கனவுத் தொழிற்சாலை நோக்கி…

ரசனை என்பது விருப்பம் சார்ந்தது. ஆனால், விருப்பம் என்பது அறிவு சார்ந்தே இருக்கிறது.
நமது இளைஞர்களின் ரசனை சார்ந்த விஷயங்கள் மிகக் குறுகிய வட்டத்தினுள் இருப்பதாக உணர்கிறேன். முக்கிய காரணம், அவர்கள் முன்னே கொட்டிக் கிடக்கும் பல்வேறு தரமான பிற விஷயங்களைப் பற்றி அவர்களுக்குத் தெரியாததுதான்.
உதாரணத்துக்கு தமிழகத்தின் பொது ரசனைத்தளமான சினிமாவை பார்ப்போம். நம் இளைய தலைமுறையின் ரசனை என்பது அதிகபட்சம் அஜீத் vs விஜய் என்பதாகத்தானே இருக்கிறது. ஒரு சில அற்புதமான இளைஞர்களைத் தவிர மற்ற யாருக்கும், இதைத் தாண்டி சினிமாவைப் பற்றித் தெரியவில்லை.
எங்கள் கல்லூரி மாணவர்கள் சிலர், குறும்படம் எடுப்பதற்காக அனுமதி கோரி என்னிடம் வரும்போது அவர்களிடம் பேசிப் பார்த்தேன். அவர்களுக்கு ஆர்வம் இருக்குமளவிற்கு சினிமாவிற்கான அடிப்படை தெரிந்து வைத்திருக்கிறார்களா என்று கவனித்தேன். அந்த அறிவை மேலும் செறிவூட்ட, கல்லூரியிலேயே திரைப்படக் கழகம் ஒன்றினைத் துவக்கி, அவர்களுக்கு வழிகாட்டுவது என முடிவெடுத்தேன்.
பொறியியல் கல்லூரியில் சினிமா பயிற்சி பட்டறையா? அதுவும் நிர்வாகமே முன்னின்று நடத்துவதா? என்று கேள்வி எழுப்புபவர்களின் வாதிட என்னிடம் ஒன்றுமில்லை. கல்லூரி என்பது மாணவர்களுக்கு ஆர்வமுள்ள எல்லாத் துறையினையும் பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்புகளைத் தரும் இடமாக இருக்க வேண்டும் என்பது எனது எண்ணம்.
எனது மதிப்புற்குரிய நண்பரும், இந்தியாவின் மிகச் சிறந்த இயக்குநருமான பாலுமகேந்திரா, சினிமாவை பள்ளி, கல்லூரிகளில் கட்டாயப் பாடமாகவே வைக்க வேண்டும் என்ற கருத்தினை நீண்ட நாட்களாக சொல்லி வருகிறார்.
நான் அதை விருப்பப் பாடமாக மட்டுமே பரிந்துரைக்கிறேன். அதுவும், திரைப்படங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும்.
மேலும், திரைப்படம் என்பது, பல்வேறு திறமைகளை கோரும் ஒரு ஊடகம். அதற்கான தயாரிப்பும், உழைப்பும் இல்லாமல் அதில் வெற்றி பெற இயலவே இயலாது. வணிகத் திரைப்படம் மட்டுமல்லாமல், குறும்படங்கள், ஆவணப் படங்கள் என எத்தனையோ வழிகள் நமது இளைஞர்கள் வெல்வதற்கு காத்திருக்கிறது.
அதற்காக, முதல்கட்டமாக, திரைப்படக் கழகம் துவக்க விழா மற்றும் அதன் தொடர்பான சில பயிற்சி பட்டறைகளை நடத்த உத்தேசித்துள்ளோம். மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சிகள் இவை. தகுதியுள்ள பலர் பேச இருக்கின்றனர்.
விடுமுறை நாட்கள் என்றாலும், மாணவர்களின் விருப்பப் பாடமாயிற்றே சினிமா! ஆகவே, ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் தவறாது வந்து இரு நாட்களும் கலந்து கொண்டு சினிமா என்னும் கனவுத் தொழிற்சாலையின் அடிப்படைகளை அறிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
உங்கள் உடன் நானும் இருப்பேன்…..

5 thoughts on “கனவுத் தொழிற்சாலை நோக்கி…

 1. நீங்கள் சொல்வது சரிதான், நம்மில் பலரது ரசனை மிக மோசமாகத்தான் உள்ளது. இது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கட்டும். அதே சமயம் திரைப்படத்தைத் தவிர, இலக்கியம், இசை, ஓவியம் என்று பிற கலைகளுக்கும் ஏதாவது செய்வீர்கள் என்று நம்புகிறேன்.
  வாழ்த்துக்கள் கருணா!

 2. Hello Sir,
  Is it possible for others from near by places (like Vellore) to participate, with a fee?
  May be this is not a right place to ask. Kindly adjust.
  Thanks,
  Prabhu.

  1. I will ask the student president of that club to post all the contact details in our website soon.
   I don’t see any problem in your request as all the programs are held in saturdays.
   Good luck.

 3. சார் ரொம்ப சந்தோஷம் . இது போல உங்களது கல்லூரியில் எழுத்தாளர் மற்றும் சூழலியல் ஆர்வமுள்ளவர்களுக்கும் ஒத்தாசை செய்ய ஏதேனும் clubs இருகிறதா ?

Comments are closed.