கோர்ட் படியேறிய அனுபவம்

கோர்ட் படியேறிய அனுபவம்

வாழ்க்கையிலேயே முதல் முறை! என்ற வாக்கியத்தை நாம் வாழ்க்கை முழுவதுமாக சொல்லிக் கொண்டிருப்போம் போலிருக்கு!
எனது ‘வாழ்க்கையில் முதன் முறையாக’ நீதிமன்றக் கூண்டில் ஏறி நின்றேன்!
சென்ற வாரத்தில் ஒரு நாள், திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்துக்கு நானும், எனது தங்கைகளும் சென்றிருந்தோம். சட்டப்படியான தேவை ஒன்றுக்காக!
கூண்டிலெல்லாம் ஏற வேண்டியிருக்காது! நீதிபதி முன்னால் நம் பெயர் சொல்லி, கையெழுத்துப் போட்டால் போதும் என சொல்லப் பட்டிருந்தது. வரிசைப்படி, எங்கள் வழக்கு வந்ததும் நான் எழுந்து நின்றேன். எனது வழக்கறிஞர் விஷயத்தை விளக்கிச் சொன்னார்.
நீதிபதிக்கு என்னத் தோன்றியதோ? என்னைக் கூண்டில் ஏற்றி, எனது பிரமாணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். அதுதான் சட்டமுறைப்படியான செயலும்கூட. ஆனால், நான் அதற்குத் தயாராக இல்லாததால், லேசாகப் பதட்டம் வந்து விட்டது. கூண்டினுள் ஏறி நின்று, அவருக்கு மீண்டும் ஒரு வணக்கம் இட்டேன்.
அப்படியே அவருக்குப் பின்னால் பார்த்தேன்!
‘ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்து செய்வதே முறை ‘
( எனது விளக்கம்: தன் கீழ் வாழ்வோர் குற்றம் செய்தால், அதை யார் புரிந்தது எனப் பாராமல், நடுநிலையோடு அக்குற்றத்துக்கான தண்டனையை வழங்குவதே முறையான செயலாகும்)
என்ற திருக்குறள் எழுதப் பட்டிருந்தது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பாக, இன்னமும் உயிர்ப்போடு இருக்கக் கூடிய நீதி முறையினை சொல்லி வைத்துள்ளானே நம் தமிழ் புலவன்! அதை எண்ணியக் கணமே, மனசெல்லாம் உணர்ச்சிப் பெருக்கெடுத்தது.
அந்த நேரத்தில் சத்தியப் பிரமாணம் வாங்க, கருப்பு அட்டைப் போட்ட பகவத் கீதை (கீதைதானே?) புத்தகத்தை நீதிமன்ற அலுவலர் என்னிடம் கொண்டு வரும் காட்சித் தோன்றியது. ஒரு முடிவெடுத்தேன்.
நீதிபதியை நோக்கி, சற்றே சத்தமாக,
யுவர் ஹானர்!
தமிழனின் தனிப் பெருமை! உலகப் பொது மறை! செம்மார்ந்த சீர்மிகு நூல்! எக்காலத்திலும் நீர்த்துப் போகாத நிறைகுடம்! எனது பண்பாட்டின் வேர்!
அய்யன் திருவள்ளுவர் அருளிய திருக்குறள் மீது சத்தியப் பிரமாணம் செய்ய விரும்புகிறேன். நான் நம்பும் இறை மீது நான் சத்தியம் செய்ய எனக்கு அனுமதி தருமாறு பணிவோடு கோருகிறேன்!
என ஆவேசமாக குமுறிவிட்டு, நிமிர்ந்தால், எதிரில் ஒரு கருப்புக் கோட்டு அலுவலர் என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவர் கையைப் பார்த்தேன். புத்தகமெல்லாம் எதுவும் இல்லை! நிமிர்ந்து பார்த்தால், நீதிபதி அப்போது குனிந்து எழுதிக் கொண்டிருந்தவர், நிமிரவேயில்லை.
ம்! சொல்லுங்க.
என்ன சார்?
சத்தியமா சொல்றேன்னு!
சத்தியமா சொல்றேன்.
உங்க பேரு!
கருணாநிதி.
நீங்கதான் மனுதாரரா?
ஆமாம்.
எல்லா விவரமும் தெரியுமில்லை!
தெரியும்.
இப்போது நீதிபதி. சரி! கையெழுத்துப் போட்டுட்டு போங்க.
அவ்வளவுதான். முடிஞ்சு போச்சு!
என் மனசுக்குள் நான் ஓட்டிக்கிட்டிருந்த வீரமுழக்கத்தின் ஒரு வார்த்தையும் உச்சரிக்கப் படாமலே, நான் கூண்டிலிருந்து கீழே இறங்க வேண்டியதாப் போச்சு!
அங்கே கருப்புத் துணியால் கட்டப்பட்ட நீதிதேவதையின் சிலை இல்லை!
அதன் கையில் நியாயத் தராசு இல்லை!
சத்தியப் பிரமாணத்துக்கு பகவத் கீதை இல்லை!
இத்தனை ஆண்டுகாலம், தொடர்ச்சியாக நாம் பார்த்துக் கொண்டிருந்த திரைப்படங்கள், நம்மை இப்படி ஏமாற்றி விட்டதே?
பெருத்த ஏமாற்றத்தோடு, நிமிர்ந்து பார்த்தேன்.
எனக்கெதிரே, பொக்கை வாய்ச் சிரிப்புடனான மகாத்மாவின் படம்! அதில், அவருக்கு விபூதிப் பட்டையடித்து, நடுவே ஒரு குங்குமப் பொட்டும் இட்டிருந்தார்கள்.
– எஸ்கேபி கருணா.

One thought on “கோர்ட் படியேறிய அனுபவம்

Comments are closed.