நடவு

நடவு

நடவு
நடவு

ஒரு நல்ல நாள் பார்த்து நடவுக்கான நாள் குறிக்கப் படும், அந்த நிமிடம் முதல் நாற்று நட்டு முடிப்பது வரை எனது நைனாவின் சிந்தனை, செயல் எல்லாமே நடவு குறித்துதான் இருக்கும்.
நெல் பயிரிடுவதற்கான முன்னேற்பாடு என்பது சில மாதங்களுக்கு முன்பாகவே திட்டமிடப்பட்டு, சந்தையில் நல்ல உழவு மாடுகள் வாங்குவதில் தொடங்கும். ஒவ்வொரு நடவுக்கும் புதிதாக ஒரு ஜோடி மாடு வாங்குவது நைனாவின் சென்டிமெண்ட்.
நல்ல விதையை தேடிச் சென்று, வாங்கி வந்து என் அம்மாவின் கையால் விதை நெல் விடச் செய்வார். பயிரிடப் போகும் நிலத்துக்கான தழை சத்துக்காக எங்கள் நிலத்தில் வெட்டியது போக, எங்கெங்கிருந்தோ தழைகளை வெட்டிக் கொண்டு வந்து சேர்ப்பார். எங்கள் மாட்டுக் கொட்டகை எருவே எப்படியும், ஐந்து லாரி லோடு வரும். இருப்பினும் அவர் மனசுக்கு எரு அடிப்பதில் மட்டும் சுலபத்தில் திருப்தி ஏற்பட்டு விடாது. அக்கம் பக்கம் கிராமங்களில் இருந்தெல்லாம் மாட்டு வண்டிகளில் எரு வாங்கி வந்து குவிப்பார்.
குறைந்த பட்சம் ஒரு வாரமேனும் ஏர் ஓட்டப் படும். வெட்டி வரப் பட்டிருந்த தழைகள், சேகரித்த எரு, வேப்பம் புண்ணாக்கு என மேலும் மேலும் கழனியில் போடப் பட்டு செறிவூட்டப் படும். நைனாவுக்கு திருப்தி ஏற்படும் வரை ஏர் ஓட்டி முடிக்கும் போது, புதிதாக மாடு வாங்கியது நல்லதுதான் எங்களுக்குத் தோன்றும். அப்படி ஒரு உழைப்பு அந்த மாடுகளுக்கு!
நடவில் அண்ட கழித்தல், பரம்பு அடித்தல் என இரு வேறு முக்கிய செயல்பாடுகள் உண்டு. தமிழர்கள் பல நூறு ஆண்டுகள் நெல் பயிரிட்டு பெற்ற அனுபவப் பாடம் அது.
மிகக் கச்சிதமாக வரப்புகளை வெட்டி எடுத்து கழனியில் போடுவது அல்லது தேவைப்படும் இடங்களில் கழனி மண் எடுத்து வரப்பினை வலுப் படுத்துவதான் அண்ட கழித்தல். காலம் காலமாக நெல் வயலுக்கான ஜீவனான வண்டல் மண்ணை வயலுக்குள்ளேயே பாதுகாத்து வைப்பதற்காக செய்யப் படுவது இது. இல்லையெனில், எங்கேனும் பலவீனமான இடத்தில் உடைத்துக் கொண்டு நீரோடு சேர்த்து, வண்டல் மண்ணையும் வெளியேறிவிடும்.
அடுத்து பரம்பு அடித்தல். நெல் வயலில் நீரினை ஒரே அளவில் தேக்கி வைக்க வேண்டுமானால், கழனி எந்தப் பக்கமும் மேடு பள்ளமாக இல்லாமல், சமமாக இருக்க வேண்டியது அவசியம். இப்படி இருந்தால்தான் குறைந்த அளவு நீரேயாயினும், கழனியின் அனைத்து நெற் பயிருக்கும் சரி சமானமாக பகிரப் படும். பரம்பு அடித்தல், அந்தக் கால பொறியியல் தொழில்நுட்பம். இதற்கு சரிநிகர் தொழில் நுட்பம் இன்னமும் நமக்கு வாய்க்கவில்லை என்றே கருதுகிறேன்.
நாற்றாங்காலில் நாற்று எடுப்பதற்கென பயிற்சி பெற்ற ஆட்கள் முதல் நாளே வந்து நாற்று எடுத்து, கட்டி வைப்பார்கள். இப்பவும் இந்த வேலை செய்பவர்கள் மீது எனக்கு பெரும் அனுதாபம் உண்டு. மருந்துக்கும் உலர்ச்சி இல்லாத ஈர வேலை இது. காலை முதல் மாலை வரை சேற்றிலேயே உட்கார்ந்து நாற்று எடுத்து விட்டு வெளியே வரும் போது, வேற்று கிரகத்திலிருந்து வருவதைப் போல தோற்றமளிப்பார்கள்.
நடவு நாளுக்கு முதல் நாள் இரவே எங்கள் வீட்டில் சமையல் வேலைகள் தொடங்கி விடும். காலையில் சமைத்து வைத்த சாப்பாட்டுடன், நாங்கள் நிலத்துக்கு சென்று சேரும் போது கட்சித் தலைவர் கூட்டத்துக்கு லாரிகளில் கொண்டு வந்து இறக்கி விட்டதைப் போல எங்கு பார்த்தாலும் பெண்கள் மயமாக இருக்கும். ஈசான்ய முலையில் என் அம்மா இறங்கி முதல் நாற்றை நட, உடன் அத்தனைப் பெண்களும் நேர் கோட்டில் வரிசையாக நாற்று நடத் தொடங்குவார்கள்.
நைனா மிகவும் உற்சாகமாக இருக்கும் நாட்கள் என்றால், அது இந்த நடவு நடும் நாட்கள்தான். ஒவ்வொரு நாளும் ஒரு திருவிழாப் போல, தினம் தினம் வகை வகையாக வீட்டில் சமைக்கச் சொல்லி நடவு ஆட்களுக்கு பறிமாறச் செய்வார். சேற்று வாசத்துடன் ஆண்களும் பெண்களும் சுற்றிலும் உட்கார்ந்து கொள்ள, நடுவில் நைனாவுடன் சேர்ந்து நாங்களும் அமர்ந்து உண்போம். உண்மையில், தினமும் நூறு பேருக்கேனும், வேறு ஆள் துணையின்றி அம்மா மட்டுமே சமையல் செய்து போட்டது ஒரு தனி சாதனை.
நாற்றாங்காலில் இருந்து நாற்றுக் கட்டுகளை தூக்கிச் சென்று நடவு கழனியில் சேர்க்கும் வேலையை நைனா என்னை செய்யச் சொல்வார். உடம்பு முழுக்க சேறாகும் வேலைதான். ஆனாலும் உற்சாகமாக செய்வேன். இரண்டு நாள் நடவு முடிந்தவுடன் நைனா எனக்கு பத்து ரூபாய் கொடுப்பார். சில சமயம் அதற்கு மேலும் கிடைக்கும். அருணா ரெஸ்டாரண்ட் பேப்பர் ரோஸ்ட் சாப்பிட்டு விட்டு நெய் வாசனையுடன் ஏப்பம் விட்டுக் கொண்டே டி.ராஜேந்தர் படம் பார்த்ததெல்லாம் பேரனுபவம்.
4
விவசாயத்தில் எனக்கு எப்போதுமே உற்சாகம் தரும் விஷயம், புல் பூண்டு முளைத்த ஒரு கரம்பு வயல், பயிர் ஏற்றுக் கொண்டு மெல்ல எப்படி உரு மாறுகிறது என்பதே. ஒவ்வொரு கட்டத்திலும் அந்த வயலின் நிறம் சேறான கருஞ்சிவப்பு நிறம், நாற்றாங்காலின் அடர் பச்சை, புது நடவின் இளம் பச்சை, சற்றே வளர்ந்த கரும் பச்சை, நெல் மணியேறிய இள மஞ்சள், முழுவதுமாக வைக்கோல் நிறமேற்று கழனியில் தலை சாய்ந்து கிடக்கும் சந்தன நிறம் என மாறிக் கொண்டே வரும் பேரதிசயமே என்னை எப்போதும் ஈர்த்து வைத்திருக்கிறது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இதற்குப் பின்னால் இருக்கும் மனித உழைப்பு ஈடு இணையில்லாதது. நம் விவசாய வேலைகள் அனைத்துமே எப்போதும் மனித உழைப்பைக் கோரிக் கொண்டே இருக்கும் வகையில் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. பெரும் மக்கள் தொகை கொண்ட தேசத்தில் இது மிகவும் நியாயமான வடிவமைப்புதான். நெற்பயிர் இடுவதற்காக ஏர் ஓட்டிய மாடுகளுக்கென போரடித்து வைக்கும் வைக்கோல் முதல் கதிர் அறுக்கும் பெண்களுக்குக் கூலியாக படியளந்து விடும் நெல் வரை உழைப்பின் பலனாக அனைவருக்கும் தகுந்த ஒன்றினை தருகிறது சமூகத்துடன் இயைந்த நமது விவசாயம்.
பல ஆண்டுகளாக ஒரே வார்ப்பில் (டெம்ப்ளெட்டில்) நான் பார்த்து பழகிய நெற்பயிரிடுவதற்கான இந்த ப்ராஸஸ் மேனேஜ்மெண்ட் (Process Management) இப்போது வெகுவாக மாறி வருகிறது. நாற்றுக்கான இடைவெளி முதல் நெற்பயிருக்கான வயது வரை எல்லா மட்டத்திலும் எத்தனையோ மாற்றங்கள். எல்லா மாற்றங்களுக்கும் தலையாயக் காரணமாக இருப்பது ஆள் பற்றாக்குறை என்பதை நான் உணர்கிறேன்.
அறுவடைக்கு கதிர் அரிவாளுடன் ஐம்பது ஆட்களேனும் குறைந்த பட்சம் தேவைப் பட்ட காலம் போய், இப்போது பெரிய சக்கரத்துடனான ஒரு இயந்திரம் வயலில் ஒரு புறம் இறங்கி மறு புறம் ஏறிச் செல்லும் போது, கதிரில் இருந்த நெல்மணிகள் எல்லாம் கதிர் அறுக்கும் இயந்திரத்தினுள் பத்திரமாக இருக்கிறது. வைக்கோல் ஒரு புறம், நெல் மறு புறம் என பிரித்துக் கொடுத்து விட்டு சில மணி நேரங்களில் இயந்திரம் சென்று விடுகிறது. பிறகு, வயலில் இறங்கி உற்றுப் பார்த்தால் ஒரு சில நெல் மணிகள் கூட வயலில் தங்கியிருப்பதில்லை.
கை அறுவடையின் போது, இயல்பாக பூமியில் சிதறி விழும் நெல்மணிகள்தாம் இத்தனை நாட்கள் மண்ணுக்கு ஜீவனாய் இருந்த நுண்ணுயிர்களுக்கான பங்கு என்பார்கள்! அந்த எளிய ஜீவராசிகளின் உரிமைப் பாகத்தையும் சேர்த்து நாம் எடுத்துக் கொள்வதற்குப் பெயர் புதிய தொழில்நுட்பம். ஆனால், அறுவடைக்கான ஆள் பற்றாக்குறை, இந்த தொழில்நுட்பத்தை தள்ளி விடமுடியாமல் அள்ளி எடுத்துக் கொள்ள வைக்கிறது.
மக்கள் தொகை பெருகிக் கொண்டும், விவசாய நிலப் பரப்பு குறுகிக் கொண்டும் போகும் இந்தக் காலத்தில் எப்படி இத்தனைப் பெரிய ஆள் பற்றாக்குறை வந்தது? காலம்,காலமாக விவசாயத்தை வாழ்வியல் முறையாக நடத்தி வந்த அந்த எளிய மனிதர்கள் எங்கே? ஜமீந்தார்களும், பெரும் நிலச் சுவாந்தார்களும் தங்களின் லாபத்தைப் பெருக்கிக் கொள்ள அந்த மனிதர்களின் கூலியை குறைக்கத் துவங்கியதில் அந்த முதல் புள்ளி இருக்கலாம்.
இப்போது அதே பெரும் நிலச் சுவாந்தார்கள், பராமரிப்பற்ற தங்களின் பெரிய வீடுகளில் அமர்ந்து கொண்டு பழங்கதைகள் பேசிக் கொண்டிருப்பதை காண்கிறேன். அவர்களின் குடும்பத்தில் அடுத்த தலைமுறை ஒன்று கூட கிராமத்தில் மிச்சமின்றி அனைவரும் பெரு நகரங்களில், பரம்பரை அடையாளமின்றி தொலைந்து போயிருப்பதையும் காண்கிறேன். விவசாயம் என்னும் பொன் முட்டையிடும் வாத்தை அறுத்துத் தள்ளியாகி விட்டது.
பல வருடங்கள் இடைவெளிக்குப் பின்னால், என்னளவிலேனும் இழந்து போன சில சந்தோஷத்தை மீட்டெடுக்கலாம் என்றெண்ணி வரும் போது இந்த மாற்றங்கள் எல்லாம் நிதர்சனமாய் முகத்தில் அறைகிறது. லாபம் எதுவும் எதிர்பாராமல், இரசாயன உரங்கள் பயன் படுத்தாமல், இயற்கை வேளண் முறையில் மறந்து போன சிறு தானிய வகைகள், காய்கறிகள், கீரை வகைகள் அவ்வப்போது வீட்டுக்கான நெல் என பயிர் செய்வதாக திட்டம்.
நாற்று வயல்
எனது கண் முன்னே, நாளை நடவிற்கான நாற்றுகள் பிடுங்கி கட்டு கட்டி வைக்கப் பட்டுள்ளது. தற்போதைய முறையில் நடவுக்கு மட்டுமே ஆட்கள் தேவைப் படுகிறார்கள். களை எடுக்க இயந்திரமும், அறுவடைக்கான இயந்திரமும் முழு அளவினில் பயன்பாட்டுக்கு வந்து விட்டது. நடவுக்கும் இயந்திரம் வந்துள்ளதாகவும், அதற்கேற்றவாறு தனி வட்டுகளில் நாற்று விட்டால், அதை அப்படியே அந்த இயந்திரம் கொண்டு சென்று வயலில் சீரான இடைவெளியில் விதைத்து விடும் என்றும் சொல்கிறார்கள்.
கண்டிப்பாக, அடுத்த முறை அப்படித்தான் நாற்று விட்டு, இயந்திரம் மூலமே நடவு செய்ய வேண்டும் என்று எண்ணியுள்ளேன். அப்படியாகின், கழனியில் நாற்றுக் கட்டுகள் கட்டி வைக்கப் பட்டிருக்கும் இந்தக் காட்சியை காணும் கடைசித் தலைமுறை நான்.
இயந்திரம் மூலம் நட்டு, இயந்திரம் மூலம் களை எடுத்து, இயந்திரம் மூலமே அறுவடையும் செய்து பெறும் நெல்லை ஏதேனும் இயந்திரமே உண்டு தீர்ப்பதுதான் முறை. அதுவே நடந்தேறிக் கொண்டிருக்கிறது.
எந்த கட்டத்திலும் விவசாயியின் கை படாத, மனிதத் தன்மை நீர்த்துப் போன தற்கால விவசாயத்தை பார்க்காமலே நைனா இறந்து போனதை எண்ணிப் பார்த்தால், சற்று நிம்மதியாகவே இருக்கிறது.

18 thoughts on “நடவு

 1. சுவாரஸ்யமான பதிவு
  நிறத்தை பற்றி சொல்லிய வரிகள் அருமை
  முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
  விவசாயி கருணா வாழ்க…..

 2. நல்ல பதிவு விவசாயம் பற்றி தெரிந்து கொள்ளலாம்

 3. உங்களுடைய ஒவ்வொரு கட்டுரையின் மூலமும் எங்களை ஆச்சர்யப் படுத்திக்கொண்டே இருக்கிறீர்கள் !! படிக்கப் படிக்க, விவசாயம் என்பது ஒரு நாகரீகத்தின் / தலைமுறையின் எவ்வளவு முக்கியமான பகுதி என்பது புரிகிறது !!
  கீழ்க்கண்ட வரிகள் சோகம் எனினும் – இதுவே இன்றைய நிதர்சனம் !!
  //
  இயந்திரம் மூலம் நட்டு, இயந்திரம் மூலம் களை எடுத்து, இயந்திரம் மூலமே அறுவடையும் செய்து பெறும் நெல்லை ஏதேனும் இயந்திரமே உண்டு தீர்ப்பதுதான் முறை. அதுவே நடந்தேறிக் கொண்டிருக்கிறது.
  //

 4. இது குறித்து தொடர்ந்து எழுதுங்கள்.
  இளைஞர்களிடையே விழிப்புணர்வு பெருக வேண்டும்.
  சமீபத்தில் படித்த ஒன்று ஞாபகம் வருகிறது.
  உங்களுடைய வாழ்க்கையில் ஒரே முறையாவது மருத்துவர், பொறியாளர்களின் உதவி தேவைப்படும்.
  ஆனால் உங்களது ஒவ்வொரு நாளும் விவசாயியின் உதவியில்லாமல் முடியாது.

 5. உங்கள் கட்டுரையை படிக்கும்போது சிறு வயதில் எங்கள் ஊரில் நெல் நடவு செய்யும்போது நின்று வேடிக்கை பார்த்த ஞாபகம் பசுமையாய் வந்து போனது…..அருமையான பதிவு…..

 6. //இயந்திரம் மூலம் நட்டு, இயந்திரம் மூலம் களை எடுத்து, இயந்திரம் மூலமே அறுவடையும் செய்து பெறும் நெல்லை ஏதேனும் இயந்திரமே உண்டு தீர்ப்பதுதான் முறை. அதுவே நடந்தேறிக் கொண்டிருக்கிறது. //
  அருமை!
  //லாபம் எதுவும் எதிர்பாராமல், இரசாயன உரங்கள் பயன் படுத்தாமல், இயற்கை வேளண் முறையில் மறந்து போன சிறு தானிய வகைகள், காய்கறிகள், கீரை வகைகள் அவ்வப்போது வீட்டுக்கான நெல் என பயிர் செய்வதாக திட்டம்.//
  மனமார்ந்த வாழ்த்துகள் :-)

 7. பழய நினைவுகளுக்கு கொண்டு சென்று விட்டீர்கள்.
  அருமையான பதிவு.வயக்காடு என்றால் என்ன என்று
  கேட்கும் தலைமுறை படிக்க வேண்டிய கட்டுரை.

 8. ரசிகரய்யா நீங்கள்! நடவு பற்றி என்ன அற்புதமான ஒரு பதிவு! பள்ளி பாடப் புத்தகத்தில் வைக்க வேண்டிய கட்டுரை இது. பிள்ளைகள் சுவாரசியமாகப் படிப்பார்கள். நூறாண்டு காலம் நோய் நொடியின்றி வாழ வாழ்த்துக்கள் :-)
  amas32

  1. உங்கள் ஆசிகளுக்கு மிக்க நன்றி அம்மா! உங்களின் வாசிப்பும், ஈடுபாடும், திறந்த மனதுடன் விஷயங்களை அணுகும் முறையும், உடனுக்குடன் அனைவரையும் பாராட்டும் பண்பும் என்னை எப்போதுமே வியக்க வைக்கும் விஷயம்.
   மீண்டும் நன்றி!

   1. நீங்கள் சொல்லிய அனைத்து மாண்புகளும் உங்களிடையேயும் உள்ளன என்பது எங்களையும் வியக்க வைக்கிறது!

 9. Was just imagining how this article would have sounded if reminisced by a second generation city employed youth whose parents were one of those who came in the lorries!
  Instead of farm lands being sold as “residential properties in Tindivanam, very near to chennai” , I would be happy if farming is done with machines.
  Suganthi S

 10. Very nicely written sir… while reading this, I literally went back to my life during school time… I did all these while I was studying in school from 1 st t0 12th. My father/grandfather woke me up early in the morning at 4.00am and they leave me only at 8.00am. Then I have to get ready and take my “Mancha Pai” and go to school. Once I am back in the evening, again go to field and took care of Cows and Bulls. Now sitting and writing this from my office cabin with all the comforts… but I don’t think I am enjoying as I was in my very small village Nandimangalam, near Kanji. Still, I make sure to get rice from our field and tell my children’s that this came from our own field. I am taking care of the field through my relatives now, but not sure what will happen to this land in the next generation… it makes me worry a lot. At times, I keep telling the importance of agriculture, our old house/land in my village to my children’s, sometimes they listen, sometimes they don’t. But it’s my duty to make them understand the root.
  Thanks SKP Karuna sir, for making me to look back my golden days and it really made me happy…

 11. வணக்கம்,
  இது பற்றியெல்லாம் சிறு நெல்மணியளவு கூட ஏதும் தெரியாமல் சென்னையில் வளர்ந்தவன். கொடுமை என்னவென்றால் இளமறிவியல் தாவரவியல் படித்தவன், ஆனால் நெற்பயிருக்கான முறையோ காலமோ எதுவும் தெரியாது. இன்றளவும் உண்ணும் கீரைகளைப் பிரித்தரியத் தெரியாது. நம் கல்விமுறையின் அவலத்திற்கான எடுத்துக்காட்டு.
  பள்ளியிலேயே ஒருமுறை எல்லோருக்கும் எடுக்கவேண்டிய பாடம் விவசாயம். ஒரு வருடம் நெல், பிறகு மா, கீரை இப்படி 6 லிருந்து 10 வரை நேரடியாக அழைத்துச் சென்று விளக்கி இருந்தால் விவசாயிகளுக்கு மதிப்பு கூடியிருக்கும்.
  நீங்கள் நல்ல முறையில் கதை படிக்கும் ஆர்வத்தில் நடவு பற்றி மட்டுமே தெரிவித்தீர், உங்கள் நடையில் அடுத்து பராமரிப்பு முதல் அறுவடை வரை எழுதி எங்களை மகிழ்விக்கலாம்.
  நல்ல பதிவு.. நன்றி..
  அன்புடன்
  புகழ்.

 12. பொறுமையாக வாசித்தேன். வார்த்தைகள் ஒவ்வொன்றும் அருமை.
  நான் திருநெலவேலயில் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவன். அங்கு வேளாண் ஆராய்ச்சிப்பண்ணை உண்டு. SCHOOLக்கு போக ரோடு இருந்தாலும் நாங்கள் வயல் வரப்பிலேயே செல்வதுண்டு. 10 வருடம் கழித்து ஊருக்கு போய் பாரத்தபோது நான் பாரத்த, விளையாடிய வயல் வெளிகளில் மால்கள், பெரிய கட்டிடங்கள். விவசாயம் சரிப்பட்டு வரவில்லை என்று பலர் நிலத்தை விற்றுவிட்டார்கள்.
  COMPUTER மூலம் கடலைப்பருப்பு வரும் என்றால் நாம் இதை அனுமதிக்கலாம். UNCERTAINTY prevails. மழையை நம்பியிருக்கோம். பொய்க்கிறது. விவசாயிக்கு உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை. கொடுக்கப்படவேண்டும்
  V.SRIDHAR ([email protected])

 13. ஒவ்வொரு பதிவிலும் உங்கள் தந்தையின் மீதான உங்கள் பெரு மரியாதையும் அன்புமே வெளிப்படுகிறது … வரமான வாழ்வு

Comments are closed.