொட்டுகளை தாமாக நீக்கிக் கொண்டனர். இன்றளவும் இந்தியாவில் பிராமணர்கள் உட்பட யாருமே தங்களது பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரைச் சேர்க்காத ஒரே மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

இடஒதுக்கீடு, பெண் விடுதலை, தமிழ்மொழி எழுத்து சீர்திருத்தம் என அவர் தொட்ட இடங்களில் எல்லாம் முற்போக்குச் சிந்தனைகளை பேசி, பேசியே மக்களிடையே வளர்த்தெடுத்தார்.

அந்தச் சிந்தனைகளுக்கு எல்லாம் செயல்வடிவமும், சட்ட உரிமையும் ஏற்படுத்திக் கொடுக்க தந்தை பெரியாரின் கொள்கை வாரிசாக பேரறிஞர் அண்ணா வந்தார்.

அதுவரையில் தேர்தல் அரசியலில் ஈடுபடாமல் இருந்த திராவிடக் கருத்தாளர்களை ஒன்றிணைத்து அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கினார் அண்ணா. அதுதான் திராவிட முன்னேற்றக் கழகம்.

அசைக்க முடியாத சக்தி என தங்களைக் கருதிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றி திமுக ஆட்சியை உருவாக்கினார்.

தந்தை பெரியார் கண்ட கனவுகளுக்கு எல்லாம் சட்டவடிவம் தந்தார் அறிஞர் அண்ணா.

மெட்ராஸ் மாநிலமாக அதுவரையில் இருந்த நமது மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என போராடி மாற்றினார்.

மதச் சடங்குகள் அற்ற சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட உரிமையை அளித்தார்.

ஆட்சிக்கு வந்த ஓராண்டிலேயே மாபெரும் சாதனைச் செய்த மகத்தான தலைவரான அண்ணா மறைந்தபோது உதித்தெழுந்த திராவிடச் சூரியன் கலைஞர் கருணாநிதி.

கலைஞர் முதல்வராக இருந்த போது தொட்டதெல்லாம் சமூகச் சீர்திருத்தங்களாகவே இருந்தது. அதுவரையில் மனிதனை உட்காரவைத்து மனிதர்கள் இழுத்து வந்த கைரிக்ஷா ஒழிக்கப்பட்டது. இது சிறிய விஷயம்தான். ஆனால் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் யாருக்குமே தவறாக தோன்றாத இந்த கைரிக்ஷா வழக்கம் மனிதனின் சுயமரியாதைக்கு இழுக்கு என ஒரு திராவிடத் தலைவனுக்குதானே தோன்றியது! அதுதான் தந்தைப் பெரியார் போட்டுத் தந்த அடித்தளம்.

1989 ஆம் ஆண்டில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என சட்டம் இயற்றினார் முதல்வர் கலைஞர். அதுவரையில் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பெண்களுக்கு சொத்துரிமை வழக்கப்படவில்லை. 32 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் ஒன்றிய அரசு இந்த சமத்துவ சீர்திருத்தத்தைச் செய்கிறது என்றால் சமூகத்தில் பெண்ணுரிமையில் திராவிடம் எவ்வளவு ஆண்டுகள் முன்னே சென்று நாட்டை வழிநடத்துகிறது என்பதை உணரலாம்.

கலைஞருக்குப் பிறகு எம்ஜிஆர், ஜெயலலிதா என திராவிடத்தின் நீர்த்த வடிவமாக வந்தாலும் தந்தைப் பெரியாரின் அடிப்படைக் கருத்தியலில் இருந்து விலகாமல் தமிழ்நாடு பார்த்துக் கொண்டது.

இன்று திராவிடத்தின் புதிய சக்தியாக திராவிடம் 2.0 என சொல்லத் தக்க வகையில் ஆரியத்தின் ஆதிக்கத்தை எதிர்த்து நிற்கும் மாபெரும் சக்தியாக தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவாகி உள்ளார்.

அவர் ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் அவர் இட்ட அரசாணைகள் எல்லாமே சமூகத்தின் மிக ஒடுக்கப்பட்ட பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கை,நம்பிகள் என அனைவருக்கும் புதிய அங்கீகாரத்தையும் உரிமைகளையும் தருகிறது.

பெண்களுக்கு பேருந்தில் இலவசப் பயணம், உயர்கல்விக்கு செல்லும் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் ஊக்கத்தொகை, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஐஐடி முதல் மருத்துவம் வரை எந்த படிப்பு படித்தாலும் இலவசக் கட்டணம் என அடுத்தத் தலைமுறைகளுக்கான முதலீட்டை கல்வியில் செய்கிறது திராவிடம்.

தமிழர் அனைவருக்கும் சம வாய்ப்பு எனும் உயரிய நோக்கத்தை தனது குறிக்கோளாக அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

விரைவில் இவைகளையும் மற்ற மாநிலங்கள் பின் தொடரும் என எதிர்பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் திராவிடத்தின் எதிர்காலம் என்ன?

ஓரிரு செயல்திட்டங்களின் அடிப்படையில் தோன்றும் இயக்கங்கள் அந்தத் திட்டங்கள் நிறைவேறியவுடன் அதன் தேவை தீர்ந்து விடும். உலகளவில் பல எடுத்துக் காட்டுகளை நாம் காணலாம்.

ஆனால், சாதி ஒழிப்பு, மதநல்லிணக்கம், பெண்ணுரிமை, மொழிப் பாதுகாப்பு, அனைவருக்கும் கல்வி, மாநில சுயாட்சி என மானுட சமத்துவத்தை தனது லட்சியமாகக் கொண்டிருக்கும் திராவிடத்தின் தேவை தமிழ்நாட்டுக்கு என்றுமே தேவை.

திராவிடக் கொள்கையை தமிழர்கள் உள்ளங்களில் இருந்து அழிக்க முனைவோர்கள் அறுபது ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் செய்திட்ட சாதனைகளை, பெற்றுத் தந்த உரிமைகளை, உயர்த்திக் காட்டிய வாழ்க்கைத் தரத்தை மக்கள் மனங்களில் இருந்து அகற்றி ஆக வேண்டும்.

இது சாத்தியமா?

“தமிழ்நாடு எனும் பெயர் இந்த மாநிலத்துக்கு உள்ளவரை, சுயமரியாதைத் திருமணங்கள் இங்கே நடைபெறும்வரை, பிற மொழிகளுக்கு இடமளிக்காமல் இருமொழிக் கொள்கையே இங்கே தொடரும்வரை இந்த அண்ணாதுரைதான் தமிழ்நாட்டை ஆள்கிறான் என்று பொருள்” என்றார் அண்ணா.

அதை மேலும் கூடுதலாக்கி,
பெண்களுக்கு சொத்தில் சம உரிமை இருக்கும்வரை, அனைவருக்கும் பள்ளி முதல் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி கிடைக்கும்வரை, இஸ்லாமியர், அருந்ததியர் என கல்வியில் புறக்கணிக்கப்பட்டப் பிரிவினருக்கும், இருளர், குறவர் போன்ற சமூகத்தில் ஒதுக்கப்பட்டப் பிரிவினருக்கும் முன்னுரிமை அடிப்படையில் உதவிகள் கிடைக்கும்வரை, சமூகநலனுடன் கூடிய முன்னேற்றமே சமமான முன்னேற்றம் என்பதை தமிழ் மக்கள் ஏற்கும்வரை இங்கே திராவிடத்தின் ஆட்சிதான் நடக்கும்.

திராவிடத்தின் எதிர்காலம் என்பது இனி வடக்கு நோக்கிப் பயணித்து இந்திய மக்கள் அனைவரையும் சனாதனச் சிந்தனைகளில் இருந்து வெளியேற்றி சம உரிமைச் சமூகமாக மாற்றும் செயல்திட்டமாகதான் இருக்கும்.

தொல்லியல் பொக்கிஷங்களான கீழடியும், சிவகளையும் கடந்த கால இந்தியா என்பதே பரந்து விரிந்த திராவிடப் பண்பாடே என சொல்கின்றன. இந்திய வரலாற்றை இனி தமிழ்நாட்டில் இருந்தே எழுதும் காலம் வரும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

எதிர்காலத்தில் சாதி, மத வெறுப்புகள் அகன்று, அறிவியியல் வழி வளர்ச்சி கண்டு, சமூக, பொருளாதாரச் சமத்துவ நாடாக இந்தியா உருவாகுமேயானால், அதன் முதல் புள்ளி தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசுகளின் வெற்றிகளில் இருந்தே தொடங்கியிருக்கும்.

-எஸ்கேபி. கருணா.

-குமுதம் இதழ் குழுமத்தின் இணைய இதழுக்காக எழுதிய கட்டுரை

6 thoughts on “தமிழ்நாட்டில் திராவிட அரசியலின் எதிர்காலம்

  1. அருமையான, காலத்திற்கு தேவையான கட்டுரை! ஒவ்வொரு விலங்குகள் கூட்டத்திலும் சமத்துவம் பேணப்படும் நிலையில் ஆறறிவு கூட்டத்தில் அதற்காக இன்று வரை போராடுவதை நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது! இதைக் கூட உணர முடியாத இடத்தில் மற்ற மாநிலங்கள் இருக்கும் நிலையில் தமிழ் நாடு வழிகாட்டியாக இருப்பது மகிழ்ச்சி!

  2. தமிழினத்தின் நீண்ட நெடிய வரலாறு சிறப்பான கையடக்க
    இணையவழியில் அருமை
    வாழ்த்துக்கள்

  3. அப்படி நடந்தால் நல்லதுதான். வட இந்தியர்கள் மாறுவார்களா என்று யோசித்துப் பார்த்தால் சந்கேகம்தான் வருகிறது. தமிழ்நாடு, கேரளா போன்ற திராவிட சிந்தனை உள்ள மாநிலங்களின் மக்கள் தொகையை இந்தியாவின் மக்கள் தொகையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மிகமிக குறைவு.

  4. இன்றைய தலைமுறை இளைஞர்கள் இந்த அருமையான கட்டுரை படிக்க வேண்டும். நன்றி மகிழ்ச்சி அண்ணா ????

Comments are closed.