ரெமிங்டன்
எங்கள் ஊர் அண்ணாமலையார் கோவிலுக்கு எதிரில் இருந்த மெட்ராஸ் டீக்கடையில் தான் அந்த விசாரணை நடந்தது. இளங்கோதான் அந்த பஞ்சாயத்துக்கு நாட்டாமை. அவன் எதிரில் நானும், கணேஷும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டு இரு நாற்காலிகளில் அமர்ந்திருந்தோம். வழக்கம் போல எங்களின் கைகளில் அந்தக் கடையின் புகழ் பெற்ற மசாலா டீ. உடன் சால்ட் பிஸ்கெட்.
இளங்கோதான், அந்த கடும் மவுனத்தை உடைத்து பேச்சை ஆரம்பித்து வைத்தான்.
சொல்லுடா! கருணா, ஏன் உன் மேல கோவமா இருக்கான்?
எனக்கென்னடா தெரியும்? அவன் கிட்டயே கேளு! என்றான் கணேஷ்.
நீயாவது சொல்லுடா? என்றான் என்னிடம் இளங்கோ.
என் கிட்ட சொல்லாம இவன் எப்படிடா டைப்ரைட்டிங் கிளாஸ்ல சேரலாம்?
டேய்! அது உனக்கு எதுக்குடா? உனக்கு படிப்பு முடிஞ்சப்புறம் பார்த்துக்க பஸ் கம்பெனி இருக்கு. என்ன மாதிரி நீ வெளியே யார்கிட்டயாவது, வேலைக்கா போவப் போறே?
நான் அதிர்ந்து விட்டேன்.
என்ன கணேஷ்! நீ யாரோ ஒருத்தன்கிட்ட வேலைக்கு போகும் போது, நான் மட்டும் சொகுசா பஸ் கம்பெனியில முதலாளியா இருப்பேன்னு நினைச்சியா? இப்போ சத்தியம் பண்றேண்டா! என் அம்மா மேல சத்தியமா, நானும் உன்ன மாதிரி டைப்பிஸ்ட் வேலைக்குதாண்டா போவேன்.
என்னோட நட்பின் ஆழத்தையும், பேச்சின் உறுதியையும் கண்டு இளங்கோவும், கணேஷும் பேச்சற்று நின்று விட்டனர்.
அப்புறம் என்னடா? ரெண்டு பேரும் கை குடுத்துங்கடா. குடுத்தாச்சா? ம்.. இப்போ சொல்லுங்க! இனிமே சண்டை போட்டுக்க மாட்டோம். ரெண்டு பேரும் ஒண்ணா டைப்ரைட்டிங் கத்துக்கிட்டு, ஒரே இடத்தில டைப்பிஸ்டா வேலைக்கு போவோம். இது சத்தியம்.
இளங்கோ சொன்ன சத்தியப் பிரமாணத்துக்கு, நானும் கணேஷும் கை கொடுத்துக் கொண்டோம்.
அந்த உணர்ச்சிமயமான நிலைமை இயல்புக்கு வந்தவுடன், நான் இளங்கோவிடம் கேட்டேன்.
ஏண்டா? நீயும் டைப்ரைட்டிங் க்ளாஸ்ல சேர்ந்துக்கேயேன். பின்னாடி உதவியா இருக்கும் இல்லே?!
என்னது? நானா? இன்னொருத்தன் கிட்ட கைக் கட்டி சம்பளம் வாங்கறதா? வாய்ப்பே இல்லே மச்சான்! என்னோடது ஒரே லட்சியம்தான். ரயில்வே மெக்கானிக். எனக்கு சம்பளம் தர தகுதி சென்டிரல் கவர்ன்மெண்ட்டுக்கு மட்டும்தாண்டா உண்டு என்றான் இளங்கோ.
அவன் கிடக்கிறான்! நாம போலாம்டா டைப்ரைட்டிங் கிளாஸுக்கு எனறு சொன்ன எனது உயிர் நண்பன் கணேஷின் கையை இறுகப் பற்றிக் கொண்டேன்.
இப்படித்தான், ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்து நாலாம் ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வினை நாங்கள் எழுதி முடித்திருந்த அந்தக் கோடை விடுமுறையின் போது, நான் ஜார்ஜ் டெக்னிக்கல் இன்ஸ்டிட்யூடில் ஆங்கிலம் லோயர் கற்றுக் கொள்ள சேர்ந்தேன். எங்கள் டேனிஷ் மிஷன் பள்ளிக்குச் செல்லும் வழியில் இருக்கும் சிவராத்திரி மடத் தெருவில் அந்த இன்ஸ்டிட்யூட் இருந்தது. அதன் உரிமையாளர், எங்கள் பள்ளியின் காமர்ஸ் ஆசிரியர் ஜெயக்குமார் சார் என்பது இன்னுமொரு உபரித் தகவல்.
முதல் நாள் வகுப்பில் சேர, நான் உள்ளே சென்றபோது, ஜெயக்குமார் சார் டென்னிஸ் விளையாட தனது வழக்கமான வெள்ளை அரைக்கால் டிரவுசர், சட்டையுடன் வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்து வழக்கமான அந்தக் கேள்வியைக் கேட்டார்.
உனக்கென்னடா இங்கே வேலை?
டைப்பிங் கிளாஸ்ல சேர வந்திருக்கேன் சார்.
சுற்றும், முற்றும் பார்த்தார். உள்ளேயிருந்து இந்தாம்மா என்று யாரையோ அழைத்தார்.
ஒல்லியா, சிகப்பா ஒரு பெண் வந்து நின்றார். எங்கள் பள்ளியில் அவர் ப்ளஸ் டூ படிக்கும் போது பார்த்திருக்கிறேன். எனக்கு இரண்டு வருட சீனியர். பெயர் கூட ஏதோ ஒரு செல்வி! இவனை ஒரு பேட்சில் போட்டுக்க என்று ஜெயக்குமார் சார் அவரிடம் சொல்லி விட்டுச் சென்றார்.
உள்ளே சென்றேன். தட தடவென பயங்கர சத்தம். அந்த நீள அறையில் மூன்று வரிசையாக, வரிசைக்கு பத்து டேபிள், ஸ்டூல், அதன் மீது ஒரு டைப்ரைட்டிங் மெஷன் என மூன்று வரிசை. ஆக மொத்தம் முப்பது மெஷின். அந்த முப்பதிலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஒரு சில நடுத்தர வயது ஆண்கள், திருமணமான பெண்கள் என கலவையாக அமர்ந்து அவர்கள் பக்கத்தில் வைக்கப் பட்டிருந்த ஒரு அட்டையைப் பார்த்துக் கொண்டே வேகமாக தட்டச்சிக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு முறையும் சொருகப் பட்டிருந்த பேப்பரின் வரிசை முடியும் போது, தனது முழு பலத்தையும் சேர்த்து மெஷினின் ஹேண்டலை இடது கையால் வேகமாக ஒரு தள்ளு. அது சர்ர்ரென ஒரு வித்தியாசமான சத்தத்தைக் கொடுக்கும். மொத்தத்தில் எங்கள் மெக்கானிக்கல் ஷெட்டில் கூட நான் கேட்டறியாத சப்தங்களின் கலவையாக இருந்தது.
அந்த ஹாலுக்கு வெளியே ஒரு சிறிய அறை. நான்தான் இங்கே சகல அதிகாரங்களும் கொண்டவள். இங்கே எனது முடிவே இறுதியானது என்ற வாசகங்களை பின்னால் இருந்த சுவற்றில் பொறிக்காமலேயே, பார்ப்பவர்கள் தெரிந்து கொள்ளும் தோரணையில் அந்தப் பெண் அமர்ந்திருந்தார். அங்கிருந்த ஒரு நோட்டு புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் பார்த்து விட்டு, நீ காலையில் ஆறு டூ ஏழு பேட்ச்சுக்கு வந்திரு என்றார்.
என்னது? காலையில ஆறு மணிக்கா? அப்படியே உள்ளே பாரும்மா! அங்க இரண்டாவது வரிசையில் நீலக் கலர் சட்டையில் ஒருத்தன் டைப் பண்ணிட்டு இருக்கான் தெரியுதா? என்றான் உடன் வந்திருந்த இளங்கோ. அந்தப் பெண் ஜன்னல் வழியே பார்த்தார். அங்கே கணேஷ் அவனது இடத்தில், கருமமே கண்ணாயிருந்தான்.
ஆமாம். அதுக்கென்ன? என்றார்.
அவன் பக்கத்தில உட்காரணும்தான் இவன் டைப்ரைட்டிங் கிளாஸ்லேயே சேருகிறான். நீ என்னென்னா விடியற்காலையிலே வர சொல்றியே?
அந்தப் பெண் அப்படியே அதிர்ந்து போய் விட்டாள். வழக்கமாக ஒரு பெண்ணை விடாமல் பின் தொடர்பவர்கள்தாம் இப்படி குறிப்பிட்ட நேரம், குறிப்பிட்ட இடம்தான் வேண்டும் என அடம் பிடிப்பார்கள். வாழ்க்கையில் முதல் முறையாக, இப்படி ஒரு பையன் பக்கத்தில உட்கார இப்படியொரு போட்டியை அவர் எதிர்பார்த்திருக்க வில்லை.
பார்த்து அவன் பக்கத்தில ஒரு இடம் கொடும்மா. உங்க வாத்தியார் டென்னிஸ் விளையாடும் போது, எத்தனை தடவை நாங்க பந்து பொறுக்கி போட்டிருப்போம் தெரியுமா? என்றான் இளங்கோ.
நீங்களே பார்க்கிறீங்க இல்லே? இங்கே எல்லாம் ஃபுல்லா இருக்கு. மெஷின் எதுவும் காலியா இல்லையே?
இதோ, இங்க இருக்கிறது என்னவாம்? என்று அந்த முன்னறையில் ஒரு மூலையில் வைக்கப் பட்டிருந்த ஒரு டைப்ரைட்டிங் மிஷினைக் காட்டினான் இளங்கோ.
இந்த மெஷின் என்று ஏதோ சொல்ல வந்தவர், சட்டென மாற்றிக் கொண்டு இந்த மெஷின்ல அடிக்கிறதுன்னா, இந்த பேட்சிலேயே தரேன். ஆனா, அப்புறம் மெஷின் மாத்தித் தரணும்னு கேட்கக் கூடாது என்றார்.
நான் உடனேயே ஒப்புக் கொண்டேன்.
அந்தப் பெண்ணுக்கு, முதல் பார்வையிலே எங்களைப் பிடிக்காமல் போவதற்கான அத்தனை காரணங்களும் இருந்தன. உடன் இளங்கோவின் மிரட்டல் வேறு. தனது மோசமான எதிரியை பழி வாங்குவதற்காகவென வைத்திருந்த அந்த மெஷின் எனக்கு ஒதுக்கீடு செய்யப் பட்டது.
நான் அருகில் சென்று அந்த மெஷினைத் தடவிப் பார்த்தேன். முப்பது வருடங்களுக்குப் பிறகு, ஒரு கதையின் கதாநாயகனாகப் போகிறோம் என்பதை அறியாமல், ஒரு பழைய மாடலான ரெமிங்டன் டைப்ரைட்டர் அங்கே இருந்தது. புறக்கணித்து ஒதுக்கப் பட்ட, பழைய கவர்ச்சி நடிகையின் நிலையில், தன்னம்பிக்கையற்று, தூசி படிந்து பரிதாபமாக இருந்தது. நான் தொட்டக் கணமே அதற்கு உடல் சிலிர்த்திருக்க வேண்டும். அப்படியே என்னை மானசீகமாக இறுகப் பற்றிக் கொண்டது.
டைப்ரைட்டிங் வகுப்பில் சேர்வதற்கு, அவரவருக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும்.
கண் விழித்திருக்கும் நேரத்திலும், தனது உயிர் நண்பனைப் பிரிந்திருக்கக் கூடாது என்ற உயரிய லட்சியத்துக்காக, டைப்ரைட்டிங் கற்றுக் கொள்ள சேர்ந்தவன் என்ற பெருமையை சரித்திரம் அன்று எனக்களித்தது. ஒரு நல்ல நாளில் எனக்கு அந்த முன்னறையில் ஜன்னல் நோக்கி ஒரு டேபிள், ஸ்டுல் போடப் பட்டு, எனக்கெதிரில் அந்த ரெமிங்க்டன் வைக்கப் பட்டது. அருகில் இருந்த அட்டையைப் பார்த்து a s d f , ; l k j அடிக்க ஆரம்பித்தேன்.
சென்ற பாராவில் டைப் அடிக்க ஆரம்பித்தேன் என்று நான் சொன்னவுடன், திரைப்படங்களில் குட்டைப் பாவாடை ஆங்கிலோ இந்தியப் பெண்ணொருத்தி, தனது நளினமான விரல்களால், மெஷினை ஒத்தி எடுப்பாளே? அந்தக் காட்சி உங்கள் நினைவுக்கு வந்திருந்தால் அது உங்கள் பிழை அல்ல. ஏனெனில் முதலில், நானும் அப்படித்தான் நினைத்தேன்.
பின்னாளில் நான் பார்த்த “36 சேம்பர் ஆஃப் ஷாலின்” திரைப் படத்தில், குங்ஃபூ சண்டையின் போது கதாநாயகனின் விரல் பலமாக இருக்க, வாணலில் இருக்கும் சுடு மணலில் விரல்களைக் குத்தி, குத்தி பயிற்சி தரப் படும். அதை விட, எனது ரெமிங்டன் மெஷினில் a s d f அடிக்க விட்டிருந்தால் இன்னமும் பயிற்சி பலமாக இருந்திருக்கும். முதல் தினம் எனது முழு பலத்தையும் வைத்து அந்த மெஷினில் குத்தி எடுத்து விட்டேன்.
அன்று இரவு சாப்பிடக்கூட முடியாமல் பத்து விரல்களும் வீங்கிப் போய் இருந்தது. அம்மா எனது கைவிரல்களுக்கு விளக்கண்ணெய் போட்டு நீவி விட்டுக் கொண்டிருக்கும் போது, நைனா உள்ளே வந்தார்.
என்னவாம்? என்றார் பார்வையாலே.
ஏதோ டைப்பாம்? அந்த வகுப்புக்கு போய் வந்திருக்கான். விரலெல்லாம் வீங்கிப் போயிருக்கு என்றார் அம்மா.
ஹும்! ஒழுங்கா ஷெட்டுக்கு வந்து ஸ்பேனர் பிடிச்சிருந்தா, தொழிலையாவது கத்துக்கலாம். இதெல்லாம் எதுக்கு வெட்டி வேலை? என வழக்கம் போல நியாயமான ஒரு கேள்வியைக் கேட்டுப் போனார்.
தனது முயற்சியில் சற்றும் மனம் தளரா வேதாளம், மீண்டும் டைப்ரைட்டிங் வகுப்புக்குச் சென்றது. நான் திரும்ப வருவேன் என்று செல்வி எதிர்பார்த்திருக்க வில்லை போலும். முகத்தில் ஆச்சரியக் குறி. மீண்டும் அதே இடம். அதே மெஷின். அமர்ந்து எதிரில் ஜன்னல் வழியே எனது ஆருயிர் நண்பனைப் பார்த்தபடி, குங்ஃபூ பயிற்சியினை ஆரம்பித்தேன்.
அந்த முன்னறையில் நானும், செல்வியும் மட்டும் தனியே அமர்ந்திருக்க, உள்ளே இருந்த ஹாலில் முப்பது பேர் நல்லவிதமாக டைப்ரைட்டிங் கற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அடித்து முடித்த தாள்களை கொண்டு வந்து செல்வியிடம் தர, இவர் அதிலுள்ள தவறுகளை, சிகப்பு பேனாவால் தாள் முழுக்க சுழித்துத் தருவார். நாம் தட்டச்சியத் தாளில் முகத்தில் அடித்தது போல இவள் சுழிப்பதா என்றெண்ணி, நிறுத்தி நிதானமாக, (வழக்கம் போல பலமாக) தட்டச்சு செய்வேன். தாளின் கடைசியில் ஒரு தவறு வந்து விட்டாலும், கலைஞர் செய்வது போல அதை அப்படியே கசக்கி எறிந்து விட்டு, மறுபடியும் புதிய தாளில் அடிக்க ஆரம்பிப்பேன்.
உடன் பழகும் யாரிடமும் என்னால் சிநேகமற்று இருக்க முடியாது. அவர்களைப் பார்க்கும் எல்லாக் கணங்களிலும், ஒரு புன்னகை, தலையசைப்பு என ஒரு நட்புச் சூழலை உருவாக்கிக் கொள்வது எனது இயல்பு. எனது அப்பாவித் தனமான பிஞ்சு முகத்தைப் பார்த்த, செல்விக்கும் அப்படித்தான் தோன்றியிருக்க வேண்டும். இளங்கோவும் அதன் பிறகு அங்கு வரவில்லையாதலால், எங்களுக்குள் பகைமை குறைந்து ஒரு நட்பு உருவாகியிருந்தது.
அடுத்த சில மாதங்களில் நட்பு வலுப் பெற்று செல்விக்கு நான் சுஜாதா புத்தகங்கள் தர, எனக்கு அவர் பாலகுமாரனை தர (இரண்டுமே ஒரே லைப்ரரிதான்!) நல்லுறவின் நீட்சியாக, தனது பையிலிருந்த டிஃபன் பாக்ஸில் இருக்கும் தயிர் சாதத்தை என்னுடன் பகிர்ந்து கொள்ளத் துவங்கினார்.
மச்சான்! ஐயரு பொண்ணு எதை வேணும்னாலும் தருவா! தன்னோட தயிர் சாதத்தை மட்டும் உயிரே போனாலும் யாருக்கும் தர மாட்டாள்! அதையே உனக்குத் தரான்னா, நீ பயப்படவே வேணாம். தைரியமா பேசிடு என்றான் இளங்கோ. இவன் எங்கிருந்துதான் இதையெல்லாம் கத்துக்கிறானோ என எனக்கு ஆச்சரியமா இருக்கும்!
டேய்! வேணாம்டா. வம்பாயிடப் போவுது. ஜெயக்குமார் வாத்தியார் வேற அப்பப்போ எங்க கடைக்கு வருவார். எங்கப்பாகிட்ட ஏதாச்சும் சொல்லி வைக்கப் போறார் என்றான் கணேஷ். எப்போதுமே நாங்கள் பாதை மாறிப் போகாமல் பார்த்துக் கொள்ளும் நல் மேய்ப்பன் ரோல் அவனுக்கு.
நானும் கூட்டமில்லா ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து, கையில் விமலா ரமணி, சிவசங்கரி, என வகைக்கு ஒரு புத்தகமாக எடுத்துக் கொண்டு இன்ஸ்டிட்யூட் சென்று, செல்வியிடம் கொடுத்தேன். மவுனமாக வாங்கிக் கொண்டவரிடம்
நான் ஒண்ணு கேட்பேன்! திட்டக் கூடாது என்றேன்.
என்னடா? என்றாள்.
இல்லை! நீ என்னை இத்தனை மாசமா பார்க்குற இல்லை? எவ்வளவு கஷ்டப் படுறேன்! எனக்கு உள்ளே வேற மெஷின் ஒண்ணு அலாட் பண்ணக் கூடாதா? என தைரியமாகக் கேட்டே விட்டேன்.
ஒரு சுப முகூர்த்த நாளில், எனது ரெமிங்டனில் இருந்து, உள்ளே ஹாலின் நடுவே இருந்த புதிய ஃபேஸிட் மெஷின் ஒன்று எனக்கு ஒதுக்கப் பட்டது. பெரும் மகிழ்ச்சியுடன் உள்ளே செல்லும் போது, என்னைப் பரிதாபமாகப் பார்த்த அந்த ரெமிங்டனின் தலையில் ஓங்கி ஒரு தட்டு. ஹாலின் நடுவே அமர்ந்து பெருமிதத்தோடு சுற்றிலும் ஒரு பார்வைப் பார்த்தேன். யாரும் என்னை கவனிக்க வில்லை. எனது புதிய மெஷினில் பேப்பர் செட் செய்து, அடிக்கத் துவங்கினேன். அக்கணம், எனது தலைக்கு மேலே ஒடிக் கொண்டிருந்த மின்விசிறியில் ஏதோ பெரிய சத்தம் கேட்க, அனைவரும் தட்டச்சுவதை நிறுத்தி விட்டு திரும்பி என்னைப் பார்த்தனர்.
எனது வழக்கமான ரெமிங்டன் அடியை தாளாமல், அந்த மென்மையான ஃபேஸிட் மெஷினின் உள்ளிருந்த ஏதோ ஒரு பார்ட் எகிறிச் சென்று மேலிருந்த மின்விசிறியில் அடித்து, அதன் இறக்கை நெளிந்து போய், அந்த அறையின் ஏதோ ஒரு கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இருபத்தி ஒன்பது பேருடன், செல்வியும் அப்படியே திகிலடைந்து போய், என்னைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த இன்ஸ்ட்டியூட் துவங்கிய நாள் முதல், அந்த அறை இரைச்சலின்றி, அத்தனை மவுனமாக இருந்திருக்காது. வகுப்பில் சேர்ந்த பல மாதங்களுக்குப் பிறகு, அன்றுதான் ஜார்ஜ் டெக்னிக்கல் இன்ஸ்டிட்யூட், எனது வரவை அதிகாரப் பூர்வமாக தெரிந்து கொண்டது.
அடுத்த கோடை விடுமுறையின் போது, திடீரென ஒருநாள் என்னை அழைத்து வரும் ஞாயிற்றுக் கிழமை உன்னோட பேட்சுக்கு லோயர் எக்ஸாம். காலையில் சீக்கிரம் எட்டு மணிக்கெல்லாம், தியாகி அண்ணாமலை பள்ளிக்கு வந்து விடு என்றார் ஜெயக்குமார் சார். அன்றைக்கு வெள்ளிக் கிழமை. எனக்கு பரீட்சை குறித்து பெரிதாக பயம் ஒன்றுமில்லாததால், உற்சாகமாக சரி சார்! என்றேன். கணேஷுக்குத்தான் பதட்டம். அன்று காலை, வழக்கம் போல, நானும் கணேஷும் ஒரே மாதிரி உடையணிந்து கொண்டு, எனது டிவிஎஸ் 50 வாகனத்தில் புயல் வேகத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றடைந்தோம்.
நான் வண்டியை நிறுத்தும் அதே வேளையில், ஒரு பெரிய மாட்டு வண்டி வந்து நின்றது. அதன் மீது எங்கள் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்டின் மொத்த டைப்ரைட்டர்களும் வரிசையாக வைக்கப் பட்டிருந்தன. என்னுடைய பதினெட்டாம் எண் ஃபேஸிட் மெஷின் இருக்கா? எனப் பார்த்தேன். வரிசையின் நடுவில் அழகாகத் துடைத்து வைக்கப் பட்டிருந்தது. செல்வியும், வண்டிக்காரரும் ஓவ்வொரு மிஷினாக இறக்கி முதல் மாடி தேர்வு மையத்துக்கு கொண்டு சென்றனர். அப்போதுதான் கவனித்தேன். அந்த ரெமிங்டனும் கொண்டு வரப்பட்டிருந்த மிஷின்களின் நடுவே மவுனமாக அமர்ந்திருந்தது.
செல்வி! என்னது இது? என்றேன்.
என்னடா?
எதுக்கு இந்த வீணாப் போன மிஷினைக் கொண்டு வந்திருக்கீங்க?
ஓ! அதுவா? ஒரு பேட்சுக்கு முப்பது பேர் என்றால், நாம மூப்பத்தி மூணு மெஷின் கொண்டு வரணும்னு ரூல்ஸ்டா! அது சும்மா கணக்குக்கு வந்திருக்கு. மீதி ரெண்டும் கூட வேஸ்ட் பீஸ்தான் என்றார்.
சரி! நமக்கென்ன போச்சு என்று எனதருமை டிவிஎஸ் 50 ஐ பத்திரமான இடம் பார்த்து நிறுத்தி விட்டு, தெரு முனைக்குச் சென்று டீயும், வடையும் சாப்பிட்டு விட்டு, திரும்ப தேர்வு மையத்துக்கு வந்து, உற்சாகமாக அந்த குறுகலான மாடிப் படி ஏறும் போது, மேலிருந்து ஒரு டைப்ரைட்டருடன்,செல்வி கீழே உருண்டு வந்து கொண்டிருந்தார். நாங்கள் ஓடிச் சென்று தூக்கி விட்டவுடன், அப்படியே அமர்ந்து அழ ஆரம்பித்தார். ஏய்! சும்மா வழுக்கி விழுந்ததுக்கெல்லாமா அழுவாங்க? என்று நான் கேட்டதற்கு, அது உன்னோட மெஷின்தாண்டா! என்று சொல்லி மீண்டும் சத்தமாக ஆரம்பித்தார். நான் சுற்றிலும் பார்த்தேன். என்னோட பதினெட்டாம் எண் ஃபாஸிட் மெஷின் பல பார்ட்டுகளாக பிரிந்து, பரந்து, விரிந்து இருந்தது.
தேர்வு துவங்க இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தது. என்னுடைய இன்ஸ்டிட்டின் இருபத்து ஒன்பது பேர்களும், தத்தம் மிஷின்களின் முன்னாடி அமர்ந்து கொண்டு கண்களை மூடி கடவுளைக் கும்பிட்டுக் கொண்டிருந்த காட்சியை, நானும், செல்வியும் அந்த அறை வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தோம். ஜெயக்குமார் சார், வழக்கம் போல எல்லா முக்கியமான நேரங்களிலும் சிகரெட் குடிக்க போய் விடுவார். இப்போதும் அப்படியே!
இப்போ என்னடா செய்வது?
என்ன செய்வது என்றால்? அடுத்த பேட்ச் வாங்கி தா! என்றேன்.
இதுதாண்டா கடைசி பேட்ச்! இனிமே அடுத்த வருஷம்தான் எழுதணும். டேய்! ப்ளீஸ்டா! உன் பழைய ரெமிங்டன் இருக்கே! அதிலேயே அடிச்சுடேன்?
என்னது? மறுபடியும் அதிலேயா? மீதி ரெண்டு மிஷின்ல வேணும்னா டிரை பண்றேன்.
அது ரெண்டும் மிஷின் மாதிரிடா! வெறும் கவர் போட்டு மூடியிருக்கு. உள்ளே எதுவும் இருக்காது என்றார்.
முதல் மணி அடிக்கப் பட்டது. எல்லோருக்கும் முன்பாக வினாத் தாள் கவிழ்த்து வைக்கப் பட்டது. நான் எதுவும் சொல்வதற்கும் முன்பாக, செல்வி ரெமிங்டன் மிஷினைக் கொண்டு வந்து காலியாக இருந்த ஒரு டேபிளின் முன் வைத்தார். நான் சென்று அதன் எதிரில் நின்று கொண்டேன். எல்லோரும் திரும்பி என்னைப் பரிதாபமாகப் பார்த்தார்கள். நான் தலை குனிந்து எனக்கு முன்னிருந்த ரெமிங்டனை பிடிவாதமாகப் பார்க்க மறுத்து, அதன் அருகில் கவிழ்த்து வைக்கப் பட்டிருந்த வினாத்தாளைப் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால், அந்த ரெமிங்டன் மெஷின் என்னைக் கொஞ்சம் தொடேன்! என்பது போல பாசத்துடன் பார்த்த பார்வையை என்னால் அப்படியே உணர முடிந்தது.
கடைசி மணி அடித்தது. எல்லோரும் ஏற்கனவே பேப்பர் செட் செய்து வைத்திருந்ததால், வினாத் தாளை திருப்பி வைத்து தட, தடவென அடிக்க ஆரம்பித்தார்கள். நான் எந்த ஆர்வமுமின்றி நிதானமாக, ஒரு பேப்பரை எடுத்து ரெமிங்க்டனில் செட் செய்தேன்.நான் எடுத்து, சொருகி, மார்ஜின் செட் செய்ய அதிகபட்சம் பத்து நொடிகள் மட்டுமே ஆகியிருக்கும். ஒரு சிக்கலும் இன்றி, பழக்கி வைத்திருந்த செல்ல நாயைப் போல, அந்த ரெமிங்டன் எனக்கு அப்படி ஒரு லாவகம் அளித்தது. எனக்கான, புதிய ஃபேஸிட் மெஷின் எனது கண் முன்னாடியே உடைந்து நொறுங்கியக் காட்சி, வேறு உதவி எதுவும் எனக்குக் கிடைக்காதது, எல்லோர் முன்பும் அவமானப் பட்டது என எல்லாமும் எனது கண் முன்னே தோன்ற, இழப்பதற்கு வேறெதுவுமின்றி, வெறியுடன் தட்டச்சிடத் துவங்கினேன்.
லோயர் பிரிவில் தேர்ச்சியடைய, நிமிடத்துக்கு முப்பது ஆங்கில வார்த்தைகளை தவறின்றி, ஓவர் ரைட்டிங் இன்றி தட்டச்ச வேண்டும். பதினைந்து நிமிடத் தேர்வு அது. எனவே, சராசரியாக நானூற்று ஐம்பது வார்த்தைகள். ஆங்கிலம் என்பதால், பல புரியாத, புதிய வார்த்தைகள் வேறு இருந்து தொலைக்கும். பெரும்பாலானோர் அங்குதான் சிக்கிக் கொண்டு சீரழிவார்கள். முதல் தவறு பதட்டமளித்து, மேலும், மேலும் தவறு செய்ய வைக்கும். இறுதியில் உங்கள் பெயரைக் கூட நீங்கள் தப்பும் தவறுமாகவே அடித்து வைப்பீர்கள்.
வெகு தாமதமாக பந்தயத்தில் ஓடத் துவங்கி, நான் எனக்களிக்கப் பட்ட தாளினை தட்டச்சி முடித்து விட்டு நிமிர்ந்து பார்த்த போது எட்டு நிமிடம் முடிந்திருந்தது. தாளை உருவி வெளியே எடுத்துப் பார்த்தேன். ஒரு தவறுமின்றி, கண்ணாடி போல, வினாத் தாளை விட அழகாக இருந்தது. எனது ரெமிங்க்டன் எனக்களித்த பயிற்சி அப்படி! என்னைச் சுற்றிலும் அனைவரும் வியர்த்து விறுவிறுக்க டைப் செய்து கொண்டிருக்க, நான் மெல்ல எனது விரல்களுக்கு சொடுக்கெத்துக் கொண்டேன்.
செல்வி ஓடி வந்து என்னடா? ஏன் நிறுத்திட்டே? என்றார்.
முடிஞ்சு போச்சு! என்றேன்.
தாளை வாங்கிப் பார்த்தார். அந்த அதிசயத்தை அவரால் நம்ப முடியவில்லை. அப்போது ஒரு அழுகுரல் கேட்டது. எனக்கு இரண்டு மிஷின் முன்னால் இருந்த பெண் பதட்டத்தில் பல தவறுகள் செய்து விட்டாள் போலிருக்கு! தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள். செல்வி ஓடிச் சென்று அவளுடைய வினாத்தாளை கொண்டு வந்து என்னிடம் தர, இன்னொரு புதிய பேப்பரை எனதருமை ரெமிங்க்டெனில் செட் செய்தேன். அடுத்த ஏழு நிமிடத்தில் அதை அடித்து முடித்து, உருவி எடுத்துத் தந்தேன். இறுதி மணி அடித்தது.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அந்த ஹால் சூப்பர்வைஸர், மற்றொரு பெண்ணின் வினாத்தாளை மவுனமாகக் கொண்டு வந்து எனதருகில் வைக்க, பல ஆண்டுகளாக அங்கீகாரத்துக்கு ஏங்கித் தவித்துக் கொண்டிருந்த எனது ரெமிங்டன் அதையும் வேகமாக உள்ளிழுத்துக் கொண்டது. வெறும் இருபது நிமிடங்களில் மூன்று பேரை லோயர் வகுப்பு தேர்ச்சியடைய வைத்து, டைப்ரைட்டிங் தேர்வு சரித்திரத்தில், தனது இருப்பை கம்பீரமாகப் பதிவு செய்து கொண்டது எனது ரெமிங்டன்.
அதற்கு அடுத்த வருடம் ஆங்கில ஹையர் தேர்வினையும் எழுதி தேறியப் பிறகு ( அது இன்னொரு கதை!) மீண்டும் டைப்ரைட்டிங் மிஷின் ஒன்றினைத் தொட்டுப் பார்க்க அதன் பிறகு எனக்கு பத்து வருடம் ஆனது. இன்ஜினியரிங் முடித்து விட்டு, எனது தந்தை மறைவுக்குப் பின்னர், எங்கள் பஸ் கம்பெனியின் முதலாளி வேலை எனக்கு வந்து சேர்ந்தது. எங்கள் நண்பர் குழாம் கூடுவதற்கு ஒரு பொதுவான இடம் தேவைப் பட்ட போது எங்களுக்கு சிக்கியதுதான், முனிசிபாலிட்டி அலுவலகத்தின் பின்புறம் இருந்த கவிதா டைப்ரைட்டர் சர்வீஸ் சென்டர். அதன் உரிமையாளரும், தமிழ்நாட்டின் ஆகச் சிறந்த டைப்ரைட்டர் மெக்கானிக்குமான குணா அண்ணன் எங்களுக்கு நண்பரானார். நல்ல படிப்பாளி. பெரியாரிஸ்ட். எனக்கு பெரியார் சிந்தனைகளை நல்ல உதாரணங்களுடன் சொல்லி, தொடர்பான மிகச் சிறந்த புத்தகங்களை அறிமுகம் செய்து வைத்தவர்.
நாள் முழுக்க வங்கிகள், போக்குவரத்துத் துறை அலுவலகம், ஆடிட்டர் அலுவலகம் என நான் எங்கு சுற்றினாலும் மணிக்கொரு முறை எனது பைக், குணா அண்ணனின் சர்வீஸ் செண்டருக்கு போய் நிற்கும். சுற்றிலும் பிரித்து வைக்கப் பட்டிருந்த டைப்ரைட்டர்களுடன் போராடிக் கொண்டிருப்பார். என்னைப் பார்த்தவுடன், உள்ளிருந்து ஒரு சிகரெட் பாக்கெட்டை எடுத்து வெளியில் வைப்பார். நானொன்றும், அவர் ஒன்றுமாக பற்ற வைத்துக் கொள்வோம். அங்கிருக்கும் புத்தகம் ஒன்றை எடுத்துக் கொண்டு, திருட்டு தம்மடிக்க, பின்னால் இருக்கும் தோட்டத்து நிழலில் சென்று அமர்ந்து கொள்வேன்.
அப்படி புத்தகத்தில் மூழ்கிப் போயிருந்த ஒரு நாள், குணா அண்ணன், டேய் கருணா! கொஞ்சம் இங்கே வாயேன் என்றழைத்தார்.
என்னண்ணா?
இதைப் பாரேன்! இதுதாண்டா ரெமிங்டன் வோர்ல்ட் வார் சீரிஸ். இன்னைக்கு தமிழ்நாட்டிலேயே இது ஒரு மிஷின் மட்டும்தான் இருக்கு. என்னைத் தவிர வேற யாரும் இதை தொட்டு பிரித்து விட முடியாது. இங்கே பாரேன்! ஐம்பது வருஷம் கழித்தும், எப்படி சாலிடா இருக்குன்னு! வெள்ளைக்காரன், வெள்ளைக்காரந்தாண்டா! என்றார்.
நான் குனிந்து அந்த மிஷினைப் பார்த்தேன். என்னுடைய அதே ரெமிங்டன்! ஒரு யோகியின் இருப்பைப் போல, சலனமின்றி அங்கே அமர்ந்திருந்தது. சற்றும் எதிர்பாராத அந்தத் தருணத்தில் எனது முதல் டைப்ரைட்டரை அங்கே பார்த்ததில், நான் கண்கலங்கி விட்டேன்.
எனது பக்கமாக, எனதருமை ரெமிங்டனை இழுத்து வைத்துக் கொண்டு, அங்கிருந்த ஒரு பேப்பரை எடுத்து அதன் ரோலரில் வைத்தேன். அதே பழைய ஆர்வத்துடன், அதை உள்ளிழுத்துக் கொண்டது. ஏறக்குறைய பத்து வருடங்களுக்குப் பிறகு, டைப்ரைட்டரை தொடுகிறேன். ஒருமுறை மூச்சை இழுத்து விட்டுக் கொண்டேன். எனது இரு கைகளையும் பேண்ட்டில் துடைத்துக் கொண்டு, விரல்களை சரியாக a s d f : l k j வில் வைத்து முதல் அடி அடித்தேன்.
பத்து வருடங்களுக்குப் பிறகு, பழைய காதலி ஒருத்தியை, ஆளில்லா ஒரு இடத்தில் சந்திக்க நேரிடும் போது, அவள் கைகள் பற்றி, அருகில் இழுத்து அணைத்து, மெல்ல அவள் இடுப்பில் கை வைத்து, சுதந்திரமாக முன்னேறிச் செல்லும் போது ச்சீ! போடா! கூச்சமா இருக்கு! என்பாளே! அந்தக் குரல் எனக்கு அப்படியே ஸ்பஷ்டமாகக் கேட்டது.
– எஸ்கேபி.கருணா.
ரெமிங்டன்

Karuna!
hats off Karuna!
அதிகபட்சமாக என் விமர்சனமாக ஒன்றைத்தான்
நான் இங்கே உங்களுக்கு தரமுடியும்…
அது என்னவென்றால்
நம்மிடையே இருப்பது 20 வருட நட்பாக இருந்தாலும்..
நான் தங்களுக்கு நட்பாக இருப்பதை விட
வாசகனாக இருக்கவே பெருமைப் படுகிறேன்!
பேனாவ கீழ வச்சிடாதீங்க..ப்ளீஸ்!
Ultimate… seamless writing…:) அருமை..!
highly romantic. was it ur real feeling or u write using ur imagination?
கடவுள் பாதி! மிருகம் பாதி! :)
hats off sir!!!!!!!!!!!!!
நல்ல பதிவு நட்புக்கு நல்ல மரியாதை செல்வி தயிர் சாதம் கொடுத்தபொழுது அண்ணன் இளங்கோ சொன்னதை கனேஷ் திசை திருப்பியது சுவாரஸ்யம்
1. தாங்கள் இதுவரை எழுதியதில் இது cherry on the ice cream.
2. நான் மிகவும் ரசித்தேன் – காரணம், நானும் Lower, higher, hispeed முடித்துள்ளேன் – ரெமிங்டன்னில் அல்ல, ஃபாஸெட்டில்.
3. சுஜாதாவின் கணேஷ் – வஸந்த் போல தங்களின் கதைகளில் தவறாமல் ஆஜராகிவிடுகிறார்கள் இளங்கோவும் கணேஷும்.
4. தன்னுடைய முயற்சியில் சற்றும் மனம் தளறாத வேதாளம் மீண்டும் டைப்ரைட்டிங் க்ளாஸ் செல்வதிலும், ஆருயிர் நண்பனை பார்த்துக்கொண்டே குங்ஃபூ பயிற்சியை தொடர்வதிலும் தேர்ந்த எழுத்தாளனின் எளிய நடை.
5. பத்தாவதுலேயே சுஜாதா, பாலகுமாரன், விமலாராணி, சிவசங்கரி ஆகியோரின் பரிச்சயம் தங்களின் இலக்கிய ஆர்வத்தினை வேர் ஊண்ற செய்திருப்பது தெளிந்த பிரதிபலிப்பு.
6. கோவம், சோகம், ஸ்நேகம், ஹாஸ்யம், சென்டிமென்ட், ஹீரோயிஸம், பாசம், படபடப்பு என எல்லாவித மசாலாக்களையும் சரிவிகித சமானாமாய் கலந்துள்ள கமகம ரெஸிபி.
7. எல்லா இன்ஸிடிடியூட்டிலும் ஒரு ஐயர் ஆத்துப் பொண்ணை சைட் அடிப்பது எழுதப்படாத விதி போல. எனினும் இதில் நயம் இழைந்தோடியிருக்கிறது.. அதிலும் அந்த தயிர்சாதம் அருமையோ அருமை!
8. ரெமிங்டன் அடியை ஃபாஸெட்டில் அடித்து ரணகளப்படுத்துவதும், செல்வி ஃபாஸெட்டோடு உருண்டு விழுவதும் செம காமெடி ரகளை. அதிலும் க்ளைமாக்ஸில் 20 நிமிடத்தில் 3 பரிட்சைகளை தூள் கிளப்புவது செம ஹீரோயிஸம்.
9. பழைய காதலியை தனிமையில் தீண்டுவதும் ரெமிங்டன்னை பாசத்தோடு ஸ்பரிசிப்பதும் ரஸவாதம். சுஜாதா டச்.
10. மொத்தத்தில், ரெமிங்டன் – வெல்டன்.
பி.கு.
இப்படி சிறுசிறு பால்ய ஞாபகங்களை எல்லாம் தூசு தட்டி, கதைகளில் வார்த்து, மொத்தமாய் கோர்த்து, அனைத்தையும் சேர்த்து, கருணாவும், பால்ய பொக்கஷமும் என்று ஒரு புத்தகமாய் போடலாமே?!
மேலும், நான் சிறு பிராயத்தில் தங்கள் அறைக்கு வரும்போதெல்லாம் தங்களின் புத்தக அலமாரியிலிருக்கும் சுஜாதா பாலகுமார் அசோக மித்திரன்களை வாசிக்க ஆரம்பித்தேன். அப்படிதான் ஒரு சுஜாதாவில் நீங்கள் விமலா அத்தைக்கு எழுதியிருந்த காதல் கடிதம் ஒளிந்திருந்ததை பார்க்க நேரிட்டது. அன்று முதல் சுஜாதாவையும் காதலையும் ரசிக்க ஆரம்பித்துவிட்டேன். ( அதனால் தான் நானும் காதல் திருமணம் புகுந்தேன் என்பது வேற ட்ராக்) சரி, அது போகட்டும், தங்களுக்கும் விமலா பின்னியுடனான காதலுக்குமான பின்ணனியும், அதன் விளைவால் நம் வீட்டில் எழுந்த பூகம்பமும், பின்னர் நடந்த சுபமுகூர்த்த திருமணமும் எல்லாம் புனைந்து ஒரு நீள்சிறுகதை எழுதினால் என்ன? அட்டகாசமான புதினம் கிடைக்குமே..
யோசியுங்கள்.
ஆவலுடன்,
சுதாகர் மிராக்ள்.
REALLY INTERESTING…. I AM FEELING BAD WHY I HAVE LOST MY TINY REMINGTON TYPEWRITER WHICH I PRACTICED IN MY HOUSE DURING MY SCHOOL DAYS. THE OTHER THING WHICH COMES TO MY MIND AS AN LOVER IS MY LAMBRETTA SCOOTER MSQ 5935. ANY FINDER …. INFORM ME
WITH REGARDS
NATTU
அதற்கு அடுத்த வருடம் ஆங்கில ஹையர் தேர்வினையும் எழுதி தேறியப் பிறகு ( அது இன்னொரு கதை!) – we are waiting to read that one too :-)
முதல் வரியில் ஆரம்பித்தால் கடைசி வரி படித்து முடித்தவுடன் தான் கண்ணை பதிவில் இருந்து எடுக்க முடிகிறது. செம கதை சொல்லி நீங்கள் :-) உங்கள் பால்ய பருவம் ஒரு வரம். ரெமிங்க்டன் கம்பெனிக்கே இந்தப் பதிவை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்பவேண்டும். அவர்கள் archiveல் இருக்க வேண்டிய ஒரு பதிவு இது :-)
amas32
இளமை எனும் பூங்காற்று…..
பாடியது ஓர் பாட்டு….
ஜெயகுமார் சார்………………1
குணா சார்………………..2
”தம்பி…. கம்ப்யூட்டர் கத்துக்க நிறைய செலவாகும்…… என் மகன படிக்க வைக்க எவ்ளோ கஷ்டப் பட்டேன் தெரியுமா….. இன்ஸ்ட்யூட்ல சேந்து படிக்கிறதோட ….. எதுனாச்சும் ஒரு யுனிவர்சிட்டியில அட்லீஸ்ட் ஒரு டிப்ளோமாவது வாங்கனும்……” (1)
”நகத்தை அதிகமா வளக்காதடா…. கீ யோட சந்துல போயி மாட்டிகிட்டா நகம் பேந்து ரத்தம் வந்துடும்…. இங்கவா…… இந்த மக்கு தண்ணில கைய ஊறவை…. அஞ்சு நிமிஷம் கழிச்சி வந்து நானே வெட்டி விடறேன்…..” (2)
முதல் சம்பவம் நடந்தது ஜார்ஜ் இன்ஸ்டிடியூட்
இரண்டாமானது அன்பு இன்ஸ்டிடியூட்
நிகழ்காலத்தின் நினைவுகளை பின்னோக்கியிழுத்து பலவித நிகழ்வுகளை நினைவூட்டி புளங்கிதப்படுத்தியதற்கு நன்றிகள்……
ஆட்டோகிராப் – பகுதி (1) :-)
Well done. I can not control myself recollecting my good old days. It was in 1960 when I joined George typwriting Institute manned by Jayakumar’s father George. After a decade as a Junior lawyer I purchased a portable Remington in Pondicherry and used it for quite a long time till I gifted it to one of my juniors. Like you and me there are several lovers of Reminton, who would reminisce their association with that immortal Remington.
Great flashback sir. So happy to have rekindled your memories.
அன்புள்ள திரு. SKPK, உங்கள் உயிரோட்டமான நடைக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! நகரின் பளபளப்புக்களிலும், பரபரப்புக்களிலும் மற்றும் படபடப்புக்களிலும் மயங்கி வாழ்வின் இயல்பான சுகங்களை மறந்தவர்களின் மத்தியில் இத்த அண்ணாமலையார் ஊர்காரர்களின் கடந்த வாழ்வலைகளை படிக்கையிலே என்மனமெல்லாம்
ரெமிங்டன் டைப்ரைட்டரின் போட்டோவைப் பார்த்தவுடன், பழைய நினைவுகள்.
பிரமாதமான flow. படிக்கும்போது என்னுடைய College Daysக்கு போய்விட்டேன். நீங்கள் ரெமிங்டனுடன் தனி ரூமில் மன்றாடியதை visualise பண்ணும்வகையில் எழுதியிருப்பது உங்கள் எழுத்துக்கு வெற்றி, Instituteல் நுழையும்போது அந்த மொத்த சத்தமும் நம்மை எங்கோ கொண்டுபோகும்
மும்பையில் நான் தங்கியிருந்த வீட்டுக்கு ரெண்டு வீடு தள்ளி, ஒரு Institute உண்டு. தினமும் போகும்போதும், வரும்போதும் அந்த கடகட சத்தத்தைக் கேட்டால், ஊருக்குப்போய்வந்த திருப்தி வரும் – சில விஷயங்கள் ரத்தத்துடன் ஊறியது – டைப்ரைட்டரும் அப்படித்தான் எனக்கு (@Tamil_Typist) – காலேஜ் படிக்கும்போது Godrej Speed Contestல் கலந்து கொள்ள ஊர் ஊராய் ரெமிங்டனை தூக்கி;கொண்டு போயிருக்கிறேன். இப்போது நினைத்தால் சிரிப்பாகவும், பெருமையாகவும் கூட இருக்கு.
நான் தவறாது பார்க்கும் blogகளில் உங்களுடையதும் ஒன்று – PLEASE KEEP WRITING
Super Karuna I went back olden days memory like u in dharmapuri institute with sweet memories I think in all the institute the same love accures
அருமையாக இருந்தது. எனது தட்டச்சு காலத்தினை நாபகபடுத்தியமைக்கு மிக்க நன்றி.
மிக அருமையான நடை.. நகைச்சுவை, தளபதி நட்பு , முடிவில் ஹீரோயிசம் ..