நாகரீக சிவில் சமூகம்.

நாகரீக சிவில் சமூகம்

நாகரீக சிவில் சமூகத்தில் மரண தண்டனை கூடவே கூடாது!
முழுமையாக ஒப்புக் கொள்கிறேன்.
ஒரே ஒரு சந்தேகம்தான்.
அப்படியானல் கொடும் குற்ற செயல்கள் புரியும் குற்றவாளிகளை என்ன செய்வது?
மன்னிப்போம்! மறப்போம்! அடுத்தக் கட்டத்துக்கு முன்னேறுவோம் என்று மகாத்மா சொன்னதைப்
போல செய்து விடலாமா?
அத்தனைப் பெருந்தன்மையும், ஞானமும் இருக்கும் நாட்டில் நீதிமன்றங்களுக்கும், காவல்துறைக்குமே வேலையிருக்காதே?
மரண தண்டனையை கடுமையாக எதிர்க்கும் பலரும் அதற்கு மாற்றாக சொல்வது என்ன?
மரண தண்டனை தரும் அளவிற்கு குற்றம் புரிந்தவர்களுக்கு தூக்கு தண்டனையைத் தவிர்த்து அதற்கு பதிலாக ஆயுள் தண்டனை அளிக்கலாம் என்பதுதானே!
மரண தண்டனையை ஒழித்துவிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட முன்னேறிய நாடுகளும் இப்படித்தான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது மரண தண்டனை எதிர்ப்பாளர்களின் வாதம்.
ஆனால் அதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஒன்றுள்ளது! அங்கெல்லாம் ஆயுள் தண்டனை என்றால், குற்றவாளிகள் சாகும்வரை சிறையிலிருந்து வெளியில் வர முடியாது என்று அர்த்தம்.
மாறாக இங்கே என்ன நடக்கிறது?
தாங்கள்தான் இந்தக் கொலைகளை திட்டமிட்டு செய்தோம் என்று நீதிமன்றத்தில் சரணடையும் கூலிப் படையினர்கூட, வழக்கின் இறுதியில் ஆயுள் தண்டனையே பெறுகின்றனர். அதுவும், சிறையில் இருக்கும் காலத்தில் தங்களின் நன்னடைத்தைக்காக (!) தண்டனைக் குறைப்பும் பெறுகிறார்கள். அதிகபட்சம், ஆறு அல்லது ஏழு வருடங்களில் விடுதலையாகி வெளியில் வந்து, மீண்டும் கூலிக்கு படுகொலைகள் செய்கிறார்கள்.
அப்படியான, அர்த்தமற்ற ஆயுள் தண்டனையை நான் ஏற்றுக் கொள்ளவில்லை!
“மரண தண்டனைக்கு மாற்றாக ஆயுள் தண்டனை இருக்க முடியுமென்றால், அது இப்படி சாகும்வரை சிறையிலிருப்பதைப் போன்று இருக்க வேண்டும்”.
அதுமட்டுமல்ல! அந்த நாடுகளில், ஆயுள் தண்டனைக் குற்றவாளிகளுக்கென தனி சிறைச் சாலைகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்ட அந்த சிறைகள் பொதுவாக அடர்ந்த காட்டுக்குள்ளோ அல்லது தனித் தீவிலோ அமைக்கப் பட்டிருக்கும். அங்கு அடைக்கப் பட்டிருக்கும் கைதிகள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளக் கூட கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளது. மீறினால், வாரக்கணக்கில், மாதக்கணக்கில் ஏன் வருடக்கணக்கில்கூட அவர்கள் தனிமைச் சிறையில் அடைக்கப் படுவார்கள்.
இனி உயிருடன் இந்த சிறையை விட்டு நாம் வெளியில் செல்ல முடியாது என்ற சிந்தனையே அவர்கள் விழித்திருக்கும் ஒவ்வொரு நொடியிலும் அவர்களை கொன்று கொண்டிருக்கும்.
அந்த சிறைகளில் இருப்பவர்களில் பெரும்பாலோனோர் மனநிலைப் பிழன்ற நிலைகளில் இருக்கிறார்கள் என்கிறது அங்கு பணிபுரிந்து ஓய்வுபெற்ற சிலரின் ஆதாரப்பூர்வ ஆவணங்கள். அந்தக் கைதிகளில் யாரை அழைத்து மரணதண்டனை தருகிறேன்! ஏற்றுக் கொள்கிறாயா என்று கேட்டால், உங்களின் கால்களில் விழுந்து தன்னைக் கொன்றுவிடுமாறு கெஞ்சுவார்களாம்!
அந்த நாட்டு மனித உரிமை போராளிகளும் இத்தகைய சிறைச்சாலைகளை எதிர்ப்பதில்லை. அப்படிப்பட்ட சிறைச்சாலைகள் நமது நாட்டிலும் அமைக்கப்படும் பட்சத்தில், மரண தண்டனைக்கு பதிலாக ஆயுள் தண்டனையளிக்கலாம் என்பது என் கருத்து.
சிங்கப்பூரை பாருங்கள்! மலேசியாவைப் பாருங்கள்! மற்ற முன்னேறிய பல நாடுகளைப் பாருங்கள்! அங்கெல்லாம் எப்படி ஊழல் அற்ற மக்கள் நல அரசுகள் இருக்கின்றன என்று கூச்சலிடுபவர்கள், அந்த நாடுகளில் நடைமுறையில் இருக்கும் குற்றங்களுக்கான தண்டனைகளையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்!
நாகரீக சிவில் சமூகம் என்பது ஒட்டு மொத்த சமுதாயத்தையும் குறிக்கக் கூடிய வார்த்தையாகும்.
இங்கு, வெறும் ஆறாயிரம் ரூபாய்க்காக கொலை செய்யும் ஆட்கள் இருக்கிறார்கள். மதத்தின் பேரில், சாதியின் பேரில், மொழியின் பேரில், கட்சியின் பேரில், ஏன் கடவுளின் பேரில்கூட கொலைகள் செய்ய இங்கு ஆட்கள் உருவாக்கப் பட்டிருக்கின்றனர்.
வேறு நாட்டிலிருந்து நமது நாட்டுக்குள் வந்து, எந்த ஒரு அதிகார மையத்தின் மீதும் தாக்குதல் நடத்தாமல், இரயில் நிலையத்திலும், தெருக்களிலும் நடந்து கொண்டிருந்த அப்பாவி பொதுமக்களின் மீது இயந்திரத் துப்பாக்கியால் தாக்குதல் நடத்திட்ட தீவிரவாதிகள், பிடிபட்டாலும் கூட, அவனுக்கு ஆயுள் தண்டனை கொடுத்து, ஒரு நாகரீக சிவில் சமூகம் பராமரிக்க வேண்டுமா?
பின்னாளில் யாராவது நமது நாட்டு விமானத்தையோ, கப்பலையோ கடத்தி பணயமாக வைத்துக் கொண்டு, இவனை விடுவிக்கக் கேட்டால், பத்திரமாக அனுப்பி வைக்கவும் வேண்டுமா?
ஒரு வீட்டில் ஓட்டுநர் வேலைக்கு ஒருவன் சேர்கிறான். பின் ஒரு நாளில், தனது கூட்டாளியுடன் சேர்ந்து கொண்டு, பள்ளிக்கு செல்லும் அந்த வீட்டுக் குழந்தைகளை கடத்துகிறான். அந்த சின்னஞ் சிறிய மொட்டை அவளது தம்பியின் கண்முன்னே கற்பழித்து, பின் அவர்கள் இருவரையும் கொலை செய்து அங்கிருக்கும் கால்வாயில் வீசி எறிந்து விடுகிறான்.
இந்த குற்றவாளிகளை சட்டம் தனது கருணைக் கண் கொண்டு பார்த்து, மரண தண்டனையைத் தவிர்த்து, அவர்களின் மனித உரிமைகளையும் மதித்து, அவர்களுக்கு சிறையில் முட்டை, கோழிக் குழம்பு கொடுத்து, முதல் வகுப்பில் வைத்து பராமரிக்க வேண்டுமெனில், இந்த நாகரீக சிவில் சமூகம் நாசமாகப் போகட்டும்!
வேட்டையாடு விளையாடு என்ற திரைப்படத்தில் ப்ரகாஷ்ராஜ், கமலிடம் பேசும் வசனம் ஒன்று!
“என் மகள் என்பதற்காக சொல்லவில்லை! இப்படி ஒரு பெண்ணை கற்பழித்து கொலை செய்துவிட்டு, குற்றவாளிகள் எங்கோ சிரித்துப் பேசிக் கொண்டிருப்பார்கள் என்பதைத்தான் என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை” என்று சொல்லிக் கொண்டு கதறி அழும்படியான காட்சி ஒன்று வரும்.
நமது நாகரீக சிவில் சமூகத்தின் மனசாட்சியின் குரல் அதுதான்!
சென்ற வாரத்தில் ஒரு நாள், ஆளும் கட்சியின் மாணவர் அணி செயலாளர் ஒருவரை கூலிப் படை கும்பல் வெட்டிக் கொலை செய்தது. திட்டமிட்டு செய்யப்பட்ட அந்த கொலையின்போது, உடன் இருந்த அவரது பதிமூன்று வயது மகனையும், ஒன்பது வயது மகளையும் சேர்த்து, பெரும் வன்மத்துடன் அந்த அரிவாள்கள் வெட்டியுள்ளன!
வாங்கிய காசுக்கு இலவச இணைப்பாக அந்த பிஞ்சு குழந்தைகளையும் அரிவாள்களால் வெட்டிக் கொலை செய்யத் துணிந்த குற்றவாளிகள் இருப்பதுதான் இந்த நாகரீக சிவில் சமூகம்.
ஆண்டவரே! இவர்களை மன்னியும். இவர் தாம் செய்வது என்ன என்று அறியாமல் செய்கின்றனர்! இவர்களையும் இரட்சித்து ஏற்றுக் கொள்ளுங்கள்! என்று சொல்ல பாதிக்கப்பட்ட எந்த ஒரு குடும்பத்திலும் ஒரு இயேசு பெருமான் இருக்க வாய்ப்பில்லாத நாகரீக சிவில் சமூகம் இது!
அடுத்து தூக்குக்காக, கொட்டடியில் காத்திருக்கும் பட்டியலின் நீளம் பெரிது.
அப்ஸல் குரு, முருகன், சாந்தன், பேரறிவாளன் என்றுத் துவங்கி பச்சிளம் குழந்தைகளை கடத்தி,கற்பழித்து கொலை செய்தவர்கள்,உணர்ச்சி வேகத்தில் சுற்றுலாப் பேருந்துக்கு தீயிட்டு, உயிருடன் கல்லூரி மாணவிகளை எரித்தவர்கள் என அப்பட்டியல் நீண்டு கொண்டே போகிறது!
பொதுவாகவே நமது நீதி வழங்கல் முறையில் பல குறைகளும் இருக்கின்றன. குறிப்பாக குற்ற செயல்களுக்கு மிகத் தாமதமாக வழங்கப் படும் நீதியினை சொல்லலாம்!
எனவே சில நேரங்களில் உண்மையான குற்றவாளிகள் தப்பிக்கவும், அப்பாவிகள் தண்டனை பெறவும் இங்கே வாய்ப்புகள் இருக்கின்றன.
ஆகவே.. இந்தக் குறைபாடுகளுக்காக, நானும் மரண தண்டனையை எதிர்க்கிறேன்.
ஆனால், கொடிய குற்றங்களுக்காக ஆயுள்தண்டனை பெற்றவர்களை, அவர்களின் ஆயுள் முழுக்க, கடும் பாதுகாப்பான சிறையில் அடைத்து வைக்கும் தண்டனையைத் தர முடியுமென்றால் மட்டுமே!

10 thoughts on “நாகரீக சிவில் சமூகம்.

 1. சிறப்பான ஆய்வு , நல்ல படிபினை மனித உயிர்களை காகிறோம் என்று பிதற்றும் மனித உரிமை கழக அரிவிளிகலுக்கு

  1. கஷ்டப்பட்டு தமிழில் டைப் செய்யக் கற்றுக் கொண்டு பின்னூட்டம் போட்டதற்கு பாராட்டு! ஆனால், உன்னிடம் இன்னம் கொஞ்சம் (பிழையில்லாத் தமிழை) எதிர்பார்க்கிறேன்!

 2. தண்டனை கடுமையாக கொடுதால் மட்டுமே தவறுகள் குறையும்.

 3. இரண்டு முக்கியமான விஷயங்கள்
  1. ‘அதிகபட்ச’ கட்டுப்பாடுகளோடு கூடிய ஆயுள்தண்டனை, மரண தண்டனையிலும் கொடிய தண்டனையாக முடியும் என்பது சரியான பார்வை. அதை முறையாகச் செயல்படுத்துப்படி, வலுவான சட்டங்கள் அமைய வேண்டும்.
  2. இந்தியாவில் காவல்துறையும், நீதித் துறையும் முழு மறுசீரமைப்பு தேவைப்படும் அமைப்புகள். அவற்றில் புரையோடிப் போயிருக்கும் ஊழலும், அதிலும் குறிப்பாக, ஊழல் தவறில்லை என்ற மனோபாவமும் வேறெங்கும் காணக் கிடைக்காத பெருங்கொடுமை. இந்த இரண்டு ஆதார அமைப்புகளை, தயவு தாட்சணையின்றி, இரும்புக் கரம் கொண்டு மறுசீரமைக்கக் கூடிய தலைவர்களே இந்தியாவின் உடனடித் தேவை!

 4. ஒருவன் நல்லவனாக இருப்பதற்கும் தீயவனாக இருப்பதற்கும் இந்த சமூகமும் ஒரு காரணம்……ஒரு சிறுமியை வன்புணர்ச்சி செய்யும் அளவிற்கு ஒருவன் செல்கிறான் என்றால் நமது அடிப்படையிலே மிகப் பெரிய தவறு இருக்கிறது…..அந்த தவறை சரி செய்யாமல் என்ன தண்டனை கொடுத்தாலும் பயனில்லை…..

  1. நண்பரே,
   உங்களின் கருத்து ஷாக்கிங் ஆக இருக்கிறது.
   மனிதனின் எல்லாத் தவறுகளுக்கும், ஆசைகளுக்கும், அதிகாரத்திற்கும், அத்துமீறல்களுக்கும் சமூகத்தை குறை சொல்லிக் கொண்டே இருக்கலாம்.
   சமூதாயத்தை சரி செய்யும் பணிகள் இயேசு பிறப்பதற்கு முன் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
   மேலும், அந்தச் சிறுமியும் இந்த சமுதாயத்தை சேர்ந்தவள்தானே?
   எனது கருத்தில் மாற்றம் இல்லை.
   மரண தண்டனை வேண்டாம் என்றால், இது போன்ற கடும் குற்றங்களுக்கும் ஆயுள் வரை கடுங்காவல், தனிமைச் சிறை தரப் படவேண்டும்.
   திருந்தி வாழ இன்னொரு வாய்ப்பு கொடுப்பது மிகவும் தவறாக முன்னுதாரணம்.
   தொடர்புக்கு நன்றி.

 5. உங்கள் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் நூற்றுக்கு நூறு ஏற்புடையதே. சராசரி மனித மனங்களை தட்டி எழுப்பும் வரிகள்.ஜெயமோகன் அவர்களின் லிங்க்கில் இருந்து உங்கள் வெப்சைடை சமீப நாட்களாக படித்து வருகிறேன்.உங்களுக்கும் எனக்குமான பொதுவான நண்பர்கள் மூலம் நீங்கள் நல்ல வாசிப்பாளர்,சிந்தனையாளர் என்று கேள்விப்பட்டேன்.ஆனால்,உங்கள் பின்புலத்தின் தெரிதலில் தயங்கி இருந்தேன்.தொடர்ந்து உங்களை படித்ததில், என் தயக்கத்திற்காக வெட்கப்படுகிறேன்.!

  1. எனது நண்பர் பவா.செல்லதுரை அடிக்கடி இதை சொல்வார்!
   “பலர் உங்களை, நிறைய விஷயத்தில் பாராட்டி சொல்கிறார்கள்.ஆனால், அதை உங்களிடன் சொல்லத் தயங்குகிறார்கள்” என்பார்!
   உண்மைதான் போலிருக்கு!
   பாராட்டோ! கண்டனங்களோ! யாரோ நாம் எழுதுவதை படிக்கிறார்கள் என்னும் எண்ணமே, தொடர்ந்து எழுதத் தூண்டும்.
   நன்றி!

Comments are closed.