சாமானியர்களின் நாயகன்

சாமானியர்களின் நாயகன்

அரவிந்த்
தில்லி சட்டமன்றத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் ஆட்சியமைக்க இருக்கிறார்.
மக்கள் தீர்ப்பு ஆம் ஆத்மி பார்ட்டிக்கோ (28) , பாரதிய ஜனதாவுக்கு(31) ஆதரவாக அமைந்ததாக நான் எண்ண வில்லை. மக்கள் தீர்ப்பின் ஒரே நோக்கம் அது ஆளும் காங்கிரஸ் அரசை புறந்தள்ளுவது. அந்த நோக்கம், முதல் அமைச்சர் ஷீலா தீக்ஷித்தையே பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்ததில் சிறப்பாகவே நிறைவேறியுள்ளது. அது மக்களுடைய வெற்றி.
இனி அடுத்த ஆட்சி பற்றியது:
தனிப் பெரும் கட்சியான பிஜேபி ஆட்சியமைப்பது தான் முறை. அவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் 31 இடங்களுடன், கூடுதல் ஆதரவாக சுயேட்ச்சைகளின் 2 இடமும் உண்டு. ஆக 33 இடங்கள். தனிப் பெரும்பான்மைக்கு இன்னும் மூன்று இடங்களே வேண்டும்.
முறைப்படி, ஆளுநர் பிஜேபியை ஆட்சியமைக்க அழைத்ததை ஏற்றுக் கொண்டு ஆட்சியமைத்திருந்தால், மீதமுள்ள மூன்று பேர் மிகச் சுலபமாக ‘வந்து சேர்ந்திருப்பார்கள்’. ஆனால், “ஓடு மீன் ஓட உறு மீன் வருமளவும் காத்திருக்குமாம் கொக்கு” என உறுமீனான பாராளுமன்ற வெற்றிக்காக, டெல்லி சட்டமன்றத்தை பெருந்தன்மையுடன் விட்டு ஒதுங்கி விட்டார்கள். ஆனால், மிக பலம் வாய்ந்த ஒரு எதிர்கட்சியாக ஆளும் கட்சிக்கு பெரும் குடைச்சல் கொடுப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆம் ஆத்மி கட்சியைப் பொருத்தவரை, ஆட்சியமைப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லாததால், ஆட்சிக்கான உரிமையைக் கோரவில்லை. அது ஒரு நல்ல முடிவு. பழம் பெருச்சாளியான காங்கிரஸ், அன்று இரவே தனது 8 உறுப்பினர்களின் ஆதரவு ஆம் ஆத்மி கட்சிக்கு எந்த வித நிபந்தனையும் இன்றி தரப்படும் என்று அறிவித்தும் கூட அர்விந்த் கேஜ்ரிவால் மவுனமாகவே இருந்தார்.
எனவே, அடுத்து குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப் படுத்தப் பட்டு, நாடாளுமன்றத் தேர்தலுடன் மீண்டும் தேர்தல் வருவதுதான் நியாயம். மக்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளித்தால், பிஜேபியா, ஆம் ஆத்மி கட்சியா என அவர்கள் முடிவு செய்திருப்பார்கள்.
ஆனால், இந்த ஊடகங்கள் நடத்திய கூத்து மிகவும் கொடுமையானது. அதுதான் இங்கே முக்கிய விவாதப் பொருளாகிறது.
என்னவோ அர்விந்த் கேஜ்ரிவாலை முதலமைச்சராக மக்கள் தேர்ந்தெடுத்து விட்டது போலவும், அதை மறுத்து விடுவது மக்களையே அவமதிப்பது போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினார்கள். அர்விந்த் கேஜ்ரிவாலும் அந்த வலையில் சிக்கிக் கொண்டு, மக்களிடையே SMS மூலம் கருத்து கேட்ட கூத்தும் நடந்தது. அதில் பெருவாரியான ஆதரவு கிடைத்ததால் ஆட்சியமைக்க முன் வந்துள்ளதாக செய்தி வந்துள்ளது. இனி, ஆட்சியும் SMS மூலமாகவே நடைபெறும் என்று நம்பலாம்!
இங்கே, ஊடகங்களின் அழுத்தத்திற்கும், அவை ஏற்படுத்திய மாயத் தோற்றத்துக்கும் அர்விந்த் கேஜ்ரிவால் பணிந்து விட்டார் என்றே கருதுகிறேன்.
ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்கத் தயார் என்று அர்விந்த் அறிவித்ததுமே, குறைந்தபட்சம் ஒரு வாழ்த்து கூட சொல்லாமல், தங்கள் ஆதரவு நிரந்தரமல்ல! எந்த நேரத்திலும் திரும்பப் பெற்றுக் கொள்வோம்! என்று காங்கிரஸ் அறிவித்திருப்பது அர்விந்துக்கு முதுகில் முதல் குத்து!
இனி, மேலும் மேலும் பல குத்துகளை அவர் எதிர்பார்த்துக் காத்திருக்கலாம். ஏனெனில் முதுகில் குத்துவதில் காங்கிரஸ் கட்சி தனிப் பெருமை வாய்ந்தது. அந்தக் கட்சியின் துரோகத்துக்குப் பலியான அதே கட்சியின் பழைய தலைவர்களான காமராஜ், இராஜாஜி, தேவ்ராஜ் அர்ஸ் போன்ற பலர் அதற்கு சாட்சி!
இனி! அர்விந்த் எதிர் கொள்ள இருக்கும் பிரச்சனைகள்!
1. அர்விந்த் முதலமைச்சராவார்! அடுத்த நாள் முதல் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் பெரும் மாற்றம் வந்து விடும் என அப்பாவி பொதுமக்கள் நம்புவார்கள். (இவர்களே, நம் முதல்வன் படத்தின் இந்தி பதிப்பான நாயக் படத்தின் ஒரு நாள் முதல்வர் போல, அர்விந்த் பெரும் மேஜிக் நிகழ்த்துவார் என்று பிரசாரம் செய்திருக்கிறார்கள்!)
எனவே, மக்களின் அதீதமான எதிர்பார்ப்பு!
2. சபையில் சுயமாக எந்த ஒரு தீர்மானத்தையும் முன்னெடுத்து செல்ல இயலாத மெஜாரிட்டிக் குறைவு!
3. அனைத்து அதிகாரங்களும், துணைநிலை ஆளுநரிடம் குவித்து வைத்திருக்கும் தற்போதைய நிலை!
4. யார் தலைவர்? யார் தொண்டர்? என்று ஒரு தெளிவில்லாத ஆம் ஆத்மி கட்சி! (தற்போதைய நிலையில் அதற்கு ஓட்டுப் போட்டவர்கள் கூட கட்சியின் கொள்கை என்னவென்று பேட்டியளிக்கிறார்கள்!)
5. எல்லாவற்றுக்கும் மேலாக, ஆம் ஆத்மி கட்சியை தோளில் தூக்கிச் சுமந்து தற்போது தூக்கு மேடையில் ஏற்றியிருக்கும் ஊடகங்கள். இனி, தொட்டதெற்கெல்லாம் குறை சொல்லப் போகிறவர்களும் அவர்கள்தான்.
ஒரு மாபெரும் மக்கள் நாயகன் என்ற நிலையில் இருந்து பெரும் ஊழல்களுக்காகவே கட்டமைக்கப் பட்டிருக்கும் தற்போதைய அதிகார பீடத்தின் பலியாடாக (எந்த நேரமும்) மாற இருக்கிறார் அர்விந்த் கேஜ்ரிவால்.
எப்படியாகினும், தற்போதைய குறைபாடுகளுடன் ஆட்சியமைப்பது என முடிவெடுத்துள்ளது மிகச் துணிச்சலான முடிவு. அந்த முடிவை எடுத்த அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு அவருடைய நேர்மையும், லட்சியவாதக் கொள்கைகளுமே துணை நிற்க வேண்டும். வேறு யார் உதவியும் கிட்டாது.
அர்விந்தின் அரசியல் வெற்றியை எதிர்நோக்கி, ஒரு பெரும் இளைஞர் கூட்டம் காத்திருக்கிறது. தில்லியின் மக்கள் கோபம், மேலும் மேலும் பெருகி நாடு முழுவதும் வந்து அடையும் என நம்பிக்கையுடன் அவர்கள் காத்திருக்கிறார்கள்.
இத்தனை நாட்கள், வெளியில் நின்ற படியே
இந்தக் குளம் நாற்றமடிக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தார் அர்விந்த் கேஜ்ரிவால்!
இப்போது துணிந்து குளத்தை சுத்தம் செய்ய உள்ளே இறங்குகிறார்.
மிகவும் கொடிய, கொழுத்த முதலைகள் குளத்தின் உள்ளே இருக்கின்றன அர்விந்த்.
துணிச்சலுடன் சமாளியுங்கள்.
எனது மனப்பூர்வமான வாழ்த்துகள்.

12 thoughts on “சாமானியர்களின் நாயகன்

 1. அருமையான கட்டுரை – ஆழமான் அலசல். எனக்கும் SMS மூலம் கருத்து கேட்டு, அதன் பின் முடிவெடுத்தது அவ்வளவு சரியெனத் தோன்றவில்லை.
  //இங்கே, ஊடகங்களின் அழுத்தத்திற்கும், அவை ஏற்படுத்திய மாயத் தோற்றத்துக்கும் அர்விந்த் கேஜ்ரிவால் பணிந்து விட்டார் என்றே கருதுகிறேன்.//
  இது 100% நிஜம். கட்டுரையின் ஒரு பக்கத்தில் கொஞ்சம் எச்சரிக்கை தொனி தென்பட்டாலும், கடைசியில் வாழ்த்தியிருக்கீங்க !! நல்ல விஷயம்.
  அரசியல் தெரிந்த மூத்த தலைவர்கள் யாரும் இல்லாமல் இருப்பது தான் ஆம் ஆத்மி கட்சியின் பலமும், பலவீனமும். நல்லது நடக்குமென நம்புவோம்.
  கட்டுரையில் போட்டிருக்கும் படம் – எங்கே பிடிச்சீங்க? புதுசா இருக்கு !!

 2. well said. Something must be done to Indian media .Very irritating and tiredsome to watch any news channel

 3. ஆழமான பார்வைகளுடனும், புரிந்துனர்வுகளுடனும் எடுத்து வைக்கப்பட்டிருக்கும் உங்கள் பதிப்பு.. சந்தேகத்துக்கு இடமில்லாத நடுநிலையான கட்டுரை..வாழ்த்துக்கள்… பொறுத்திருந்து பார்ப்போம் !! அரவித் கேஜ்ரிவால் இன் தனித்தன்மையை…ஜெய் ஹிந்த்..

 4. எளிமையான எழுத்து நடை மேலும் மேலும் படிக்க தூண்டுகிறது … கேஜ்ரிவால் அவசரப் பட்டுட்டார்னு நினைக்கிறேன் அல்லது காங்கிரசிடம் மாட்டிகிட்டார்னு நினைக்கிறேன் ,,, நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது அதைவிட கோ பட அஜ்மல் மாதிரி மாரிடுவாரோனுதான் பயமா இருக்கு

Comments are closed.