நிழல் மரியாதை

ஷைலஜா தமிழில் மொழிபெயர்த்த நடிகர் மம்முட்டியின் வாழ்வனுபங்களான மூன்றாம் பிறை புத்தகம் படித்து முடித்தேன். மம்முட்டி அதில் அமிதாப் பச்சனோடு சேர்ந்து ஒரு விழாவில் கலந்து கொண்டதையும், அப்போது அமிதாப்பச்சன் பெண்களிடம் பேசும் ஒவ்வொரு முறையும் எழுந்து நின்று பேசியதையும், அதை செய்யாத தாம் மிகவும் வெட்கப் பட்டதாகவும் கூறியுள்ளார். இதை படித்த போது எனக்கு நடந்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. அது நேர்மாறானது.
நான் பொறியியல் கல்லூரியில் முதல் வருடம் படித்துக் கொண்டிருந்த சமயம். திருவண்ணாமலையில் இருந்து ஆறு மணி நேரம் பஸ்ஸில் பயணம் செய்து, பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையம் சென்று வேறு ஒரு பஸ் பிடித்து மேலும் 1 1/2 மணி நேரம் பயணம் செய்து எனது கல்லூரியை சென்று அடைய வேண்டும். அன்று இரவு நடுங்கும் குளிரில் அதற்கான பஸ் வரிசையில் நின்று கொண்டிருந்தேன். என்னுடன், உடன் படித்த அஸ்ஸாம் பையன் ( ஆம்! அஸ்ஸாமில் இருந்து எல்லாம் எங்கள் கல்லூரியில் படித்து வந்தார்கள்.)அருகில் காத்திருந்தான். ஒரு மணிக்கு ஒரு முறை ஒரு பஸ் என்று அறிவித்து இருந்தாலும் கூட்டம் இரண்டு பஸ் அளவிற்கு வந்தவுடன்தான் டிக்கட் கொடுப்பார்கள். அந்த அளவிற்கு ஏற்றிக் கொண்டுதான் பஸ்ஸையே எடுப்பார்கள். வண்டியில் ஏறி அமர்ந்த உடனேயே அனைவரும் தூங்க ஆரம்பித்து விடுவார்கள். ஒரு மயான அமைதி நிலவும் பொதுவாக. கடும் குளிரில், வேறு என்னதான் செய்வது?
நானும், அவனும் அருகருகே அமர்ந்து கொண்டோம். பஸ் புறப்படும் போது நிற்க இடமின்றி நிரம்பி வழிந்தது. எல்லா குளிர் உடைகளையும் இறுக்கிக் கொண்டு அவர்கள் வழக்கம் போல நானும் தூங்க ஆரம்பிக்கும் போது என் அருகில், அனைவராலும் தள்ளப்பட்டு இரண்டு பெண்கள் வந்து நின்றனர். அநேகமாக அவர்கள் தாயும் மகளும். மகள் நிறை கர்ப்பிணி. அதற்கான சகல முகவேதனைகளுடன் அவர்கள் என் அருகே நின்று கொண்டிருந்தனர். இதுவெல்லாம் அந்த ஊர் பயணிகளை சங்கடப் படுத்தாது. அவர்கள் வழக்கம் போல அனைவரும் தூங்க ஆரம்பித்தனர். அல்லது வேறு பக்கம் பார்த்து கொண்டனர். பின்னே? எழுந்து இடம் கொடுத்தால் ஒரு மணி நேரம் நின்று கிடைத்த போய் மேலும் இரண்டு மணி நேரம் நிற்க வேண்டுமே?
மட்டமான பீடி நாற்றம் வேறு அவர்களை மேலும் சங்கடப் படுத்தியது. தன்னிச்சையாக நான் எழுந்து அவர்களில் ஒருவரை என் இடத்தில் அமரச் சொன்னேன். அவர்கள் நம்ப முடியாத ஆச்சரியத்தோடு, ஒருவரை ஒருவர் அந்த இடத்தில் உட்கார சொல்லி கன்னடத்தில் சொல்லிக் கொண்டிருந்தனர். முதலில் அந்த பெண்தான் அமர்ந்தார். இதை பார்த்த என் நண்பன், (அவன் இவர்களை பார்த்த உடனேயே தூங்க ஆரம்பித்திருந்தான்) சற்று சங்கடத்துடன் எழுந்து அந்த தாய்க்கும் இடம் கொடுத்தான்.
இதையெல்லாம் அந்த பஸ்ஸில் யாரும் கவனிக்க வில்லை. இருவரும் அந்த இருக்கையில் அமர்ந்த பின் அந்த தாய் அவர் பெண்ணிடம் சொன்ன வார்த்தை எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. கிராமத்து கன்னடத்தில் அவர் சொன்னது நல்ல குடும்பத்து பையன் போல. நல்ல மகனா வளர்த்து இருக்காங்க
எங்கோ 250 கிலோமீட்டர் தொலைவில் இருந்த எனது அப்பா அம்மாவிற்கு அந்த கிராமத்து மனிதர்களிடம் நற்சான்று பெற்றுக் கொடுத்தேன், அதுவும் தன்னிச்சையாக. என் அஸ்ஸாம் நண்பன் அடுத்த நான்கு வருடத்திற்கும் இந்த சம்பவத்தை நினைவில் வைத்திருந்தான்.
வெளிநாடுகளில் இந்த மரியாதையெல்லாம் வேறு மாதிரி பார்க்கப் படுகிறது. ஓரு பெண்மணி கையில் குழந்தையுடன் இருந்தால் அவர்களுக்கு அமரும் இடம், நிற்கும் வரிசை முதல் அனைத்திலும் முதல் உரிமை தரப்படுகிறது. ஆனால், வயது காரணமாக அத்தகைய சலுகைகள் தரப் படுவதில்லை. மேலும், அந்த சலுகைகளை வயதானவர்கள் ஏற்றுக் கொள்வதும் இல்லை. சில சமயம் கோபப்படுவதும் உண்டு.
சென்ற ஆண்டு ஜப்பானில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் சற்று வேறுமாதிரியானது.
வெளியே பனிமழை கொட்டும் நடு இரவில் டியூப் டிரெயினில் என் தங்குமிடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தேன். அது ஒரு வெப்பமூட்டப் பட்டிருந்த அதிவேக ரயில்வண்டி. என் இருக்கையில் அமர்ந்து அரைத் தூக்கத்தில் இருக்கும் போது, பெரிய குளிர் உடையணிந்த மிக வயதான பெண்மணி ஒருவர், வயது நிச்சயம் 90க்கும் மேல் இருக்கும், ஒரு நிறுத்ததில் ஏறினார். அந்தப் பெட்டியில் அவருக்கு அமர ஏதும் இடம் இல்லை. அனைவரும் தூங்கிக் கொண்டோ அல்லது அவர்கள் கைப்பேசியில் விளையாடிக் கொண்டோ இருந்தனர்.
இம்முறை நான் மிகவும் கவனமாக இருந்தேன். இது நம் ஊரில்லை என்பதும், அந்த மரியாதையெல்லாம் இங்கே அதேபோல எடுத்துக் கொள்ளப்படாது என்பது எனக்குத் தெரியும். இன்னும் நீண்ட தூரம் போக வேண்டி இருந்தது. அந்தக் குளிரில் அத்தனை நேரம் அம் மூதாட்டி நின்று கொண்டு வருவது எனக்கு கடுமையான மன சங்கடத்தை ஏற்படுத்தியது. வழக்கமாக சூடான காற்று இருக்கைக்கு கீழே வருவது போலதான் அமைத்திருப்பார்கள். அவர் நிச்சயம் ஒரு இருக்கையை வேண்டியிருப்பார். நான் அந்த இருக்கையை தருவது என்று முடிவெடுத்தேன். அவர் என்னை பார்க்காத ஒரு நேரத்தில் இயல்பாக எழுந்து வேடிக்கை பார்ப்பது போல நடந்து சென்றேன். ஆனால் அவரோ பிடிவாதமாக நின்று கொண்டு இருந்தார். நானும் அவரை பார்க்காமல் நின்று கொண்டே இருந்தேன். என் உடல்மொழியோ அல்லது அவர் உடல் நிலையோ, அவர் அந்த ஒரே ஒரு காலி இருக்கையில் மெல்ல அமர்ந்தார். என் சுவாரஸ்யமான விளையாட்டும் முடிவுக்கு வந்தது. நீண்ட நேரம் கழித்து ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவரை பார்த்த போது அவர் என்னையே பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்தேன். முதல் முறையாக அவரின் கண்களை பார்க்கிறேன். அவர் இருக்கையில் அமர்ந்தபடியே அந்த நாட்டின் அற்புதமான வழக்கத்தின்படி தன் உடல் வளைத்து ஒரு நன்றி சொன்னார்.
எனக்கு 24 வருடத்திற்கு முன்பு ஒரு குளிர் இரவில் அந்த கன்னட பெண்மணி சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. ஐந்தாயிரம் மைலுக்கு அப்பால் இருக்கும் என் அம்மாவும் நினைவுக்கு வந்தார்.

32 thoughts on “நிழல் மரியாதை

  1. i could feel chill of banglore we experienced many a times in your simple language , i could even feel the chill of japan which i have no experience and the emotion of the complete scenario . good writing

    1. Thanks. Glad i could convey my emotions well. And more happy to see my friends approve that. This will keep me going!!

  2. This article communicates ur feel in a meticulous manner.We inherit a lot from our parents.Respect/trust/Authenticity in all precious elements among them.plz Keep the momentum going..

  3. கருணா! வாழ்த்துக்கள்!! நிகழ்வுகள் என்னை நெகிழ்த்தியது. எழுதிய நடையும் மிகவும் சரளமாக இருந்தது. தொடரட்டும் மறுபடியும் வாழ்த்துக்கள்!!

  4. Service to near and dear gives comfort to our heart, Habits and characters are brought up only by parent, so we must say thanks to God who gave such a gifted amma and appa

  5. Culture many vary across the globe. But helping tendency remain the same.u make proud our indian in abroad also. Keep going ….

  6. Sir i read your posting. Helps to others is good habit and every body has to follow it. your writing keep touching the heart. i expect your posting about your naina. your way of writing is good.
    vaidyanathan skpit

  7. Your Tamil style is very good. You have been gracious to give your seat to someone who needs it more. Regarding seats in a public transport in Tamil Nadu, I see a bizarre pattern. The front row is said to be reserved for the elderly or physically disadvantaged persons. But, most of the time, the youngsters occupy them. Even the conductor refuses to intervene. Hope someone does something to remedy this situation. Natarajan

  8. நிகழ்வுகள் எளிய நடையில் எழுதப்பட்டிருப்பது சிறப்பானது. மனித நேயத்தை உணர்த்தும்படி எழுதப்பட்டுள்ளது.

  9. நேரடியான அனுபவங்களை நல்ல மொழியில் எழுதியிருக்கிறீர்கள் கருணா. இருக்கை கொடுப்பது என்பது ஒரு மரியாதை. அது பரிதாபம் இல்லை என்பதை பலசமயம் மேலைநாட்டினருக்கு புரியச்செய்யவேண்டியிருக்கிறது. நான் இருமுறை அப்படி வெளிநாட்டில் எழுந்து இருக்கை அளித்திருக்கிறேன். அப்போது ‘மன்னிக்கவும் இது இந்தியாவில் உள்ள மரபு’ என்று சொன்னேன். அவர்கள் சங்கடப்படவில்லை என்பதை கவனித்தேன்.
    ஜெ

  10. Hi Karuna,
    Very nice to read your experience in simple tamil . Thanks J for notifying this link in his site.

  11. Pingback: கருணா »
  12. ஐயா,
    பயணங்களில் உண்டாகும் அனுபவங்கள் நம் உணர்வுகளை பலவகைகளில் எழ செய்பவை, ஆனால் நுட்பமான அவ்வுணர்வுகளை ஆழ உணர்ந்து, நம் பண்பாட்டால், வளர்ப்பால் உண்டான சிறந்த பழக்கங்களால் நாம் செய்யும் செயல் நம் மனதிற்கு தரும் மகிழ்ச்சி என இவ்வனைத்தையும் எந்த வித மிகைப்படுத்தலும் இல்லாமல் தெளிந்த நீரோடை போல தங்களின் வாக்கியங்கள் மிக சிறப்பு.
    இன்னமும் தங்களிடம் இது போன்று உணர்வுகளை ஆழ விவரிக்கும் பதிவுகளை ஆவலுடன் எதிர்ப்பாக்கிறேன், அதே போல நான் எழுதும் கொச்சை தமிழையும் பண்பட்டதாக எழுத முயற்சிக்கிறேன்.
    நன்றி ஐயா,
    வாழ்த்துகள்……

  13. கருணா,
    நானும் முருகேசபாண்டியனும் உங்களை சந்திக்க திருவண்ணாமலைக்கு வந்திருந்தபோது, உங்களுடைய வாசிப்பு பழக்கத்தையும் அதைப்பற்றி நீங்கள் கூறும்போது நான் அடைந்த அனுவத்தையும் வைத்து அன்று உங்களிடம் கேட்டேன், நீங்கள் நல்ல புத்தக விமர்சனங்களை எழுத முடியும் என்று. ஆனால், நீங்கள் உடனே மறுத்தது உங்கள் நினைவில் இருக்கலாம். உங்களுக்குள் ஒரு எழுத்தாளன் இருப்பதை நான் உணர்ந்த தருணம் அது(அதுதானே என் வேலை).
    இப்பொழுது உங்கள் பதிவை படித்தபின் என் கண்டுபிடிப்பு சரி என்ற மகிழ்ச்சி உண்டாகிறது. வாழ்த்துகள் கருணா. தொடர்ந்து எழுதுங்கள். உயிர் எழுத்தின் வாசல் திறந்தே இருக்கிறது.

    1. அன்பு செந்தில்,
      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. மற்ற கட்டுரைகளையும் படிக்கிறீர்களா? நேரில் பேசுவோம்.
      கருணா.

  14. ஜப்பானிய பஸ்ஸும் பெங்களூர் குளிரும்,b>
    வார்த்தைகளில் நிஜம் தருகிறீர்கள்.
    மனித உனர்வுகளோடு ஒன்றி எழுதுவது மட்டுமல்ல. வாழ்ந்தும் (வாழ்ந்து கொண்டும்) இருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்.
    ரவிச்சந்திரன்,
    திருவண்ணாமலை.

    1. எனது இந்த “நிழல் மரியாதை” கட்டுரைக்கு கிடைக்கும் கவனம் என்னை மிகுந்த வியப்புக்கு உள்ளாக்குகிறது. மிக்க நன்றி

  15. நல்ல பதிவு… மனித நேயத்தை வெளி நாடாக இருந்தாலும் விட்டுக் கொடுக்காத உங்கள் கன்னியத்துக்கு பாராட்டுக்கள்…
    உண்மையில் உங்கள் பெற்றோர் பாராட்டுக்கு உகந்தவர்கள் தான்.
    அன்புடன்,
    ரவி.

  16. மனதை தொட்ட வரிகள் – “நல்ல குடும்பத்து பையன் போல. நல்ல மகனா வளர்த்து இருக்காங்க“…. I am still awed by the way Japanese wear their self respect … Experienced it every day of my stay there … Hats off to their Disaster management skills !!!

  17. அந்த மனிதாபிமானம் உங்களுள் என்றும் இருக்கட்டும்; கோடையில் நிழலாக, குளிரில் இதமாக!

  18. கருணா…..மனித அபிமானம். எல்லாப்புகழும் பெற்றோர்க்கே……

  19. Writing style, anybody can develop, if not, atleast in long run. But I can see a concrete persuasion in your target. That is fantastic. Motivation to others.

Comments are closed.