கவர்னரின் ஹெலிகாப்டர் II

கவர்னரின் ஹெலிகாப்டர்

இரண்டாம் பாகம்:
உங்கள் ஊரில் ஹெலிபேட் இருக்கா?
இரண்டாம் முறையாக கவர்னரின் ஏடிசியை (Aides-de-Camp) சந்தித்தப் போது இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது. எதற்காக இதை கேட்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை. சென்னைக்கு அருகில் இருப்பதால் கவர்னர் நிச்சயம் காரில்தான் வருவார் என்றே எண்ணியிருந்தேன்.
ஏன் சார்? கவர்னர் ஹெலிகாப்டரிலா வருகிறார்! என்றேன்.
ஆமாம்! ஹிஸ் எக்ஸெலென்ஸி அவரது மனைவியுடன் வருவதால், சாலைப் பயணம் சரியாக வராது! எனவே கண்டிப்பாக ஹெலிகாப்டர்தான்!
ஹெலிபேட் இருக்கா? இல்லையா?
எங்கள் ஊருக்கு ஹெலிகாப்டர் வந்தால் எங்கள் அரசுக் கலைக் கல்லூரியில்தான் இறங்கும். இந்திராகாந்தி வந்த போது, ஓடிச் சென்று பார்த்திருக்கிறேன். பிறகு, முதல்வர் ஜெயலலிதா சில முறை அங்கே வந்திருக்கிறார். ஆனால், அந்த இடத்தில் நிரந்தமாக ஹெலிப்பேட் அமைக்கப்பட்டிருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது. அப்படியே இருந்தாலும், அந்த இடமும், எங்கள் கல்லூரியும் ஊரின் நேரெதிர் துருவங்கள்.
இதையெல்லாம், இவரிடம் இந்த நேரத்தில் சொல்லி விளக்க முடியாது!
எனவே, நான் சொன்ன பதில்.
இருக்கு சார்!
வெரிகுட்! எங்கே இருக்கு?
எங்கள் கல்லூரி வளாகத்திலேயே இருக்கு!
வாட்! You have a Helipad in your College?
யெஸ்! இதுவரை இல்லை! ஆனால், நீங்கள் வரும்போது இருக்கும் என்றேன்.
அசந்து போன அவர்! You are amazing man! என்றார்.
நான்கு நாட்களில் சர்வதேசத் தரத்துடன் ஒரு ஹெலிபேட் எங்கள் கல்லூரியின் மைதானத்தில் அமைக்கப்பட்டு, அதற்கு காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறையினரின் ஒப்புதல் சான்றிதழும் வாங்கப்பட்டது. (இதற்கெல்லாம் கின்னஸ் சாதனை உண்டா எனப் பார்க்க வேண்டும்!).
இதற்கிடையில், என்னிடம் பெரிய பட்டியல் ஒன்று தரப்பட்டது. அது கவர்னர் வருகையின் போது செய்யக் கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை! Do’s & Don’ts! எத்தனை உன்னிப்பாக கவனித்துப் படித்துப் பார்த்தாலும், செய்யக் கூடியவை என்று ஏதும் அதில் இல்லை! எல்லாமே செய்யக் கூடாதவைகள்தான். ராஜ்பவனின் மொத்தக் கசப்பான அனுபவங்களையும் யாரோ தொகுத்து குறுநாவலாக எழுதியது போல இருந்தது அது.
அதை பல பிரதிகள் எடுத்து, மைக்செட் பொறுப்பாளர் தொடங்கி, கல்லூரியின் தோட்ட மேலாளர், பாதுகாவலர்கள் வரை ஆளுக்கு ஒரு பிரதி கொடுத்து படிக்கச் சொன்னேன். அதிலிருந்து கேள்விகள் கேட்கப்படும் என்ற ஒரு எச்சரிக்கையுடன்! நானெல்லாம், அப்பட்டியலை மனப்பாடமே செய்து விட்டிருந்தேன்.
அந்தப் பட்டியலின் முதல் நிலைத் தகவலே, விழா அழைப்பிதழை அச்சிடும் முன்பு, ராஜ்பவனின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பதுதான். அதன்படி, நான் ஏற்கனவே, அவர்களிடமிருந்து வாங்கி வந்திருந்த ஒரு மாதிரி அழைப்பிதழை வைத்து, நாங்கள் தயாரித்திருந்த மாதிரி அழைப்பிதழை, ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தேன்.
அதைக் கண்டு, அந்த அதிகாரி எப்படி எங்களின் ஒப்புதலை வாங்காமல் நீங்கள் அழைப்பிதழை அச்சிடலாம் என்று கோபத்தில் கொந்தளித்து விட்டாராம். ஒப்புதலுக்காகத்தான் கொடுத்துள்ளோம் என எவ்வளவு விளக்கியும் அவர் சமாதானமாகவில்லை. நானே சென்னைக்கு நேரில் சென்று அவரை சந்தித்த போதுதான் எனக்கு விஷயம் புரிந்தது. எனது வடிவமைப்பாளர், மாதிரி அழைப்பிதழையே மிகுந்த சிரத்தையுடன் நேர்த்தியாக அசல் அழைப்பிதழைப் போல தயாரித்து கொடுத்தனுப்பியுள்ளார்.
அந்த அதிகாரியோ, இக்காலத்திய போட்டோ ஷாப் போன்ற நவீன சமாசாரமெல்லாம் அறியாத கார்பன் பேப்பர் காலத்து மனிதர்! நகலையே, அசல் என நம்பி விட்டிருக்கிறார். விஷயம் தெரிந்து சமாதானமான அவர் என்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்டார்.
ஏன் சார்! இந்த மாதிரி அதிகப் பிரசங்கிகளையெல்லாம் வேலைக்கு வைத்திருக்கிறீர்கள்?
அதானே!
இடையே, பல முறை, கவர்னர் மாளிகைக்கு சென்று வந்து கொண்டிருந்ததில் (மசாலா டீ! ) பல புதிய நடைமுறைகளைத் தெரிந்து கொண்டேன். மாளிகைக்கு வெளியே இருந்த அம்மன் கோவில் விழாவிற்காக ஒலிப்பெருக்கியில் சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்த எல்.ஆர்.ஈஸ்வரியின் அம்மன் பாடல்களிலிருந்து, தமிழக கவர்னருக்குக்கூட விதிவிலக்கு இல்லை என்பதை அறிய மனதுக்கு இதமாக இருந்தது.
ஹெலிப்பேட் அமைக்கப்பட்டு விட்ட விஷயத்தை கவர்னரின் ஏடிசியிடம் சொன்னபோது, நிஜமாக சாதித்து விட்டீர்களே! எனப் பாராட்டி விட்டு, அந்த ஹெலிப்பேடின் கோ ஆர்டினேட்ஸ் (பூமத்திய ரேகை, அட்சய ரேகைக் கோடுகளின் நீள, அகல… மன்னிக்கவும்! நான் இங்கிலீஷ் மீடியம்! பூமியின் லேட்டிட்யூட், லாஞ்சிட்யூட் சமாசாரம் அது!) கொண்டு வரச் சொன்னார்.
என்னுடைய ஜிபிஎஸ் கருவியிருந்து அந்தப் பதிவையே கொண்டு போயிருந்ததால் (இன்று முதல் நீ முன்ஜாக்கிரதை முத்தண்ணா என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாய்!), உற்சாகமான ஏடிசி, ஹெலிகாப்டரின் பைலட்டை மொபைல் போனில் அழைத்து, விவரத்தை பகிர்ந்து கொண்டார். நீங்களும் பைலட்டிடம் பேசி விடுங்கள் என்று சொல்லி, ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தார். பைலட் வினித் வர்மா, இன்னும் இரண்டு நாட்களில் டிரையலுக்காக தான் அங்கே வருவதாகச் சொன்னார். அங்கிருந்தபடியே, எனது உதவியாளரை அழைத்து, டிரையலுக்காக எந்த நேரம் வேண்டுமானாலும் ஹெலிகாப்டர் வரும் என்ற விஷயத்தைச் சொல்லி வைத்தேன்.
அழைப்பிதழைக் கொடுப்பதற்காக, மீண்டும் ஒரு முறை கவர்னரைச் சந்தித்தேன். இம்முறையும், என்னை அருகில் அமர்த்தி, (மசாலா டீ!) நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். தமிழகத்தைப் பற்றி பல விஷயங்களை உன்னிப்பாக அவர் அவதானித்து வைத்திருந்தது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. விடைபெறும் போது கண்டிப்பாக விழாவிற்கு வந்து விடுவதாக மீண்டும் உறுதியளித்து வழியனுப்பினார். அந்த நாள் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தேன்.
அன்று வியாழக்கிழமை. விழா ஏற்பாடுகளை கவனிப்பதற்காக சென்னையிலிருந்து திரும்பியிருந்தேன். ஞாயிறு காலை பட்டமளிப்பு விழா. சனிக்கிழமை மாலையே கவர்னர் ஹெலிகாப்டரில் வந்திறங்கி, அன்றைய இரவு எங்கள் கல்லூரியின் விருந்தினர் மாளிகையில் தங்குவதாக திட்டம். கலெக்டர், எஸ்.பி, போன்ற அரசு உயரதிகாரிகள் வருவதும், விழா ஏற்பாடுகளை பார்வையிட்டுப் போவதுமாக பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்த நேரத்தில், எதற்கோ எனது உதவியாளரைத் தேடினேன்.
இரண்டு நாட்களாக, டிரையல் லேண்டிங்கிற்காக ஹெலிகாப்டர் வரும் என்று வானத்தையே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்ததால், கழுத்து வலி அதிகமாகி விட்டெதெனவும், அதனால் அவர் மருத்துவரிடம் சென்றிருப்பதாகவும் என்னிடம் சொல்லப்பட்டதை, நகைச்சுவையாக எடுத்துக் கொள்ள முடியவில்லை! அதை சிக் ஜோக் எனும் வகையில்தான் பட்டியலிடுவேன் .
எப்படியோ, ஹெலிகாப்டர் டிரையலுக்காக இன்னமும் வரவில்லை என்பதை கவர்னரின் ஏடிசியிடம் சொல்ல வேண்டும் என நினைத்து, எனது மொபைல் போனை எடுத்த போது, கவர்னரின் ஏடிசியே லைனுக்கு வந்தார். ஐ போனில் இந்த வசதியெல்லாம் இருக்கா என்ன? என்று திகைத்து போய், ஹலோ சார்! என்றேன்.
அவர் எடுத்தவுடனே, ஒரு பேட் நியூஸ் சார்! ஹெலிகாப்டர் ரிப்பேர்! எனவே உங்கள் நிகழ்ச்சி அநேகமாக ரத்தாகிவிடலாம். இன்னும் சற்று நேரத்தில் உறுதி செய்கிறேன் என்றார். அந்த நேரத்தில், விழா நடக்கவிருக்கும் மண்டபத்தின் மையப் பகுதியில் நான் நின்று கொண்டிருந்தேன். என்னைச் சுற்றி, நூறு பேருக்கும் மேலாக விழா ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்கள்.
நான் எப்போதுமே, திகைத்துப் போயிருப்பதைப் போலவே எனது முகத்தை வைத்திருப்பது வழக்கம். ஆதலால், நிஜமாகவே நான் அதிர்ச்சியடைந்து போயிருந்ததை யாரும் கண்டு பிடிக்கவில்லை.
விழா மேடையின் பொறுப்பாளர் அந்த நேரத்தில், என்னருகில் வந்து, மேடை அலங்காரத்திற்காக பூக்கள் வாங்க பெங்களூர் சென்றவர்கள், பட்ஜெட்டில் இருபதாயிரம் ரூபாய் அதிகமாகிறது! என்ன செய்யலாம் எனக் கேட்கிறார்கள் என்றார்.
பரவாயில்லை! வாங்கி வரச் சொல்லுங்கள் என்றேன்.
விழாவிற்கு கவர்னர் வரப் போவதில்லை என்பது அநேகமாக உறுதியாகி விட்டது. இப்போது விழா ஏற்பாடுகளைத் தொடர்ந்து செய்வதா, வேண்டாமா என்பதுதான் என் முன்னால் இருக்கும் கேள்வி! நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் சந்திக்கும் மிகப் பெரிய சவாலே, இக்கட்டான நேரத்தில் முடிவெடுக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்வதுதான். அந்தத் திறன் பல நேரங்களில் அனுபவங்களினாலும், சில நேரங்களில் உள்ளுணர்வினாலும் வெளிப்படும்.
இரவு, பகலாக நூறு பேர் செய்து கொண்டிருக்கும் இந்த விழா ஏற்பாடுகளை இப்போது நிறுத்தி விட்டேனென்றால், மீண்டும் துவங்க முடியாது. எல்லோரும் அவரவர் ஊருக்கு சென்று விடுவார்கள். ஒரு வேளை, கடைசி நேரத்தில், கவர்னர் வருகை மீண்டும் உறுதி செய்யப்பட்டு விட்டால், இந்த ஏற்பாடுகளை செய்து முடிக்க முடியவே முடியாது. எனவே, யாரிடமும் விஷயத்தை சொல்லாமல், விழா ஏற்பாடுகளைத் தொடரச் செய்தேன்.
அன்று இரவு, வீட்டுக்கு வந்தவுடன், எனது மகன் என்னிடம் வந்து, என் ப்ராஜக்ட்டுக்கு (ஹோம் வொர்க்) ஹெல்ப் பண்றீங்களா டாடி? என்றான். முடியாது என்றேன்! அப்பாடா! இன்னைக்காவது தப்பில்லாம ஒழுங்கா நான் ப்ராஜக்ட் பண்ணாலாம் என்றபடி, சந்தோஷமாக திரும்பிச் சென்றான். காலேஜுக்கு கவர்னர் வராங்க! அதனால டாடி, டென்ஷனா இருக்காங்கடா! என்றார் என் மனைவி! டென்ஷன், கவர்னர் வருவதால் அல்ல! வரப்போவதில்லை என்பதால்! என்பதை என் மனைவியிடம் மட்டுமாவது சொல்ல வேண்டும் போலிருந்தது!
மறுநாள் வெள்ளிக்கிழமை காலை, பல முறை முயற்சி செய்த பின் கவர்னரின் ஏடிசி லைனில் கிடைத்தார். சார்! உங்களுடைய பதிலுக்காக காத்திருக்கிறேன் என்றேன். தமிழக அரசிடம் வேறு ஹெலிகாப்டர் கேட்டிருப்பதாகவும், கிடைத்தால் அன்று மாலை நிகழ்ச்சியை உறுதி செய்வதாகவும் சொன்னார். அட! திட்டத்திற்கு இன்னமும் உயிர் இருக்கிறது! உயிர் இருக்கும்வரை நம்பிக்கையும் இருக்கும்.
மாலை மீண்டும் அவரை அழைத்தேன். தமிழக அரசால் குறுகிய நேரத்தில் மாற்று ஏற்பாடு செய்து தர முடியவில்லை என்றும், மற்றபடி எல்லோரும் தயாராக இருப்பதாகவும், ஹெலிகாப்டர் கிடைத்தால் வந்து விடுவோம் என்றும் சொன்னார். ஆக, கவர்னர் வருவதற்கும் வராமல் போவதற்கும் இடையே ஹெலிகாப்டர்தான் இருக்கிறது! எனவே, அவரிடம், அப்ப நான் ஒரு ஹெலிகாப்டரை ஏற்பாடு செய்து தந்தால் போதுமா? என்றேன். (சொன்னேனல்லவா! நான் ஒரு அதிகப்பிரசங்கி என்று!).
எதிர்முனை அமைதியாகி விட்டது. சற்று நேர மவுனத்திற்கு பின், நீங்களே உங்கள் சொந்தப் பொறுப்பில் ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து தருகிறேன் என்றா சொல்கிறீர்கள்? என்றார். ஆம்! அப்படி செய்தால் நான் நிகழ்ச்சியை நடத்த முடியுமல்லவா? என்றேன். கண்டிப்பாக! ஆனால், ஹெலிகாப்டர் செலவுகளையெல்லாம் அரசு கொடுக்காது என்றார். அது தெரியும் என்றேன். அப்ப சரி! நாளை மதியம் இங்கிருந்து நாங்கள் புறப்படத் தயார்! எனவே, நாளை காலை 9 மணிக்குள் ஹெலிகாப்டரை தயாராக இருக்கும்படி செய்யுங்கள் என்று சொல்லி பேச்சை முடித்துக் கொண்டார். அப்போது வெள்ளிக்கிழமை சரியாக மாலை 6:30 மணி.
இப்படித்தான், நான் அந்த ஒரு இரவுக்குள் வாடகைக்கு ஒரு ஹெலிகாப்டரைத் தேடிக் கொண்டுவர வேண்டிய அவசியத்துக்குள்ளானேன்.
கடைசித் தருணத்தில் (கொட்டுவாயில் என்றொரு வார்த்தையை சுஜாதா பயன்படுத்துவார்!) எதையாவது தேடிக் கொண்டுவர வேண்டிய கட்டாயம் இதற்கு முன் எனக்குப் பல முறை ஏற்பட்டதுண்டு.
புடவைப் பிடிக்கவில்லை என்று கல்யாணத்துக்கு முன் தினம் ஓடிப் போன நண்பனின் தங்கை.
டோக்கியோவில், கொட்டும் பனியில், நட்ட நடு இரவில், ஒரு பாட்டல் தண்ணீர் வாங்க தேவையான சில யென் நாணயங்கள்,
ஏதோ ஒரு நடு இரவில்,(அதை அதிகாலை என்றும் சிலர் சொல்வார்கள்!) நண்பனுடைய வீட்டு கிரகப்பிரவேஸத்திற்காக தேடியலைந்த கோமியம்,
என ஒரு இரவில் தேடிக் கொண்டு வந்து சாதித்த ஒரு நீளமான பட்டியல் என்னிடமிருக்கிறது என்றாலும், ஹெலிகாப்டர்!
கொஞ்சம் அதிகம்தான்!
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன் (நான்தான்!), தனது இளம் தளபதிகளைக் களத்தில் இறக்கி, நவீன தொழில்நுட்பத்தின் சகல சாத்தியக் கூறுகளையும் பயன்படுத்திப் பார்த்ததில் கிடைத்தத் தகவல்கள் இவை.
ஹெலிகாப்டர் வாடகைக்குத் தரும் நிறுவனங்கள் உண்மையிலேயே பல இருக்கின்றன.
அவைகள் பெரும்பாலும் டெல்லியிலும், பெங்களூரிலுமாக உள்ளன.
எங்கிருந்து வாடகைக்கு எடுத்தாலும் புறப்பட்ட இடத்திலிருந்து, மீண்டும் திரும்ப போய் சேருவது வரைக்கும் உண்டான தூரத்திற்கு வாடகை தர வேண்டும்.
கவர்னர் வரும் வகையிலான பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ஹெலிகாப்டர் மிகக் குறைவே உள்ளன.
எல்லாவற்றுக்கும் மேலாக, இதையெல்லாம் விளக்கிச் சொல்ல எந்த அலுவலகத்திலும், யாரும் இல்லை. பெரும்பாலான அலுவகங்களில் தொலைபேசி மணியடித்துக் கொண்டேயிருந்தது. முன் இரவாகி விட்டதால், எல்லா அலுவகங்களும் மூடப்பட்டு விட்டன. ஏதோ ஒரு போன்கால் டிரான்ஸ்ஃபரில் கிடைத்த ஒரு ஆசாமி இந்தத் தகவல்களையெல்லாம் சொன்னார்.
மொத்தத்தில், நமது நாட்டில் கூட, ஒரு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுக்கும் எல்லா சாத்தியங்களும் உண்டு!
ஆனால் டூ லேட்!
மறுநாள் காலை சனிக்கிழமையாதலால், நமக்குத் தேவையான எந்த அலுவலகமும் திறக்கப் படவில்லை. கவர்னர் புறப்பட வேண்டிய நேரம் கடந்து விட்டது. இனிமேல், அவர் புறப்பட்டு வரக் கூடிய சாத்தியங்கள் ஏறக்குறைய இல்லையென்றாகி விட்டது. இரு புறமும், எல்லாத் தொடர்புகளும் அற்ற நிலையில், அன்று மாலை நான் சொல்லாமலே மற்ற அனைவரும் ஒரு முடிவுக்கு வந்து விட்டிருந்தனர். கவர்னர் வரப் போவதில்லை!
நாளைக் காலை நடக்கவிருக்கும் பட்டமளிப்பு விழாவை தள்ளி வைக்க முடியாது. பட்டம் பெறப் போகும் இளம் பொறியாளர்கள் தங்கள் பெற்றோர்களுடன் வருகை தர தொடங்கி விட்டிருந்தனர். யாரிடமும் ஒன்றும் சொல்லாமல் இரவு வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். மூன்று நாட்களாகத் தூக்கம் இல்லாததால், கண்கள் நெருப்பைப் போல் எரிந்தது. ஏறக்குறையத் தூங்கியும் விட்டேன்! எனது மொபைல் ஒலித்தது. கலெக்டர் அழைத்தார். எடுத்தவுடன், Mr.Karuna! Get Ready! His Excellency is coming by Road tomorrow morning! என்றார்.
தூக்கம் போச்சு!
மறுநாள் காலை சரியாக பத்து மணியளவில், மங்கள வாத்தியங்கள் முழங்க, தமிழக கவர்னர், மேடம் கவர்னருடன் எங்கள் கல்லூரிக்குள் நுழைந்தார். கல்லூரியின் விருந்தினர் மாளிகையில் மாவட்டக் காவல்துறையினர் அளித்த கார்ட் ஆஃப் ஹானரை ஏற்றுக் கொண்டு, பின் கலெக்டர் முதலான மாவட்ட அதிகாரிகளின் வரவேற்பைப் பெற்றுக் கொண்டார். பின், என்னை எங்கே என்று தனது கண்களாலேத் தேடி, அவரருகில் அழைத்து See! I have Come! என்றார்.
ஓய்வுத் தேவையில்லை. ஒரு காஃபி குடித்து விட்டு நேராக நிகழ்ச்சிக்கு போகலாம் என்று கவர்னர் சொல்லி விட்டார். அந்த இடைப்பட்ட நேரத்தில், கவர்னரின் ஏடிசி, மெல்ல என்னருகில் வந்து, “எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம்! கேன்சல் செய்து விடலாம் என்று! ஆனால், கவர்னர் கேட்கவேயில்லை! நான் போய்தான் ஆக வேண்டும். I have given My Word to that Young Man என்று சொல்லிவிட்டார்!” என்றார்.
நிமிர்ந்து கவர்னரைப் பார்த்தேன். ஏற்கனவே உயரமான அந்தப் பெரிய மனிதர், எனது கண்களுக்கு கர்ணன் திரைப்படத்தில், சிவாஜி கணேசனுக்கு காட்சியளிக்கும் என்.டி.ஆர் போல, மகாவிஷ்ணு உருவில் விண்ணுக்கும், மண்ணுக்குமாக உயர்ந்து நின்றார்.
விழா மிகச் சிறப்பாக முடிந்து, மீண்டும் விருந்தினர் மாளிகைக்கு திரும்பி வந்தோம்.விழாவில் கவர்னரை வரவேற்று நான் சிறப்பாகவே பேசியிருந்தேன். உண்மையில் அவரைப் பற்றிப் பேச நிறைய இருந்தது. ஆந்திராவின் நிதி அமைச்சராக 16 முறை பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார். முதன்முதலாக ஆசிரியர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வந்த பெருமை அவருக்குண்டு. நிதி நிர்வாகத்தில் மிகக் கறாரான அவர் மீது, இன்று வரை ஒரு சிறிய குற்றச்சாட்டு கூட யாரும் சொல்ல முடியாத அளவிற்கு நேர்மையானவர். அத்தனைப் புகழுடன், தான் கொடுத்த வாக்கை காப்பாற்றும் அற்புதமான மனிதர் என்பதையும் என் அனுபவத்திலிருந்து நானே அன்று அறிந்து கொண்டேன்.
மதிய உணவின் போது என் போன் (சைலண்ட் மோடில்) ஒலித்துக் கொண்டேயிருந்தது. கவர்னருடனே இருந்ததால் யாரென்று பார்க்க முடியவில்லை. போன் ஒலிப்பதும் நிற்பதாக இல்லை. வெளியில் வந்து யாரென்று பார்த்தேன். டெல்லியிலிருந்து ____ ஹெலிகாப்டர் கம்பெனியிலிருந்து ஒரு இனிமையான பெண் குரல்! அவர்களின் ஹெலிகாப்டர் ஒன்று தற்சமயம் எதிர்பாராமல் சென்னை வந்திருப்பதாகவும், நீங்கள் கோரினால், உங்கள் விருந்தினரை நாங்கள் உங்கள் ஊருக்கு அழைத்து வரத் தயாராக இருப்பதாகவும் சொன்னது.
அதற்குள் கவர்னர் சாப்பிட்டு முடித்திருந்தார்.
கவர்னரும், மேடம் கவர்னரும் அன்று மாலை சென்னைக்குத் திரும்பிச் சென்றவுடன் மனதிற்குள் சட்டென்று ஒரு அமைதி வந்து விட்டிருந்தது. கடந்த சில நாட்களாக, என்னுடன் இரவு பகலாக உழைத்திருந்த எனது குழுவினர் அனைவருக்கும் நன்றி சொல்லி, அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு, இரவு வீடு திரும்பினேன். உடலளவில் மிகச் சோர்ந்திருந்தால் கூட, மனதளவில் உற்சாகமாகவே இருந்தேன். மொபைல் போனை சார்ஜரில் போடும் முன்புதான் பார்த்தேன். ஏழு புதிய மெசேஜ் வந்திருந்தது! திறந்து பார்த்ததில், ஏழும் ஒருவரிடம் இருந்துதான்!
Boss! Chopper is Ready Now!
Waiting for the orders to fly His Excellency!
Captain Vineeth Verma.
அவர்தாங்க! கவர்னர் ஹெலிகாப்டரின் பைலட்.
கட்டுரைக்கு அப்பால்: அந்த ஹெலிப்பேட் இன்னமும் எங்கள் கல்லூரியின்
வளாகத்தில்தான் இருக்கிறது. வாசகர்கள் யாரேனும் எங்கள்
ஊருக்கு ஹெலிகாப்டரில் வந்தால் அதை பயன்படுத்திக்
கொள்ளலாம்.

74 thoughts on “கவர்னரின் ஹெலிகாப்டர் II

  1. நல்ல பதிப்பாளர் அச்சிட்ட சுஜாதா புத்தகத்தை படிக்கும்போது ஏற்படும் ஒரு சொகுசான
    உணர்வு – உங்கள் எழுத்தை படிக்கும்போதும் ஏற்படுது. மிக சிறப்பான எழுத்து நடை.
    கண்டிப்பாக உங்களது சுவாரஸ்யமான அனுபவங்களை தொடர்ந்து எழுதவும் !!!
    – சுதா

  2. வார்த்தை கோர்வை அழகாக இருக்கு..

  3. DEAR SIR…
    NOTHING TO SAY BY MOUTH, BUT THERE IS SOMETHING TO SAY BY HEART… “ITS SIMPLY THE BEST & MARVELLOUS WORK”. UR WAY OF PRESENTATION, EXPLAINATION, APPROACH ALL VERY PERFECT… IN MY OPINION, THE REAL HIS EXCELLENCY IS “MR.SKPKARUNA”… MY HATS OFF..!!

    1. The real Hero of this article is
      His Excellency Dr.Rosaih himself.
      No one can be compared with him.
      Thank you for your comment.

  4. Most hilarious post I have ever read! Somehow somebody else’s misery turns out to be so funny for others :-)
    /அப்பாடா! இன்னைக்காவது தப்பில்லாம ஒழுங்கா நான் ப்ராஜக்ட் பண்ணாலாம் என்றபடி, சந்தோஷமாக திரும்பிச் சென்றான். / LOL
    amas32

  5. மிக எளிமையான மற்றும் சிறப்பான எழுத்துநடை !!!
    தங்களுடைய எழுத்துக்களை வம்சி பதிப்பகத்திடம் இருந்து புத்தகமாக விரைவில் பார்க்கும் ஆர்வத்தோடு .
    – கிருபாகரன் பூபதி
    பெங்களூர்

  6. management skill and decision making is great..and words of the great was to gorgeous I have given My Word to that Young Man …..

  7. அருமையான கட்டுரை அந்த ஹெலிபேட்டை பார்க்க வந்த கூட்டத்தில் நானும் ஒருவன்
    கட்டுரை மிகவும் சுவாரஸ்யமாகஇருந்து.
    இன்னும் பல கட்டுரைகளை எதிர்நோக்கும் உங்கள் அன்பு மாணவன்

  8. வழக்கம்போல நகைச்சுவை இழையோடும் விறுவிறு பதிவு ! முடிவு கொஞ்சம் புரியல இருந்தாலும் உற்சாகமாக படிக்க முடிந்தது !!!

  9. ங்கள் பதிவு மிகவும் எளிமையான சொற்களால் அமையபெற்றுள்ளது .
    படிக்க படிக்க சுவாரசியமாக உள்ளது .
    மிக அருமை சார் !
    I admire your thoughts sir..it’s really Simple and Superb !

  10. அற்புதம் கருணா! இன்று சுஜாதா இருந்திருந்தால் அடுத்த வார விகடன் கற்றதும் பெற்றதும் பகுதியில் இப்படித்தான் எழுதியிருப்பார்:
    இணையம் என்பது இன்று எவ்வளவு பேரிடம் மறைந்து கிடக்கும் எழுத்தாளர்களை வெளிக்கொண்டுவருகிறது என்பதைப் பார்க்கிறேன். இணைய எழுத்துக்கள் பெரும்பாலும் மூன்று வகை. அது தரும் anonymity காரணமாக விடுக்கும் சவடால்கள், இலக்கிய சிற்றிதழ்களில் இடம் கிடைக்காததால் எழுதப்படும் கமா, ஃபுல்ஸ்டாப் இல்லாத அயோயமான பிரஸ்தாபங்கள், மூன்றாவதாக எஸ்கேபி கருணா என்ற இளைஞர் போல உண்மையிலேயே ரத்தினங்கள். கருணா ஒரு இஞ்சினீயரிங் காலேஜ் அதிபர். அவரே ஒரு பொறியியலாளர். இவருக்கு வாய்த்திருக்கும் எழுத்துவன்மையைப் பார்க்கும்போது சீனியர்களான என்னைப்போன்றவர்களுக்கே பொறாமையாக இருக்கிறது. இவர் பதிவேற்றம் செய்திருக்கும் ‘கவர்னரின் ஹெலிகாப்டர்’ என்ற கட்டுரை ஒரு மிகச்சிறந்த சிறுகதையைப்போல திறமையாக எழுதப்பட்ட ஒரு ‘ஜெம்’. இந்த வருட இறுதியில் தேர்ந்தெடுக்கப்போகும் சுஜாதா அவார்டில் சிறந்த கட்டுரைக்கான பரிசை இப்போதே ரிஸர்வ் செய்து வைத்துவிட்டேன்.

    1. சார், நான் பெரிதும் மதிக்கும், தலைசிறந்த மொழிபெயர்ப்பாளர் நீங்கள். மொழிபெயர்ப்பாளர் என்பதாலேயே, வாசிப்பை,வார்த்தை வார்த்தையாக படிப்பதை வழக்கமாக கொண்டிருப்பீர்கள்.அந்த விதத்தில், என்னுடைய கட்டுரையை ஒவ்வொரு வார்த்தையாக படித்து,ரசித்து பின் என்னை தொலைபேசியிலும் அழைத்து பாராட்டி, இப்போது இங்கேயும் அந்தப் பாராட்டை பதிவிட்டிருக்கிறீர்கள்.
      நன்றி. வேறென்ன சொல்ல?
      ஆனால், அந்த சுஜாதா ஸ்டைலில் எழுதப்பட்ட பாணியை மிகவும் ரசித்தேன். தலைவர், எழுதியிருந்தால் அது இப்படித்தான் இருக்கக்கூடும்!
      அவரே, இப்படி ஆசியளிப்பதைப் போல உணர்கிறேன்.
      மீண்டும் நன்றி.

  11. Nice senttence formation sir,after read tis.story I know the dificults behind tat garduation function. I m the one of the graduate of tat function . U took a lot of effort to made a function as great success…. really ur great sir.
    Mohan raj
    Pune.

  12. மிக அருமையான கட்டுரை, கைதேர்ந்த எழுத்தாளனின் நாவலை படிக்கும் பொது ஏற்படும் மகிழ்ச்சி கிடைகிறது

  13. Rosaiah is simply great, I think that is the reason he was not able to continue as a CM in Andhra Pradesh. Our present system is in such a state that it needs GREEDY, POWER HUNGRY people to become CMs.
    Excellent Writing too :)

  14. “நிமிர்ந்து கவர்னரைப் பார்த்தேன். ஏற்கனவே உயரமான அந்தப் பெரிய மனிதர், எனது கண்களுக்கு கர்ணன் திரைப்படத்தில், சிவாஜி கணேசனுக்கு காட்சியளிக்கும் என்.டி.ஆர் போல, மகாவிஷ்ணு உருவில் விண்ணுக்கும், மண்ணுக்குமாக உயர்ந்து நின்றார்.” அடாடா என்ன ஒரு பொருத்தமான உவமை. உங்களுக்கு மட்டுமல்ல படிக்கும் எல்லோருக்குமே அப்படித்தானிருக்கும். திரும்ப திரும்ப இரண்டு பாகங்களையும் படித்து இன்புற்றேன். என் மன மகிழ்ச்சிக்கும் பாராட்டுகளுக்கும் வார்த்தையே இல்லை. நீங்கள் இன்னும் எவ்வளவோ எழுதி தள்ளினாலும் எனக்கு இந்த “கவர்னரின் ஹெலிகாப்டர்” ஒன்றே போதும். இது போல இனி ஒரு கட்டுரை வருமா என்பது சந்தேகமே ? என்ன ஒரு நகைச்சுவை கலந்த விறுவிறுப்பு . நீவீர் வாழ்க பல்லாண்டு. நன்றி

  15. மிக ஆச்சர்யமான நிகழ்வை இயல்பான நடையுடன் எழுதி இருக்கின்றீர்கள், முதல் முறை உங்கள் தளத்திற்கு வந்தேன், பல இடங்களின் நகைச்சுவை அற்புதமாக இருந்தது. உங்களைப்போன்றவர்களின் அனுபங்கள் இப்படி பதிவு செய்யப்படுவது மிகவும் தேவையானது. உங்களின் சுவையான எழுத்து நடை ஓரே ஓட்டத்தில் படிக்கவைக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது.

  16. சற்றும் சுவாரஸ்யம் குறையாமல், வாசகரை தன்னுடன் பயணிக்க வைக்கும் எழுத்து நடை. உடன் பயணிக்கும் நகைச்சுவை உணர்வு அதில் முந்திரி போல.
    விறுவிறுப்பாக படிக்க முடிந்தது.
    ஒரு உண்மை தெரியுமா? கதையின் அளவைப் பார்த்து ஒரே மூச்சில் படிக்க முடியுமா? (அலுவல் பணிகள்) என திகைத்தேன். ஆனால் முடித்து விட்டு தான் அடுத்த வேலையே!
    நன்றி!
    ஒரே ஒரு குறை. முடித்து விட்டீர்கள்! (தொடர்ந்து எழுதுங்கள். பசியோடு காத்திருக்கிறோம்!)

  17. // நான் எப்போதுமே, திகைத்துப் போயிருப்பதைப் போலவே எனது முகத்தை வைத்திருப்பது வழக்கம். ஆதலால், நிஜமாகவே நான் அதிர்ச்சியடைந்து போயிருந்ததை யாரும் கண்டு பிடிக்கவில்லை. //
    பல இடங்களில் சிரித்த படியே படித்தேன் என்றாலும் இதைப் படித்தவுடன் வாய் விட்டே சிரித்து விட்டேன்.
    // நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் சந்திக்கும் மிகப் பெரிய சவாலே, இக்கட்டான நேரத்தில் முடிவெடுக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்வதுதான். அந்தத் திறன் பல நேரங்களில் அனுபவங்களினாலும், சில நேரங்களில் உள்ளுணர்வினாலும் வெளிப்படும். //
    உண்மை. எனக்கென்னவோ நீங்கள் குடித்த மசாலா டீ தான் உதவியிருக்கிறது என்று தோன்றுகிறது. :) :))
    படித்து முடித்தவுடன் எனக்கு தோன்றியது இது தான். நீங்கள் வாரா வாரம் தொடர்ந்து எழுதினால் நன்றாக இருக்கும்.
    ஒரு தொடர் எழுதுவதற்கு விஷயங்களை திரட்டி வையுங்கள். கதவு சீக்கிரம் திறக்கும்!

  18. The real hero of this article is Mr. SKP Karuna, Whan an Amazing flow, really enjoyed… and laughed somewhere…

  19. அந்த ஹெலிப்பேட் இன்னமும் எங்கள் கல்லூரியின்
    வளாகத்தில்தான் இருக்கிறது. வாசகர்கள் யாரேனும் எங்கள்
    ஊருக்கு ஹெலிகாப்டரில் வந்தால் அதை பயன்படுத்திக்
    கொள்ளலாம்.
    -)))))
    Final Touch !!!

  20. கருணா இந்த நிகழ்வின் போது அருகில் இருந்து பார்த்து அனுபவத்த எனக்கு இன்னும் சில சுவாரிஸ்யமான விஷயங்ள் விடுபட்டிருந்தாலும் , அந்த திக் திக் நிமிடஙள் படிக்கும் போது நோ டென்ஷன்.
    full marks for expressing a serious situation in lighter note with great humour , congrats keep writing

  21. அருமை..அருமை… ஒரு நாவலை படித்து முடித்தது போன்ற அனுபவம்..
    இடை இடையே சரியான கலவையில் நகைச்சுவை….
    தொடர்ந்து எழுதுங்கள்….உங்களுக்குள் ஒரு எழுத்தாளர் இருக்கிறார்..

  22. Realy great story sir…. My eyes starring at the page without a blink for long time… I feel very proud to be an SKPian… Hats off to u sir…! keep roking like this… :-)

  23. உங்களின் எழுத்துக்கள் மிகவும் அருமை, அதிலும் உங்களின் எழுத்துக்கோர்வை மற்றும் எழுத்து நடையும் அருமை. முதல் பாகத்தில் நீங்கள் கவர்னரை சந்தித்ததை சொல்லும்போது, வழியில் உங்கள் பார்வையில் தென்பட்டதை எல்லாவற்றையும் மிக சிறப்பாக உடுத்துரைத்தீர்கள். உங்களின் எழுத்துபணி மேலும் தொடரட்டும்……

  24. இன்னுமொரு விடயத்தை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நேற்று நான் சென்னையில் இருந்தபோது உடன் பணியாற்றிய எனது நண்பருடன் அலைபேசியில் உரையாடிகொண்டிருந்த போது, எதேச்சையாக எனது நண்பர் என்னிடம் கேட்டார், “ நான் திருவண்ணாமலை வரும்போது, உங்கள் வீட்டில் என்னுடைய சிற்றூந்தை நிறுத்த இடம் இருக்குமா?” என்று கேட்டார், நான் அதற்கு, நமது கல்லுரியின் விளையாட்டு மைதானத்தை மனதில் வைத்துகொண்டு சொன்னேன், ”உனக்கு சிற்றூந்து நிறுத்த என்ன, ஹெலிகாப்டர் நிறுத்தவே அங்கு இடமிருக்கு” என்று எதேச்சையாக கூறினேன். ஆனால் உங்களின் இந்த இரண்டாம் பகுதியை படித்த பிறகு தான் தெரிந்தது, உண்மையிலேயே இங்கு ஹெலிகாப்டர் நிறுத்தும் வசதி உள்ளது என்று. இதை தான் ஆங்கிலத்தில் கோ-இன்சிடென்ட் (co-incident) (ஒன்றுபட்ட நிகழ்ச்சி – இது சரியான மொழியாக்கமா என்று எனக்கு தெரியவில்லை, தெரிந்தவர்கள் இருந்தால் தெரியபடுத்தவும்) என்று சொல்வார்களோ????

  25. hello sir, i am MBA student of SKP …. what a fantastic story sir…….. as a management guy i learned a lesson from this story………. how u managed this situation…. great …. awesome sir…..hatsoff on behalf of SKP-MBA (2011-2013) Batch students…………proud to be an skp student………. thank you sir…………….

  26. si rrealy excelence your writing method.u r become a another screenplay king mr.baggiyaraj..congrats..and continue to u r work..

  27. Dear sir, really I enjoyed both part:1 & 2..The way your write up is excellent.. Both article reflect your humor sense in writing… Sure your the such a amazing man… Hats off you…

  28. Nice senttence formation sir,after read tis.story I know the dificults behind tat garduation function.very nice sir……congrats..and continue to u r work sir..

  29. ஒரு கட்டுரையை (சிறுகதை) தொய்வில்லாமல் கொண்டு போகும் கைவந்த கலை உங்களிடம் இருக்கு கருணா! வாழ்த்துக்கள் ..தொடர்ந்து எழுதுங்கள் .

  30. டியர் கருணா, நானும் ஒரு சுஜாதாவின் தீவிர ரசிகன் என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கட்டுரையை படித்த பின் கருணாவின் பரந்த ரசிகர்களில் நானும் ஒருவனாகி விட்டேன். சுவாரஸ்யமாக ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொள்வதில் உமக்கு நிகர் நீயே. வாழ்க வளமுடன். தங்களின் ரசிகனாய்!!!
    கண்ணன்

  31. சமீப காலங்களில் நான் வாசித்ததில், ஒரு அனுபவம் கட்டுரையின் நேர்த்தியுடனும், கதையின் அழகியலுடனும் எழுதப்பட்டதில் இதைத்தான் நான் மிகச் சிறந்ததாகக் காண்கிறேன். கட்டுரை களத்தின் பிரம்மாண்டம், அது சம்பந்தப்பட்ட மனிதர்களின் பிண்ணனியின் பிரம்மாண்டம் இவற்றைத் தாண்டி ஒரு நுண்ணிய உணர்வு கட்டுரை எங்கும் இழையோடிக்கொண்டே இருந்தது, அது உங்கள் வார்த்தைகளில் மிக அழகாக வெளிப்பட்டது. நன்றி

  32. Sir,
    I was a bit sceptical at the outset, but after reading a few paragraphs, I was really hooked and finished reading in one go. Can’t say hilarious. But definitely it brought smiles. Sujatha’s influence is palpable. I am saying this as a compliment only. ‘coz not every writer can write articles that reminds that stalwart. Keep writing.

  33. வணக்கம் .
    அழகிய மொழிநடை .மன அவஸ்தை .கிண்டல்
    சொல்லவருவதை தெளிவாக சொல்ல முடிதல்
    என எல்லாமும் வாய்த்த உங்களுக்கு
    வாழ்த்துக்கள் ..
    பெ.அன்பு .

  34. sir I am one of your college student studying 3rd yr mechanical. The book is really formed in the good manner and very intresting. know we are saying proudly among our friends that governer visited our college. But behind that proud there is a big hard work of many persons like you sir. Holeheartedly we feel very proud to get you as our Chairman sir.

  35. Wow..Our college has got a helipad ??…Thats really great sir…We can proudly say that we have got one..SKP Institutions – No one can beat our Infrastructure :):)..I just started recollecting my past memories spent in the college and also you made me to remember one of the happiest day in my life – the day i got my Bachelor degree..You are marvelous and narrated this in a awesome way.. Hats off to you sir..All the best for your future posts.

  36. Superb post sir. I have enjoyed the entire story. Best wishes for your future work sir!

  37. அருமையாக எழுதியுள்ளீர்கள் கருணா!
    இன்றுதான் Facebook-ல் பார்த்தேன்.
    கடைசித் தருவாயில் சிக்கி, அதிலிருந்து மீண்டு வரும்போது கிடைக்கும் சுகம் இருக்கிறதே, அலாதி. அதை வேறொருவர் அனுபவித்து, எழுதும்போது, இன்னும் நன்றாக ரசிக்க முடிகிறது.
    இது போன்று எழுதுவதற்காகவது, இது போன்ற அனுபவங்கள் உங்களுக்கு வாய்க்கட்டும் என்று சொல்வது, வாழ்த்தா, திட்டா என்று தெரியாததால் மனதுக்குள்ளேயே அதைச் சொல்லிக் கொள்கிறேன்.
    அன்புடன்,
    ஆனந்த்.

  38. In one of the reply, u told that real hero is Mr,Governor.But according to me the hero is you sir(konjam over ah irukka sir) but this is real sir, even u received information that governor program may cancel, u took all your efforts to make program to go on as per schedule.So u r the real pilot of the helicopter.
    Really i am thinking how i missed such nice chairman not even talking a single word to you in my 4 year career.

    1. Thank you Ramesh,
      Getting a Comparison with A.Muthulingam is really too big for me.
      Especially from a good writer like you.
      Thank you very much.

  39. அழகான,இயல்பான,அருமையான எழுத்தோட்டத்தில் பறந்து போனது கவர்ணரின் கெலிஹாப்டர். நிர்வாகியாய எதிர்கொண்ட ஒரு நெருக்கடியான பதட்டமிக்க சூழலை ஒரு எழுத்தாளனாக அமையதியாக நகைச்சுவை உணர்வுடன் படைப்பாக்கியிருக்கிறீர்கள். அந்த நிகழ்வை நடத்தி முடித்தபோது இருந்த திருப்தியை காட்டிலும் பன்மடங்கு ஆத்ம திருப்தியை அனுபவித்திருக்கும் உங்கள் படைப்பு மனம். இல்லையா? பாராட்டுக்கள்.
    தீபிகா.

  40. “எப்படியோ, ஹெலிகாப்டர் டிரையலுக்காக இன்னமும் வரவில்லை என்பதை கவர்னரின் ஏடிசியிடம் சொல்ல வேண்டும் என நினைத்து, எனது மொபைல் போனை எடுத்த போது, கவர்னரின் ஏடிசியே லைனுக்கு வந்தார். ஐ போனில் இந்த வசதியெல்லாம் இருக்கா என்ன? என்று திகைத்து போய், ஹலோ சார்! என்றேன்.”
    ரொம்பவும் நுட்பமான satire. ஒரு எழுத்தாளனின் கைநேர்த்தி(?)யை வெளிப்படுத்தும் இடங்கள் இவை..wel done !
    – எம்.எஸ்.ராஜேந்திரன். திருவண்ணாமலை

  41. ஒரே மூச்சில் படிக்க வைத்த அருமையான எழுத்துநடை.
    நிச்சயம் சுஜாதா இருந்தால் சிலாகித்துப் பாராட்டியிருப்பார்.
    வாழ்த்துகள்

    1. ரொம்ப நன்றி! சுஜாதா பாராட்டியிருப்பார் என்ற வார்த்தை எப்போதுமே என்னை சிலிர்க்க வைக்கும்! இப்போதும் அப்படியே!

  42. சில நாட்களுக்கு முன் கீச்சரில் உங்களுடைய பதிவொன்று நான் கண்டு படித்து பிடித்தது, பின்னர் உங்கள் கீச்சர் நட்பு வட்டத்திற்குள் என்னை இணைத்து கொண்டேன், உங்கள் புலிகள் பற்றிய பதிவு, பின்னர் நீங்கள் பரிந்துரைத்த ஊழல் உளவு அரசியல் அந்த புத்தகத்தையும் kindle வழியாக ஒரே இரவில் படித்ததும் எனக்கே வியப்பாக உள்ளது, தற்போது உங்களுடைய கவர்னரின் ஹெலிகாப்டர் என்ற இந்த பதிப்பும் அருமையாக இருந்தது . நன்றி

Comments are closed.