மேலும் ஒரு காரணம்..

மேலும் ஒரு காரணம்.. தொடர்ந்து எழுத
எதற்காக இந்த வலைப் பக்கம்? என்ன எழுத போகிறோம்? என்கிற மலைப்பு கொஞ்சம் கூட எனக்கு இல்லை. எனக்கு எழுதுவதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. உலகில் உள்ள எல்லா துறைகளின் மீதும் எனக்கு ஒரு கருத்து உண்டு. கொஞ்சமேனும் அவற்றைப் பற்றி தெரிந்து வைத்திருப்பேன். தொடர்ந்த வாசிப்பும், என் பயணங்களும் தந்த அனுபவங்கள், எனக்கென ஒரு கருத்தை, பார்வையை, தனி அரசியலை உருவாக்கி வைத்திருக்கிறது.
ஆனால், நான் எழுதினால் அதை யார் படிக்கப் போகிறார்கள்? என்ற கேள்வி ஒரு பெரும் தயக்கத்தை உருவாக்கி வைத்திருந்தது. அந்த நேரத்தில்தான் ஃபேஸ் புக் அறிமுகமானது. எனக்கு அதில் கிடைத்த ஏராளமான நண்பர்கள், அதிலும், எனது கல்லூரி மாணவ மாணவிகள், என்னை தொடர்பு கொள்வதிலும், எனது பதிவினை படிப்பதிலும் நல்ல ஆர்வம் காட்டினார்கள். இந்த தொடர்புகள் ஓரளவு எனது முதல் தயக்கத்தினைப் போக்கியது.
அடுத்து, தமிழில் எழுத்துப் பிழை, ஒற்றுப் பிழை இல்லாமல், எளிமையாக ஒரு விஷயத்தை சொல்ல முடியுமா? என்கிற அச்சமும் பெரிதாகவே இருந்தது. பிறர் எழுதும் தமிழ் வலைப் பக்கங்களை படிக்கும் போது, அவர்களின் தன்னம்பிக்கையினை பார்த்து வியந்து போவேன்.
ஒரு வழியாக, எனது நண்பர் பவா செல்லதுரையின் தொடர்ந்த தூண்டுதலின் பேரில், எனக்கென ஒரு வலைப் பக்கம் தொடங்கினேன். அதற்கு பெயர் வைத்த கதையினை பின்பு ஒரு நாள் தனியாக எழுதுகிறேன். முதல் முதலில் நைனா என்ற தலைப்பில் என் தந்தையைப் பற்றி ஒரு தொடர் பதிவு எழுதலாம் என்று முடிவு செய்து அதற்கு ஒரு முன்னோட்டமும் எழுதி வெளியிட்டேன்.
ஒரு சிறிய இடைவெளிக்கு பின் நிழல் மரியாதை என்ற தலைப்பில் எனது அனுபவப் பதிவு ஒன்றினை எழுதினேன். அதற்கு கிடைத்த ஒரு கவனிப்பு எனக்கு மிகுந்த ஊக்கம் அளித்தது. அதே நேரத்தில் ஓரளவேனும் புதிய வாசிப்பு அனுபவம் தரும் வகையில் எழுத வேண்டுமே என்கிற அச்சமும் ஏற்பட்டது.
ஒரு நீண்ட இடைவெளிக்கு பின், நான் படித்த ஒரு புத்தகத்திலிருந்து எனக்குப் பிடித்த சில பகுதிகளை என் புரிதலுக்கு ஏற்ப எழுதி வருகிறேன். அப்பாடா! ஒரு நீண்ட முன்னோட்டம் முடிந்தது.
நிற்க..
நேற்று காலை திடீரென எனக்கு இரண்டு கண்களும் துடிக்க ஆரம்பித்தன. என்ன மாதிரியான சகுனம் இது? என்று யோசிக்கும்போதே, நண்பர் தளவாய் சுந்தரம் தொலைபேசியில் அழைத்து, எனது இணைய தளத்தை பார்த்ததாகவும், அதில் உள்ள கட்டுரைகள் சுவாரசியமாக இருப்பதாகவும் பாராட்டினார். கூடவே, இதையெல்லாம் ஒரு பிரபல வார இதழுக்கு ஒரு கட்டுரையாக எழுதித் தர முடியுமா என்றும் கேட்டார். நிச்சயம் வேறு யாருக்கோ போன் செய்யப் போய் எனக்கு பேசுகிறார் என்று எண்ணிக் கொண்டு அவரிடம் ஒரு மாதிரி சிரித்து பேசி சமாளித்தேன்.
எனது வலைப் பக்கத்திற்கு சென்று பார்த்தால், அதற்கு கடுமையான காய்ச்சல் கண்டது போல அதில் உள்ள பார்வையாளர் எண்ணிக்கை முகப்பு ஏறிக்கொண்டே போகிறது. ஒரே நாளில் இரண்டு மடங்கு பார்வையாளர்களின் கவனம் என் மீது குவிய, பல பகுதிகளில் இருந்தும் புதிய வாசகர்கள் எனக்கு பின்னூட்டமிட்டனர்.
பவா செல்லதுரை எனக்கு போன் செய்து அந்த புதிரை விடுவித்தார். எழுத்தாளர் ஜெயமோகன் நேற்று எனது வலைதளத்தைப் பற்றி தனது வலைதளத்தில் எழுதி, கருணா ஒரு இணப்புச் சுட்டியும் அளித்திருக்கிறார்.
ஏற்கனவே, அவர் எனது வலைப் பக்கம் ஒன்றினை யார் மூலமாகவோ கேள்விப்பட்டு படித்து அதற்கு ஒரு சுவாரசியமான பின்னூட்டமும் அளித்திருந்தார். அதற்கு சில நாட்களுக்கு பிறகு, எழுத்தாளர் திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களும் எனது வேறு ஒரு கட்டுரையை பாராட்டி பின்னூட்டம் எழுதியிருந்தார். எழுத ஆரம்பித்து சில நாட்களிலேயே இரு பெரிய எழுத்தாளர்கள் பாராட்டி எழுதியது மிகவும் உற்சாகமாக இருந்தது.
இன்று காலை, கல்லூரி விழாவில் பேசிய நண்பர் பாரதி கிருஷ்ண குமார் அவர்களும் அவரது மிகச் சிறப்பான பேச்சினூடே, எனது வலைத் தளத்தினைப் பற்றியும் குறிப்பிட்டு பாராட்டி பேசினார். ஆயிரம் பேர் கைத்தட்டியது மிகுந்த கூச்சமாக இருந்தாலும், புதிய தளத்தில் எனது பெயர் சொல்லப்படுவது சற்றே பெருமையாகவும் இருந்தது.
ஒரு தொடக்க நிலை எழுத்தாளனுக்கு, (அதாவது எனக்கு) நண்பர்கள் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், தளவாய், பவா செல்லதுரை, ஷைலஜா போன்றவர்கள் தரும் சிறிய பாராட்டுகள் பெரிய நம்பிக்கையினை தருகிறது. தொடர்ந்து எழுத ஒரு காரணம் கிடைக்கிறது. அனைவருக்கும் நன்றி
முதல்வன் திரைப் படத்தில் ஒரு நல்ல பாடல் வரும். அதில் வரும் சில வரிகளில்
திரை நாயகி நடந்து வெளியே செல்லும் போது,
வைக்கோல் படப்பையில் கவுளி கத்த, வலது புறம் கருடன் சுற்ற, தெருவோரம் நிறைகுடம் பார்க்கவும், மணி சத்தம் கேட்குமாம். கூடவே, ஒரு பூக்காரி எதிரே வர, பசு மாடும் கடந்து செல்கிறதாம். இனி என்னாகுமோ? ஒரு வேளை நேரிலேயே தெய்வம் வந்து வரம் தருமோ? என்று மிக சுவாரசியமான வரிகள் வரும்.
அதுபோல, எனக்கு அடுத்து என்ன ஆச்சரியம் காத்திருக்கிறது? ஒரு வேளை நியூயார்க் டைம்ஸில் இருந்து ஒரு கட்டுரை எழுதித்தர முடியுமா என்று கேட்டு மின்னஞ்சல் வருமோ?
சித்தார்த் முகர்ஜியிடம் (புத்தகத்தின் ஒரிஜினல் எழுத்தாளர்) இருந்து வக்கீல் நோட்டீஸ் வரும் என்கிறான் என் நண்பன்.
ம்.. அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா….
 
 
 

4 thoughts on “மேலும் ஒரு காரணம்..

 1. இவங்கெல்லாம் சொல்லலைனாலும் எழுதலாம் சார் , இவ்வளவு நாள் வாசிப்பு முதிர்ந்து இங்கேதானே வரும் ? :)
  மருத்துவ கட்டுரைகள் மிக நன்றாக இருக்கின்றன .

  1. அது சரி! இன்னமும் கூச்சம் முழுமையாக போகவில்லையே? கை காட்டி விட யாராவது இன்னமும் தேவைப்படுது சார்…
   உங்கள் பாராட்டுக்கு ரொம்ப நன்றி. சந்திப்போம்.

 2. sir,
  ur a multiple personality man, i think newyork times search u from google earth and they will reach u soon.

Comments are closed.