நுனிக் கரும்பின் ருசி.

நுனிக் கரும்பின் ருசி

நாற்பது வயது வரை எந்த முட்டாள்தனமும் செய்யாமல் ஒழுங்காகத்தான் இருந்து வந்தேன். பிறகுதான், புத்தித் தடுமாறி எழுத ஆரம்பித்தேன். வாசிப்புக்கு சாதாரண மனநிலை போதுமானது. எழுதுவதற்கு கொஞ்சம் அசாதாரண மனநிலை தேவைப்படும் என்பதைக் கூட எழுதத் துவங்கிய பிறகுதான் முழுவதுமாக உணர்ந்தேன்.
இணையத்தில் எழுதப் படுகின்ற தமிழ் கட்டுரைகள், கதைகள் பற்றி மிகத் தாமதமாகவே தெரிந்து கொண்டேன். பிறகு, தமிழ் வலைத் திரட்டி ஒன்றினை கண்டு பிடித்து, அதன் மூலமாக இணையத்தில் மிகச் சுதந்திரமாக எழுதிக் கொண்டிருந்த பலரை படிக்க ஆரம்பித்தேன். சினிமா விமர்சனம் முதல் கணிணியில் தமிழ் மென்பொருட்கள் வரை பல்வேறு விதமான செய்திகள் என்னை வந்தடைந்து, எப்போதுமே என்னை ஆச்சரியத்திலேயே வைத்திருந்த காலம் அது.
அதே காலகட்டத்தில், ஜெயமோகன் போன்றவர்கள், தனக்கான வலைதளங்களைத் துவங்கி, முழுக்க அந்த வலைதளத்திலேயே தங்களின் கதைகளையும்,கட்டுரைகளையும் எழுதத் துவங்கினர். மெல்ல, மெல்ல இணையத்தில் எழுதுவதன் பல்வேறு சாத்தியங்கள் எனக்கு பிடிபடத் துவங்கியது.
என்னைப் போன்ற எண்பதுகளில் வாசிக்கத் துவங்கியவர்களுக்கு எழுத்து என்பது ஏறக்குறைய கல்வெட்டில் அடிக்கப் பட்டது போன்ற சாஸ்வதமான ஒன்று. ஒரு எழுத்தாளர் தனது மிகச் சிறந்த கதைக்கான எதிர்வினையை, அச்சில் வெளிவந்த சில மாதங்களுக்குப் பின்பு பெறத் துவங்கி, பல வருடங்கள் வரை தொடர்ந்து பெற்றுக் கொண்டே இருப்பார். ஏதேனும் ஒரு கதையைப் படித்து வியந்துபோய், அந்த எழுத்தாளரைப் பாராட்டி ஒரு கடிதம் போட்டீர்களேயானால், பல சமயங்களில் அந்த எழுத்தாளரே உங்களைத் தேடி வந்து பேசி விட்டுச் சென்ற வசந்த காலம் அது.
இணையம் வந்த பிறகு, எழுத்தாளருக்கும் வாசகனுக்குமான இடைவெளி ஏறக்குறைய இல்லாமலேயே போயிற்று! எழுத்திற்கான எதிர் வினை அடுத்த நொடியே வந்து விழத் துவங்க, எழுதுவது என்பது ஒரு போதை வஸ்துவாகி விட்டது. தனது எழுத்து ஏதேனும் ஒரு இடத்தில் அச்சில் பிரசுரமானால்தான் எழுத்தாளன் என்ற நிலை மாறி, தனக்குத் தானே பிரசுரம் செய்யத் தொடங்கியக் காலம்தான் நம் தமிழ் எழுத்துச் சூழலில் உண்மையாகப் புரட்சி ஏற்பட்டக் காலம்.
மெல்ல, மெல்ல எனக்கும், இந்தச் சுதந்திரம் பிடித்துப் போகத் துவங்கியது. நாம் நினைப்பதை எழுதலாம். நமது வலை தளத்திலேயே பிரசுரித்து விடலாம். எப்போது வேண்டுமானாலும் பொருட் பிழை, சொற் பிழைத் திருத்திக் கொள்ளலாம். பிடித்தால் வைத்துக் கொள்ளலாம். பிடிக்க வில்லையென்றால் நீக்கி விடலாம். எல்லாவற்றையும் விட முக்கியமானது, நாம் எழுதியதை பிரசுரிக்கக் கேட்டு யாரையும் கெஞ்ச வேண்டாம். (படிக்கச் சொல்லித்தான் அவ்வப்போது கெஞ்ச வேண்டும்!). இணையத்தின் இந்தச் சுதந்திரம் இன்னமும் என்னை ஈர்த்து வைத்துக் கொண்டிருக்கிறது.
10.10.10 என்ற வசீகரமானத் தேதியொன்றில் எனக்கான வலைதளத்தைத் துவக்கினேன். எனது நண்பர் பிரபுராஜ், உடன் அமர்ந்து தொழில் நுட்ப உதவிகள் செய்து தர, நண்பர் எழுத்தாளர், பவா செல்லதுரை என்னைக் குறிப்பிட எப்போதும் பயன்படுத்தும் எஸ்கேபி கருணா என்ற பெயரையே, எனது இணையப் பெயராகப் பதிந்து கொண்டேன். அறிமுகப் பத்தி ஒன்று எழுதி விட்டு, உற்சாகமாக வீடு திரும்பிய பின்பு, தொடர்ந்து என்ன எழுதலாம் என்று சிந்திக்கத் துவங்கினேன். அப்படியே ஆறு மாதம் சென்று விட்டது.
ஒரு நாள், நண்பர் ஷைலஜா மொழி பெயர்த்த நடிகர் மம்முட்டியின் வாழ்வனுபவங்களைப் பற்றிய புத்தகம் படித்துக் கொண்டிருக்கும் போது, எனது முதல் கட்டுரைக்கான பொறி எனக்குக் கிடைத்தது. நிழல் மரியாதை என்று அதை ஒரு கட்டுரையாக்கி பவா (செல்லதுரை) விடம் அனுப்பி வைத்தேன். படித்துப் பார்த்து உடனே அதை வலைதளத்தில் வெளியிடச் சொன்னார்.
மிகுந்த தயக்கத்துடனும், கூச்சத்துடனும் வெளியிட்டேன்.
அந்தக் கட்டுரைக்கு எனக்கு கிடைத்த பாராட்டுகள் உண்மையிலேயே, ஒரு மாதத்திற்கு என்னை கால் தரையில் படாமல் மிதக்க வைத்தது. நண்பர்கள் ஷாஜி, எஸ்.ராமகிருஷ்ணன், நா.முத்துகுமார், உயிரெழுத்து ஆசிரியர் சுதிர் செந்தில், முருகேச பாண்டியன் என பல நண்பர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள். குறிப்பாக, எனது பிரியத்திற்குரிய கார்ட்டூனிஸ்ட் மதன், அதைப் பாராட்டி பின்னூட்டம் இட்டு, தொலைபேசியிலும் சிலாகித்துச் சொன்னார். எல்லாவற்றுக்கும் மேலாக, நண்பர் ஜெயமோகன் அந்தக் கட்டுரையைக் குறிப்பிட்டு, அவரது வலை தளத்தில் பகிர்ந்த பின்பு, முதல் கட்டுரையிலேயே, ஒரு வெளிச்சக் கீற்று என் மீது கவிழ்ந்தது.
சில நேரங்களில் தொடந்தும், சில நேரங்களில் தோன்றும் போதும் என அவ்வப்போது பல கட்டுரைகளை எழுதி வந்தேன். சில கட்டுரைகள் எனக்கே பிடித்துப் போனதும் உண்டு. எழுதத் தொடங்கிய முழு சந்தோஷத்தையும் அடையும் விதமாக, எனது ஆதர்ச எழுத்தாளரான அ.முத்துலிங்கம் என்னுடைய சில கட்டுரைகளைப் பாராட்டி எனக்கு மின்னஞ்சல் எழுதினார். பல இரவுகள் மீண்டும், மீண்டும் அதைப் படித்துக் கொண்டே இருந்தேன்.
சரி! போதும்! கட்டுரைக்கான (நீண்ட) முன்னோட்டம் கொடுத்தாயிற்று. விஷயத்திற்கு வருகிறேன்.
சில மாதங்களுக்கு முன், ஒரு கட்டுரையை நகைச்சுவையாக எழுதத் துவங்கி, அதில் சரி விகிதமாக புனைவும் கலந்து போய், ஒரு வேளை இது சிறுகதையோ என்று நானே கருதத் துவங்கும் வகையில் ஒன்றினை எழுதி முடித்தேன். வழக்கம் போல், கருத்துக்காக பவாவிடம் அனுப்பி வைத்து விட்டு, அதை மறந்தும் போனேன். ஒரு நாள், பவா என்னை அழைத்து, அதை வலைதளத்தில் போட்டி விடாதீர்கள்! ஆனந்த விகடனுக்கு அனுப்பி வைத்துள்ளேன்! என்று சொன்னார். எனக்கு வியர்த்துப் போய் விட்டது. பவாவின் மீது கடும் கோபம் கூட வந்தது.
என்ன பவா? எப்படி செய்து விட்டீர்களே? என்று கேட்டதற்கு, அதில் ஒரு நல்ல சிறுகதை இருக்கு கருணா! விகடனில் தேர்வானால் சரி! இல்லையென்றால் என்ன நட்டம்? வழக்கம் போல உங்கள் வலைதளத்தில் போட்டு விடுங்கள். இதற்கு ஏன் பதட்டம் என்று சொல்லிச் சென்று விட்டார்.
நான் அச்சப்பட்டது போலவே, இப்போது அந்தக் கதையும் ஆனந்த விகடனால் தேர்வு செய்யப்பட்டு இன்று பிரசுரமாகி விட்டது.
ஒரு இருபது வருடங்களுக்கு முன்பு இது நிகழ்ந்திருந்தால், இதுதான் எனது வாழ்வின் உச்சபட்ச சாதனை என்று சொல்லியிருப்பேன். இடைப்பட்ட இந்தக் காலத்தில், பல்வேறு தளங்களில் தடம் பதிக்க காலம் எனக்கு பல வாய்ப்புகளைக் கொடுத்துள்ளது. இருப்பினும் கூட, ஒரு தமிழ் இலக்கிய வாசகனாக, ஒரு கத்துக் குட்டி எழுத்தாளனாக, நான் எழுதிய முதல் கதையொன்று, மதிப்பு மிகுந்த பத்திரிக்கையான ஆனந்த விகடனில் பிரசுரம் ஆவது எனக்கு பெரும் மகிழ்ச்சியினையும், மெல்லிய கர்வத்தையும் அளிக்கிறது.
விகடனில் வெளி வரப் போகிறது எனறு முன்னரேத் தெரிந்திருந்தால், இன்னமும் மெனக்கெட்டு அழகாக எழுதியிருக்கலாமே என்று மனசு கிடந்துத் தவிக்கிறது. இப்படித்தான், மற்ற எழுத்தாளர்களுக்கும் தோன்றுமா எனத் தெரியவில்லை.
இது ஒரு நுனிக் கரும்பின் ருசி! அடிக் கரும்பைப் போல, அப்படி ஒன்றும் பெரிய சுவை இருக்காது!ஆனால், ஒரு நுனிக் கரும்பிலிருந்தும் கூட, இன்னொரு அடிக் கரும்பு வரும் தானே. நானும் கூட, எத்தனையோ அடிக் கரும்புகளின் நீட்சிதானே! இந்த சந்தோஷத் தருணத்தில்,நான் நன்றியுடன் நினைத்துப் பார்க்க பலர் இருக்கின்றனர்.
முதலில் எனது வாழ்நாளில் என்றும் எனக்கு ஆதர்சமாக இருக்கும் எழுத்தாளர் சுஜாதா.
போண்டா, வடை கட்டிக் கொடுக்கும் தாள்களைக் கூட கீழே போடாமல், அதில் அச்சிடப் பட்டிருந்தவற்றை முழுவதுமாக வாசிக்கும் பழக்கம் இயல்பாகவே என்னிடம் இருந்தது. ஆனால், எதையெல்லாம் வாசிக்க வேண்டும் என்று என்னை (போன்ற பல வாசகர்களையும்) நெறிப் படுத்தி, எனது கரம் பிடித்து தமிழ் இலக்கியத்தினுள் அழைத்து சென்றது சுஜாதாதான்.
அவர் சுட்டிக் காட்டிய பின்புதான் ஆத்மாநாம் படித்தேன். கி.ராவின் கள்ளிக்காட்டு எழுத்துகளையும், சுந்தரராமசாமியின் புளியமரத்தின் கதையையும், ஜி.நாகரஜனையும், அசோகமித்திரனையும் தெரிந்து கொண்டேன். இப்படி, வண்ண தாசன், வண்ண நிலவன், முதல் ஆதவன் தீட்சண்யா, நா. முத்துகுமார் வரை அவர் சொல்லித்தான் படித்தேன். தமிழின் மிகச் சிறுகதைகளில் ஒன்று ஜெயமோகன் எழுதிய மாடன் மோட்சம் என்பது அவர் பாராட்டி எழுதியப் பிறகுதான் எனக்குத் தெரிய வந்தது.
எனது நண்பர்களுக்கு மட்டுமாக எழுதிக் கொண்டிருந்த என்னை, ‘சுஜாதாவின் ஆட்டோகிராஃப்’ என்றொரு அவரைப் பற்றியக் கட்டுரைதான், பரந்து பட்ட அவரின் வாசகர்களுக்கிடையே கொண்டு சேர்த்தது. தனது தனித்துவமான தமிழ் நடையினையும், தான் வாசித்து மகிழ்ந்த உலக இலக்கியங்களையும், அவரது வாசகர்களின் ஆன்மாவில் சேர்த்து விட்டு சென்றிருக்கிறார் சுஜாதா. இன்று அவர் இருந்திருந்தால், அவரிடம் சென்று சொல்லியிருப்பேன்!
சார்! உங்களிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய ஒரு வாசகன், இன்று ஆனந்த விகடனில் சிறுகதை எழுதியுள்ளான் என்று!
அடுத்து, எனது நண்பர்கள் பவா செல்லதுரையும், ஷைலஜாவும். நான் என்ன எழுதினாலும், இந்தத் தம்பதிகள் முதலில் படித்துப் பார்த்து கருத்து சொன்ன பிறகுதான், வெளியிடுவது என்ற ஒரு வழக்கம் இயல்பாகவே அமைந்து விட்டது. அதுவும், ஷைலஜா மிகவும் கறாராக தமது மதிப்பீடுகளை சொல்லி விடுவது, எனக்கு எல்லா விதத்திலும் உதவியாகவே இருக்கிறது.
என்னை எழுதத் தூண்டுவது, எழுதியதைப் படித்து மனம் திறந்து பாராட்டுவது, சிரமம் பாராமல் சில முக்கிய கட்டுரைகளுக்கு ஒற்றுப் பிழை முதல் எல்லாவற்றையும் சரி பார்ப்பது, இன்னமும் என்னை பல நண்பர்களிடையே கொண்டு சேர்த்துக் கொண்டிருப்பது, நான் எழுத இன்னும் பல அனுபவங்கள் என்னிடம் உண்டு என்று, திரும்பத் திரும்ப என்னிடம் சொல்லி, என்னை நம்ப வைப்பது என பல்வேறு வடிவங்களில் எனது நண்பர் பவா செல்லதுரையின் தாக்கம் என் மீது முழுவதுமாக வியாபித்துள்ளது! இது குறித்து, எப்போதுமே எனக்கு ஒரு பெருமிதம் உண்டு.
சமீபகாலங்களில், சமூக வலைதளங்களில் எனக்குப் பல புதிய நண்பர்கள் கிடைத்துள்ளனர். என்னிலும் நிறைய வயது குறைந்த இந்த இளைஞர்களின் உற்சாகம் அவ்வப்போது என்னையும் பற்றிக் கொள்வது உண்டு. சிறிய வயதினில், குடும்பப் பொறுப்புகளை முழுவதுமாக ஏற்றுக் கொண்டு, தங்களையும் வாசிப்புத் தளங்களில் நிலை நிறுத்திக் கொண்டிருக்கும் இவர்களும் கூட, நான் சமீபத்தில் நிறைய எழுதுவதற்கு ஒரு முக்கிய காரணம். அத்தகைய இளம் நண்பர்களுக்கும் எனது நன்றி.
ஒரு முறை நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் என்னிடம், கருணா! உங்களுக்கு எழுதுவது என்பது இயல்பாக வருகிறது என்று சொன்னார். உண்மைதான்! பல ஆண்டு கால தொடர்ந்த வாசிப்பே எனக்கு அந்தத் தகுதியை தந்துள்ளதாக நம்புகிறேன். எதையேனும் எழுதலாம் என்று எனது மேக் ப்ரோ மடிக் கணிணி முன் அமர்ந்து, தட்டச்சு செய்யத் துவங்கினால், எனது உலவி (Browser) தொடர்ந்து நான் எழுத எண்ணும் வார்த்தைகளை, முதல் எழுத்திலேயே கண்டு கொண்டு வருகிறது. கணிணிக்கும் எனக்குமான உளவியல் புரிதல் எனக்கு வியப்பாக இருக்கிறது. இது எத்தகைய கட்டுரைகளையும் அதிகபட்சம் இரண்டு, மூன்று மணி நேரத்தில் எழுதி முடிக்க எனக்கு உதவுகிறது.
இதில், இன்னொரு அபாயமும் இருப்பதை நான் உணர்கிறேன்.
எழுத்தாளரும், நண்பருமான திரு. நாஞ்சில் நாடன் ஒரு முறை எங்கோ இப்படி எழுதியுள்ளார்.
‘பத்து லட்சம் வார்த்தைகள் கொண்ட எனது தமிழ் மொழியில், வக்காளி வெறும் நூற்றைம்பது வார்த்தைகள் தெரிந்தவனெல்லாம் எழுத்தாளன் என்று எழுத வந்து விட்டார்கள்”
இது என்னை(யும்)க் குறிப்பிடுவதாகவே நான் எடுத்துக் கொள்கிறேன். எழுதுவதற்கு தொடர்ந்து வெகு சில வார்த்தைகளையே நான் பயன் படுத்துவதை எனது கணிணியின் உலவியும் அவ்வப்போது எனக்குச் சுட்டிக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறது.
பலர் நம்மை கவனிக்கத் தொடங்கியுள்ளார்கள். இனியேனும், பழந்தமிழ் இலக்கியங்களை, இன்னமும் நிறையப் படித்து, நல்ல பல தமிழ் வார்த்தைகளைப் பரிச்சயப் படுத்திக் கொண்டு, எனது உரைநடையினை இன்னமும் செறிவாக்கிக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணமும், பொறுப்பும் வரத் தொடங்கியுள்ளது. முயற்சி செய்கிறேன்.
நான் எழுதியதையெல்லாம் படித்து, என்னை அவ்வப்போது பாராட்டி, தொடர்ந்து எழுத உந்துதலாக இருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.
இறுதியாக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
இனி நேரிலோ, மின்னஞ்சலிலோ, அல்லது ஏதேனும் விழாவினிலோ என்னைக் குறிப்பிட்டு பேசும்போது, அடை மொழியாக ‘எழுத்தாளர்’ எஸ்கேபி கருணா எனக் குறிப்பிட்டு அழைக்காதீர்கள். அது எனக்கு மிகுந்த சங்கடத்தைக் கொடுக்கும்.
பிரபல எழுத்தாளர் எஸ்கேபி கருணா என்றே அழையுங்கள்!
எனது முதல் சிறுகதை 15.8.2013 சுதந்திர தினத்தன்று
ஆனந்த விகடனில் வெளி வந்த,
(தலை கால் புரியா) சந்தோஷத்தில்,
எழுதியது!

52 thoughts on “நுனிக் கரும்பின் ருசி.

 1. எங்கள் அனைவரின் மனமார்ந்த வாழ்த்துக்கள் சார் !! சுஜாதா விருதுக்கு எங்கள் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் !! இன்னும் நிறைய எழுதுங்கள் !!

  1. அது! அதற்குதான் நண்பர்கள் சூழ் வாழ்க்கை வேண்டும் என்பது!
   நன்றி! :)

  1. முதல்ல ஒரு குரூப் சேர்த்துக் கொள்கிறேன்.
   பிறகு, அறப் போர்தான்!
   பாராட்டுக்கு நன்றி!

 2. என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சார் !!

 3. படித்துப்பார்த்தேன் சிறப்பு. மேலும் சிறக்க மகிழ்வுடன் வாழ்த்துகள்

 4. வாழ்த்துக்கள் தலைவரே…
  தொடர்ந்து எழுதுங்கள்…
  -காட்டுவாசி…

 5. பிரபல எழுத்தாளர் எஸ்கேபி கருணா அவர்களே, மேலும் மேலும் உங்கள் வாசிப்பும் நேசிப்பும் எழுத்தும் வளர வாழ்த்துகள். ஒரு “சுதந்திர தின வாழ்த்து” சொல்லி இருக்கலாம் சுதந்திர பிரபல எழுத்தாளரே!

  1. இதோ பதிவு செய்து விட்டேன்! மிக்க நன்றி! தொடர்ந்த பாராட்டுகளுக்கும், நட்பிற்கும்! :)

  1. வருங்கால ஜனாதிபதி அண்ணன் எஸ்கேபி கருணா வாசகர் வட்டம் என்று பெயரிட்டிருக்கலாம்! :)

    1. ஹா!ஹா! உங்களிடமிருந்து வரும் பாராட்டுகள், மிகவும் மதிப்புள்ளது எனக்கு! நன்றி!

 6. வாழ்த்துகள் சார்.
  சிறுகதை படிக்க மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறேன் :)
  சுதந்திர எழுத்தகளுடன் இனிய சுதந்திர வாழ்த்துகள் சார் !

  1. நன்றி பிரபு! என் அருகில் அமர்ந்து, முதன் முதலில் எனக்கான வலைப் பக்கத்தை துவக்க, நீங்கள் உதவியது
   இன்னமும் அப்படியே நினைவிருக்கிறது! :)

 7. உங்க எழுத்து எனக்கு எப்பவுமே பிடிக்கும்… இந்த பதிவில் கூட நிறைய புத்தக தகவல் சொல்லி இருக்கீங்க. அதோட, புதுப்புது வார்த்தை பயன்படுத்தனும்ன்னு சொல்லி இருக்கீங்க… அதை எனக்கான பாடமா எடுத்துக் கொள்கிறேன்… மேலும் மிக சிறந்த இடங்களை அடைய வாழ்த்துகள்… :-))

 8. மிகச்சரளமான நடை. கவர்னருக்கு ஹெலிகாப்டரிலேயே தெரிந்தது, தொடர்ந்து வாலி, ராங் நம்பர் படித்தபின் இவர் ஏன் தொடர்ந்து எழுதமாட்டேன் என்கிறார் என்று தோன்றும். வாழ்த்துக்கள்

 9. Mostly i buy Vikatan on saturday night to read it on sunday. But this week bought it today. Nice writing, its very simple at the same time very interesting from the beginning to end.
  Shall we call you “Vikatan pugazh Prabala ezhuththaalar” like Sun tv pugazh kind? : -)
  Hope you write more and more..

 10. “தனது எழுத்து ஏதேனும் ஒரு இடத்தில் அச்சில் பிரசுரமானால்தான் எழுத்தாளன் என்ற நிலை மாறி, தனக்குத் தானே பிரசுரம் செய்யத் தொடங்கியக் காலம்தான் நம் தமிழ் எழுத்துச் சூழலில் உண்மையாகப் புரட்சி ஏற்பட்டக் காலம்.” , உண்மை உண்மை.
  தான் எண்ணும் எண்ணங்கள் தங்கு தடையில்லாமலும் கோர்வையாகவும் எழுத்துக்களில் வந்து விழுகிறதென்றால், அவர் நிறைய நூல்களை படித்திருக்க வேண்டும் . நீங்கள் பல புத்தகங்களை படித்துள்ளீர்கள் என்பது புரிகிறது. எவ்வளவோ பணிகளுக்கிடையில் எழுதுவதற்கும் நேரம் ஒதுக்கியுள்ளீர்களே அதை பாராட்டுகிறேன். வாழ்த்துகள். நகைச்சுவை உணர்வும் உங்களுக்கு கிடைத்த ஒரு கிஃட் .

 11. dear karuna sir,
  ஆனந்த விகடனில், “தங்களின் சைக்கிள் டாக்டர்”படித்தேன். நல்ல சரளமான நடை.சொந்த அனுபவங்களை எழுத்தில் கொண்டுவரும் போதுமட்டுமே அதில் உயிர் இருக்கும். ஏற்கனவே உங்களின் சில கட்டுரைகளை படித்திருக்கிறேன். இறுக்கமாக இல்லாமல் நடையில் ஒரு நெகிழ்வு இருக்கிறது. அதுவே பல புதிய வாசகர்களை கொண்டுவரும்.
  “சைக்கிள் டாக்டர்” சிறுகதை ‘நச்’ சென்று இருக்கிறது, எனினும் கடைசி பத்தியை நீக்கி இருந்தால் இன்னும் கிரிஸ்ப்பாக இருந்திருக்கும். வாழ்த்துக்கள்!

  1. நானும் கூட, அந்தக் கடைசி பத்தி, கண்டிப்பாக விகடனில் நீக்கப் பட்டு விடும் என்று நம்பிக் கொண்டிருந்தேன்!
   வெகு ஜன வாசகர்கள் பலர், குறிப்பாக அந்தக் கடைசிப் பத்தியைதான் பாராட்டி சொல்கிறார்கள்!
   காலம் முடிவு செய்யட்டும். :)

 12. விகடனில் உங்கள் சிறுகதையைப் படிக்க ஆரம்பித்த பொழுது எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் படிக்க ஆரம்பித்தேன். படிக்க படிக்க அப்படியொரு ஆச்சர்யம். என்ன ஒரு சரளமான நடை! கதை சொல்லும் விதமே அவ்வளவு சுவாரசியம் :-) ஒரு சின்ன விஷயத்தை எவ்வளவு அழகாக ஒரு சிறுகதையாக உருவாக்கியிருக்கிறீர்கள்! உண்மையாகவே சுஜாதா பெருமைப் படுவார் :-) வாழ்த்துகள்!
  amas32

  1. நன்றி அம்மா! சுஜாதாவின் பெயரைக் குறிப்பிட்டு பெரிதாக பெருமை படுத்துகிறீர்கள்!
   சின்ன விஷயம்தான்!ஆனால், எழுதத் தோணியது!
   பாராட்டுக்களுக்கு நன்றி.

 13. நான் விகடனை வாங்கியதும் முதலில் தேடுவது, வாசிப்பது சிறுகதையைத்தான். இன்றைய விகடனில் உங்களுடைய சிறுகதையைக் கண்டதும் மிகுந்த உற்சாகத்துடனே வாசித்தேன். கவர்னரின் ஹெலிகாப்டர் கட்டுரையை வாசித்து வாசித்து வாய்விட்டு சிரித்தது போல உங்களின் ’’சைக்கிள் டாக்டர்’’ சிறுகதையிலும் அங்கங்கே வாய்விட்டு சிரிக்க நகைச்சுவை விரவியிருந்தன. மிக மிக அருமையான, என்னை நெகிழ வைத்த சிறுகதை அண்ணா. தொடர்ந்து கலக்குங்கள் பிரபல எழுத்தாளர் திரு.எஸ்கேபி கருணா அண்ணா…

  1. நான் என்ன எழுதினாலும், அதை படித்து, இரசித்து, பாராட்டி : எனக்கு ரொம்ப ஸ்பெஷல் வாசகிம்மா நீ!
   வாழ்த்துகள்! :)

 14. ட்விட்டரில் பாராட்டு : ஆல்தோட்டபூபதி @thoatta
  நம்ம @skpkaruna சார் எழுதிய ‘சைக்கிள் டாக்டர்’ சிறுகதை இந்த வார விகடனில் வந்திருக்கு. விஷயம் கேள்விப்பட்ட உடனே, படிக்க ரொம்பவே ஆர்வம், லேசான பொறாமையும் கூட. ரொம்ப ஆர்வத்துல அவரோட சிறுகதைய உள்வாங்காம விட்டுடாக்கூடாதுன்னும், அவசர கதியில படிச்சிடக்கூடாதுன்னும், புக்க வாங்கி ஒரு பத்து நிமிஷம் மத்த விஷயங்களை புரட்டிட்டு அப்புறம் தான் படிக்க ஆரம்பிச்சேன். படிச்சாச்சு. இது விமர்சனமோ இல்ல பாராட்டு பத்திரமோ இல்ல, ஜஸ்ட் மனசுல தோணுவத சொல்றேன்.
  தனிமையின் நிழலில் கையில் கிடைக்கும் ஒரு பழய கடிதம் வடம் பிடித்து இழுத்து வரும் பழய நியாபக தேரும், அந்த தேரில் சிலையாய் இருக்கும் ஒரு டாக்டரின் பிம்பமும் குணாதிசயமும் தான் கதை.
  ‘பிடித்தவர்கள் இல்லாத வீடுகள், வசிப்பிடமே தவிர, வாழுமிடம் இல்ல’ன்னு ஒப்பனிங்லையே பவுண்டரியோடு ஆரம்பிச்சு, பந்துகளை வீணாக்காத தோனி போல சரளமா விளையாடி இருக்காரு கருணா சார். பசங்களோட அரைகுறை அறிவு, அறியாமை, அடுத்தவன கோர்த்து விடுறது, ‘நண்பேன்டா’ தருணங்கள், பழிவாங்கும் சிறுபிள்ளைத்தனம், ஆர்வக்கோளாறுகள் என எல்லா ஷாட்டுகளும் ஆடியிருக்காரு.
  ‘கட்டிக்கொண்டிருந்த கைகளாலையே அவனோட நண்பன்ன்னு சொன்னேன் போன்ற வரிகள் எல்லாம் கொஞ்சம் புதுசு. செருப்பை, பொம்மைய, சீப்பு பேனா என திருடி, கோமாளித்தனமாக பழிவாங்கும் சிறுபிள்ளைத்தனமான நிகழ்வுகளை பதிவு செய்தது எல்லாம் எனக்கு என் சின்ன வயச நியாபகப்படுத்தியது. ஒரு கட்டத்திற்க்கு மேல், கதை சொல்ற சிறுவன் வலுக்கட்டாயமாகவே டாக்டர் வீட்டுக்கு சென்று காத்திருப்பது போன்ற நிகழ்வுகள் நம்ம எல்லோர் வாழ்க்கையிலும் இருக்கும். என்ன சிலருக்கு அது டைலர் கடையாகவோ, அச்சு ஆபிசாகவோ, கம்யூனிஸ்ட் கட்சி ஆபிசாகவோ, விளம்பர பலகை எழுதும் இடமாகவோ இல்ல மற்ற இடங்களாகவோ இருக்கும் அவ்வளவு தான். அந்த இடங்களில் இருக்கும் யாரோ ஒரு மனிதர் தந்த ஆச்சரியங்களோ, பயமோ எல்லோர் நெஞ்சிலும் இன்னமும் கொஞ்சம் ஒட்டி இருக்கும். தன் செய்கைகளின் மூலம் நம்மை நம்மை வியக்கவும், நாம் மனத்தை மயக்கியும் வைத்திருப்பார்கள் அவர்கள். இங்க அது டாக்டர். கதையின் முடிவுக்கு முன்பான கடைசி பாரா வரப்ப, நான் ஒரு வேளை இந்த பசங்க நேரம் தவறாம வந்ததுனால டாக்டர் மன்னிச்சிட்டாரோன்னு நினைச்சேன். ஆனா கருணா சார், தான் சராசரி கதை சொல்லி இல்லைன்னு கதையை முடிக்கிறப்போ நிருபிச்சிட்டாரு. டாக்டர் ஏன் வாய்க்காலில் விழுந்தாருன்னு ஒரு அதி முக்கியமான ஆர்வமான கேள்வி மண்டய குழப்புது? சரி வழக்கம் போல துக்கத்துல மப்புல வீழ்ந்திருப்பாருன்னு நானே டாட் வச்சுக்கிட்டேன் :-)))
  விகடன்ல அடிக்கடி நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதைன்னு போடுறாங்க. சரி எழுத்தாளர்கள் தானே இருந்துட்டு போகட்டும், ஆனா உண்மையில என்னளவில் நட்சத்திர சிறுகதை இது தான்.

 15. “எழுத்தாளன்” என்ற சிரம அடையாளத்துக்குள் சிக்காமல், இன்னும் நிறைய எழுதித் தள்ள நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
  “சைக்கிள் டாக்டர்” ரொம்பவே பிடிச்சது.
  பொதுவாகவே எந்தக் கதையானாலும், முதல் சில வரிகளிலேயே நம் மனதுக்குள் அது காட்சியாக ஓட ஆரம்பித்துவிட்டாலே வாசகனுக்கு கதைக்குள் ஒன்றுவது வசதி. கதை முடியும் போது மனம் இலகுவாகவோ, கனமாகவோ ஒரு மாற்றத்தை அடைந்தால் அந்தக் கதை நேர்மையான ஒரு உள்ளடக்கத்தை கொண்டிருக்க வேண்டும். இது இரண்டுமே இந்தக் கதையில் இருந்தது,
  இறுதியில் டாக்டர் மேல் கோபம் வருவதற்கு பதில் பரிதாபம் வரவைத்தது தான் கதாசிரியருக்கு வெற்றி!
  விகடனில் பிரசுரமானது ரொம்பவே சந்தோஷம்.

 16. அருமை சார்!
  எழுத்துக்கள் மனதிலேயே நிற்கிறது.
  ஆனாலும் ஒரு வருத்தம் பவா சார் மேல்! அவர் சுஜாதாவின் ஆட்டோகிராப், கவர்னரின் ஹெலிகாப்டர் போன்றவற்றை இவ்வாறு விகடனுக்கு அனுப்பியிருந்தால் நீங்கள் இன்னும் அதிகமாக விகடனுலகில் மகுடமாக்கப் பட்டிருப்பீர்கள்! அவற்றில் உங்கள் எழுத்தாளுமை (சுஜாதாவின் தாக்கம்) அதிகமாக வெளிப்பட்டிருக்கும்!
  இனி அடிக்கடி விகடனில் உங்கள் கதைகள் காணக்கிடைக்கும்.
  தமிழ் எழுத்தாளர்களில் தலை சிறந்த எழுத்தாளர்களின் பட்டியலில் இடம் பிடிக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!
  பிரபல தலைசிறந்த எழுத்தாளர் எஸ்கேபி கருணா!!! :)

  1. நன்றாக கவனித்துப் பார்த்தால், நீங்கள் குறிப்பிட்டவைகள் எல்லாம், என்னுடைய அனுபவங்களை சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்தக் கட்டுரைகள்!
   அதில், புனைவு ஏதும் இல்லை! வாசகனின் கற்பனைக்கு இடம் இல்லை!
   எனவே, என்னுடைய வலைப் பக்கமே இது போன்றவைகளைப் பிரசுரம் செய்ய உகந்த இடம் எனக் கருதுகிறேன்.
   தொடர்ந்து ஊக்கம் அளிப்பதற்கு, நெஞ்சார்ந்த நன்றி.

 17. அய்யா,
  வணக்கம். தங்கள் blog படித்து வருகிறேன்.
  நான் ஒரு தீவிர வாசிப்பாளன் என்று சொல்ல
  முடியாது. ஆனாலும் என்னைச்சுற்றி
  இருப்பவர்களைவிட அதிகம் படிப்பவன்.
  குறிப்பாக விகடனை 30 வருடங்களாக
  நேசித்து வாசிப்பவன். தங்கள் கதையான
  cycle doctor நல்ல படைப்பு. அதிலும் தங்களைப்
  போல வேலைப்பளு உள்ள ஒருவர் தமிழில்
  இவ்வளவு ஆர்வம் கொண்டு blog எழுதுவது
  மிக்க மகிழ்வை ஏற்படுத்துகிறது. உங்களுக்கு
  இதில் ஒரு மனநிறைவு கிடைக்கிறது என்பதே
  இதற்கான காரணமாக இருக்க முடியும். எங்களைப்
  போன்றவர்கள் படிப்பதற்கே நேரம் தேடும் போது
  நீங்கள் எழுதுவது மிகுந்த ஆச்சரியத்தை கொடுக்கிறது.
  வாழ்த்துகள். நீங்கள் எழுதி பிரபலம் ஆக வேண்டிய
  அவசியம் இல்லாதவர். ஆனாலும் உங்களை எழுதத்
  தூண்டியது உங்களின் படிப்பார்வம், தமிழ் நேசம்
  போன்றவையாகவே இருக்கும். ஒரே சிறுகதை
  மட்டுமே வெளியிடுகிற முடிவை எடுத்த பிறகு
  விகடனில் பிரபலங்களின் சிறுகதைகளுக்கே
  பெரும்பாலும் வாய்ப்பு. அவையனைத்துமே மிகச்
  சிறந்த கதைகளாகவே அமைந்து வருகின்றன. இச்சூழலில்
  உங்கள் முதல் கதை விகடனில் வெளிவந்தது உங்களுக்கு
  எந்த அளவு மகிழ்வை உண்டாக்கியிருக்கும் என்பதை
  நன்கு உணர முடிகிறது. உங்கள் வெளிப்பாடுகளிலும்
  தெரிகிறது. மீண்டும் வாழ்த்துகள்.
  உங்களின் கதையை நான் மிகவும் மதிக்கும் எஸ்.ரா.
  உள்ளிட்டவர்கள் சிறந்து பேசியபிறகு நான் பெரிதும்
  சொல்லிவிட முடியாது என எனக்குப் புரிகிறது. இருந்தாலும்
  பொதுவான விகடன் ரசிகர்களில் ஒருவனாக என்னுடைய
  மனஓட்டங்களைப் பகிர விரும்புகிறேன்.
  கதை மிகவும் விறுவிறுப்பாகச் சென்றது. நல்ல நடை. நிச்சயம்
  விகடன் முத்திரை உள்ள கதை சொல்லும் திறம். குறிப்பாக
  இளமையில் நம் எண்ணங்கள், பயங்கள் நன்றாக உணரப்பட்டது.
  நல்ல வாசிப்பு அனுபவம். நன்றி. ஆனால் முடிவில் எனக்கு கொஞ்சம்
  குழப்பம் ஏற்பட்டது. டாக்டர் வீட்டில் நீங்கள்(கதைப்பாத்திரம்) சென்று
  கொண்டிருந்தபோது, அவரின் மனைவி,மகள்,பேரன் ஆகியோர் இல்லை
  எனப் புரிகிறது. ஆனால் அவர்களை அவர் இழந்திருக்கிறார் என்பதும்
  புரிகிறது. அந்த வலியை உணர்ந்தவராகவே சிறு குற்றங்களைச்
  சகித்துக் கொள்கிறார். ஆனால் அவர்களை எப்படிப்பிரிந்தார்
  என்பது தெரிந்தால் கதையில் இன்னும் அவர்மீது பிடிப்பை வாசகனுக்கு
  ஏற்படுத்தி இருக்குமோ என எண்ணுகிறேன். என் இக்கருத்து மிகவும்
  கீழ்மட்ட நிலை வாசகனுடையதாகக் கூடக் கருதலாம். ஆனால் எனக்கு
  கடைசியில் கொஞ்சம் நிறைவுத்தன்மை குறைந்தாற்போல் தோன்றியது.
  ஆனால், உங்களுடய படைப்பு மிகச்சிறப்பானது. ஐய்யமில்லை.
  தங்களுடைய எழுத்துப்பணிக்கு என் வாழ்த்துகள்.

 18. vikatan moolamaga engallukku innumoru “mannin maindan” kidaithu vittar. “prabala Ezhuthalar” SKPKaruna-ku varaverppugal.

 19. நீங்கள் தயங்குவதற்கு ஒன்றும் இல்லை, வெகுஜனங்களுகும் சென்றடையும் வகையில் கருத்துகளும், கட்டுரைகளும், கவிதைகளையும் படைக்கும் அனைவருமே சிறந்த எழுத்தாளர்களே…
  வழக்கம் போல் இனிமையாகவும், இயல்பாகவும் ஒரு அருமையான பதிவை தந்த விகடன் புகழ், பிரபல எழுத்தாளர் திரு.எஸ்கேபி கருணா அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள். :-)

 20. வாழ்த்துக்கள் சார், உங்கள் எளிமையை விட்டு விடாதீர்கள். அது உங்களை மிக உயரிய தூரத்திற்கு அழைத்து சொல்லும். ஆனந்த விகடன் இன்னும் உங்களின் நிறைய பதிப்புகளை வெளியிட வாழ்த்துக்கள், நீங்கள் சொன்ன அந்த இளம் வயதில் சிக்கி கொண்ட ஒரு வாசகன். என்றும் அன்புடன், நிறைய எழுதுங்கள்.

 21. பு. சாரோன் அவர்களின் பாராட்டு (மின்னஞ்சலில் வந்தது)
  அன்பு தோழமைக்கு வணக்கம்
  உங்களின் படைப்புகளை விகடனிலும், உங்கள் இணைய பக்கத்திலும் பார்த்தேன்.
  அனுபவங்கள் எழுத்தாக மாறுகையில் அது படைப்பாளனின் அனுபவமாக இல்லாமல் வாசகனின் அனுபவமாக வாழ்வியல் தடங்களை உயிர்பிக்கும் ஒன்றாக மாறும் இடத்தில் அது படைப்பாக மாற்றம் கொள்வதாக உணர்கிறேன்.
  சைக்கிள் டாக்டர் கதை ஒரே நேரத்தில் எனது பதின் பருவத்தின் நினைவுகளையும், இன்றைய தனிப்பட்ட மற்றும் பொது சமூக வாழ்வில் என் உணர்வு வெளிப்பாட்டின் பிரழ்வான குணத்தையும் என் முன்பாக நிறுத்தியது.
  எனக்கு சரியாக தோன்றும் என் செயல்களின் ஆதிக்கம் என் மனைவி, குழந்தை சமூகத்தில் என்னுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடையவர்களின் மீது செலுத்தும் வன்முறைகளை உணராமலே ஓடுகின்ற வாழ்க்கை. இதில் வெளிப்படுத்த முடியாமல் உள்ளுக்குள் புழுங்கி வெளியில் செயற்கையான முகமுடியுடன் வேறு வழி இன்றி நடமாடும் மனிதர்கள் குறித்த உணர்வு நிலை ஒரு புறம்,
  எதோ ஒரு நிலையில் தன பிழையை உணர்ந்து அதை தன் செயல்களால் வதைப்பட்ட சொந்த உறவுகளுக்கு உணர்த்த முடியாமல் தன்னுள்ளே மருகும் ஒருவனின் சொல்ல இயலாத அங்கலாய்ப்பும் தனிமையின் அலைகழிப்புமாக ஒரு மனத்தின் பல்வேறு உணர்வு நிலைகளின் ஈரம் உலராமல் இருப்பதாக எனக்குள் சஞ்சலப்படுத்தியது. நான் என்னையே கேட்டுக்கொண்டேன். என்னை சுய விசாரணை செயகின்றதாகவும்இருந்தது.
  நான் பார்க்கும் பார்வையில் எப்போது அந்த டாக்டர் தகப்பனாக இருக்கிறார் , என் மிது விழும் பார்வைகளில் என்னை கடந்து என்னுள் தன உறவின் முகத்தைத் தேடுகின்றன என்று எல்லா சந்தேகிக்க தொடங்கி விட்டேன். என் பார்வையையும் சேர்த்து.
  இன்னும் நிறைய அலைகள் கரம்பில் பெய்த மழை புல்வெளியாக மாற்றிவிட்ட நிலம்போல, அதில் நேரிஞ்சிகளும் முளைத்திருப்பது போல்… என் அனுபவ குமிழ்கள் நினைவுகளில் தோன்றி தோன்றி உடைய நிறைய முகங்கள் எனக்குள் கூச்சலிடுகின்றன..
  எழுதுவது குறித்த உன்கள் பகிர்வு; மனிதர்களும் நூல்களும் உங்கள் அகவயப்பட்ட மனிதனுடன் கொண்டிருக்கும் வாசனையை காற்றில் கொண்டு வந்ததுபோல் பார்த்தேன்.
  என் அன்பும் வாழ்த்துக்களும்
  பு. சாரோன்
  Prof.Saron.Pushparaj
  Department of Media Studies
  Loyola College

 22. Bhaskar Sakthi
  அன்புள்ள கருணா, இப்போதுதான் சைக்கிள் டாக்டரை வாசித்தேன்.முதல் கதை என்று சொல்ல முடியாத அளவுக்கு கச்சிதமாகவும்,செறிவாகவும் எழுதி இருக்கிறீர்கள்.சிறுவர்களின் பார்வையில் கடிதம் வழியாக சொல்லப் பட்டிருக்கும் உத்தியும், அந்தக் கடிதம் சொல்லும் செய்தியும் வெகு சிறப்பாக வெளிப்பட்டிருக்கின்றன. நான் முக்கியமாக கருதுவது உங்கள் கதையின் சப்-டெக்ஸ்ட் ஆக கோடி காட்டப்பட்டிருக்கும் அந்த டாக்டரின் பாத்திரம். கண்டிப்பு என்கிற பெயரில் அந்த டாக்டர் தன் மனைவியிடம் நிகழ்த்தியிருக்கக் கூடிய வன்முறையை இந்த சிறுவர்களை தொடர்ந்து தினமும் எதுவும் பேசாமல் நிற்க வைக்கிற அவரது இயல்பின் வழியே சுட்டிக் காட்டி அதிர வைக்கிறீர்கள். அந்தக் கடிதத்தை எழுதி இருக்கும் மாமனாரின் இயல்பும் கூட எதார்த்தமானதாகவே இருக்கிறது. ஒரு சிறுகதைக்குள் அதுவும் முதல் கதையில் இப்படி பல்வேறு அடுக்குகளையும் சாத்தியங்களையும் கொண்டுவருவது அவ்வளவு சுலபமல்ல. தொடர்ந்த உங்கள் வாசிப்பும் படைப்பு மனமும்தான் அதை சாத்தியமாக்கி இருக்கிறது என்று கருதுகிறேன்.. என் மனமார்ந்த வாழ்த்துகள். வெல்கம்.

  1. ரொம்ப நன்றி பாஸ்கர்! நான் உங்கள் பல சிறுகதைகளின் இரசிகன்!
   உங்களிடமிருந்து வரும் இந்தப் பாராட்டு மதிப்பு மிக்கது எனக்கு!

 23. வாழ்த்துக்கள் …
  எழுத்தாளுவதற்கான முக்கியமான காலகட்டத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்..
  சரியான சுற்றுப்புறமும், அகத்திறமையும் வாய்த்திருக்கிறது. சரியாய் இடம்பெயர்வீர்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. ரசிக்க ஆவலாய்க் காத்திருக்கிறோம்..

  1. நன்றி! உங்களின் பாராட்டு வரிகள் சொல் நேர்த்தியுடன், மிகக் கச்சிதமாக இருக்கிறது!

 24. விகடனில் உங்கள் பெயரைப் பார்த்த்தும், ஜெயமோகன் தளத்தில் எங்கோ
  பார்த்த ஞாபகம் வந்த்து. இவர் கதையெதையும் படித்த்தில்லையே, கல்லூரி
  சேர்மன் என்ன எழுதப்போகிறார் என்று நினைத்து அரைமனதடன் படிக்கத் தொடங்கிய என்னை உங்கள் எழுத்து அப்படியே அசரடித்துவிட்டது என்பது
  மிகையான வார்த்தை அல்ல. அருமையான நடை.முடிவில் மிகுந்த வேதனை சூழ்ந்து கொண்டதுஅர்த்தமில்லாத, மிகுதியான கண்டிப்பு
  எங்கு கொண்டு செல்லும் என்று புரிந்த்து. அருமையான கதை. பண்பட்ட
  எழுத்து. தொடர வாழ்த்துக்கள்

 25. திரு SKP கருணா நான் எதுவும் எழுதவில்லை இதுவரை,ஆனாலும் உங்கள் கட்டுரையை நானே எழுதிய தோற்றம்.
  நான் முதலில் படித்தது சாண்டில்யன் எழுத்துக்கள் கடல் புறா,ஜல தீபம்,ராஜ முத்திரை,ராஜ திலகம் அவரின் அனைத்து எழுத்துகளும்.
  பின்னர் சுஜாதா வின் எழுத்துக்களே என்னை தரம் பிரித்து வாசிக்க தூண்டியது.
  அ.முத்துலிங்கன் இலங்கையர்,இவரின் எழுத்துக்கள் அந்த நாடுகளின் கலாசார,பொருளாதார,மக்களின் நிகழ் காலத்தை கண் முன் கொண்டு வரும்.
  நாஞ்சில் நாடன்,வண்ண நிலவன், ஜெமோ,வண்ண தாசன்,பொன்னிலவன்,சே.யோகநாதன்,பூமணி போன்ற எண்ணற்ற எழுத்தாளர்கள்,புளியமரத்தின் கதையும் என்னை கவர்ந்த சிறுகதை,
  மவ்னி, கி.ராஜநாராயணன்,பிரபஞ்சன்,,
  அசோகமித்திரன் எழுத்துக்கள் அறிவேன்.
  மலையாள தகளி சிவசங்கரன் பிள்ளை ,வைக்கம் முகமது பஷீர் மற்றும் ஏனையவர்களையும்,கன்னடத்தில் பைரவப்பா,வங்கத்தில் பக்கிம் சந்திரர், சரத் சந்திரர் uruthu மான்டேகு என்று எண்ணற்றோர் அறிமுகம்.
  1970 இல் மதுரை சேதுபதியில் 8ஆம் வகுப்பு படிக்கும் போது ஆரம்பித்து இன்று வரை படிக்கிறேன்.
  மேலும் மேற்கத்திய ரஸ்ய, ஐரோப்பிய எழுத்துக்களும் படிப்பதுண்டு.
  என்னை கவர்ந்த எழுத்து,
  லோரி காளின்ஸ்,டொமினிக் லேப்பியர் எழுதிய Freedom at mid night,
  நள்ளிரவில் சுதந்திரம் என்ற நூல்.
  ஒரு சிறு நூலகம் இல்லத்தில் உண்டு.
  தங்கள் பரிச்சயம் மகிழ்ச்சி தருகிறது.
  என்னை உங்களில் பார்க்கிறேன்.
  வாழ்க,வளமுடன்.

Comments are closed.