மீண்டும் கட்டுரைத் தொடர்..

 
மீண்டும் கட்டுரைத் தொடர்..
ஆகஸ்டு மாதம் கடைசியாக தங்கமீன் கட்டுரை எழுதி வெளியிட்ட பிறகு, புதிதாக எதுவும் எழுத வில்லை. செப்டம்பர் மாதம் முழுவதும் வெளிநாடு சென்றிருந்தேன். இருந்தாலும், இடைப் பட்ட இந்த நாட்களில் ஏறத்தாழ 5000 முறை யாரேனும் எனது இந்த வலைத்தளத்திற்கு வந்து பார்வையிட்டு சென்றுள்ளனர். புதிதாக ஏதும் எழுதாதது அவர்களுக்கு ஏமாற்றமாகக் கூட இருந்திருக்கலாம். நேரிலும் என்னை பார்ப்பவர்கள் என்ன? புதிதாக எதுவும் எழுதவில்லையா? என்றும் கேட்கிறார்கள்.
இடையில், என்னை ஆச்சர்யப் படுத்தும் சில விஷயங்களும் நடந்தன. குமுதத்தில் பணியாற்றும் எனது நண்பர் தளவாய் சுந்தரம், அவர் கூடுதல் பொறுப்பு வகிக்கும் அமிர்தா இலக்கிய இதழுக்கு என்னை ஏதேனும் எழுதித் தர சொன்னார். அவருக்கும் நான் எழுதி வரும் கான்ஸர் பற்றிய தொடர் கட்டுரை பிடித்திருந்தது. ஒரு பத்திரிக்கையில் வெளியிடும் அளவிற்கு அக் கட்டுரைகள் தரம் வாய்ந்தனவா என்பதில் எனக்கு சற்று சந்தேகம். விரைவில் ஏதேனும் எழுதித் தருகிறேன் என்று அவரை சமாளித்தேன்.
எனது தயக்கத்தை உணர்ந்ததாலோ என்னவோ, அவர் எனது வலைப் பக்கத்திலிருந்தே நேரடியாக அந்தக் கட்டுரைகளை எடுத்து, தொகுத்து, மிகப் பெரிய கட்டுரையாக பல பக்கங்களில் அமிர்தா இதழில் வெளியிட்டிருந்தார். அந்த பத்திரிக்கையை படித்தவர்களில் சிலருக்கே எஸ்கேபி கருணா என்பது நான் என்று தெரியும். இருந்தும் கூட பலர் என்னை பாராட்டினார்கள் என்று தளவாய் சுந்தரம் ஒரு கடிதமும் எழுதியிருந்தார். நான் முன்பே கூறிய மாதிரி, புதிதாக எழுதும் என்னைப் போன்றவர்களுக்கு, இத்தகைய பாராட்டுகள் மிகவும் உற்சாகம் அளிக்கக் கூடியவை.
நீண்ட நாட்கள் கழித்து உள்ளாட்சி தேர்தலைப் பற்றி ஒரு கட்டுரையினை வெளியிட்டேன். பலருக்கும் கான்ஸர் பற்றிய கட்டுரைகள் ஒரு விழிப்புணர்வை தந்தது என்று நண்பர்கள் கூறுகிறார்கள். கான்ஸர் பற்றிய அந்தத் தொடரில் இன்னும் சொல்ல வேண்டியவை ஏராளம் உள்ளன. தொடர்ந்து நோயைப் பற்றி எழுதினால், படிப்பவர்களுக்கும் சலிப்பாக இருக்குமே என்று கருதியே ஒரு நீண்ட இடைவெளி விட்டிருந்தேன்.
உண்மையில், அந்த புத்தகத்தில் (The Emperor of All Maladies) நான் எழுதியதற்கு பின்னும்கூட பல சுவாரஸ்யமான தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. எக்ஸ் ரே கண்டு பிடிக்கப் பட்ட வரலாறு, ரேடியம் கண்டு பிடிக்கப் பட்டது, மனிதகுலத்தின் மிகப் பெரிய சவாலாக இருக்கும் கான்ஸர் நோய்க்கான மருந்துகள் கண்டறியப் பட்டது என பல உணர்வு பூர்வமான நிகழ்ச்சிகள் இருக்கின்றன. எனவே தொடர்ந்து அவைகளைப் பற்றி என்னால் முடிந்தவரை சுவரஸ்யமாக எழுதுகிறேன்.
இடையிடையில் வேறு பல விஷயங்களைப் பற்றியும் எழுத வேண்டும் என்று நண்பர் பவா சொல்லிக் கொண்டிருக்கிறார். உண்மையில் எனக்கும் கூட எழுத எழுத, எனக்கும் என் மொழிக்குமான நெருக்கம் அதிகமாகிக் கொண்டு போவது போல தோன்றுகிறது. என் சிந்தனைகளை, என் அவதானிப்புகளை ஒரு மொழியில் கொண்டு சேர்ப்பது என்பது எனக்கு மிகவும் சுவரஸ்யம் தரக் கூடிய விளையாட்டாகவே படுகிறது.
என் மாணவர்கள் பலரும் என்னை ஆங்கிலத்திலும் இந்த கட்டுரைகளை எழுதச் சொல்கிறார்கள். அவர்களில் பலருக்கும் தமிழ் படிக்கத் தெரியாது. அதையும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று தோன்றுகிறது. தப்பும் தவறுமாக எழுதினாலும், அந்த மொழியிலும் ஒரு பயிற்சி வரும்தானே?
நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடர்ந்து எழுதுகிறேன். நான் எழுதியது உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை எனக்குத் தெரிவியுங்கள். சந்திப்போம்.
 

3 thoughts on “மீண்டும் கட்டுரைத் தொடர்..

  1. எண்ணங்களின் வெளிப்பாடே மொழி. தொடரட்டும்…..வாழ்த்துக்கள்.

  2. உங்களின் கட்டுரை மிகவும் சிறப்பாக உள்ளது .நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன் .மகிழ்ச்சியாக இருக்கிறது நம் ஊரை சார்ந்த நீங்கள் ,பவா ஆகியோரின் படைப்புக்களை படிக்கும் போது.தொடர்ந்து எழுதுங்கள் .வாழ்த்துக்கள்.

    1. நீங்கள் தொடந்து வாசிப்பதும், அவைகளை விமர்சிப்பதும் அதற்கு பெரிய தூண்டுதலாக இருக்கிறது. நன்றி.

Comments are closed.