கீமோ..

 
கீமோ
 
டாக்டர் ஃபேபர், நோயாளிகளுக்கு ஃபோலிக் ஆசிட் மருத்து கொடுக்கத் துவங்கி பல மாதங்களுக்கு பின்தான் , அவருக்கு அதன் விளைவுகள் தெரிய வந்தது.  உண்மையில், அவை இரத்ததில் உள்ள வெள்ளை அணுக்களை குறைப்பதற்கு பதிலாக, வெகு வேகமான அதிகரித்தது. ஒரு குழந்தைக்கு அதன் உடலில் உள்ள வெள்ளை அணுக்கள் இரண்டு மடங்காக பெருகியது. மற்றொரு குழந்தைக்கு புற்று நோய் கிருமிகள் உடல் முழுவதும் பரவியது மட்டுமல்லாமல், அவை தோல் வழியாகவும் துளைத்து வெளியேறத் துவங்கியது.
பல குழந்தைகள் இந்த பரிசோதனையின் விளைவாக இறக்கத் துவங்க, டாக்டர் ஃபேபர் அவசர அவசரமாக தனது புதிய பரிசோதனை முயற்சியை நிறுத்தினார். மருத்துவமனையில் இருந்த மற்ற மருத்துவர்கள் எல்லாம் சற்று வெளிப்படையாகவே, இந்த தவறான பரிசோதனையைப் பற்றி குற்றம் சாட்டினர். எல்லோரும் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், டாக்டர் ஃபேபர் செயலில் இறங்கினார். அவருக்குள் ஒரு புதிய சிந்தனை உருவாகத் தொடங்கியிருந்தது.
அவரது பரிசோதனையில் கொடுக்கப்பட்ட ஃபோலிக் ஆசிட் உண்மையில் இரத்ததில் உள்ள புற்று நோய் கிருமிகளை அதிகரித்தது அல்லவா? அப்படியானால், எதிர் ஃபோலிக் ஆசிட் (anti folic acid) மருந்து கொடுக்கப் பட்டால், இரத்ததில் உள்ள புற்று நோய் கிருமிகள் குறைய வேண்டும் அல்லவா?முதன் முறையாக ஏதோ ஒரு இரசாயனப் பொருள் இரத்த புற்று நோயைக் கட்டுப்படுத்த போகிறது என்கிற சிந்தனையே டாக்டர் ஃபேபருக்கு பெருத்த உற்சாகத்தை கொடுத்தது.
இப்போது மினோட் குழுவினரின் கண்டுபிடிப்பில் டாக்டர் ஃபேபருக்கு இருந்த சந்தேகங்கள் எல்லாம் மெல்ல விலகத் தொடங்கின. அதாவது, நமது எலும்பு மஜ்ஜை, ஒரு ஓய்வில்லா இரத்த அணு உற்பத்தி நிலையம் என்றால், இரத்த அணுவில் காணக் கிடைக்கும் புற்று நோய் அணுக்களையும் அவைதானே உருவாக்குகிறது. மினோட் குழுவினரின் கூற்றுப்படி, ஃபோலிக் ஆசிட் போன்ற ஒரு புரதத்தினை சேர்ப்பதின் மூலம் அந்த உற்பத்தி நிலையத்தின் வேகத்தை அதிகரிக்க முடிகிறது. அப்படியானால், அந்த புரதத்தினை சேர்க்காமல் தடுத்து நிறுத்துவதின் மூலம் வேகத்தை குறைக்க முடியுமே?
டாக்டர் ஃபேபர் இரவும் பகலுமாக இந்த சிந்தனையில் மூழ்கிப் போனார். அவரின் ஆய்வகத்தில், வீட்டில், வீதியில் என இதே சிந்தனையுடன் நடந்து கொண்டிருந்தார். டாக்டர் ஃபேபரின் மனைவி நோர்மா ஒரு அற்புதமான இசைக் கலைஞர். அவர் தனது மிகப் பெரிய கச்சேரிக்காக இவரைப் போலவே இரவும் பகலுமாக பயிற்சி செய்து கொண்டிருந்த நேரம் அது.
ஒரு நாள் இரவு, ஒரு புதிய தாளக் கட்டுடன் கூடிய அவரது இசைப் பயிற்சியினைக் கேட்டுக்கொண்டே நடந்து கொண்டிருந்தார். அப்போதுதான், டாக்டர் ஃபேபருக்கு, இன்று மருத்துவ உலகம் கீமோதெரபி (chemo therapy) என அழைக்கப்படும் புற்று நோய்க்கிருமிகளை அழித்து எடுக்கும் முறை அவரது கற்பனையில் மெல்ல விரிந்து ஒரு வடிவம் எடுத்தது.