மருந்துகளின் மாயாஜாலம்

மருந்துகளின் மாயாஜாலம்
1942ஆம் ஆண்டுதான், முதல் முறையாக ஒரு புதிய மருந்து, மரண விளிம்பில் இருந்த ஒரு நோயாளியை நான்கு மணி நேரத்தில் காப்பாற்றியது கண்டறியப் பட்டது. அலெக்ஸாண்டர் ஃப்ளமிங் 1939ஆம் ஆண்டு கண்டு பிடித்த அந்த மருந்துதான் உலகில் செயற்கை முறையில் தயாரான முதல் ஆண்டிபயாடிக்கான பெனிஸிலின். அதை கண்டுபிடித்த ஃப்ளமிங்கிற்கு மட்டுமல்லாமல், சிறப்பாக உபயோகப் படுத்தியதற்காக இன்னும் மூன்று பேருக்கும் சேர்த்து நோபல் பரிசினைப் பெற்றுத் தந்தது .இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த நேரமாதலால், தொற்று நோயினாலும், வயிற்றுப் போக்கினாலும் ஆயிரக்கணக்கான போர் வீரர்கள் மரணமடைந்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் பயன்பாட்டுக்கு வந்த பெனிஸிலின், அநேகமாக மருத்துவமனையில் இருந்த அத்தனை பேரையும் குணமாக்கியது. பெனிஸிலின் புரிந்த அந்த மாயாஜாலம், நம்ப முடியாத விளைவுகளை ஏற்படுத்தியது.
பெனிஸிலின் மருந்து மிகவும் தட்டுப்பாடு ஏற்பட்ட போது, மருத்துவர்கள் நோயாளிகளுக்கு கிடைக்கும் பெனிஸிலின் மருந்தை கொடுத்து, பிறகு அந்நோயாளிகளின் சிறுநீரை எடுத்து சுத்தகரித்து, அதிலிருக்கும் மிச்ச மருந்தை, அடுத்த நோயாளிக்கும் கொடுத்தனர். அதுவும், பல உயிர்களைக் காப்பாற்றியது. எனவே, பெனிஸிலின் என்னும் ஆண்டிபயாடிக்தான் உலகின் முதல் மாயாஜால மருந்து என்கிறார்கள்.
மருந்துகளை, ஆராய்ச்சி கூடத்தில் இருந்து மட்டுமே உற்பத்தி செய்து வந்த காலத்தில், பெனிஸிலின்தான், முதன் முதலாக வர்த்தகரீதியாக தயாரிக்கப் பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. இதனால், அதன் விலையும் மிகக் கணிசமாக குறைந்தது. பெனிஸிலின் மருந்தின் வெற்றி மேலும் பல ஆண்டிபயாடிக் மருந்துகளை சந்தைக்குக் கொண்டு வந்தது. 1947ஆம் ஆண்டு குளோராம்ஃபெனிகால் (chloramphenicol),1948ஆம் ஆண்டு, டெட்ராசைக்ளின்(tetracycline), மற்றும் 1949ஆம் ஆண்டு, இன்றளவும் ஒரு அதிசயத்தக்க மருந்தான ஸ்ட்ரெப்டோமைசின்(Streptomycin) ஆகியவை விற்பனைக்கு வந்தது. உலகின் மொத்த நோயாளிகளில் 70 சதவீதம் பேரை, இந்த மருந்துகளே குணமாக்கியது என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.
அதிலும் ஸ்ட்ரெப்டோமைசின்(Streptomycin), ஒரு கோழிப் பண்ணையில், அங்கிருக்கும் கழிவுகளில் இருந்து தயாரிக்கப் பட்டதாம். அதனால், டைம் மேகஸின் அப்போதைய அதன் அட்டையில், எல்லா நோய்க்குமான தீர்வு நம் வீட்டு பின்புறக் கட்டில் இருக்கிறது என்று கட்டுரை வெளியிட்டது. ஏறக்குறைய அதே நேரத்தில்தான், டாக்டர் ஃபேபரின் மருத்துவமனையில் ஒரு பக்கத்தில் மைக்ரோபயாலஜிஸ்ட்டான ஜான் எண்டர்ஸ், போலியாவிற்கான முதல் வேக்ஸினையும் கண்டு பிடித்தார்.
இத்தனை மருந்துகளின் வருகையால், மருத்துவ உலகில் நடந்த அதிசயம், நம்பமுடியாத வகையில் இருந்தது. இன்று சாதாரணமாகக் கருதப்படும் டைஃபாய்டு ஜுரம் அன்று ஒரு உயிர் கொல்லி நோய். டி.பி எனப்படும் மார்பக தொற்று நோய், வெள்ளை ப்ளேக் என்று அழைக்கப்பட்டு, ஒரு உயிர் கொல்லும் நோயாக இருந்தது. ஆண்டிபயாடிக் மருந்துகள், இவற்றையெல்லாம், மிகச் சுலபமாக குணப்படுத்தியது. நோய்களால் உருவாகும் மரணங்கள் குறையத் தொடங்க, அமெரிக்கர்களின் சராசரி வாழ்வு 47ல் இருந்து 68ஆக உயர்ந்தது.
இத்தனை சாதகமான விஷயங்கள் இருந்தும், புற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்தன. சாதாரண ஆண்டிபயாடிக் மருந்துகளினால், புற்றுநோய்க் கிருமிகளை ஒன்றும் செய்ய முடியவில்லை.
இந்த நேரத்தில்தான், டாக்டர் ஃபேபரின் நண்பரான ஜார்ஜ் மினோட் இரத்தத்தைப் பற்றிய புதிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். முதன் முறையாக இரத்த சோகைக்கு காரணம் நமது இரத்தத்தில் உள்ள ஒரு வைட்டமின் பி12 என்கிற ஒரு தனி மூலக்கூறுதான் என்று கண்டுபிடித்தார். இந்த ஒரு மூலக் கூற்றினை மாற்றியமைப்பதின் மூலம் பல சிக்கலான இரத்த சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு காணலாம் என்றும் கண்டறிந்தார். இதற்காக ஜார்ஜ் மினோட் மற்றும் அவரின் குழுவிற்கு நோபல் பரிசும் கிடைத்தது.
இந்த வைட்டமின் பி12 என்கிற மூலக்கூறு, சாதாரணமாக நமது காய்கறிகளிலும், பழங்களிலும் கிடைக்கக் கூடிய ஃபோலிக் ஆசிட் எனப்படும் சத்தான பொருள்களில் இருக்கிறது என்றும் கண்டறிந்தனர்.
நமது ஒவ்வொரு இரத்த அணுக்களிலும் டி.என்.ஏ எனப்படும் நமது மரபுசார் செய்திகள் பதிக்கப்பட்டிருக்கும் ஒருவிதமான இரசாயனமும் உள்ளடங்கியிருக்கும். ஏற்கனவே கூறியுள்ளதைப் போல, இரத்த அணுக்கள் ஒன்றில் இருந்து ஒன்று பிரிந்து, எண்ணிக்கையில் பெருகும் போது, இந்த டி.என்.ஏ வையும் ஒவ்வொரு பிரதி எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த பிரதிகளை பதிந்து கொள்ள ஃபோலிக் ஆசிட் எனப்படும் இந்த சத்து ஏராளமாக தேவைப் படுகிறது.
அநேகமாக, இந்த இரத்த அணுக்கள் பிரிந்து எண்ணிக்கையில் பெருகுவதுதான், நமது உடலில் நடைபெறும் மிக வேகமான செயல்களில் ஒன்றாக இருக்கும். ஏறக்குறைய 300 பில்லியன் அணுக்கள் ஒரு நாளில் பிரிந்து தன்னைத் தாமே பிரதியெடுத்துக் கொள்கிறது. இதற்கு தேவையான ஃபோலிக் ஆசிட் இல்லாமல் போனால், இரத்த உற்பத்திக் கேந்திரமான நமது எலும்பு மஜ்ஜையில், செயலிழந்து போன ஏராளமான இரத்த அணுக்கள் தேங்கி நின்று கொள்கின்றன. இதனால், புதிய இரத்தம் உருவாகுவதும் தடுக்கப் பட்டு விடுகின்றன.
இந்த கண்டுபிடிப்பு, டாக்டர் ஃபேபருக்கு ஒரு நம்பிக்கையினை அளித்தது. நோயாளிகளுக்கு, ஃபோலிக் ஆசிட் மருந்தினை அளிப்பதின் மூலம், தொடர்ந்து இரத்த அணு உற்பத்தியினை ஏற்படுத்த முடியும் என்று நினைத்தார். இதன் மூலம், இரத்தத்தில், உள்ள புற்றுநோய் அணுக்களின் எண்ணிக்கையினை குறைக்க முடியும் என்று முடிவு செய்தார்.
 
 
 
 
 
 

3 thoughts on “மருந்துகளின் மாயாஜாலம்

  1. அன்பான கருணா,
    மருந்துகளின் மாயாஜாலம் கட்டுரை நல்ல பதிவு.ஒரு மருத்துவ ஆராய்ச்சியாளனும் இலக்கிய வாசகனும் அதற்குள் இருப்பது தெரிகிறது. ஒவ்வொரு கட்டுரையிலும் பல தகவல்கள் தெரிந்துகொள்ள முடிகிறது. மிக சரளமான நடை வந்திருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்

  2. Dear Karuna,
    Fine introduction for antibiotics and science. The vit B12 mentioned is actually a cobalamin, just correct it to b9.

    1. Actually, it was given as B12 in the Book. I will surely do some research on that. Thank you very much for the correction. Best regards to you.

Comments are closed.