களத்தில் சந்திப்போம் கமல் சார்.

களத்தில் சந்திப்போம் கமல் சார்

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முன்மதியப் பொழுதில் அப்பல்லோ மருத்துவமனையின் ஒரு உள்ளறையில் அமர்ந்திருந்தேன். முப்பது பேர் அமரத்தக்க அந்தக் குளிரூட்டப்பட்ட அறை முழுவதும் வடநாட்டவர்களும், வெளிநாட்டவர்களும்தான்.. அதன் ஒரு பின்வரிசை மூலையில் நான் அமர்ந்திருக்க, முதல்வரிசையில் இன்னொரு மூலையில் கமல்ஹாசன் அமர்ந்திருந்தார்.
அது ஒரு ரேடியோதெரபி கதிரியக்கச் சிகிச்சை அளிக்கும் அறையின் காத்திருப்பறை. ரேடியோதெரபி எனில் புற்றுநோய் சிகிச்சைக்கான ஒரு கதிரியக்கச் சிகிச்சை. நோயைவிட அதற்கான சிகிச்சை கொடுமையானது என நான் நேரில் கண்டு அறிந்துக் கொண்ட காலக்கட்டம் அது. சிகிச்சைக்காக அடுத்து உள்ளே செல்லவிருக்கும் ஒரு சிலரில் எனது அம்மாவும் ஒருவர்.
மரணத்தின் வாசல் என்பார்களே! அதை நோயுற்றோர் முற்றும் முதலுமாக உணரும் நேரமும், இடமும் அது. எனது ஆதர்ச நாயகன் கண் எதிரே அமர்ந்திருக்க, எழுந்து சென்று அவரிடம் உரையாட, புகைப்படம் எடுத்துக் கொள்ள எனக்குத் தன்னிச்சையாக எழுந்த ஆவலை அந்தச் சூழலின் மாண்பு கருதி அமைதி படுத்திக் கொண்டு காத்திருந்தேன்.
உள்ளறையின் கதவு திறக்க, செவிலியர் இருவர் தாங்கிப் பிடிக்க கவுதமி அவர்கள் பிழிந்தெடுத்த ஈரத்துணியைப் போல மிகத் தளர்வாக நடந்து வெளியே வந்தார். கமல் சடாரென எழுந்து வேகமாகச் சென்று அவர் துணைவியாரை அணைத்தபடி வாங்கிக் கொண்டவுடன், செவிலியர்கள் மீண்டும் உள்ளே சென்று கதவைச் சாத்திக் கொண்டனர். இப்போது கமல் அவரைக் கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு வெளியேற முயன்றார்.
நான் எழுந்து வேகமாக கமல்ஹாசனிடம் சென்று, சார், நான் சென்று வீல்சேர் கொண்டு வரவா? என்றேன்.
வேண்டாங்க! நன்றி.. இப்படி அழைத்துச் செல்வதுதான் இவருக்குப் பிடிக்கும் என்றவர் சற்றே நிறுத்தி என்னைப் பார்த்துப் புன்னகைத்தபடி, எனக்கும் பிடிக்கும் என்றார்.
அன்று இரவு நண்பனிடம், எத்தனை வயதானால், எத்தனை இலக்கியம் படித்தால் இப்படியொரு காதல் எனக்கு வரும்னு தெரியலைடா என்றேன்.
அம்மி மிதித்து, அக்னி சாட்சியாகக் கைப்பிடித்த மனைவியை பொது இடத்தில் கை நீட்டி அடிக்கும் அற்பர்களும், ஐம்பது பவுன் வரதட்சணை கொண்டு வந்த மனைவியை ஐந்து பவுன் கூட வாங்கிவரவில்லை என தீவைக்கும் அயோக்கியர்களும் வாழும் சமூகத்தில், தாலிக் கட்டாமல் ஜஸ்ட் உடன் இணைத்துக் கொண்டு வாழும் ஒரு பெண்ணை அவரின் நோய்க்காலத்தில் பேணிப்பாதுகாத்த அந்த மனிதனை இந்த நூற்றாண்டின் மகத்தானக் காதலன் என்பேன்.
பின்னாளில், அதே துணைவி பெருத்த ஏமாற்றமளித்துச் சென்றபோது, அது குறித்து ஒரே ஒரு வார்த்தை கூட யாரிடமும் புகார் சொல்லாமல், தான் பிரதிபலன்பாராமல் அளித்தக் காதல் குறித்துப் புலம்பாமல் மவுனம் காத்த அந்த மனிதனை மகத்தான பெருந்தன்மையாளன் என்பேன்.
அடுத்து, ஒரு சமயம் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் நடந்து கொண்டிருந்தது. விஷால் & கோ அதில் போட்டியிட அவர்களுக்கு வெளிப்படையாக கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்திருந்தார். அத்தனை நட்சத்திரங்களும் வாக்களித்து விட்டு பேட்டி அளித்துக் கொண்டிருக்க, தமிழகமே நேரலையாக அதை சுவாரஸ்யமாகக் கண்டு கொண்டிருந்தது.
சத்யராஜோ, பாரதிராஜாவோ.. பேட்டியளிக்கையில் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என மாற்றியாக வேண்டும். மத்தவங்க எல்லோரும் அவங்க மாநிலத்து பேரிலே சங்கம் வைத்திருக்க, தமிழன் மட்டும் என்ன இளிச்சவாயனா? தென்னிந்திய நடிகர் சங்கம்னு வைக்க.. என ஆவேசமாகப் பேசிச் சென்றனர்.
அடுத்து சூப்பர் ஸ்டார் வந்தார். மீடியா அவரிடம் சென்று இது குறித்துக் கருத்துக் கேட்க அவர் சற்றும் தயங்காமல் யெஸ்! யெஸ்! நாமும் தமிழ்நாடு என பேர் மாத்தணும் எனக் கூறி பலத்தக் கைத்தட்டல் பெற்று செல்கிறார்.
அந்தத் தேர்தலே நடிகர் சங்க வரலாற்றில் மிகக்கடுமையாக மோதபட்டத் தேர்தல். எதிர்தரப்பு நிதானம் இழந்து விஷாலை தமிழனே இல்லைனெ கூறி நடிகர் சங்கத்தில் மொழிவாரிப் பிரிவை உண்டாக்க முயன்ற தேர்தல் அது. அப்போதைய அரசியல் சூழலோ இன்னும் மோசம்! தமிழகத்தில் யார் தமிழர் என சீமான் போன்றோர் சாதிவாரித் தேர்வு நடத்தி சான்றிதழ் அளித்துக் கொண்டிருந்தக் காலக்கட்டம்.
கமல்ஹாசன் வாக்களிக்க வருகிறார். அவரிடம் மீடியா சென்று இதே கேள்வியைக் கேட்கிறது. அவர் சிரித்தபடியே, பெயர் மாற்றத்துக்கான அவசியம் இருப்பதாக நான் கருதவில்லை. இது நம் முன்னோடிகள் துவங்கிய சங்கம். அவர்கள் வைத்த பெயர். கலைஞர்களுக்கு இன, மொழி பேதமில்லை என்பதால் இப்படியே இருக்கலாம் என்றார். மீடியா அந்த ஒற்றைக் குரலுக்கு ஸ்தம்பித்துப் போகிறது.
கமல்ஹாசன் கார் ஏறும்வரை ஒரு பெண் நிருபர் துரத்தியபடி சென்று அவரிடம், சார்! தமிழர்களுக்கு என ஒரு சங்கம் இருக்கக்கூடாது என்கிறீர்களா என்கிறார். காரில் ஏறச் சென்ற கமல், இறங்கி அவரிடம், இது தாய் வீடு. பிரிந்து சென்ற பிள்ளைகள் வேற பெயர் வைத்துக் கொள்வதால் தாய் தனது சுயத்தை இழக்க வேண்டிய அவசியம் இல்லையே! தமிழர் என்பது அடையாளம் மட்டுல்ல! அது ஒரு பண்பாடு. எல்லோரையும் இணைத்து வாழ்வதே தமிழர் பண்பாடு! பிரித்து விடுவது அல்ல என்றார்.
அந்த பதிலை அருகிலிருந்துக் கேட்ட எனது நண்பர் அந்தாளுக்கு இருந்த துணிச்சலை, கருத்துத் தெளிவைப் பார்த்து மிரண்டுட்டேன் என்றார்.
நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்டப் பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சா துணிவு எனும் பாரதியின் வரிகள் நினைவுக்கு வந்தது.
நண்பர்களே! எனது இளம்வயது ஆதர்ச நாயகன் கமல்ஹாசன்.
அரசியலுக்கு கலைஞர், இசைக்கு இளையராஜா, நடிப்புக்கு கமல்ஹாசன், வாசிப்புக்கு சுஜாதா.. எனது இந்த ரசனை இன்று வரையில் நிலைத்து நிற்கும்படியான சாதனை நாயகர்கள் இவர்கள். இனி எனது வாழ்நாளில் இவர்களை மிஞ்சக்கூடிய இன்னொரு சாதனையாளர்களை நான் காணவும் போவதில்லை.
எனது ப்ரியமான கமல்ஹாசன் இன்று முதல் தனது பாதையை மாற்றிக் கொண்டு அரசியலில் அடியெடுத்து வைக்க இருக்கிறார். அவர் மீது நான் கொண்டிருக்கும் மதிப்பின் காரணமாகவும், தமிழர் பண்பாட்டின் காரணமாகவும், அவரை வருக! வருக! என வரவேற்கிறேன்.
ஆனால்… அவர் மீது எனக்கிருக்கும் அன்பின் காரணமாகவும். அவர் மீது நான் கொண்டிருக்கும் பொஸசிவ்நெஸ் / உரிமையின் காரணமாகவும் அவரது அரசியல் பிரவேசத்தை நான் கடுமையாக எதிர்க்கிறேன். திரைப்படத்தில் வரும் திருப்பம் போல கடைசி நிமிடத்தில் கூட அவர் விலகிவிட மாட்டாரா என நப்பாசையுடன் காத்திருக்கிறேன்.
காரணம் மிக எளிய ஒன்று.
முதலில், கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதால் அவர் கலைத்துறையில் ஏற்படுத்தும் வெற்றிடம் நிரப்ப முடியாதது. அவர் வெறும் நடிகர் மட்டுமல்ல! அற்புதமான இயக்குநர், திரைக்கதையாசிரியர், வசனகர்த்தா, பாடகர், பாடலாசிரியர், சகல தொழில்நுட்பங்களும் அறிந்த கலைஞர்.. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகம் பெருமைபடும் திரைப்படங்களைத் துணிவாக தயாரித்தளித்தவர். இத்தனை பெரிய வெற்றிடத்தை திரை ரசிகர்கள் தாங்குவார்களா?
அடுத்து, அரசியல் களம்.
இதில் கமல்ஹாசனின் வெற்றி வாய்ப்புக் குறித்து நூறு பக்கங்கள் எழுதுமளவு எனக்கு கருத்துகளும், முன்னுதாரணங்களும், புள்ளி விவரங்களும், ஊகங்களும் இருந்தாலும் அவர் அரசியல் கட்சித் தொடங்கும் இந்தச் சூழலில் நான் எதிர்மறையாக எதையும் எழுதிட விரும்பவில்லை.
திராவிட முன்னேற்றக் கழகம் எனும் கொள்கைசார் இயக்கத்தில் பிறந்து வளர்ந்தவன் எனும் முறையில் கமல்ஹாசன் வருகையை நான் இப்படி நேர்மறையாகப் பார்க்க விரும்புகிறேன்.
கமல் திராவிடத்தை மறுதலிக்கப் போவதில்லை.
கமல் தமிழ்மொழியைத் தவிர்த்து ஹிந்திக்கு ஆதரவளிக்கப்போவதில்லை.
கமல் பெரியார் நமக்களித்த பகுத்தறிவுப் பாதையை மடைமாற்றப் போவதில்லை.
கமல் சமூகநீதிக்கெதிரான சாதியம் பேசப் போவதில்லை.
கமல் சாதியின் பேரால் வாக்குகளை பிரித்தெடுக்க முயலப் போவதில்லை.
கமல் மதத்தின் பேரால் மக்களைப் பிரிக்கப் போவதில்லை.
கமல் உணவு, உடை, தெய்வம் என எதன்பேராலும் அரசியல் லாபம் காணப்போவதில்லை.
ஆக, கமல் ஒரு முற்றும் முழுவதுமான திராவிட இயக்கத்தின் வழித்தோன்றல். எனவே அரசியல் பாதையின் ஏதேனும் ஒரு பொதுக்கருத்தில், மையப்புள்ளியில் அவரது அரசியல் இயக்கம் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து செயல்படும். காலம் அந்தச் சூழலை உருவாக்கும் என நான் நம்புகிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகமும் மிக நீண்ட காலத்துக்குப் பின்னர் பட்டறிவு, கற்றறிவு, பகுத்தறிவு, சமூகநீதிப்பார்வை, திராவிட உணர்வு, தேசப்பற்று, மொழிப்பற்று எல்லாவற்றுக்கும் மேலாக நேர்மறைச் சிந்தனை கொண்ட சிநேகமான அரசியல் எதிரியைச் சந்திக்கப் போகிறது. வன்மமும், வஞ்சகமும் நிறைந்தத் தமிழக அரசியலின் எதிர்காலத்துக்கு இது நல்லது.
கருத்தைக் கருத்தால் எதிர்கொள்வோம்.
மக்கள் முடிவெடுக்கட்டும்.
களத்தில் சந்திப்போம் கமல் சார்.
-எஸ்கேபி. கருணா

19 thoughts on “களத்தில் சந்திப்போம் கமல் சார்.

 1. 99% ஒத்த கருத்து எனக்கும். ஆனால், இப்போது கமலுடன் இணைந்து பணியாற்றவே விரும்புகிறேன்.
  களத்தில் சந்திப்போம் கருணா சார்!

 2. Really fine, Sir. Your are approaching his political entry vis-a-vis DMK, in a new angle, which is correct. Nobody on both camps think on that line. Similarly, when most of the people, of course people with hidden agenda, criticizing his personal life, you are seeing the bright side of it, which is commendable. Your writing style is impressive, as usual.

 3. நண்பர் கருணா அவர்களை சகோதரர் போல கட்டி அணைத்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.அன்பை தெரிவிக்கிறேன்.

 4. மிக நேர்த்தியான கட்டுரை. என்னுடைய எண்ணங்களைப் பிரதிபலிப்பது போன்ற உணர்வை கட்டுரை ஏற்படுத்தியுள்ளது.

 5. அவர் கலைஞானி மட்டும்
  இவர் கலைஞர் (கருணாநிதி) வாழும் அரசியல்
  கலப்பையும் களமும் வேறு வேறு இல்லை இவற்றுக்கு இடம்
  களம் மட்டுமே .
  உங்கள் தமிழும் இலக்கியமும் அருமையான வரவு …
  வணக்கமும் வாழ்த்தும் ..

 6. கமல் ஒரு ஆகச்சிறந்த நடிகர், மிகப்பெரிய சிந்தனையாளர், பகுத்தறிவாளர், பண்பாளர், தகுதியான ஜனநாயகவாதி எனும் உயர்ந்த குறியீடுகளை உள்ளடக்கிய மனிதராக, இவர் தமிழக மக்களால் பார்க்கப்பட்டாலும்…தமிழக அரசியல் களம் தெளிந்த நீரோடை போன்றது, பகுத்தறிவு சிந்தனை செறிந்தது ஆகையால், தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்று எனும் பேச்சுக்கே இடமில்லை. இதுவே எனது உறுதியான கருத்து. இதற்கு சான்றாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலையும், அதை தொடர்ந்து இந்த இரு திராவிட கட்சிகளுக்கும் பெற்ற கணிசமான வாக்குகளை வைத்தே அளவீடு செய்து கொள்ளலாம்.
  திராவிட கட்சிகள் தமிழகத்தின் நிரந்தர கட்சிகள் என்று சொல்லலாம் வேண்டுமானால் கமல் ஏதேனும் ஒரு திராவிட கட்சியுடன் கூட்டணி வைத்து செயல்படலாம் அவ்வாறு செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். முன் உதாரணமாக செவாலியரின் அரசியல் வரலாற்றை பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்
  பி.கு
  கமல் குறித்த நெகடிவ் பதில் தங்களுக்கு பிடிக்காது என்பதால் நான் எதனையும் பதிவிட விரும்பவில்லை.

 7. சகலகலா வல்லவன் சாதிக்க வேண்டும் என்பதை விட அவரை நாம் சாய்த்து விட கூடாது என்பது எனது ஐயம் , மேலும் உங்கள் கண்கள் வழி காட்சிகளை வார்த்தைகளால் விருந்து படைத்ததர்க்கு நன்றி.

 8. The evil that is in the world almost always comes of ignorance, and good intentions may do as much harm as malevolence if they lack understanding.
  ஊர் வாய் சொல்வது போல் நம் ஆதர்ச நாயகன் திராவிட எதிரிகளின் கைப்பாவை அல்ல என நம்புகிறோம்.
  சினிமாவில் திறமையானவர்களுடன் இணைந்து சரித்திரம் படைத்த நம் நாயகன், இந்த முறை அவசரப்படுக்கிறோ என அஞ்சுகிறேன்.
  What do you think?

 9. கமல் சுயநலம் கருதாமல் அரசியல் சாக்கடை யை சுத்தம் செய்ய முன்வந்துள்ளார். நாமும் கைகொடுப்போம்.

 10. sir today i have read your experience at mumbai. The way of your writing is very nice . Here after i will follow your writings sir

 11. கமலின் அரசியல் பயணம் மக்களுக்கானது
  அரசின் மீதான கமலின் கோவம் மக்களின் கோவம் தான்
  வெகுண்டெழுந்து நீதி மய்யம் கட்டமைக்க பட்டிருக்கிறது கமலால் மக்களுக்காக
  இது மக்களுக்கான நீதியை பெற்று தரும் என நம்பிக்கையில் மக்கள் நீதி மய்யத்தில்..?

Comments are closed.