ராங் நம்பர்

ராங் நம்பர்

telephone
அப்போது எஸ்டிடீ வந்து விட்டிருந்தது. ஆனால், தபால் அலுவலகம், மற்றும் குறைந்த சில எஸ்டிடீ பூத்களில் மட்டுமே அந்த வசதி இருந்தது. எங்கள் டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் அது அத்தியாவசியத் தேவை என்பதால் வாங்கி வைத்திருந்தோம். அந்த இராட்சதக் கருப்பு போனில்தான் அன்றையக் காலை வேளையில் நீண்ட மணி அடித்தது. அப்படியென்றால் அது எஸ்டிடீ கால்!
எடுத்துக் கேட்டால், லேசாக நடுங்கும் குரலுடன் ஒரு வயது முதிர்ந்தப் பெண்ணின் குரல்! பக்கத்தில் கொஞ்சம் ஜெயபாலைக் கூப்பிடுறீங்களா? எனக் கேட்டது. ராங் நம்பர் என்று சொல்லி வைத்தேன். மீண்டும் எஸ்டிடீ! மீண்டும் அதே குரல்! மறுபடியும் ராங் நம்பர் என்றேன்!
மறுபடியும் போன்! லேசான எரிச்சலுடன் போனை எடுத்தால், நீங்க யார் பேசுறது? ஜெயபாலை உங்களுக்குத் தெரியாதா? என்று வினவியது. இங்க அப்படி யாரும் இல்லையம்மா எனச் சொல்லி போனை வைத்தேன்.
சற்று நேரத்தில் மறுபடியும் போன்! இந்த முறை என்னை பேசவே விடவில்லை! யப்பா! நீ யாராயிருந்தாலும் உனக்கு புண்ணியமாப் போகும்! காலையில் இருந்து, நான் இங்க பஜார்ல போன் கடைக்கு வெளியிலேயே உட்கார்ந்து கிட்டு இருக்கேன். ஜெயபால் வந்து என்னை மெட்ராஸ் பெரியாஸ்பத்திரிக்கு எம் மவளைப் பார்க்க கூட்டிட்டு போறேன்னு சொல்லியிருந்துச்சு! கொஞ்சம் அவருகிட்ட சொல்லி ஞாபகப் படுத்துப்பா! எனக்கும் ரொம்ப நேரம் வெயிலில் நின்னுகிட்டே இருக்கிறதுல மயக்கமா இருக்கு! என்றார்கள். எனக்கு நிலைமை புரிந்து விட்டது.
அம்மா! நீங்க எந்த ஊருக்கு போன் பேசணும் என்று கேட்டேன்! எந்த ஊர் என்றெல்லாம் எனக்குத் தெரியாதுப்பா! இந்த சீட்டைக் கொடுத்து இதிலிருக்கும் நம்பரைக் கூப்பிட சொன்னாப்ல! அதான் கூப்பிட்டேன்! மத்த விவரமெல்லாம் எனக்குத் தெரியாதே? ஆமாம்! நீங்க வெளியூரில இருந்தா பேசுறீங்க? எனக் கேட்டார்.எனக்கு ரொம்பப் பாவமாகி விட்டது!
ஆமாம்மா! இது திருவண்ணாமலை நம்பர்! நீங்க எந்த ஊரில் இருந்து பேசுகிறீர்கள்? (அப்போ காலர் ஐடி எல்லாம் இல்லை!) என்றுக் கேட்டேன்! நான் திண்டிவனத்தில் இருந்து பேசுறேம்பா! என்றார் பாவமாக! வேறெதுவும் சொல்லத் தெரியாமல், எதற்கும் கையில் இருக்கும் சீட்டை பக்கத்தில் இருப்பவரிடம் கொடுத்து சரியான நம்பருக்குப் போட்டுப் பாருங்க! என்று சொல்லி வைத்தேன்.
இத்தனை முறை அவர் என்னை அழைத்ததற்கே, எப்படியும் நூறு ரூபாய்க்கும் மேலாகியிருக்கும்! அப்போது எஸ்டிடீ பேசும் காசில், பேருந்தில் டிக்கட் எடுத்து விடலாம்! அத்தனை செலவு பிடிக்கும்! அடுத்த சில மணி நேரத்தில் நான் சென்னைக்குப் போக நேரிட்டது! என்னுடைய கார்களிலேயே, இன்று வரை எனக்கு மிகவும் பிடித்த டாடா சியாராவைத்தான் அப்போது வைத்திருந்தேன். மேலும் அப்போதெல்லாம் எங்கு சென்றாலும் செல்ஃப் டிரைவிங்தான்! என்னுடன் எப்போதும் உடன் வரும் எனது நண்பன் வேலுவுடன் காரில் கிளம்பினேன்.
கரெக்ட்! நீங்கள் யூகிப்பது போலத்தான், நானும் செய்தேன்! திண்டிவனம் வரும் போது அந்த வயது முதிர்ந்தக் குரல் நினைவுக்கு வந்தது. காரை ஊருக்குள் திருப்பினேன். அப்போது திண்டிவனம் என்பது நீண்ட பஜார் தெருவை ஒட்டிய சிறு நகரம்! அவ்வளவே! மிகச் சுலபத்தில் பஜாரில் இருந்த ஒரே எஸ்டிடீ பூத்தைக் கண்டு பிடித்தோம். உரிமையாளரிடம் விசாரித்ததில், அருகில் இருக்கும் ஒரு புளி மண்டியில் அந்தப் பாட்டி படுத்திருப்பதாக சொன்னார். மேலும், நீங்கதானா அந்த ஜெயபால் என்று கோபமாக ஒரு கேள்வி வேறு!
வேலு இறங்கிச் சென்று மண்டியிலிருந்தப் பாட்டியை எழுப்பி அழைத்து வந்தான். பாட்டி என்னைப் பார்த்தவுடன் நீங்க யாருப்பா? ஜெயபால் எங்கே? என்றார். ஜெயபாலுக்கு ஏதோ முக்கியமாக வேலையா கவர்னரைப் பார்க்க போயிருக்காரம்! அதனால திருவண்ணாமலையில் இருந்து அண்ணாமலையார் எங்களை அனுப்பியுள்ளார். ஏசி காரில் மெட்ராஸுக்குக் கூட்டிச் சென்று விட்டு வரச் சொல்லியிருக்கார் என்றான் வேலு. அந்தப் பாட்டி அப்படியே அதை நம்பிச் சிரித்தார்.
அவரைக் காரில் உட்கார வைத்து, பின் அவரிடம் கேட்டேன்! இங்க உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா? நாங்கதான் உங்களை கூட்டிச் செல்கிறோம் என்று சொல்லி விட்டாவது போகலாம் என்றேன். இங்க எனக்குத் தெரிந்தவங்க நீங்க மட்டும்தான்யா! என்று மீண்டும் அந்தச் சிரிப்பு! எஸ்டிடீ பூத் உரிமையாளரிடம் விஷயத்தைச் சொல்லி விட்டுக் கிளம்பினோம். மனிதர் நடப்பதைப் பார்த்து சற்று ஆடித்தான் போய்விட்டார்.
வழியில் அச்சரப்பாக்கத்தில், அவருக்கு மதிய சாப்பாடு. வழியெங்கும் பேசிக் கொண்டே வந்தார். திண்டிவனத்திலிருந்து பாண்டிச்சேரி செல்லும் வழியில் அவருடைய கிராமம். மகள் உடல் நிலை சரியில்லாமல் சென்னை பெரியாஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டிருந்தார். மாப்பிள்ளை ஜெயபால், ஊர் பஞ்சாயத்தார் வலியுறுத்திச் சொன்னப் பிறகு, வேண்டா வெறுப்பாக, இவரை சென்னைக்கு அழைத்துச் செல்ல ஒப்புக் கொண்டிருக்கிறார். திண்டிவனத்திற்கு வந்து, இந்த நம்பருக்குக் கூப்பிடு! வந்து கூட்டிச் செல்கிறேன் என்று சொல்லி விட்டு, ஆள் எஸ்கேப்!
அந்த சீட்டை வாங்கிப் பார்த்தோம்! அது 04173 என்று துவங்கியது! அதாவது அது ஆரணி என்ற ஊரின் கோட் நம்பர். 3 என்பது தவறுதலாகவோ அல்லது வேண்டுமென்றோ 5 எனத் தோற்றமளித்தது. எனவேதான் இந்தக் குழப்பம். கையில் இருந்த கொஞ்சம் பணத்தையும் மாப்பிள்ளையை தேடி அழைக்க போனுக்காக செலவு செய்து விட்டு, பட்டினியாக வெயிலில் படுத்து இருந்திருக்கிறார்.
மாலை ஜிஎச்க்கு சென்றடைந்தோம். அங்கே கேண்டீன் வைத்திருந்த எங்கள் நண்பன், உள்ளே சென்று இவரது மகள் இருக்குமிடத்தைக் கண்டறிந்து வந்தார். காரில் இருந்து, அவரை மெல்ல கீழிறக்கினோம். அவரது உடல் நடுங்கியதைப் பார்க்க ரொம்ப பரிதாபமாக இருந்தது. வாழ்க்கையில் முதல் முறையாக குளிரூட்டப் பட்ட இடத்தில் அமர்ந்து வந்திருக்கிறார்.
அவருக்கு செலவுக்கு ஏதாவது கொஞ்சம் பணம் கொடுத்தனுப்ப வேண்டும் என்று மிகவும் விரும்பினேன். கிராமத்துப் பெண்மணி! ஏதேனும் தவறாக எடுத்துக் கொள்வாரோ என்று தயக்கம். மதிய சாப்பாட்டை சாப்பிட வைக்கவே பெரும் பாடு பட்டிருந்தோம். கையில் ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து மடித்து வைத்துக் கொண்டேன்.
கீழே இறங்கி அவரது கையைப் பிடித்து, போயிட்டு வாருங்கள் பாட்டி! உடம்பு பத்திரம் என்று சொல்லி அவரிடம் அந்தப் பணத்தை கொடுக்க முயன்றேன். அதற்குள் அவரே, நான் போயிட்டு வரேம்பா! நீங்க பத்திரமா பார்த்து போங்க! என்றுச் சொல்லி எனது கையில் வியர்வை நனைந்த பத்து ரூபாய் நோட்டு ஒன்றினை வைத்துச் சென்றார்.
———————————————————————
குறிப்பு: பழைய நினைவுகளை மீட்டெடுப்பது ரொம்ப சுலபம்! ஏதேனும் ஒரு நினைவு, நம்மை ஒருக் கணமேனும், அசைத்துப் பார்த்த நினைவாக இருந்தால், ஒரு சின்ன சலனத்திலேயே கூட, மனதின் ஆழத்திலிருந்து வெளியில் வந்து விடுகிறது.
இன்று காலை, டிவிட்டரில் எனது நண்பர் @amas32 (Sushima Shekar) இப்படி ஒரு ஸ்டேடஸ் பதிவிட்டிருந்தார்.
ஒரு மிஸ்ட் காலைப் பார்த்து போன் பண்ணினேன். எடுத்தவர் நான் சீனியர் சிடிசன் தவறுதலாக உங்க நம்பர் போட்டுவிட்டேன் போல என்றார். பாவமாக இருந்தது.”
உடன் எனக்குப் பழைய நினைவு ஒன்று மேலெழுந்து வந்தது. அப்படியே எழுதி விட்டேன்.

59 thoughts on “ராங் நம்பர்

 1. அருமை. நெகிழ்ச்சியாக இருந்தது. வாழ்க பல்லாண்டு. God Bless you

 2. நல்ல கட்டுரை!
  என் பாட்டி நினைவு வந்துவிட்டது! தவறான பேருந்தில் ஏறிய அவரை நடத்துனர் நாடு வழியில் இறக்கிவிட, உங்களைபோன்ற நல் உள்ளம் வீடு சேர்த்தார்
  @TiruppurTamil

 3. கடைசி வரியில் சட்டென்று கண்கலங்குவதைத் தவிர்க்க முடியவில்லை.
  ‘கெட்டாலும், மேன்மக்கள், மேன்மக்களே’… வேறென்ன பெரிதாய் சொல்ல முடியும்?

 4. நெகிழ்ச்சியான பதிவு ! இந்த மாதிரி பதிவுகளைப் படிக்கும் போது அந்த பாட்டியோ,அம்மாவோ அல்லது முதியவரோ பிறகு என்ன ஆனார்கள் என்று மனது சிந்தனையில் ஆள்கிறது btw which is that inspired tweet ?

 5. this event again give me a chance to proud myself ie this is what our leader will always do…..as a student of our college i feel proud that we are under your shadow…….

 6. உலகம் தொடர்ந்து இயங்குவதன் அர்த்தம் மீண்டும் புரிகிறது.
  நாம் இங்கு ஜனித்திருப்பதற்கு ஏதாவது அர்த்தம் கொடுத்து விட்டு செல்ல வேண்டும் என்று தோன்றுகிறது.
  இது போன்ற நெகிழ்ச்சியான தருணங்களை யாராவது நினைவு கூறும்போது நாம் பார்க்கும் மனிதர்களிடையே அன்பு உணர்வு பெருகுகிறது.
  நம்மால் இயன்றது எதையாவது திருப்பித் தர வேண்டும்!

 7. பாட்டியுடன் சேர்ந்து நானும் தங்களுடன் அந்த குளிரூட்டப்பட்ட மகிழுந்தில் பயணம் செய்தது போன்ற உணர்வை தங்களின் எழுத்து நடை ஏற்படுத்துகிறது. வெகு இயல்பாய் காட்சிகள் கண்முன்னே விரிவது கதைக் கருவிற்கு பலம் சேர்க்கிறது. குளிரில் உடல் நடுங்கும் மூதாட்டியின் கைகளில் வியர்வையில் நனைந்த பத்து ரூபாய் நோட்டு கொஞ்சம் முரணாய் இருந்தாலும் நெகிழ்ச்சியாய் தான் இருக்கிறது. ஐநூறூ ரூபாய் என்பது இன்றும் கீழ்த்தட்டு மக்களுக்கு ஒரு பெருந்தொகை தான். இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் அது ஒரு இந்தியக்குடிமகனின் சராசரி மாத வருமானம். அப்பொழுதே உங்கள் கருணையின் உயரம் உச்சத்தில் இருப்பது மென்மேலும் மரியாதையை ஏற்படுத்துகிறது. டிரான்ஸ்போர்ட் கம்பெனி, பூத், போன், கார், கோட் நம்பர், கரெக்ட், டிக்கெட், கேண்டின் போன்ற வார்த்தைகள் தமிழாகி போனது சற்றே மனதை கனக்க செய்தாலும் கதையில் கனம் இருந்ததினால் இந்த ராங் நம்பர் – தேவையான அழைப்புதான்.

 8. நெகிழ்ச்சி: கிராமங்களில் இப்படித்தான்; எதார்த்தங்களுடன் எளிமையாக வாழ்ந்து கொண்டு, 60,70 வயதுகளிலும் , இரண்டு ஆடுகளை மேய்த்து வயிறு வளர்ப்பேன், யார்டமும் யாசகம் கேட்க மாட்டேன் என்கிற மனிதங்கள், சர்வ சாதாரணமாக காணக் கிடைப்பார்கள்!

 9. பழைய நினைவை மீட்டெடுத்தது மட்டும் அல்லாமல், அதை அழகாய் எழுதியும் இருக்கிறீர்கள். சிலருக்கு மட்டுமே வாய்க்கும் வரம் இது !! மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் – ஒரு ஊர் / இடம்அல்லது காட்சியை உங்கள் எழுத்து கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. மிகவும் நெகிழ்ச்சியான பதிவு. மனிதம் இன்னும் உயிர் வாழ்கிறது !! நன்றி !!

 10. மிக நன்றாக இருந்தது. வாழ்த்துகள்!

 11. எனது நண்பர் திருக்கருகாவூரில் குழந்தை பாக்கியம் வேண்டி சென்றிருந்தார். நெய்யால் படியை மெழுகி சர்க்கரையால் கோலமிட்டு ஒரு ஓதுவாரை விட்டு அம்பாள் மேல் பாடச்சொல்வது பிரார்த்தனையில் ஒரு பகுதி. அவருடைய மாமனார் நான் ஓதுவாருக்கு ஏற்பாடு பண்ணுகிறேன் நீங்கள் கோவிலுக்குச் செல்லுங்கள் கூறியிருக்கிறார். கோலம் போட்டு முடித்தவுடன் கணீரென்று ஒருவர் அங்கு வந்து இறைவியை துதித்துப் பாடியுள்ளார். அங்கு கூடியிருந்த அனைவரும் கண்ணீர் மலக் அவர் பாடலைக் கேட்டு மகிழ்ந்துள்ளனர். அவர் பாடி முடித்ததும் என் நண்பர் இவர் தான் தன் மாமனார் அனுப்பிய ஓதுவார் போலும் என்று நினைத்து அவர் கையில் பத்து ரூபாய் கொடுத்திருக்கிறார். அதைக் கண்ட அங்கு கூடியிருந்த ஜனம் விதிர்விதிர்த்துப் போயினர். அதில் ஒருவர், இவர் யார் தெரியுமா? மிகப் பெரிய வித்வான் மதுரை சோமு என்று சொல்லியிருக்கிறார்! தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்ட என் நண்பரிடம், நீங்கள் கவலையேப் படாதீர்கள், நீங்கள் கொடுத்த இந்த பத்து ரூபாய் எனக்கு அம்பாள் கொடுத்தது. நான் தான் பாக்கியம் செய்திருக்கிறேன். வீட்டில் இருந்த என்னை எதோ ஒன்று உந்தித் தள்ளி என்னை இங்கே வந்துப் பாட வைத்தது. அது உங்களின் பக்தியோ அல்லது இறைவனின் செயலோ தெரியாது என்று கூறியுள்ளார். அதற்குள் அவர் மாமனார் ஓதுவார் யாரும் கிடைக்கவில்லை என்று பதைபதைப்புடன் சொல்ல வந்துள்ளார். திருமணம் ஆகி 20 வருடங்கள் கழித்து இந்த வேண்டுதலுக்குப் பிறகு என் நண்பருக்குக் குழந்தை பிறந்தது.
  அதே போல அந்த மூதாட்டிக் கொடுத்த பத்து ருபாய் அந்த அண்ணாமலையாரும் உன்னாமுலையாரும் உங்களுக்கு வழங்கியது என்றால் மிகையாகாது :-)
  அருமையான பதிவு! நன்றி :-)
  amas32

 12. articles like this encourage us to do our bit to the needy. there are ever so many people who are misled by their own kith and kin. such people desrve our help. thanks for sharing ur experience.

 13. வியர்வை நனைந்த பத்து ரூபாய் நோட்டு …@!! Superb line..

 14. wrong number …manathai thota sambavam…naandri engaludan pakirnthu kondathuku…

  1. மதிப்பிற்குரிய ஜெயமோகன்,
   நான் ஏதோ ஒரு மூலையில் இருந்து கொண்டு, என்னுடைய பல வேலைகளுக்கு நடுவில் கொஞ்சமாக, அதுவும் எனது வலைப்பக்கத்தில் மட்டும்
   எழுதிக் கொண்டிருக்கிறேன். அதையும் நீங்கள் கவனித்து பாராட்டுவதும், உங்கள் வாசகர்களுக்குப் பகிர்வதும் என்னை உண்மையிலேயே நெகிழச் செய்கிறது.
   நண்பர்கள் எங்கிருந்தாலும், அவர்களை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கும் உங்கள் அக்கறை, என்னைப் போன்ற உங்கள் நண்பர்களுக்கு
   நிஜமாகவே பெருமிதம் அளிக்கிறது.
   வேறென்ன சொல்ல! நன்றியைத் தவிர்த்து.
   அன்புடன்,
   கருணா.

 15. வாசிக்கையில் நெட்டுக்கும் சிரித்தேன், கண்ணீர் வருகிற அளவுக்கு. ஆனால் அந்தக் கசங்கிய பத்து ரூபாய் அந்தக் கண்ணீரின் அர்த்தத்தை மாற்றிவிட்டது. நீர் வாழ்க! உம் குலம் வாழ்க!

  1. நன்றி சார்! உங்களிடமிருந்து வரும் பாராட்டு எனக்கு மிகுந்த மதிப்புள்ளது.

 16. வணக்கம். நான் திரு. ஜெயமோகன் வலைபூ வழியாக இந்த பதிவை படித்தேன். கடைசி வரி என்னை கண்கலங்க வைத்தது. சபாஷ். வாழ்த்துக்கள்.

 17. இப்போதுதான் முதல் முறை வாசிக்கிறேன்.
  மிகவும் அருமையான பதிவு.

 18. ஆஹா போடவைத்த நிகழ்வு. உண்மைச்சம்பவமாக இருப்பினும் அதைச்சொன்ன விதம் அற்புத சிறுகதையை வாசித்த அனுபவத்தைக் கொடுத்தது.

 19. சார் சிலருக்குத்தான் இறைவன் பிரச்சினைகள் இருக்கும் இடத்தையும் கூறி அதை தீர்க்க கூடிய வாய்ப்பையும் தருகிறான், அப்படிப்பட்ட அற்புதமான அனுபவம். ஒரு அழகான சிறுகதையாக மனதை உருக்குகிறது. உங்கள் சேவை என்றும் தொடரவேண்டும்.

  1. இறை நம்பிக்கை இல்லை நண்பா!
   மானுடத்தின் மீதான நம்பிக்கை மிக அதிகம்! அதுவே இந்த ஒற்றைப் புள்ளியில் நம்மையெல்லாம் இணைக்கிறது!
   உங்கள் பாராட்டுக்கு நன்றி!

 20. நீங்கள் விவரித்த விதம் ரொம்ப நன்றாக இருக்கிறது ,மேலும் பின்னூட்டத்தில் வந்த மதுரை திரு.சோமு அவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியும் மனதை கவர்ந்தது.

 21. தேர்த்தெடுத்த வார்த்தைகள். நல்ல எழுத்து.

 22. மனித நேயம் இன்றும் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்பதை உங்கள் நினைவுகள் உணர்த்தின. உங்கள் மனித நேயத்திற்கு என் வணக்கங்கள்.

 23. கோவிலில் அர்ச்சகர் அர்ச்சனை செய்து முடிக்கும் போது அவசரமாய் சட்டைப்பையை துழாவி நாம் சில்லறையை எடுக்க முயலுகையில், திடீரென அவர் நமக்கும் முன்னமே எதையும் எதிர்பார்க்காமல் நம் கையில் திணித்துவிட்டு நகரும் துளசியின் வாசம், அந்த பத்துரூபாய் நோட்டில் இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன். எல்லோரும் வாழ்நாளை வாழ்கிறார்கள். சிலர் மட்டுமே வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

 24. நண்பரே,
  உங்கள் முகம் தெரியாது – ஆனால் இப்போது தெரிந்துவிட்டது : மனிதம்!
  நீங்கள் சந்தித்த தருணங்கள் எனக்கும் பல நேரங்களில் நிகழ்ந்துள்ளது. ஒரே வரியில் சொல்வதென்றால்…
  ‘ஆதியில் வார்த்தை இருந்தது, அதில் தேவன் இருந்தார்..’ என்ற பைபிள் வாக்கைப்போல், ‘ஆதியில் அன்பு இருந்தது; இன்றும் இருக்கிறது..’
  வேறென்ன சொல்ல!
  நன்றி,
  சேஷையா ரவி

  1. நன்றி! நம்மில் சிலரேனும் தொடர்ந்து மானுடத்தின் மீதான நம்பிக்கை இழக்காமல் இருந்தால் போதுமானது!
   அத்தனை சுலபமாக, சுயநலவாத கிருமிகள், இத்தனை பெரிய வெற்றிடத்தை நிரப்பி விட முடியாது!
   வாழ்த்துக்கு நன்றி!

 25. \\இறை நம்பிக்கை இல்லை நண்பா!\\… ஆனால் இறைவனுக்கு உங்கள் மீது அதீத நம்பிக்கை சார்..

 26. மிக அருமையான கட்டுரை. மனிதர்களை ஒருவருக்கொருவர் பிணைப்பதே இந்த மிக மெல்லிய இழைதான். அதுதானே அறமும் கூட!
  இந்த கட்டுரை நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகிறது. மிக்க நன்றி.
  நரேன்.

 27. Sir,
  very nice article. i like your flow of words.
  keep on writings.
  thanks
  Sivaraman
  Riyadh

 28. வணக்கம்.
  நண்பர் ஜெயமோகன் இக்கட்டுரைக்கான சுட்டியைக் கொடுத்திருக்காவிட்டால், இப்படி ஓர் அருமையான வாசிப்பனுபவத்தை இழந்திருப்பேன். நெகிழ்ந்தேன், கலங்கினேன் என்றெல்லாம் சொல்லத்தான் வேண்டுமா? சிலசமயம் அனுபவங்கள், சிறுகதையாகவே நிகழ்ந்துவிடுகின்றன என்று ஜெயமோகன் சொல்லியிருப்பது எத்தனை பெரிய உண்மை!
  சுகா

  1. எனது ப்ரியத்துக்குரிய எழுத்தாளரான நீங்கள் என்னை பாராட்டுவது பெரு மகிழ்ச்சியளிக்கிறது எனக்கு!
   நன்றி!

 29. மிகவும் அருமையான பதிவு உங்களின் முடிவு எடுக்கும் திறனுக்கு ஒரு உதாரணம் இந்த பதிவு என்று நினைக்கிறேன்

 30. In te,mples, the archakars generally expect donations from us, for performing an Arthi. In famous temples such as Madurai, unless you show some Gandhi note, you wont even get a darshan. In MAduranthakam Aeri katha ramar temple, there was a priest in the Ramanujar Sannathi, aged around 75, 10 years back. He will not only perform full arthi, also explain the significance of the Small Krishna on the Unjal, worshipped by Sri Ramanujachariyar. He will also perform neivedhyam of Kalkandu or dry fruits, purchased from his own pocket.
  In the world of money mongering, it is these people that make the world lively and interesting. The old lady might have forgotten you, but you will not forget that “Ten Re note”, and after this, we will not forget you and your story..
  Hats off.

 31. கடவுளின் goodbook கில் நீங்கள் இருக்கிறீர்கள் .

 32. //எனது கையில் வியர்வை நனைந்த பத்து ரூபாய் நோட்டு ஒன்றினை வைத்துச் சென்றார்.// கண்ணீரை வரவைத்துவிட்டது. இதை சிறுகதை ஆக்குங்கள் அண்ணா.உங்களைப் போன்ற மனிதர்களைப் பார்க்கும்போது இந்த மனிதத்தின் மீதான என் நம்பிக்கை அதிகரிக்கிறது.தொடர்ந்து இதுபோன்ற நினைவுகளை பதிவு செய்யுங்கள்…

 33. மிக நெகிழ்ச்சியான பதிவு. அந்த பத்து ரூபாய் மிக மதிப்புடையது .. எளிய மனிதர்கள் உயர்ந்தவர்களாகவே இருக்கின்றனர்

Comments are closed.