புத்தாண்டு பரிசு..

 
புத்தாண்டு பரிசாக எனது கல்லூரியின் பேராசிரியர்களுக்கு சமீபத்தில் ஜெயமோகன் எழுதி வம்சி புக்ஸ் வெளியிட்ட அறம்புத்தகத்தை இன்று பரிசளித்தேன். எங்கள் பொறியியல் கல்லூரியில் பேராசிரியர்களாக பணிபுரியும் தமிழ் மொழி அறியாத வெளிமாநிலத்தவர்கள் ஒரு சிலரை தவிர்த்து மற்ற அனைவருக்கும் ஏறக்குறைய 250 புத்தகங்களை ஒரே நேரத்தில் பரிசாக அளித்தது, எனக்கு பேருஉவகை அளித்தது என்றே சொல்ல வேண்டும்.
எங்கள் பொறியியல் கல்லூரியின் பேராசியர்களில் பலர் தத்தம் துறையினில் ஆராய்ச்சியினை மேற்கொண்டு பி.எச்.டி முடித்தவர்கள். பல ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியர்களாக பணி புரிகிறவர்கள், இளைஞர்கள், மணமானவர்கள், தற்போதுதான் படிப்பினை முடித்து விட்டு, புதிய கனவுகளோடு பணியினில் சேர்ந்தவர்கள், மணமாகாத ஆண்கள், பெண்கள் என அத்தனை பேருக்கும் நான் அளித்த ஒரே பரிசு புத்தகம்.
ஜெயமோகனின் இந்த அறம் புத்தகம், இவர்கள் அனைவருக்குமே ஒவ்வொரு விதமான மன எழுச்சியினை அளிக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். இவர்களும், என்னைப் போலவே ஏதோ ஒரு விதத்தில் இந்த புத்தகத்தில் வரும் கதைகளில் தம்மை பொருத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
இத்தனை பேரில், மிகக் குறைந்த சதவீதம் பேர் படித்து, அதிலும் ஒரு சிலருக்கு மட்டுமே இந்த கதைகள் பிடித்திருந்தாலும் எனக்கு சம்மதமே. இலக்கியம் என்றொரு அற்புத உலகின் வாசலை இவர்களில் ஒரு ச்ிலருக்கேனும் திறந்து விட்டதில் எனக்கு மகிழ்ச்சி.
இவ்வளவு பேருக்கு ஒரு புத்தகத்தை பரிசாக கொடுக்கும் போது, இந்த குறிப்பிட்ட புத்தகத்தை ஏன் தேர்வு செய்தீர்கள் என்று உங்கள் பேராசிரியர்களுக்கு ஒரு சிறிய கட்டுரையாக எழுதிக் கொடுங்கள்! அதை நான் இந்த புத்தகத்திலேயே இணைத்து தருகிறேன் என்று எனது நண்பர்கள் பவா செல்லதுரையும், ஷைலஜாவும் கூறினார்கள். அதன்படி, நான் எழுதி, புத்தகத்தில் இணைக்கப் பட்டிருக்கும் எனது அறிமுக உரையினை கீழே கொடுத்திருக்கிறேன்.
அனைவருக்கும் எனது அன்பான புத்தாண்டு வாழ்த்துகள்.

எனது அறிமுக உரை:
மீண்டும் ஒரு புத்தாண்டின் தொடக்கத்தில் நாம் நிற்கிறோம். என்ன விலை கொடுத்தாலும் கடந்து போன நாட்களை நம்மால் மீண்டும் திருப்பி கொணர இயலாது. அதே போல் எதிர் வரும் நாட்களில் நமக்கான எந்த இரகசியத்தை காலம் ஒளித்து வைத்திருக்கிறது என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடியாது. இடையில் இருப்பது இந்த நொடி ஒன்று மட்டுமே. இந்த ஒரு நொடிக்கான வாழ்க்கையை நாம் எந்த மாதிரியான வாழ்க்கையாக அமைத்துக் கொள்ளப் போகிறோம் என்பதே, எதிர்காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதற்கு சாட்சியாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.
வெற்றிகரமான வாழ்வாக நாம் கருதுவது, வசதியான வாழ்க்கையை மட்டுமே. தேவைகள் எப்போதுமே இருந்து கொண்டே இருக்கும் நமது வாழ்க்கையில், எப்போதும் எதன் பின்னாலோ ஓடிக் கொண்டே இருப்பதே நமது வாடிக்கையாக இருக்கிறது. அப்படி, தேடிப் பெறும் எதுவுமே, அதை விட இன்னொன்றை நமக்கு ஒரு புதிய இலக்காக நிர்ணயத்துக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது இலக்குகள் மாறுகிறதே தவிர எப்போதுமே ஓட்டம் நிற்பதில்லை. நம் வாழ்நாள் முழுமைக்குமான ஓட்டம் அது.
பொருள் சார்ந்த வாழ்க்கையோ, புகழ் சார்ந்த வாழ்க்கையோ அளிக்காத மனநிறைவை, அறம் சார்ந்த வாழ்க்கை கொடுத்து வருகிறது. அதற்கு சான்றாக, மகாத்மாவையோ, சுபாஷ் சந்திர போஸையோ, பகத் சிங்கையோ காட்டுவதை விட, நமக்கு அருகில் வாழ்ந்த, நாம் அறிந்து கொள்ள மறந்த எளிய உண்மை மனிதர்களை காட்டுகிறது இந்த அறம் புத்தகம்.
இந்த புத்தகத்தில் உள்ள பன்னிரெண்டு கதைகளில் எனக்கு அறம், வணங்கான், யானை டாக்டர், சோற்றுக் கணக்கு, நூறு நாற்காலிகள், கோட்டி, மற்றும் உலகம் யாவையும் போன்ற கதைகள் மிகவும் பிடித்திருந்தன. அதிலும் யானை டாக்டர் என்னை மனதளவில் மிகவும் பாதித்தது. அதில் வரும் டாக்டர் கே போன்ற மனிதரைப் பற்றி இது நாள் வரை அறிந்து கொள்ளாமலே இருந்திருக்கிறோமே என்று மிகவும் வெட்கப்பட்டேன்.
நீங்கள் இந்த புத்தகத்தை படிக்கும் போது, வேறு சில கதைகள் வேறு பல காரணங்களுக்காக உங்களுக்கு பிடித்திருக்கலாம். உண்மை மனிதர்களின் கதைகளாகிய இவைகள் கண்டிப்பாக ஏதேனும் ஒரு இடத்திலாவது நம்மை நாமே ஒரு அகப் பரிசோதனை செய்து கொள்ள தூண்டும். அந்த உணர்வு நமது பண்பாட்டின் தொடர்ச்சி.
நமது வாழ்க்கை பல ஆயிரம் ஆண்டுகளுக்கான வரலாற்றின் தொடர்ச்சி என்பதை நாம் புரிந்து கொள்ள மறுக்கிறோம். நமது வேர் தியாகத்தினாலும், அர்ப்பணிப்பு உணர்வினாலும், கடும் உழைப்பினாலும் தம்மை வாழ்வினில் நிலை நிறுத்திக் கொண்ட பல நூறு எளிய மனிதர்களிடம் இருந்து தொடங்குகிறது. நமது இரத்தத்தின் மூலக் கூறுகள் நமது நிறம், உயரம், எடை போன்ற புறப் பொருள்களை மட்டுமே தலைமுறை, தலைமுறையாக கடத்தி வரவில்லை. இது போன்ற அறம் சார்ந்த அக உணர்வுகளையும் சேர்த்தே கொண்டு வருகிறது என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.
அறம் என்பது புரியாத அர்த்தம் கொண்ட ஒரு பழமையான தமிழ் வார்த்தையல்ல. அது நமது கடமையினை நாம் சரியாக செய்து முடிப்பதை குறிப்பிடுவது. இந்த கதைகளில் வரும் மனிதர்கள் அசாதாரணமான செயல்களை செய்தவர்கள் அல்ல. அவர்களுக்கு சரி என்று பட்டதை, எந்த ஒரு சூழ்நிலையிலும் தவறாமல் செய்து முடித்தவர்கள். இந்த புத்தகத்தின் மூலம் காலம் கடந்தும் வரலாற்றின் பக்கங்களில் நிலை கொண்டு விட்டார்கள்.
ஒரு கல்வி நிறுவனத்தை நடத்தும் பொறுப்பில் இருக்கும் நானும், அங்கு கல்வி பயிற்றுவிக்கும் வாய்ப்பினை நீங்களும் பெற்றிருப்பது ஏதோ ஒரு தற்செயல் என்று நான் எண்ணவில்லை. அடுத்த தலைமுறையினை கட்டி இணைப்பதற்காக காலம் பிணைத்திருக்கும் ஒரு சங்கிலித் தொடர் என்றே நான் நம்மை கருதுகிறேன்.
அறம் சார்ந்த வாழ்க்கை நம்முடையது என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் வாய்ப்பினை வாழ்க்கை நமக்கு எப்போதுமே அளித்து வருகிறது. ஒரே ஒரு இளம் தலைமுறையின் மனதினை நாம் வென்றால்கூட நமது வாழ்க்கை இந்த புத்தகத்தில் வரும் மனிதர்களின் வாழ்வினைப் போல அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இந்த புத்தகம் ஏதோ ஒரு சில உண்மை மனிதர்களைப் பற்றிய கட்டுரை தொகுப்பு மட்டும் அல்ல. தமிழில் இதுவரை எழுதப்பட்ட மிகச் சிறந்த இலக்கியத் தரம் வாய்ந்த கதை வரிசை ஆகும். இதனை எழுதிய ஜெயமோகன் நமது காலத்தின் ஆகச் சிறந்த எழுத்தாளர் என்று எப்போதுமே நாம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.
இந்த கதைகளை நான் படிக்கும் போது, நீங்களும் இந்த கதைகளை தவறாமல் படிக்க வேண்டும் என்று விருப்பப் பட்டேன். இந்த அறம் புத்தகத்தை உங்களுக்கு புத்தாண்டு பரிசாக கொடுப்பதில் எனக்கு ஒரு பெருமிதம் உண்டு. புதிய வருடம் நம் அனைவருக்கும் மிகச் சிறப்பான வருடமாக அமைய எனது வாழ்த்துக்கள்..
உரை நிறைவு.
 
 
 
 
 
 

15 thoughts on “புத்தாண்டு பரிசு..

 1. நெகிழ்ச்சியான நெருக்கமான கட்டுரை , ஒரு விமர்சனம் கூட எழுத முடியுமா என பாருங்கள் அண்ணா

 2. “பொருள் சார்ந்த வாழ்க்கையோ, புகழ் சார்ந்த வாழ்க்கையோ அளிக்காத மனநிறைவை, அறம் சார்ந்த வாழ்க்கை கொடுத்து வருகிறது”.நூற்றுக்கு நூறு சத்தியமான வார்த்தை அதை அனுபவிப்பவர்களுக்குதான் அதன் அர்த்தம் புரியும். அருமையான செயலை செய்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

 3. \\\அறம் என்பது புரியாத அர்த்தம் கொண்ட ஒரு பழமையான தமிழ் வார்த்தையல்ல. அது நமது கடமையினை நாம் சரியாக செய்து முடிப்பதை குறிப்பிடுவது. இந்த கதைகளில் வரும் மனிதர்கள் அசாதாரணமான செயல்களை செய்தவர்கள் அல்ல. அவர்களுக்கு சரி என்று பட்டதை, எந்த ஒரு சூழ்நிலையிலும் தவறாமல் செய்து முடித்தவர்கள். இந்த புத்தகத்தின் மூலம் காலம் கடந்தும் வரலாற்றின் பக்கங்களில் நிலை கொண்டு விட்டார்கள்.\\
  தொகுப்பின் சாரத்தைச் சொல்லிவிட்டீர்கள்.

 4. தங்களின் தமிழ் ஆர்வம் மிகவும் பாராட்டுதலுக்கு உரியது

 5. மிக வித்தியாசமான முயற்சி உங்களுடையது. ஆயிரத்தில் ஒருவருக்கு கூட தோன்றாத எண்ணம் உங்களுக்கு உதித்திருப்பதில் வியப்பேதுமில்லை.இலக்கியம் வளர உங்கள் தோள் கிடைத்திருப்பது மகிழ்ச்சியான நிறைவான தருனமேன்றோ!!! உங்கள் நல்முயற்சிக்கு நான் நம்புகிற இறையவனின்ஆசி கிடைக்க வேண்டுகிறேன்… பணிவுடன் பெருமிதத்துடன் உங்கள் மாணவன்.

 6. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
  புத்தாண்டு வாழ்த்துக்களும்!
  ஒரு வேண்டுகோள்!
  ஒரு ஆறு மாதம் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில்
  இந்த புத்தகம் அவர்களிடம் ஏற்படுத்திய அனுபவங்களை உங்கள் சக பேராசிரியர்களிடம் பகிர்ந்து கொள்ள அழையுங்கள்!
  பிறகு அந்த அனுபவங்களை அவர்கள் அனுமதித்தல் பகிர்ந்து கொள்ளுங்கள்!
  நன்றி!

 7. அன்புள்ள கருணா சார்,
  தங்களின் செயல் போற்றுத்தகுந்தது. ஜெமோவின் கதைகளை நான் இணைய தளத்தில் தொடர்ந்து வாசிப்பதுண்டு. ஜெமோவின் சிறுகதைகள் படிப்பவரை சிந்திக்கவும், அதன்படி செயல்படவும் வைக்கும். சுருங்கக்கூறின் வாழ்விற்கு பயன்படும் பொக்கிஷம். அறம் நூல் பரிசு பொருத்தமாகதான் உள்ளது. தங்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
  அன்புடன்,
  அ. சிவராமன்,
  தமிழ் நாடு மின்வாரியப் பொறியாளர்.
  திருவண்ணாமலை.
  (தற்போது) சவுதி அரேபியா.

 8. அன்பு நண்பருக்கு
  வணக்கம். வழக்கமான வலைதல மேய்தலின் போது தங்களின் வலைதளத்தை பார்வையிட நேர்ந்தது. அறம் கதை நூலாக வெளிவருவதற்கு முன்பே அதனை ஜெயமோகன் அவர்களின் இணையதளத்தில் சென்று படித்தவன் நான். அப்போது எனக்குப் பிடித்தவையாக இருந்த கதைகள் என்று என் நினைவில் இன்றும் நிற்பது அறமும், யானை டாக்டரும் தான். அறம் கதை குறித்த விமர்சனத்தை ஜெயமோகன் அவர்களிடம் நேரடியாகவே பதிவிட்டிருந்தேன். யானை டாக்டர் என் மனத்தை நெகிழ வைத்ததைப் போன்று தான் தங்கள் மனத்தையும் நெகழ வைத்திருக்கிறார் என்பது தங்கள் உரை மூலம் தெரிந்தது. உண்மையில் பரிசளிப்பதற்கு ஏற்ற நூல். எப்பேர்பட்டவரையும் ஒரு நிமிடமேனும் கண்ணீர் சிந்தத் தூண்டும் கதைகள் என்று சொன்னால் மிகையில்லை. பொறியியல் கல்லூரியில் இலக்கிய சிந்தனையுடன், மனிதாபிமான சிந்தனையும் ஒருங்கே பெற்று விளங்கும் தங்களைப் போன்றவர்கள் மிகவும் அரிதானவர்கள். வாழ்த்துக்கள். வளர்க தங்கள் தொண்டு.
  கோ.சந்திரசேகரன்
  சென்னைநூலகம்.காம் (chennailibrary.com)
  கௌதம் பதிப்பகம் (gowthampathippagam.com)

 9. ஒரு சொல்லும் வீணாக சொல்லப்படவில்லை. அறம் என்பது பழைய தமிழ் வார்த்தை என்ற அளவில் மட்டுமே நமக்கு தெரிந்திருப்பது வியப்பு தான். அறம் வரிசை கதைகள் தான் நான் படித்த ஜெயமோகனின் முதல் கதை முதல் பதிவு. ஒரு ஆக சிறந்த படைப்பாளியின் ஆகச் சிறந்த படைப்பும் இதுவே என்று நான் நினைக்கிறேன்.
  நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கதையும் எனக்கு மிகவும் பிடித்தமான படைப்பு.
  அதை இவ்வளவு பெரிய அளவில் மற்றவர்க்கு அளித்திருப்பது பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது…
  இதுவும் ஒரு அறச் செயலே !

 10. தங்கள் கல்லூரியில் நடைபெரும் ஒவ்வொரு நிகழ்விற்கும் இதேபோன்ற தேர்ந்த-சிறந்த புத்தகங்களைக் கொடுத்து,வாசிக்கும் பழக்கத்தை தூண்டிவிடுங்கள்.அது ஆகச்சிறந்த இலக்கிய வாசிப்பிற்கான வாசலைத் திறப்பதோடு,சரியான இலக்கியத்திற்கான தடத்தையும் கண்டடைய துணைபுரியும். வாழ்த்துக்கள்!
  எம்.எஸ்.ராஜேந்திரன் .திருவண்ணாமலை (தற்போது சென்னை)

Comments are closed.