ஹிப்போகிரடஸ்.

 
ஹிப்போகிரடஸ் காலத்தில்..
கான்ஸர் என்ற இந்த நோய்க்கு எப்படி இந்த பெயர் வந்தது என்று பார்க்கலாமா? பார்க்கலாம். சுவாரஸ்யமாகவே இருக்கும் என்று தோன்றுகிறது.
முதன் முதலில் ஹிப்போகிரடஸ்தான் கி.மு.400 ஆண்டு வாக்கில் அவரின் ஒரு மருத்துவ குறிப்புகளில் இந்த நோயினை கார்கினோஸ் என்று குறிப்பிடுகிறார். கிரேக்கத்தில் கார்கினோஸ் என்றால் நண்டு. இந்த கான்ஸர் கட்டியானது ஒரு விதத்தில் அது உருவாகியிருக்கும் இடத்தை தனது இரத்த நாளங்களால் இறுகப் பற்றிக் கொண்டிருக்கும். அது ஒரு நண்டு மணலில் தனது கால்களை விரித்து வட்டம் போடுவதைப் போல ஹிப்போகிரஸுக்கு தோன்றியுள்ளது. உண்மையிலும் சில கான்ஸர் கட்டிகள் நிஜமாக நண்டைப் போலவே தோற்றமளிக்கும்.

கிரேக்க மருத்துவ மேதை ஹிப்போகிரடஸ்

மற்றொரு கிரேக்க வார்த்தையும் உள்ளது. அது ஆன்கோஸ். அதாவது ஆன்கலஜி என்று கேன்ஸர் நோயினைப் பற்றிய துறையினை குறிக்கும் இப்போதைய வார்த்தை இதிலிருத்துதான் வந்திருக்கும் என்று கூறுகிறார்கள். ஆன்கோஸ் என்றால் ஒரு கட்டி என்ற அர்த்தத்தில் கிரேக்கர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
ஹிப்போகிரடஸ் காலத்தில் மைக்ரோஸ்கோப் இருந்ததில்லை. எனவே அவர்களுக்கு செல் என்ப்படும் அணுவைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், பல பிறழ் அணுக்கள் சேர்ந்துதான் கேன்ஸர் வகைக் கட்டிகளை உருவாக்குகிறது என்பது அவர்களுக்கு தெரிந்திருக்காது. மேலும், அக்காலத்தில், கிரேக்கர்கள் முழுவதுமாக திரவ இயந்திரவியலில் (Fluid Mechanics) மூழ்கியிருந்தனர்.
கிரேக்கர்கள் அக்கால கட்டத்தில் திரவ இயந்திரவியலில் பல புரட்சிகரமான கண்டுபிடிப்புகளை கண்டறிந்து கொண்டிருந்தனர். நீர் சக்கரம், பிஸ்டன், வால்வு, சேம்பர் போன்ற நவீன யுக்திகள் யாவுமே அப்போது கண்டறியப் பட்டனவைதான். மேலும், குளியல் தொட்டியில் இருந்து, யுரேகா என்று கத்திக் கொண்டு ஓடி வந்தாரே ஆர்க்கிமெடிஸ்! அவரை நினைவிருக்கிறதா? அவரின் புகழ் பெற்ற ஆர்க்கிமெடிஸ் தத்துவம் (Archimedes Principle) உருவானதும் அந்த காலக் கட்டத்தில்தான்.
கிரேக்கர்களின் சிந்தனை, செயல் எதிலும் திரவ இயந்திரவியலே வியாபித்திருந்த அக்காலத்தில், திரவ இயந்திரவியல் மருத்துவத் துறையிலும் பரவலாக பயன்படுத்தப் பட்டது. வியாதிகளின் குணங்களை விவரிப்பதிலும்கூட ஹிப்போகிரடஸ் திரவத்தையே பயன்படுத்துகிறார்.
மனித உடலைக்கூட ஹிப்போகிரடஸ் நான்கு வகை உயிர்த் திரவமாக பிரித்து விவரிக்கிறார். இரத்தம், கரும் பித்தம், மஞ்சள் பித்தம் மற்றும் சளி. இதில் ஒவ்வொரு திரவமும் அதற்கான தனிப்பட்ட நிறத்தில் (முறையே, சிகப்பு, கருப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை) இருக்கும் என்றும், அந்த திரவங்கள் சரிவிகிதத்தில் இருக்கும் வரை உடல் சரியாக இருக்கும் என்றும் விளக்குகிறார்.
கிரேக்க மருத்துவர் கிளாடியஸ் கேலன் ஒரு பெரும் புகழ் பெற்ற எழுத்தாளர் மற்றும் மருத்துவர். கி.பி.160களில், அவர் ஹிப்போகிரடஸின் கூற்றினை பின்பற்றி, நோய்களை பலவிதங்களாக பகுத்து கூறுகிறார். உடலில் வீக்கம் என்பது சிகப்பாக, இரத்தம் கட்டிக் கொண்டிருக்கும் என்றும், டி.பி என்னும் மார்பகத்தில் வெள்ளையான சளி கட்டிக் கொண்டிருக்கும் என்றும் குறிப்பிடுகிறார். மேலும் காமாலை என்பது மஞ்சள் நிறத்தினில், மஞ்சள் பித்தம் அதிகரிப்பதினால் வருவது என்றும் கூறுகிறார். இதில், கான்ஸர் என்பதை கருப்பு நிறமான கட்டி என்றும் அது உடலில் உள்ள கரும் பித்ததினால் உருவாகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
கிளாடியஸ் கேலன் எதிர்பாத்ததை விடவும், அவரின் இந்த மிகச் சிறிய, துல்லியமான விவரிப்பு, கான்ஸர் நோயின் எதிர்கால சரித்திரத்தில் மிக முக்கிய இடத்தை பெறுகிறது. கான்ஸர் என்பது கரும் பித்தம் அளவிற்கு அதிகமானதால் ஏதோ ஒரு இடத்தில் சிறை பட்ட கட்டி என்று கேலன் குறிப்பிடுகிறார். ஹிப்போகிரடஸ், கான்ஸர் நோய் கண்டறியப் பட்டால், அதற்கு எந்த விதமான சிகிச்சையும் அளிக்காமல் விட்டுவிடுவதே நலம் என்றார். அந்த வகையில், நோயாளி உயிர் வாழ சில வாய்ப்புகள் மிச்சமிருக்கும் என்று நம்பினார்.
ஹிப்போகிரடஸ் கான்ஸரைப் பற்றி சொன்ன ஐந்து நூற்றாண்டுகளுக்கு பின் கேலன் கான்ஸரைப் பற்றிய தனது குறிப்புகளை எழுதுகிறார். அவரும் உடலில் உள்ள கரும் பித்த திரவத்தால்தான் கான்ஸர் உருவாகிறது என்ற தனது கூற்றினால், ஹிப்போகிரடஸ் சொன்ன அதே தீர்வினையே குறிப்பிடுகிறார். எப்படி அறுவை சிகிச்சை செய்து அந்த கரும் பித்த திரவம் மீண்டும் அதே இடத்தில் வந்து சேர்வதை தடுக்க முடியாது என்பதால், கான்ஸர் நோய்க்கு அறுவை சிகிச்சையின் மூலம் தீர்வு காண முடியாது என்று நம்பினார்.
கேலன் ரோம் நகரில் கிபி199ஆம் ஆண்டு இறந்தார். அவர் இறந்த பல நூற்றாண்டுகளுக்கும் பின்பும் கூட அவரின் மருத்துவ கோட்பாடுகள், மருத்துவத் துறையில் ஆதிக்கம் செய்து கொண்டிருந்தன. அதிலும், கேன்ஸர் நோய்க்கான அவரின் கரும் பித்த திரவ கோட்பாடு (Black bile theory) பின்னாளில் வந்த பல மருத்துவர்களையும் தீவிரமாக ஆட்கொண்டிருந்தது. கான்ஸர் நோய்க்கு அறுவை சிகிச்சை செய்வது ஒரு முட்டாளின் வேலை என்று, கேலனே சொல்லி விட்டார்! எனவே யாரும் அறுவை சிகிச்சை என்னும் அந்த வீண் வேலையில் ஈடுபட்டு உங்கள் தரத்தை தாழ்த்திக் கொள்ளாதீர்கள் என்றும் பல மருத்துவர்கள் பிடிவாதமாக இருந்தார்கள்.
ஒருவிதத்தில் கேலன், கான்ஸர் நோயாளிகளுக்கு பெரும் நன்மை செய்தார் என்றுதான் சொல்ல வேண்டும். மயக்க மருந்துகளும், நோய் தடுப்பு மருந்துகளும் இல்லாத அந்த காலக்கட்டத்தில் அறுவை சிகிச்சை என்பது மரண விளிம்பிற்கு சென்று மீண்டு வருவதற்கு சமம். அந்த காலத்தில் எந்த எந்த முறைகளில் அறுவை சிகிச்சைகள் செய்தார்கள் என்று நான் உங்களிடம் விவரிக்க போவதில்லை. நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாத கொடுமை அது.
ஆனாலும், பின்னாளில் கேலன் தியரி தவறானது என்று தெரிய வந்தது. கான்ஸர் நோய்க்கான உண்மையான சிகிச்சை முறைகள் எப்படி கண்டறியப் பட்டது போன்ற விவரங்களை அடுத்த கட்டுரையில் எழுதுகிறேன்.
 
 
 

2 thoughts on “ஹிப்போகிரடஸ்.

  1. sir, an elaborate writing on the deadly disease in tamil. hope the essays will be help full to hoi polloi.

Comments are closed.